மகளிர்

வில்வித்தை விளையாட்டில் சொல்லிக் கொள்ளும் அளவுக்குப் பெண்கள் இல்லை. சிறுமியாக இருந்தபோது வில்வித்தைப் போட்டி களில் காலடி எடுத்துவைத்த அந்த வீராங்கனை, ஒலிம்பிக் போட்டிவரை பங்கேற்று இந்தியா வுக்குப் பெருமை சேர்த்தார். சர்வதேச அளவில் புகழ்பெற்றார். அவர், டோலா பானர்ஜி.

கொல்கத்தாவுக்கு அருகே உள்ள பாராநகர் தான் டோலா பானர்ஜியின் சொந்த ஊர். சிறு வயதில் மற்ற பிள்ளைகளைப் போல அல்லாமல் டோலாவுக்கு அம் பெய்தும் விளையாட்டு மீதே ஆர்வம் இருந்திருக்கிறது. அந்த விளை யாட்டில் அவர் ஆர்வமாக இருக்கவே, பாராநகரில் உள்ள வில் வித்தைப் பயிற்சி மய்யத்தில் அவருடைய பெற்றோர் டோலாவைச் சேர்த்தனர். படிப்புக்குப் பங்கம் வராமல் வில்வித்தை விளையாட்டைக் கற்றுக்கொண்ட டோலா, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்குபெறத் தொடங்கினார். படிப்படியாக முன்னேறிவந்த டோலா, 1996இல் முதன்முறையாகத் தேசிய வாகையர் பட்டப் போட்டியில் பட்டம் வென்றார். அதற்கு அடுத்த ஆண்டே டோலாவுக்குச் சர்வதேசப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது டோலாவுக்கு 17 வயதுதான். 1996இல் சான்டியாகோவில் நடைபெற்ற இளையோர் உலக வாகையர் பட்டப் போட்டியில் பங்கேற்றதுதான் இவரது சர்வதேச அறிமுகப் போட்டி. இந்தப் போட்டியில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும், அங்கே பெற்ற அனுபவம் மற்ற போட்டிகளில் அவருக்குப் பலமாக இருந்தது. அடுத்த ஆண்டே  லாங்க்வி ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றுத் தன் திறமையை வளர்த்துக்கொண்டார்.

சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிய காலத்தில், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பதை எக்காரணம் கொண்டும் நிறுத்திக்கொள்ளவில்லை. 1999இல் ஷில்லாங்கில் தேசிய வில்வித்தை வாகையர் பட்டப் போட்டி நடைபெற்றது.  அந்தப் போட்டியில் அவர் வாகையர் பட்டம் வென்றார். ஒரு வகையில் இது தேசிய அளவில் அவர் பெற்ற முதல் வெற்றியும்கூட. புத்தாயிரத்தில் தொடங்கி அடுத்த சில ஆண்டுகள்வரை சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் மாறிமாறிப் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றார் டோலா.

இதில் குறிப்பிடும்படியாக 2001இல் அமராவதியில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். வில்வித்தையில் ரெகர்வ் பிரிவில் தேர்ச்சிபெற்றவராக விளங்கிய டோலா, 2002-ல் நடந்த தேசிய வாகையர் பட்டப் போட்டியில்  தங்கத்துக்கு வைத்த குறி தப்பவில்லை. இந்தப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார் டோலா. 2007இல் விஜயவாடாவில் நடந்த தேசிய வாகையர் பட்டப் போட்டியிலும் தங்கப் பதக்கம் இவர் வசமானது.

