மகளிர்

நாமெல்லாம் ஒரு மொழியை கற்றுக் கொள்ள  பல ஆண்டுகள் உழைக்க வேண்டி இருக்கும். படிக்க முடிந்தால், எழுத வராது. அப்படியே எழுதத் தெரிந்தால், பேச வராது. ஆனால்  ஒரே வருடத்தில் பேச, எழுத, படிக்க தெரிந்ததோடு மட்டும் அல்லாமல் அந்த மொழியில் நடந்த ஒரு போட்டியில் பங்கு கொண்டு அதில் வெற்றியும் பெற்று பரிசும் வாங்கி வந்துள்ளார். அதுவும் இந்திய மொழி இல்லை, வெளிநாட்டு மொழி.  இப்படி பரிசு பெற்ற  மாணவி தான் சாதனா.

சென்னையில் சட்டம் பயின்று வரும் இந்த மாணவியிடம்  எப்படி முடிந்தது என்று கேட்டால் நம்  தமிழும், அவர்களது கொரிய மொழியும் கிட்டத்தட்ட ஒன்று போலவே உள்ளது என்று சிரித்துக் கொண்டே  கூறுகிறார். அவர் மேலும் கூறியது:

“எனக்கு எப்போதும் புது மொழிகள் மீது பற்று அதிகம்.  நான் 9ஆவது படிக்கும் போது எனது நெருங்கிய தோழி வெளிநாட்டு சீரியல் ஒன்றை பார்த்த தாகவும், அது மிகவும் நன்றாக இருந்ததாகவும் கூறினார். நானும் பார்க்கிறேன் கொடு என்றேன். தன்னிடம் உள்ள “பென் ட்ரைவில்’   அந்த சீரியலை காப்பி எடுத்துக் கொடுத்தார்.

அது கொரிய மொழியில் வந்த சீரியல் “பாய்ஸ் பிபோர்  பிளவர்ஸ்”. நான் அதை கொரிய மொழியிலே யே பார்த்து ரசித்தேன்.  அது பின்னர்  “புதுயுகம்” தொலைக்காட்சியில் தமிழில் வெளிவந்தது. கொரிய மொழி மீது அன்று முதல் ஒருவிதமான பற்று ஏற்பட்டது.  இந்த வெளிநாட்டு மொழியை சென்னையில் யாராவது கற்றுக் கொடுக்கிறார்களா? என்று தேடினேன்.

இன்கோ சென்டர்  என்ற ஒன்று கொரிய மொழிக்காக மட்டும் அல்லாமல், அந்த நாட் டின் மொழி, கலாச்சாரம், பண்பாடு மற்றும் அவர்களின் பழக்க வழக்கங்கள் பற்றி தெரிந்து கொள்ள ஒரு சிறந்த இடம் என தெரிந்தது.  அந்த மய்யத்தின்   தலைவி ரதி ஜாபர் அவர்களை சந்தித்து என் எண்ணத்தை கூறினேன்.

அவரும் சந்தோசத்துடன் கொரிய மொழியின் பயிற்சி வகுப்பில் சேர  சொன் னார். சேர்ந்த பிறகு தான் தெரிந்தது நம் தமிழ் மொழியும், கொரிய மொழியும்  பல விசயங்களில் ஒன்று போல உள்ளது என்று. நம் தமிழ் வார்த்தைகளான அம்மா, அப்பா, பாம்பு, வா, போன்று நிறைய தமிழ் வார்த்தைகள் போல், கொரிய மொழியிலும் கிட்டத்தட்ட அதே ஒலியுடன் இருக்கின்றன.
அது மட்டும் அல்லாமல்  தமிழில் நாம் மரியாதை கொடுத்து பேசுவது   போல் கொரிய மொழியிலும் பேசுகிறார்கள். “நான் சிவே கந்தா’ என்று கூறினால், “நான் வீட்டிற்கு போறேன்’ என்று அர்த்தம்.   

சென்னையில் உள்ள கொரிய மொழி பள்ளியில் பலர் இரண்டு மூன்று ஆண்டு களாக படிக்கிறார்கள்.  இந்த ஆண்டு படிப்ப வர்களிடம் ஒரு சிறு போட்டி வைத்து மூன்று பேர்களை தேர்ந்தெடுத்தார்கள்.

அதில் நான் முதலில் வெற்றி பெற்றேன். பின்னர் எங்களை எல்லாம் வீடியோ படமெடுத்து அதை கொரியாவிற்கு அனுப் பினார்கள். அங்கு 56  நாடுகளில் உள்ள 105  கொரியன் மய்யத்தில் இருந்து 140  பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டர்கள்.  இந்த  140  பேர்களை  ஸ்கைப்  மூலம்  பேட்டி கண்டார்கள்.  அதில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்து 12  பேர்கள் தேர்வானார்கள். இவர்கள் கொரியாவிற்கு பயணமானார்கள்.

அதில் நானும் ஒருத்தி என்பதில் நான் மிகவும் மகிழ்ந்தேன். அங்கு எங்களை மேடையில் பேசவிட்டு தேர்ந்தெடுத்தார்கள். அதில் நான் மூன்றாவது பரிசினை பெற்றேன்.

மற்ற இருவர் மட்டுமல்ல என்னுடன் வந்த பலரும் மூன்றாவது ஆண்டு கொரிய மொழியை படிக்கிறார்கள். நான் முதலாம் ஆண்டுதான் முடித்துள்ளேன். 

எனக்கு மகிழ்ச்சியை தந்த விஷயங்கள் இரண்டு. கொரிய மொழியை கண்டுபிடித்த ராஜா செஜாங் இன்ஸ்டிடியூட் தான் இந்த போட்டிகளை  நடத்தியது. 