முதல் ஒலிம்பிக் வீராங்கனை

தேசிய விளையாட்டுப் போட்டிகள் மட்டுமல்ல; இந்தக் காலகட் டத்தில் தொடர்ச்சியாகச் சர்வதேசப் போட்டிகளிலும் டோலா பங்கேற்றார். 2001இல் ஹாங்காங் ஆசிய வாகையர் பட்டப் போட்டி, 2003இல் மியான்மரில் நடந்த ஆசிய வாகையர் பட்டப் போட்டிகளிலும் பங்கேற்றபடி இருந்தார். 2001இல் பெய்ஜிங்கில் நடந்த உலக வில் வித்தைப் போட்டி பெரிய அளவில் அவரைச் சோதிக்க, 2003இல் நியூ யார்க்கில் நடந்த உலக வாகையர் பட்டப் போட்டி அவருக்குக் கைகொடுத்தது. தனி நபர் பிரிவில் சிறப்பாக விளையாடி 13ஆவது இடத்தைப் பிடித்தார் டோலா. அவருடைய இந்தச் சிறப்பான செயல் பாடு, 2004இல் ஏதென்சில் நடந்த ஒலிம்பிக்குக்குத் தகுதி பெற உதவியது. ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் டோலா பங்கேற்றதன் மூலம் ஒலிம்பிக் வில்வித்தைப் பிரிவில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை அவர் பெற்றார். உலக வாகையர் பட்டப் போட்டியில் 13ஆவது இடத்தைப் பிடித்திருந்ததால், அவர் மீது ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக பரிச்சயமில்லாத தென்னாப்பிரிக்க வீராங்கனையிடம் தோல்வி யடைந்து முதல் சுற்றிலேயே வெளி யேறினார் டோலா. ஆனால், குழுப் பிரிவில் இந்தியா 8ஆவது இடத்தைப் பிடிக்க பெரிதும் உதவினார். ஒட்டுமொத்தமாக ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 52ஆவது இடத்தைப் பிடித்து ஏமாற்றமடைந்தார் டோலா.

உலக வாகையர்

டோலாவின் பயணத்தில் மறக்க முடியாத ஆண்டு 2007. அந்த ஆண்டு இங்கிலாந்தில் உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டி நடைபெற்றது. தனிநபர் பிரிவில் சிறப்பாக விளையாடி, தங்கப் பதக்கம் வென்று அசத்தினார் டோலா.  இந்த வெற்றியின் மூலம் உலக சாம்பியனாக வலம்வந்தார். இதனால் 2008இல் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் பெரிய அளவில் சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் இருந்தது. ஆனால், அந்த ஒலிம்பிக்கில் தனி நபர் பிரிவிலும் அவர் அங்கம் வகித்த குழுவும் தகுதிச் சுற்றுக்குக்கூட முன்னேறாமல் மூட்டை கட்டியது பெரும் சோகம்.

காமன்வெல்த் சாதனை

இந்தத் தோல்விக்குப் பிறகு அடுத்த இரு ஆண்டுகள் பெரிய அளவில் சர்வதேசப் போட்டிகளில் டோலா பங்கேற்கவில்லை. 2010இல் டில்லியில் காமன்வெல்த் போட்டி நடந்தபோதுதான் களத்துக்கு வந்தார். தாய்நாட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் அங்கம் வகித்த வில்வித்தைக் குழு, தங்கப்பதக்கம் வென்று அசத்தியது. தனி நபர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தன் பெயரை நிரூபித்தார் டோலா.

வில்வித்தைப் போட்டிகளில் இந்திய அளவிலும் உலக அளவிலும் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்த டோலா பானர்ஜியை அங்கீ கரிக்கும்வகையில் 2005இல் மத்திய அரசு அர்ஜுனா விருது வழங்கிக் கவுரவித்தது. இந்த விருதைப் பெற்ற முதல் வில்வித்தை வீராங்கனை டோலாதான்.

சாக்சி மாலிக், வினேஷ் போகத் என்று மல்யுத்தத்தில் சாதிக்கும் வீராங்கனைகளுக்கு இந்தியாவில் இன்று பஞ்சமில்லை. ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் பெய ருக்குக்கூட மல்யுத்த வீராங்கனை யாரும் இல்லை. அந்தக் குறையைத் தீர்த்து வைத் தவர் கீதிகா ஜகார். அரியானாவைச் சேர்ந்த இவர், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முத்திரை பதித்து இந்தியாவுக் குப் பெருமை சேர்த்தவர்.

அரியானாவில் உள்ள இசார் நகரின் விளையாட்டு அலுவலராக இருந்தார் கீதிகா வின் அப்பா சத்யவிர் சிங் ஜகார். மல்யுத்த வீரரான அவர் மூலமே கீதிகாவுக்கு மல்யுத்த விளையாட்டு அறிமுகமானது. வீரர்களும் வீராங்கனைகளும் முட்டி, மோதி, புரண்டு விளையாடுவதைப் பார்த்ததுமே கீதிகாவுக்கு அந்த விளையாட்டு பிடித்துப்போனது.