இரண்டாவது, இந்த பரிசினால் நான் அடுத்த ஆண்டு மீண்டும் கொரியா செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

மூன்று   மாதம் அங்கு தங்கி இருந்து மேலும் அதிகமாக கற்க இந்த வாய்ப்பையும் நான் பயன்படுத்திக் கொள்வேன்.   

கொரியா சென்றபோது அங்குள்ள ஜி ஜூ (ஒங் ஒன்) என்ற தீவிற்கு சென்றோம். யங்ஜின் என்ற இடத்தையும் பார்த்தோம். அங்குள்ள கிராமம், அவர்களின் பழக்க வழக்கங்கள் ஆகியவைகளையும் பார்த்து தெரிந்து கொண்டோம். பல்வேறு பூங்காக்கள், அருங்காட்சியகம் ஆகியவைகளையும் பார்த்து ரசித்தோம்.

எங்களுடைய சவுகரியத்தை அவர்கள் முதன்மையாக எடுத்துக் கொண்டார்கள் என்று தைரியமாக கூறலாம்.

அதற்கு ஒரு சிறு உதாரணம், இந்த போட்டியாளர்களுக்கு தேவையான சாப் பாட்டை அவர்கள் தயாரித்து  வழங்கினார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த அளவிற்கு பார்த்துப் பார்த்து எங்களை எல்லாம் கவனித்தார்கள் என்றால் அது மிகை இல்லை.

அடுத்த ஆண்டு மூன்று மாதம் தங்கி படித்த பின், பரீட்சை உண்டு. அதில் நான் தேர்ச்சி பெற வேண்டும்  என்று இப்பொழுதே கொரிய படிப்பை மேலும் கவனமாக படித்து வருகிறேன்.


நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியளவில் பெண்கள் இடம்பெற்ற போதிலும், சொத்துப் பிரச்சினைகளால் குடும்ப உறவுகள் முறிந்துபோகின்றன. இதனிடையே குற்றங்கள்மீதான வழக்கு களில் தீர்வு காண்பதற்காக மிகச்சிலரே நீதிமன்றங்களை நாடுக¤ன்றனர்.

மாவட்ட நீதிமன்றங்கள், சார்நிலை நீதிமன்றங்கள் உள்ளிட்ட கீழமை நீதிமன் றங்களில் இரண்டு கோடியே 5 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அப்படி நிலுவையிலுள்ள வழக்குகளில் பெண் மனுதாரர்களைக் கொண்ட வழக்குகள் 10 விழுக்காட்டளவில் உள்ளன.

நிலுவையில் உள்ள வழக்குகளில் 90 விழுக்காடு ஆண்களால் தொடுக்கப்பட்ட வழக்குகளாக உள்ளன.  அவ்வழக்குகளில் 70 விழுக்காடு குற்ற வழக்குகளாக உள்ளன. அதிலும் பெண்களால் தொடுக்கப்பட்ட வழக்குகள் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை சார்ந்தவையாக உள்ளன.

ஆணாதிக்க சமுதாயமாக இருப்பதை உணர்த்துகின்ற வகையில், எந்த பிரச்சினை யாக இருந்தாலும் ஆண்கள் மட்டுமே முடிவு செய்பவர்களாக இருப்பதால்தான் குடும்பப்பிரச்சினைகளாக இருந்தாலும், தனிப்பட்டவர்கள் பிரச்சினையாக இருந் தாலும் ஆண்கள் மட்டுமே வழக்கு தொடுக்கின்றவர்களாக இருக்கின்றனர்.

நாடு முழுவதும் ஆறு மாநிலங்களில் மட்டும்  அதிக அளவில் பெண்கள் வழக்கு தொடுத்துள்ளனர். சராசரியாக 10.3 விழுக் காடாக உள்ளது. அதிக வருவாய் ஈட்டக் கூடிய மாநிலங்களாக உள்ள குஜராத், டில்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் மோசமான நிலையே இருந்து வருகிறது.

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் பெண்கள் 16 விழுக்காட்டளவில் அதிக எண்ணிக் கையில் வழக்கு தொடுத்துள்ளனர். பீகார் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 15 விழுக்காடாகவும், கோவா, தமிழ்நாடு மற்றும் சண்டிகர் மாநிலங்களில் 14 விழுக்கா டாகவும் பெண்கள் தொடுத்த வழக்குகளின் விகிதம் உள்ளது.

உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராட்டிரம் மற்றும் ராஜஸ்தான் போன்ற பரப்பளவில் பெரிய மாநிலங்களில் கீழமை நீதிமன்றங்களில் மனுதாரர்களாக பெண்கள் வழக்குகள் தொடுத்த விகிதம் 9.5 முதல் 10.5 விழுக்காடு வரை உள்ளது. இதுதான் நாடு முழுவதும் உள்ள விகிதமாகவும் உள்ளது.

தனி நபர் வருவாய் அதிக அளவில் உள்ள டில்லி, குஜராத் மாநிலங்களிலும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் வழக்கு தொடுப்பவர்களாக இல்லை.  உண்மையில் இந்த மாநிலங்களில்தான் மிகக் குறைந்த எண்ணிக்கையில் பெண்கள் வழக்கு தொடுத்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் கீழமை நீதிமன்றங் களில் நிலுவையில் உள்ள 17 லட்சத்து 26 ஆயிரம் வழக்குகளில் 3.8 விழுக்காடு மட்டுமே பெண்கள் தொடுத்த வழக்கு களாக உள்ளன. டில்லி யூனியன் பிரதேசத்தில் நிலுவையில் உள்ள 5 லட்சத்து 74ஆயிரம்  வழக்குகளில் சுமார் 30 ஆயிரம் வழக்குகள் 5 விழுக்காட்டளவில் பெண்கள் தொடுத்த வழக்குகளாக உள்ளன.

நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் நிலுவையில் வழக்குகள் உள்ள மாநில மாகிய உத்தரப்பிரதேசத்தில் நிலுவையில் உள்ள 59 லட்சத்து 86 ஆயிரம் வழக்கு களில் 6லட்சத்து 31ஆயிரம் வழக்குகள், அதாவது 10.55 விழுக்காட்டளவில் பெண்கள் தொடுத்த வழக்குகளாக உள்ளன.

பிற மாநிலங்களில் பெண்கள் தொடுத்த வழக்குகள் சொற்ப அளவிலேயே உள்ளன. உத்தர்காண்ட் மாநிலத்தில் 4.8 விழுக் காடாகவும், கேரள மாநிலத்தில் 7 விழுக் காடாகவும், ஒடிசா மாநிலத்தில் 7.6 விழுக் காடாகவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 7.75 விழுக்காடாகவும் பெண்கள் தொடுத்த வழக்குகள் உள்ளன. நாடுமுழுவதும் உள்ள விழுக்காட்டளவைப்போன்றே வட கிழக்கு மாநிலங்களில் சராசரியாக   10 விழுக்காடு முதல் 13 விழுக்காடுவரை பெண்கள் தொடுத்த வழக்குகளாக உள்ளன என்று புள்ளிவிவரத் தகவல்கள் வெளியாகி யுள்ளது.

(தி டைம்ஸ் ஆப் இந்தியா, 9.10.2017)


உத்தரபிரதேசத் தலைநகர் லக்னோவைச் சேர்ந்த பெண்கள், பாலியல் வன்முறையை எதிர்த்துப் போராட யாரையும் எதிர்பார்க் காமல் தற்காப்பு என்னும் வலிமையான ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். 2010ஆம் ஆண்டிலிருந்து இயங்கிவரும் ‘தி ரெட் பிரிகேடு’ என்ற தன்னார்வ அமைப்பு லக்னோ சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் தற்காப்புப் பயிற்சியை வழங்கிவருகிறது.

பாலியல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் ஒன்றிணைந்து நடத்தும் இந்த அமைப்பை உஷா விஸ்வகர்மா, அஜய் பட்டேல் இருவரும் தொடங்கினார்கள். லக்னோ, கான்பூர், வாரணாசி, டில்லி, மும்பை, குருகிராம், பதோகி உள்ளிட்ட பகுதிகளில் இது வரை 16,000 பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் இந்த அமைப்பு தற்காப்புப் பயிற்சியை வழங்கியிருக்கிறது. இந்தியாவில் பத்து லட்சம் பெண்களுக்குத் தற்காப்புப் பயிற்சியளிக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு இயங்கிவருகிறது தி ரெட் பிரிகேடு.

சர்வதேசக் கவனம்

இந்த அமைப்பின் செயல்பாடுகளைப் பற்றி கத்தார் நாட்டைச் சேர்ந்த அல் ஜசீரா தொலைக்காட்சி அலைவரிசை ஆவணப் படம் ஒன்றைச் சமீபத்தில் வெளியிட்டிருக் கிறது. இந்தியாஸ் பவர் கேர்ள்ஸ்  என்கிற பெயரில் வெளியான இந்த ஆவணப்படம் சர்வதேசக் கவனத்தை ஈர்த்தது. பதினைந்து நிமிடங்கள் ஓடும் இந்த ஆவணப்படம், இளம்பெண்கள், பெண்கள் பாதுகாப்புக்காக ரெட் பிரிகேட் அமைப்பு எப்படிப்பட்ட போ ராட்டங்களை முன்னெடுக்கிறது என்பதை விளக்குகிறது.

லக்னோவில் இந்த அமைப்பு செயல்படும் மடியாவ் பகுதி, ஆறு ஆண்டுகளுக்கு முன்புவரை இளம்பெண்களுக்குப் பாது காப்பற்றதாக இருந்தது. இந்தப் பகுதியில் பாலியல் தாக்குதல்கள், வன்புணர்வு நிகழ் வுகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருந்தன. இந்த அமைப்பு செயல்படத் தொடங்கிய பிறகு நிலைமை மாறியிருக்கிறது. இளம்பெண்களுக்குத் தொந்தரவு தரும் இளைஞர்களை அவர்கள் வீட்டுக்குச் சென்று இழுத்து வந்து, பொது இடத்தில் வைத்துப் பாடம் கற்பிக்கின்றனர் ரெட் பிரிகேடு பெண்கள்.

மீள உதவுவோம்

பதினேழு வயதாகும் அஃப்ரீன் கான், ரெட் பிரிகேடு அமைப்பின் பொறுப்பா ளர்களில் ஒருவர். ஆறு வயதில் பாலியல் தாக்குலுக்குள்ளான அஃப்ரீன், இந்த அமைப்புடன் இணைந்து சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் தற்காப்புப் பயிற்சிகளை வழங்கிவருகிறார். பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தும் வீதி நாடகங்கள், பாதிக்கப்பட்ட பெண்களின் நீதிக்கான போராட்டங்கள், பிரச்சாரங்கள் போன்றவை லக்னோவில் இவரது தலைமையில் நடைபெறுகின்றன.

ஏதாவது ஒரு பாலியல் வன்முறை வழக்கு பற்றி தங்களுக்குத் தெரிய வந்தவுடன் தாங்கள் களத்தில் இறங்கிவிடுவதாகவும், முதலில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, அவர்கள் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு உதவுவ தாகவும்,  வழக்கை தாங்களே முன்னின்று நடத்துவதாகவும், பாதிக்கப்பட்டவர் சிறுமி யாக இருந்தால், அவருடைய கல்விக்கு தாங்கள் உதவுவதாகவும்  இந்த ஆவணப் படத்தில் சொல்கிறார் அஃப்ரீன். குழந்தைப் பருவத்தில் பாலியல் தாக்குதலுக்குள்ளான வலியை அஃப்ரீனின் வார்த்தைகள் வழியே நமக்குக் கடத்துகிறது இந்த ஆவணப்படம்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன் முறைகளைத் தடுப்பதற்கு அரசு அதிகாரி களிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத் திருக்கிறது இந்த அமைப்பு.