அதை அவர் ஆர்வமாக விளையாடத் தொடங்கியபோது அவருக்கு 13 வயதுதான் ஆகியிருந்தது. தந்தையே பயிற்சியாளராக இருந்து கீதிகாவுக்கு மல்யுத்தத்தின் நுணுக் கங்களைக் கற்றுக்கொடுத்தார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் மல் யுத்தப் போட்டிகளில் களமிறங்கும் அளவுக்கு முன் னேறினார் கீதிகா. 1999இல் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் தேசிய விளை யாட்டுப் போட்டிகள்  நடைபெற்றன. எடுத்தவுடனே இந்தப் போட்டி யில் அரியானா வீராங்கனையாகக் களமிறங் கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.  56 கிலோ ஃபிரீஸ் டைல் பிரிவில் பங்கேற்ற அவர், நான்கா மிடத்தைப் பெற்றார். ஆனால், அரி யானா மாநில அளவில் சிறந்த மல்யுத்த வீராங் கனை என்ற சிறப்பு அவருக்குக் கிடைத்தது.

அரியானாவில் பாரத் கேசரி என்ற பெயரில் இளம் வீரர், வீராங்கனைகளுக்கான மல்யுத்தப் போட்டி நடப்பது வழக்கம். அந்தப் போட்டியில் முதன்முறையாக கீதிகா பங் கேற்றார். அந்தப் போட்டியில் புகழ்பெற்ற மல்யுத்த வீரரான சந்த்ஜி ராமின் மகளை கீதிகா தோற்கடித்தார். 2000இல் நடைபெற்ற தொடர் இது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி பாரத் கேசரி என்ற பட்டத்தைப் பெற்றார் கீதிகா. இதன் பிறகு அடுத்த ஒன்பது ஆண்டுகளும் தொடர்ச்சியாக பாரத் கேசரி விருதை கீதா வென்றது வரலாறு.

2001இல் நடந்த தேசிய வாகையர் பட்டப் போட்டியில் முதன்முறையாக அவர் பங் கேற்றார்.மிக இளையோர், இளையோர், மூத்தோர் என எல்லாப் பிரிவுகளிலும் பங் கேற்ற கீதிகா,  அனைத்திலுமே தங்கப் பதக் கங்களை அள்ளி னார். இன்றுவரை யாருமே முறியடிக்க முடி யாத தேசிய சாதனை இது. அனைத்து வகையான பிரிவுகளிலும் பங் கேற்று எல்லாப் பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்ற இளம் இந்திய வீராங்கனை என்ற சிறப்புக்கும் இவர் சொந்தக்காரர். அதனால் தான் இவரை  கோல்டன் குவார்டட் என்று செல்லமாக அழைக்கிறார்கள்.

சர்வதேசப் பயணம்

தேசிய அளவில் மல்யுத்தத்தில் அதிரடி யாக முன்னேறிக் கொண்டிருந்த கீதிகாவின் சர்வதேசப் பயணம் 2002இல் தான் தொடங் கியது. அமெரிக்காவில் உலக மல்யுத்த வாகையர் பட்டப் போட்டிதான் அவர் பங்கேற்ற முதல் சர்வதேசத் தொடர். இந்தப் போட்டியில் காலிறுதிவரை முன்னேறினார். பதக்கம் வெல்லாவிட்டாலும் அதில் கிடைத்த அனுபவம் அடுத்தடுத்த போட்டி களில் வெல்ல அவருக்கு உதவியது. இடையிடையே தேசிய அளவிலும் பங்கேற்றார். 2002இல் அய்தராபாத்தில் நடை பெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம், மூத்தோர் தேசிய வாகையர் பட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் ஆகிய வற்றை வெல்வதில் வேகம் காட்டினார். ஓராண்டு கழித்து கிரீசில் நடைபெற்ற உலக வாகையர் பட்டப்போட்டியில் பங்கேற்று, காலிறுதிவரை முன்னேறினார்.