பெண்களுக்கான கழிப்பறைகளை அதிகரிப்பது, பாதுகாப்பை உறுதிசெய்யும் கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக் கையை அதிகரிப்பது, இளம் பெண்களுக்குத் தற்காப்புப் பயிற்சியளிப்பது, பெண் காவலர் களின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற் றினால் பாலியல் குற்றங்கள் குறையும் என் கிறது ரெட் பிரிகேடு.

பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய

மருத்துவ பரிசோதனைகள்!

1. உடல் எடை சரிபார்ப்பு
2.  ரத்த சோகை பரிசோதனை
3. வைட்டமின் பற்றாக்குறை சரிபார்ப்பு
4. ரத்த அழுத்தம் பரிசோதனை
5. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு சரிபார்ப்பு
6. உடல் கொழுப்பு பரிசோதனை
7. மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை
8. எலும்பின் வலிமை சரிபார்ப்பு
9. பெருங்குடல் புற்றுநோய் பரிசோதனை
10. தோல் புற்றுநோய் பரிசோதனை

அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான

தொண்டு அமைப்பிற்கான அய்.நா. விருது பெற்ற பெண்

டில்லிப் பெண்ணுக்கு அய்.நா. விருது டில்லியைச் சேர்ந்த இளம்பெண் ரியா ஷர்மா, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய தன்னார்வ அமைப்பின் சேவையைப் பாராட்டி சிறப்பு விருதை அளித்திருக்கிறது அய்.நா சபை. அமில வீச்சால் வாழ்க்கையே பாழாகி விட்டதாக நினைத்துக் கொண்டிருந்த நூற்றக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத் தியிருக்கும் ரியா, தான் தொடங்கிய அமைப்பை நிரந்தரமாக மூடும் காலமே தனக்கு மகிழ்ச்சியைத் தரும் எனச் சொல்கிறார்!
சகோதரியின் அரவணைப்பு

பிரிட்டனின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த போது, ஆவணப்படம் எடுப்பதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் வாய்ப்பு ரியாவுக்குக் கிடைத்தது. அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களை படம்பிடிக்கச் சென்றவர், அவர்களின் துயரத்தையும் சமூகத்தில் இருந்து அவர்கள் புறக்கணிக்கப்படுவதையும் கண்டு மனம் வெதும்பினார். அருகில் இருந்து கவனித்த போதுதான், அவர்களுடைய வலி ரியா வுக்குப் புரிந்தது. மற்றவர்கள் முகம் சுளித்துக் கொண்டு சென்றபோது, பாதிக்கப்பட்ட பெண்களை ஒரு சகோதரிபோல் அரவணைத்தார் ரியா.

இவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. அதன் விளைவாக உருவானதுதான் Make Love Not Scars (MLNS) தொண்டு நிறுவனம். 2011ஆம் ஆண்டில் தொடங் கப்பட்ட இந்த அமைப்பிற்குத்தான் விருது வழங்கி கவுரவித்திருக்கிறது அய்.நா. கடந்த மாதம் நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ணத் தூதரான பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் கையால் Global Goals 2017 M விருதைப் பெற்றிருக்கிறார் ரியா ஷர்மா.

ஆதரவும் வேலைவாய்ப்பும்

அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவது, அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட உதவுவது, அமில வீச்சுக்கு இலவச சிகிச்சையை உறுதிசெய்வது, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகிய இலக்கு களை மய்யமாகக் கொண்டு  தொண்டு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதுதவிர அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்டரீதியாக நியாயம் கிடைக்கவும் இந்த அமைப்பு உதவுகிறது.

அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மறுவாழ்வு மய்யத்தை டில்லியில் கடந்த ஆண்டு தொடங்கியதில் ரியாவுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. இந்த மய்யத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட பெண் களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற் கென்றே தனியாக ஒரு இணையதள சேவையையும் ரியா தொடங்கினார். அமில வீச்சால் பாதிக்கப் பட்டவர்கள் தங்களுக்கு உள்ள திறமைகளை இந்த இணையதளத்தில் வெளிப்படுத்தி, வேலை வாய்ப்பைப் பெறும் வகையில் அதனை வடிவமைத் துள்ளார் ரியா. பல நிறுவனங்கள், அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களை வேலைக்குச் சேர்த் துள்ளன.

ரியாவுக்குக் கிடைத்த அய்.நா. விருது சார்பாக வெளியிடப்பட்ட வீடியோவில், அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் யாருமே இல்லை என்ற நிலை உருவாகி அதன் காரணமாக  எம்எல்என்எஸ் அமைப்பை நிரந்தரமாக மூடும் காலம் வந்தால் மகிழ்வடைவதாகக் கூறினார் ரியா ஷர்மா.

பெருநகரங்களில் ஆட் டோ ஓட்டும் பெண்களை ஓரளவு பார்க்க முடிகிறது. உள்ளடங்கிய நகரங்களிலும் கிராமங்களிலும் பெண் ஆட்டோ ஓட்டுநர்களைப் பார்ப்பது அரிது. எத்தனை யோ துறைகளில் பெண்கள் தடம் பதித்தாலும் ஆட்டோ ஓட்டும் தொழிலில் குறிப்பிடத்தக்க அளவில் ஈடுபடவில்லை. அந்தத் தொழிலில் உள்ள சிரமங்களும் பாதுகாப்பற்ற நிலையும் இதற்கு முக்கியக் காரணம். இப்படிப்பட்ட சூழலில் திருவண்ணாமலையில் ஆட்டோ திருமகள் என்ற அடைமொழியுடன் கம்பீரமாக வலம் வருகிறார் ரோஜா.