அது அவருக்கு ஏமாற்றத்தை அளித் தாலும், அதே ஆண்டில் கனடாவில் நடை பெற்ற காமன்வெல்த் வாகையர் பட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது மறக்க முடியாததாக அமைந்தது. ஏனென் றால், கீதிகா பெற்ற முதல் சர்வதேசப் பதக்கம் இதுதான். 2005இல் சீனாவில் நடந்த ஆசிய வாகையர் பட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் கீதிகா. அதே ஆண்டில் காமன் வெல்த் வாகையர் பட்டப் போட்டியில் தங்கம் வென்றதால், தொடரின் சிறந்த மல்யுத்த வீராங்கனையாகவும் அவர் அறிவிக்கப்பட் டார். காமன்வெல்த் தொடரில் இந்த விருதைப் பெற்ற முதல் இந்திய வீராங்கனை கீதிகாதான்.

முத்திரை பதித்த பதக்கம்

இவற்றோடு கீதிகாவின் பயணம் முடிந்து விடவில்லை. 2006இல் தோகாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் பொட்டி யில் வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார். இந்திய மல் யுத்தத்தைப் பொருத்தவரை இது மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்பட்டது. இந்திய வீராங் கனை ஒருவர் ஆசிய விளை யாட்டு மல்யுத்தப் பிரிவில் பெற்ற முதல் வெற்றி இது என்பதால், இந்திய மல்யுத்தக் களம் பூரித்துப்போனது. அண்மையில் இந் தோனேசியாவில் நடை பெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தப் பிரிவில் வினேஷ்போகத் தங்கப் பதக்கம் வெல்லும் வரை கீதிகா வென்ற வெள்ளிப் பதக்கமே மிகப் பெரிய சாதனையாக இருந்தது. 2007இல் கனடாவில் நடைபெற்ற காமன்வெல்த் வாகையர் பட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்ற கீதிகா, தேசிய அளவிலும் முத்தாய்ப்பாக இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார். பின்னர் நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 2012இல் தேசிய மூத்தோர் வாகையர் பட்டப் போட்டியில் களமிறங்கினார். இடைவெளி விட்டுக் களத்துக்கு வந்தபோதும் பதக்கத்தை வெல்ல அவர் தவறவில்லை. தங்கப் பதக்கம் வென்றுகாட்டினார். அதன் பிறகு மீண்டும் துடிப்போடு போட்டிகளில் பங்கேற்கத் தொடங் கினார்.

2013இல் டில்லியில் நடைபெற்ற ஆசிய மூத்தோர் வாகையர் பட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர், 2014இல் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்தார்.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இருபது வயதான நவோமி ஒசாகா இன்று டென்னிஸ் உலகில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர். இந்த வருட அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதியாட்டத்தில் செரினா வில்லியம்ஸ் உடன் அவர் மோதினார். செரினாவின் அனுபவமும் அவர் வென்ற கிராண்ட் ஸ்லாம்களும் ஒசாகாவின் வயதைவிட அதிகம். செரினா எளிதில் வெல்வார் என எதிர்பார்க்கப் பட்டது.

போட்டியின் முடிவு செரினாவுக்கு மட்டு மல்லாமல் டென்னிஸ் உலகுக்கே அதிர்ச்சியை அளிக்கும் விதமாக இருந்தது. ஆம், டென்னிஸ் உலகில் முடிசூடா ராணியாகத் திகழும் செரினா வில்லியம்ஸை வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ஒசாகா வென்றார்.

இறுதிப் போட்டியின் நடுவே பல்வேறு இடை யூறுகள். நடுவருடன் செரினாவின் மோதல், விவாதம் எனப் பல சச்சரவுகள் நடந்தன. ஒசாகா வோ நிதான மாக வெற்றியை மட்டும் நோக்க மாகக்கொண்டு விளையாடி, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் செரி னாவை வீழ்த்திப் பட்டத்தை வென்றார்.

அமெரிக்க ஓபன் டென்னிசில் ஜப்பான் வீராங் கனை ஒருவர் பட்டம் பெறுவது இதுவே முதல்முறை. போட்டிக்குப் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்ற முதல் ஜப்பான் வீராங்கனை நான் என்பது பெருமையாக உள்ளது. ஜப்பானிய மொழியில் இதை எப்படிக் கூறுவது எனத் தெரியவில்லை எனக் கூறினார் ஒசாகா. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை ஜப்பானிய ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

ஜப்பான் தாய்க்கும் அய்தி நாட்டைச் சேர்ந்த தந்தைக்கும் பிறந்த நவோமி ஒசாகா மூன்று வயதில் அமெரிக்காவில் குடியேறினார். ஜப்பான் டென்னிஸ் அசோசியேஷனில் ஒசாகாவை அவருடைய தந்தை சேர்த்தார். டென்னிஸ் மீதான ஒசாகாவின் காதலுக்கு செரினா வில்லியம்ஸ்தான் காரணம்.