ரோஜாவின் அப்பா முருகன், ஆட்டோ ஓட்டுநர். அம்மா சாந்தி, திருவண்ணாமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் துப்புரவுத் தொழிலாளி. ரோஜாவின் பெற்றோருக்கு அவர் நான்காவது மகள். அக்காக்களுக்குத் திருமணமாகிவிட்டது. தம்பி, தனியார் கல்லூரியில் படிக்கிறான். அவரை வளர்த்ததில் அவரின் அம்மாவின் பங்கு அதிகம் என்று சொல்லும் ரோஜா, பிளஸ் 2 வரை படித்திருக்கிறார். தன் அப்பாவிடம் ஆட்டோ ஓட்டக் கற்றுக்கொண்டார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக ஆட்டோ ஓட்டும் தொழிலுக்கு வந்ததாகச் சொல்லும் ரோஜா, இதை விரும்பி ஏற்றுக்கொண்டிருக்கிறார். மற்றவர்களிடம் கைகட்டி வேலை செய்யாமல், சுயமாக உழைத்து முன்னுக்கு வரவேண்டும் என்கிற உத்வேகத்துடன் ஆட்டோ ஓட்டத் தொடங்கியிருக்கிறார். அய்ந்து ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுகிறேன். பல தரப்பு மக்களைச் சந்தித்துள்ளேன். பயணம் இனிமையாக இருக்கிறது என்கிறார். எப்போது ஆட்டோவில் பயணிக்க வேண்டும் என்றாலும், இவரை செல்பேசியில் தொடர்புகொண்டு அழைக்கும் நிரந்தர வாடிக்கையாளர்கள் பலர் இருக்கிறார்கள். அனைவரிடமும் அன்பாகப் பேசும் தனது குணம்தான் அதற்குக் காரணம் என்று நம்புகிறார் ரோஜா.

எதிர்ப்பும் ஆதரவும்: புதிதாக எதையாவது செய்யும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கடந்தே இன்றைய நிலையை ரோஜா எட்டியிருக்கிறார் . அவர் இந்தத் தொழிலில் நுழைந்ததும் சில ஆண் ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். பெண் என்பதால் அவர் மீது இரக்கப்பட்டு பலர் அவர் வாடிக்கையாளராகக்கூடும் என அவர்கள் நினைத்தார்கள் என்கிறார் ரோஜா.

அதேநேரத்தில் அவருக்கு ஆதரவாக நின்ற ஆட்டோ ஓட்டும் சகோதரர்களையும் நன்றியுடன் நினைவுகூர்கிறார். அவர்களது ஒத்துழைப்பால், திருவண்ணாமலை மத்தியப் பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் இவருக்கு இடம் கிடைத்துள்ளது. எதிர்காலத்தில் இங்கு ஆட்டோ ஓட்டவரும் பெண்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது என்று நம்பிக்கையுடன் சொல்லும் ரோஜா, மூன்று பெண்களுக்கு ஆட்டோ ஓட்டக் கற்றுக்கொடுத்தும் உள்ளார்.

கைம்பெண்களுக்கு மறுவாழ்வு

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கணவனை இழந்த கைம்பெண்கள் அதிகம் என்று 2013இல் அய்,நா. சபை தெரிவித்தது. அந்த ஆய்வறிக்கையின்படி குடியால் கணவனை இழந்த கைம்பெண்களின் எண்ணிக்கையே தமிழகத்தில் அதிகம் என்றது.

இந்தியா போன்ற நாட்டில் பெண்களின் உரிமைகளை போராடி பெறவேண்டிய சூழலில், இத்தகைய பெண் களின் வாழ்க்கை பெரும் போராட்டம் நிறைந்ததாக இருக்கிறது. அரசு வழங்கக்கூடிய உதவித்தொகை, அரசாங்கத்திடமிருந்து கிடைக்கக்கூடிய சலுகைகள் சரியாக அவர்களை சென்றடைகிறதா என்ற கேள்விக்கு பெரும்பாலான பெண்கள் சொல்லக்கூடிய பதில் இல்லை என்பதே. இப்படியான சூழலை கடந்து வெற்றி பெற்றிருக்கிறார் வேதாரண்யத்தை சேர்ந்த புஷ்பா.

புஷ்பாவின் கணவர் குடிப்பழக்கத்தால் இறந்ததால் தனிமை படுத்தப்பட்டார். தன்னைப்போல யாரும் துயரப்படக்கூடாது என்று விதவைப்பெண்கள் மறுவாழ்வு சங்கம் தொடங்கி நடத்தி வருகிறார். தான் கடந்து வந்த வலிகள் நிறைந்த அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டார். காதல் திருமணம் செய்து கொண்ட புஷ்பா திருமணமாகி 11 ஆண்டுகளே கணவருடன் சேர்ந்து வாழ்ந்ததாக கூறினார்.

இவரைப்போலவே கணவனை இழந்த பெண்களை ஒன்று திரட்டி மறுவாழ்வு சங்கத்தை 2004 ஆம் ஆண்டு உருவாக்கியிருக்கிறார். கணவனை இழந்த பெண்கள் அனைவரும் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தன் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்று சங்கத்தின் வாயிலாக பல உதவிகளை செய்து வருகிறார்.

இந்த சமுதாயத்தில் சாதாரண மக்களுக்கு இழைக்கப்படக் கூடிய அநீதிகளை விட விதவைப்பெண்களுக்கு மோச மான அநீதிகள் இழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் அவர்கள் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. நானும் அந்த வலிகளை கடந்து வந்திருக்கிறேன் என்றவர் தொடர்ந்து நம்மிடையே பேசினார்.