செரினா, தன்னுடைய முதல் கிராண்ட்ஸ்லாம் வென்றபோது, ஒசாகாவுக்கு ஒரு வயது. டென்னிஸ் ராக்கெட்டை ஒசாகா கையில் பிடித்த காலத்திலி ருந்தே தனக்கு முன்னுதாரணமாக செரினாவைத் தான் எடுத்துக்கொண்டார்.

செரினாவின் ஆட்டத் திறமையை வியந்த ஒசாகா அவரைப் போலவே டென்னிஸ் விளை யாட்டில் சாதிக்கத் துடித்தார். அதனையடுத்து பதினாறு வயதில் தொழில்முறை வீராங்கனையாக விளையாடத் தொடங்கினார் ஒசாகா. 2016ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முதன்முறையாகக் கலந்துகொண்டார் ஒசாகா. அந்தப் போட்டியில் அவருடைய செர்வ்-இன் வேகம் 200 கிலோ மீட்டர்.

அதன்பிறகு 2014ஆம் ஆண்டு   போட்டியில் உலகின் 19ஆம் நிலை வீராங்கனையான சமந்தா ஸ்டோசரை வென்று கவனத்தை ஈர்த்தார். பிரெஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் எனப் பல கிராண்ட் ஸ்லாம்களில் கலந்துகொண்டார். கிராண்ட்ஸ்லாம் போட்டிக்கு இணையான இண்டி யன் வெல்ஸ் போட்டியில் அவர் பெற்ற வெற்றி முக்கியத் துவம் வாய்ந்தது.

டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 70ஆவது இடத்திலிருந்த ஒசாகா தன்னுடைய தொடர் வெற்றிகள் மூலமாக 19ஆவது இடத்துக்குத் தற்போது முன்னேறி உள்ளார். நிதானமும் வேகமும் திருப்பி அடிக்கும் லாகவமும் ஒசாகாவின் வெற்றி தந்திரங்கள். டென்னிஸ் அரங்கில் அடுத்த செரினா வாக ஒசாகா மாறுவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி. அந்தக் கேள்விக்கான பதிலைக் காலம்தான் சொல்ல வேண்டும்.

ஒலிம்பிக் போட்டிகளில் வழக்கமான விளையாட்டுப் பிரிவுகளைத் தவிர மற்ற பிரிவுகளில் இந்திய வீராங்கனைகளின் பெயர்களைக் காண்பதே அரிது. நீச்சல் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் யாருமே பங்கேற்க மாட்டார்களா என்ற ஏக்கம் நீண்ட காலமாகவே இருந்துவந்தது. புத்தாயிரம் ஆண்டின் தொடக்கத்தில் நடந்த சிட்னி ஒலிம்பிக்கில்தான் அந்த ஏமாற்றம் நீங்கியது. சிட்னி ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் முதன்முதலாக இந்திய வீராங்கனையின் பெயரும் இடம்பெற்றது. அவர், நிஷா மில்லட் .

கருநாடகாவைப் பூர்விகமாகக் கொண்ட நிஷாவின் குடும்பம் சென்னையில் வாழ்ந்து வந்தது. நிஷாவுக்கு அய்ந்து வயதானபோதே அவரை நீச்சல் வீராங்கனையாக்குவது என்ற முடிவுக்கு அவருடைய பெற்றோர் வந்து விட்டார்கள். ஆனால், நிஷாவுக்கோ தண்ணீரைக் கண்டாலே ஒவ்வாமை. தண்ணீரில் கால்வைக்கவே பயப்படுவார்.

ஆனால், தண்ணீர் மீதான பயத்தை அவருடைய தந்தைதான் நீக்கினார். சென்னை ஷெனாய் நகரில் உள்ள ஒரு நீச்சல் கிளப்பில் நிஷாவைச் சேர்த்தார். நீச்சல் பயிற்சிக்கும் மகளை அனுப்பினார். கண்டிப்பான ஒரு பயிற்சியாளரிடம் இருந்து தான் நிஷாவின் நீச்சல் வாழ்க்கை தொடங் கியது. அந்தக் கண்டிப்பும் நீச்சல் மீது அவரு டைய பெற்றோர் காட்டிய ஈடுபாடும் விரை வாகவே அவரை நீச்சல் வீராங்கனையாக்கின.

சென்னையில் தொடக்கம்

பத்து வயதிலேயே மாநில அளவிலான நீச்சல் போட்டியில் களமிறங்க ஆரம்பித்து விட்டார் நிஷா. 1992இல் சென்னையில் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. 50 மீ ஃபிரீஸ்டைல் பிரிவில் பங்கேற்ற நிஷா, தங்கப் பதக்கம் வென்றார். நீச்சலில் அவர் பெற்ற முதல் பதக்கம் இதுதான். 1994இல் தேசிய சப்-ஜூனியர் பிரிவில் இடம்பிடித்த நிஷாவுக்கு, அந்த ஆண்டு மறக்க முடியாததாக அமைந்தது. தேசிய சப்-ஜூனியர் பிரிவில் அனைத்க வகையான ஃபிரீஸ்டைல் நீச்சல் போட்டி களிலும் தங்கப் பதக்கங்களை அள்ளினார்.

அதே ஆண்டில் ஹாங்காங்கில் நடந்த வயதுவாரியான ஆசிய நீச்சல் வாகையர் பட்டப் போட்டியில் நிஷா தங்கப் பதக்கம் வென்று முத்திரை பதித்தார். அவர் பெற்ற முதல் சர்வதேசப் பதக்கமும் இதுதான். இந்தத் தொடர் வெற்றி, அவரைத் தேசிய அளவில் பிரபலமாக்கியது. தேசிய அணி யிலும் அவரது இடத்தை உறுதிசெய்தது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான பயிற்சியிலும் நிஷாவுக்கு இடம் கிடைத்தது.

முத்திரை பதித்த ஆண்டு

1996இல் அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான முயற்சியில் நிஷா தீவிரம் காட்டிவந்தார். அப்போது அவருக்கு 16 வயதுதான். ஆனாலும், ஒலிம் பிக்கில் பங்கேற்கத் தீவிர ஆர்வம் காட்டி னார். தீவிரமாக முயன்றும் ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்க நிஷாவுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனாலும், அவர் சோர் வடையவில்லை. அடுத்த ஒலிம்பிக்கில் பங்கேற்பதை இலக்காகக் கொண்டு போட்டி களில் பங்கேற்கத் தொடங்கினார்.

1999இல் தேசிய அளவில் 14 தங்கப் பதக் கங்களை வென்று அசத்தினார். இந்தியத் தடகள வரலாற்றில் ஒரே ஆண்டில் இத் தனை தங்கப் பதக்கங்களைப் பெற்ற ஒரே பெண் என்ற சாதனைக்கும் சொந்தக்கார ரானார். 1998இல் பாங்காங்கில் நடந்த ஆசியப் போட்டி, 1999இல் பெர்த் நகரில் நடைபெற்ற உலக நீச்சல் வாகையர் பட்டப் போட்டி ஆகியவற்றில் பதக்கம் வெல்லா விட்டாலும் சர்வதேச அனுபவத்தை வளர்த் துக்கொண்டார்.

ஒலிம்பிக் லட்சியம்

சர்வதேசப் போட்டி அனுபவத்தோடு ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என்ற லட்சியத்தை அடைவதற்கான முயற்சியிலும் நிஷா ஈடுபாடு காட்டினார். இதற்காக நாள் பாராமல், நேரம் பாராமல் நீச்சல் குளமே கதி எனக் கிடந்தார். எப்போதும் பயிற்சி, கடுமையான உழைப்பு, அதற்கேற்ற திட்டமிடல் என்றே அவரது அன்றாட நிகழ்வுகள் இருந்தன. ஒலிம்பிக் தகுதிச் சுற்று நடைபெறுவதற்கு முன்பு சுமார் அய்ந்து மாதங்களுக்கு கடுமையான நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டார். தீவிரமான முயற்சிக்குப் பலன் கிடைத்தது.