நான் திருத்துறைப்பூண்டிக்கு அருகே உள்ள உதயமார்த் தாண்டபுரம் என்கிற ஊரில் பிறந்து வளர்ந்தேன். திருமணம் நடந்து 11 ஆண்டுவரை எல்லா பெண்களைப் போலவும் நானும் குடும்ப வாழ்க்கை நடத்தி வந்தேன். அப்போதுதான் என் வாழ்க்கையை திருப்பிப்போட்டது அந்த சம்பவம். என் கணவர் குடிப்பழக்கத்தால் இறந்து போக இரண்டு கைக்குழந்தைகளுடன் நிர்கதியாக்கப்பட்டேன்.

இந்த சமுதாயத்தில் ஒரு பெண் தனித்து வாழ்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இரண்டு குழந்தை களை வளர்த்தெடுக்கும் பொறுப்பு என்னை தொடர்ந்து உழைக்க வைத்தது. கேலி பேச்சுக்களுக்கு இடையே என் வாழ்க்கை சென்றது. இந்த நிலை மாறவேண்டும் என்று நினைத்தேன். என்னைப்போலவே குடியால் கண வனை இழந்த பெண்களை ஒன்று திரட்டி கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கணவனால் வஞ்சிக்கப் பட்ட பெண்கள் குழு ஒன்றை உருவாக்கினேன்.

இந்தக் குழு மூலம் கைம்பெண்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தோம். கடந்த 2004 ஆம் ஆண்டு எங்கள் ஊரில் சுனாமி ஏற்படுத்திய பேரழிவிற்குப் பிறகு பல தொண்டு நிறுவனங்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் பல உதவிகள் செய்தன. அந்த சமயத்தில் குடும்ப அட்டை உள்ள குடும்பங்களுக்கு அந்த உதவிகள் வந்து சேர்ந்தன. கணவன் இறந்த பிறகு அரசு உதவித் தொகை பெறும் பெண்களுக்கு குடும்ப அட்டை மறுக்கப்பட்டதால் எந்த உதவியும் எங்களுக்கு கிடைக்கவில்லை.

இதை உணர்ந்த தொண்டு நிறுவனங்கள் ஒவ்வொரு ஊரிலும் எத்தனை விதவைப்பெண்கள் இருக்கிறார்கள் என்று அந்தந்த ஊர் தலைவர்களிடமும், கிராம நிர்வாக அலுவலர்களிடமும் கணக்கெடுப்பு நடத்தி உதவ முன்வந்தார்கள். இப்படி எல்லா விதத்திலும் பாதிக்கப் படுவது கணவனை இழந்த பெண்களாக இருந்தார்கள். அவர்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டது.

சில பெண்களை வீட்டை விட்டு வெளியேற்றியிருந்தார்கள். அவர்களுடைய வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு எங்களது குழுவை சங்கமாக உருவாக்கினோம். இன்று ஒரு கூட்டமைப்பாக செயல்பட்டு வருகிறோம். இந்த சங்கத்தின் மூலம் கைம்பெண்களுக்கு குடும்ப அட்டை வழங்கவேண்டும் என்று தமிழக அரசிடம் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறோம். மேலும் சுய தொழில் பயிற்சி அளித்து வருகிறோம்.

இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறோம். அவர் களின் பிள்ளை களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறோம். நாகப்பட்டினம், சுற்று வட்டார பகுதிகளில் சங்கத்தை விரிவுபடுத்தியுள்ளோம். தமிழக அரசு வழங்கக்கூடிய உதவித்தொகையை முறையாக பெற்றுத் தருகிறோம். இந்தப் பணிகளுக்கு இடையில் பல்வேறு சிறுகுறு தொழில்கள் செய்து என் பிள்ளைகளை படிக்க வைத்தேன். என்னைப்போலவே எல்லாப் பெண்களும் ஏதோ ஒரு சிறு தொழிலை செய்து யாருடைய உதவியும் இன்றி உழைத்து வருகிறார்கள். மறுவாழ்வு குறித்த ஆலோ சனைகள் இங்கு வழங்கப்படுகின்றன.

23 செயற்குழு உறுப்பினர்களைக் கொண்டு சங்கம் இயங்கி வருகிறது. இதில் நான்கு முறை தலைவராக பொறுப் பேற்று இருக்கிறேன்.  பொதுக்குழு செயலாளராகவும் தற்போது இருக்கிறேன். சிறு குழுவாக தொடங்கி இன்று ஆயிரத் துக்கும் மேலான உறுப்பினர்கள் எங்கள் குழுவில் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்  என்றார் புஷ்பா.

இளம் விஞ்ஞானி கீதாஞ்சலி    

அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது சிறுமியான கீதாஞ்சலி ராவ் 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த இளம் விஞ்ஞானியாகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். தண்ணீரில் காரீயம் கலந்திருப் பதைக் கண்டறிய அவர் உரு வாக்கியுள்ள புதிய கருவியான டெத்ஸிற்காக இந்த விருதை அவர் வென்றிருக்கிறார்.

அமெரிக்காவிலுள்ள 5 முதல் 8ஆம் வகுப்பு மாண வர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியை, 3எம் நிறுவனம் நடத்தியது. தினசரி பிரச்சினைகளுக்கான அறிவியல்பூர்வமான தீர்வுகளை மாணவர்கள் இப் போட்டியில் முன்வைக்க வேண்டும்.

25,000 அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையும், அமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானி எனும் விருதும் கொண்டது இப்போட்டி. இதில், நீரில் கலந் துள்ள காரீயத்தின் அளவைக் கண்டறிந்து, புளூடூத் மூலம் கைபேசிக்குத் தகவல் அனுப்பக்கூடிய கீதாஞ்சலியின் கருவிக்கு, முதற்பரிசு கிடைத்துள்ளது.

கேரளப் பள்ளி மாணவிகளின் மாதவிடாய் ஆரோக்கிய நலனுக்காக ஏழாயிரம் பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் அளிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் பெயர் ஷீ பேட். கேரள மாநில மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளிகள் அனைத்துக்கும் அலமாரிகளும் குப்பை எரிக்கும் இயந்திரங்களும் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் கேரள அரசின் கல்வித் துறை அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்திலும் தூய்மையான குடிநீர், கழிப்பறை போன்றவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கூறியுள்ளது.  மாதவிடாய் ஆரோக்கியம் என்பது ஒவ்வொரு பெண்ணின் உரிமை. சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரங்களுடன் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாத வகையில் குப்பைகளை எரிப்பதற்கான சாதனங்களும் வழங்கப்படவுள்ளன. உள்ளாட்சி அமைப்புகளின் நிதியுதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று இந்தத் திட்டம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

எல்லா உயிர்களுக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறேன்-தயாமணி

வல்லமை படைத்த அதிகார மய்யங்களை எதிர்த்துத் துணிச்சலுடன் போராடிவருபவர் தயாமணி பர்லா. நான் முன்னேற்றத்துக்கு எதிரி அல்ல. ஆனால், இயற் கையை அழித்துக் கிடைக்கும் முன்னேற்றத்துக்கு எதிரி. இந்தியாவின் இயற்கையைக் கொள்ளையடிக்கப் பன்னாட்டு நிறுவனங்களும் அரசு இயந்திரங்களும் காத் திருக்கின்றன. இயற்கையைக் காப்பதும் பழங்குடி மக்களின் இடப்பெயர்வைத் தடுப்பதும்தான் என் நோக்கம். என் போராட்டம் மக்களுக்கான போராட்டம்; இயற்கைக்கான போராட்டம்! என அழுத்தமாகக் கூறுகிறார் இவர்.

யார் இந்த தயாமணி?

காடுகளும் மலைகளும் அதிகமுள்ள நிலப்பரப்பு ஜார்கண்ட். இங்கே இரும்பு, நிலக்கரி, அலுமினியம் போன்ற கனிமங்கள் அதிகம் கிடைக்கின்றன. அதனால், பல சர்வதேச நிறுவனங்கள் ஜார்கண்டை நோக்கிப் படையெடுத்துவருவதில் ஆச்சரியமில்லை. இங்கு இயற்கை எழில் கொஞ்சும் மலைக் கிராமம் ஒன்றில் முண்டா பழங்குடியினத்தில் பிறந்தார் தயாமணி. ஒவ்வொரு குடும்பத்துக்கும் பல ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. நிலத்தில் விவசாயம் செய்தும் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்தும் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தனர். ஒன்பது வயதில் தயாமணி அந்த அநியாயத்தை எதிர்கொண்டார். தொழிலதிபர் ஒருவர் பழங்குடி மக்களை ஏமாற்றி, பத்திரங்களில் கைரேகைகளைப் பெற்றுக்கொண்டார்.

அதில் தயாமணி குடும்பத்துக்குச் சொந்தமான 15 ஏக்கர் நிலமும் பறிபோனது. படிக்காத பெற்றோரின் அறியாமையால், சொந்த நிலத்தைத் தொலைத்த துயரம் தயாமணியை வாட்டியது. தங்கள் மக்கள் பிறரிடம் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்குக் கல்வி ஒன்றே தீர்வு என்று உணர்ந்துகொண்டார். சொந்த நிலத்தில் உழைத்து, கம்பீரமாக வாழ்க்கை நடத்திவந்த குடும்பம், வாழ வழியின்றி நடுத் தெருவில் நின்றது. குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக அப்பா ஒரு நகரத்துக்குக் கூலி வேலைக்குச் சென்றார். அம்மா வேறொரு நகரத்தில் வீட்டு வேலை செய்தார். தயாமணியும் தம்பியும் பிறர் வீடுகளில் வேலை செய்துகொண்டே படித்துவந்தனர்.

துரத்திய துயரம்

அது மிகத் துயரமான காலகட்டம். கொடுக்கும் சம்பளத்தைவிட அதிகமாக வேலை வாங்கினார்கள். மாட்டுத் தொழுவத்தில்தான் தூங்க வேண்டும். வேலைகளை முடித்துவிட்டு, படிப்பைத் தொடர்வது மிகவும் சிரமமாக இருந்தது. படிப்பை விட்டுவிட்டு, முழு நேர வேலைக்குச் சென்றால் இன்னும் அதிகம் சம்பாதிக்கலாம். தொழுவத்தில் தங்க வேண்டிய நிலையும் ஏற்படாது என்று அவ்வப்போது நினைப்பார் தயாமணி. ஆனால், படிப்பறிவு இல்லாமல் தங்கள் பாரம்பரிய நிலத்தை இழந்த தருணம் அவர் நினைவுக்கு வந்தவுடன் படிப்பை விட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

15 வயதில் ஒருநாள் இரவு, வீட்டின் உரிமையாளர் தயாமணியைப் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டார். உடனே அந்த வீட்டைவிட்டு வெளியேறினார். சில காலம் ரயில் நிலையத்தில் தங்கி பள்ளிக்குச் சென்றுவந்தார். பிறகு அரசாங்க மாணவர் விடுதியில் தங்குவதற்கு இடம் கிடைத்தது. கிடைக்கும் வேலைகளைச் செய்துகொண்டே எம்.காம்., இதழியல் வரை படித்து முடித்தார்.

பத்திரிகையாளராக

வங்கியிலிருந்து கடன் பெற்று, ‘ஜன் ஹக்’ என்ற பெயரில் சொந்தமாகப் பத்திரிகையை வெளியிட்டார். இதில் பழங்குடி மக்களின் கலாச்சாரம், மொழி, பழக்கவழக்கங்கள், பிரச்சினைகள் குறித்து மிக ஆழமான கட்டுரைகள் வெளியாகின. ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று பிரச்சினைகள் அலசப்பட்டன, மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டன, அவை தொகுக்கப்பட்டு அடர்த்தியான கட்டுரைகளாக வெளிவந்தன.

தயாமணியும் தீவிரமான கட்டுரைகளை எழுதி வந்தார். பழங்குடி மக்களின் துயரத்தை உள்ளது உள்ளபடியே சொன்ன தயாமணியின் எழுத்துகள், பிரபலப் பத்திரிகைகளில் வெளிவந்தால் அதிகமான மக்களிடம் சென்றடையும் என்று நினைத்த நண்பர்கள், பிரபாத் கபர் என்ற பிரபல இந்தி தினசரியில் எழுதச் சொன்னார்கள். தயாமணியின் கட்டுரைகளை உடனடி யாக ஏற்றுக்கொண்டது அந்த நாளிதழ். அவர் எழுதிய விஷயங்கள் பெரும்பான்மையான மக்களைச் சென்ற டைந்தன. தயாமணியும் பிரபலமானார்.

எழுத்திலிருந்து போராட்டத்துக்கு

எழுதுவதுடன் நின்றுவிடாமல் மக்களைத் திரட்டிப் போராட்டங்களிலும் இறங்கினார் தயாமணி. பல்வேறு அமைப்புகளில் அங்கம் வகித்தார். எல்லாவற்றையும் ஒருங்கிணைத்தார். தன்னுடைய கிராமத்தில் ஒரு தேநீர்க் கடையைத் திறந்தார். இது சாதாரணத் தேநீர்க் கடை இல்லை. மக்கள் சந்தித்து, தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய இடம் என்பார் தயாமணி. 1995ஆம் ஆண்டு கோயல் கரோ அணை கட்டும் பணி தீவிரமடைந்தது. இந்த அணை கட்டப்பட்டால் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 55,000 ஹெக்டேர் விளைநிலம் பாதிக்கப்படும். 27,000 ஹெக்டேர் காடு அழியும். இரண்டரை லட்சம் மக்கள் இடம்பெயர்ந்து செல்ல வேண்டியிருக்கும்.

அணை கட்டுவதை எதிர்த்துப் போராட ஆரம்பித்தார் தயாமணி. மக்களை ஒன்றுதிரட்டினார். முதல் போராட் டத்தில் 5 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். மக்கள் ஆதரவு பெருகியது. அடுத்த போராட் டத்தில் 15 ஆயிரம் பேர் கலந்துகொண்டர். அரசாங்கத்தின் மிரட்டல், கைது போன்றவை வழக்கம்போல் அரங்கேறின. இவற்றையெல்லாம் கண்டு போராட்டக்காரர்கள் பயப்படவில்லை. அடுத்த போராட்டத்தில் 25 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

சிறை வாசம்

அரசாங்கமே திகைத்துப்போனது. ஒரு போராட் டத்தின் போது, காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதில் மூன்று போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர். போராட்டக்காரர்கள் மீதே பொய் வழக்குகளைப் போட்டுச் சிறையில் தள்ளினர். இப்படிப் பலமுறை சிறைக்குச் சென்றிருக்கிறார் தயாமணி.

2006ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த ஏர்சிலர் மிட்டல் என்ற சர்வதேச நிறுவனம், இரும்பு ஆலையைத் தொடங்குவதற்காக 11 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தைக் கேட்டது. அதைக் கடுமையாக எதிர்த்தனர் தயாமணி தலைமையிலான பழங்குடி மக்கள். தொடர்ச்சியான போராட்டங்களால் இந்தியா முழுவதும் போராட்டம் கவனத்தை ஈர்த்தது. நிலத்துக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைத் தந்துவிடுவதாகக் கூறியது அந்த சர்வதேச நிறுவனம். யாருடைய நிலத்துக்கு யார் இழப்பீடு தருவது? இழப்பீடு தருவதாகச் சொல்பவர் கள் எங்களை இணை உரிமையாளர்களாக ஏற்பார்களா? என்று ஆத்திரத்துடன் கேட்டார் தயாமணி. இந்தப் பேச்சைக் கேட்டு, அதிகார வர்க்கம் கோபத்தின் எல்லைக்கே சென்றது. தயாமணி சிறையில் அடைக்கப்பட்டார். வெளியில் வந்தால் போராட்டம், மீண்டும் சிறை என்று அவரது வாழ்க்கை அய்ந்து ஆண்டுகள் அலைக்கழிந்தது.

அர்த்தமுள்ள வாழ்க்கை!

இப்படிப் போராட்டமும் சிறைவாசமுமாக இருக்கும் வாழ்க்கையில் என்றாவது சலிப்படைந்தீர்களா என்று கேட்டால், இல்லை என்கிறார் தயாமணி. என்னால் பழங்குடி மக்களின் துயரத்தைச் சிறிதளவாவது போக்க முடிந்திருக்கிறது என்பதையும் இயற்கை வளத்தைக் கட்டிக் காக்க முடிந்திருக்கிறது என்பதையும் இந்த வாழ்க்கைக்கான அர்த்தமாகப் பார்க்கிறேன் என்கிறார் தயாமணி.

பெரும்பான்மையான மக்கள் இவரது போராட்டத் தைப் பழங்குடி மக்களுக்கான போராட்டமாக மட்டும் கருதி, தங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று நினைத்துக்கொள்கிறார்கள். என் போராட்டத்தைக் குறுக்கி விடாதீர்கள். இலுப்பை, மா, கரடி, மான், குருவி, அணில், பூச்சி, புழு, மனிதர்கள் என்று எல்லா உயிர் களுக்காகவும்தான் போராடிக்கொண்டிருக்கிறேன் என்று அழுத்தமாகச் சொல்கிறார் தயாமணி.Banner
Banner