தகுதிச் சுற்றில் வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டு சிட்னி ஒலிம்பிக்கில் பங்கேற் பதற்கான வாய்ப்பைப் பெற்றார் நிஷா. ஒலிம்பிக்கில் 200 மீ. ஃபிரீஸ்டைல் பிரிவில் பங்கேற்றார். ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்தியப் பெண் என்ற சிறப்பையும் பெற்றார். 2004 ஏதென்சு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவுடன் மீண்டும் தனது முயற்சியைத் தொடர்ந்தார் நிஷா. 2003இல் ஆப்ரோ-ஏசியன் வாகையர் பட்டப் போட்டியில் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று தன்னால் சாதிக்க முடியும் என்று தேசத்துக்கு நிரூபித்துக்காட் டினார்.  சாதனை ராணி

2015 வரை நீடித்த நீச்சல் பயணத்தில் குறிப்பிடத்தக்க சாதனைகளையும் நிஷா படைத்திருக்கிறார். குறிப்பாக, தேசிய அளவில் 200 மீ. 400 மீ. ஃபிரீஸ்டைல் பிரிவுகளில் தனது திறமையை வெளிப்படுத்தி சிறந்த நீச்சல் வீராங்கனை என்ற பெயரை எடுத்திருக்கிறார். ஃபிரீஸ்டைல் பிரிவில் 100மீ. தூரத்தை ஒரே நிமிடத்தில் நீந்திய ஒரே இந்தியப் பெண் என்ற சாதனைக்கும் இவரே சொந்தக்காரர்.

நீச்சலில் இவரது திறமையைப் பாராட்டி 1997, 1999ஆம் ஆண்டுகளில் சிறந்த விளை யாட்டு வீராங்கனை என்ற பிரதம அமைச்சர் விருதை மத்திய அரசிடமிருந்து பெற்றார். 2000இல் அர்ஜூனா விருதையும் பெற்றார். தற்போது 36 வயதாகும் நிஷா மில்லட், கருநாடகத்தில் நீச்சல் பயிற்சி மய்யங்களை அமைத்து பெண்கள், குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி அளித்துவருகிறார்.

இரண்டு வயதில் பார்வையை இழந்தபோதும், மன உறுதியாலும், விடாமுயற்சியாலும் தொடர்ந்து போராடி, கல்வி என்னும் ஆயுதம் ஏந்தி,  இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் ஆட்சியர் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார் கருநாடகாவைச் சேர்ந்த பிரஞ்ஜால் பட்டீல்.

விழித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளர் பெண்ணான பிரஞ்ஜால் பட்டீல்  கேரள மாநிலம் எர்ணாகுளம் ஆட்சியர் அலுவலகத்தில்  பயிற்சி ஆட்சியராக ஜூலை மாதம் பொறுப்பேற்றிருக்கிறார். ஊக்கமும் தைரியமும் கொடுத்து, தன்னை வாழ்க் கையில் உயர்த்திய தன்  தாயை கவுரவப்படுத்த விரும்பிய பிரஞ்ஜால் பட்டீல், தன் தாய் தன்னை மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர வைக்க வேண்டுமென  விரும்பியதற்கிணங்க, உயர் அதிகாரிகள் அனுமதியோடு அவரின் தாய் ஜோதி, மகளை  இருக்கையில் அமர வைத்த நெகிழ்வான  தருணமும் கேரள மாநிலத்தில் நடந்தேறியுள்ளது.

கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த பட்டீல்-ஜோதி இணையருக்குப் பிறந்த ஒரே மகள் பிரஞ்ஜால் பட்டீல். இவருக்கு இரண்டு வயதாக  இருந்தபோது, கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு அதன் காரணமாய் கண் பார்வை பறிபோனது. வெளி உலகைக் காணும் திறனை முற்றிலும்  இழந்தபோதும், நம்பிக்கையை இழக்காத பிரஞ்ஜாலுக்கு, அகக்கண் மூலமாக உலகைப் பார்க்கும் தைரியத்தை கொடுத்தனர் பிரஞ்ஜாலின்  பெற்றோர். படிப்பில் தீராத தாகம் கொண்டிருந்த அவர், பெற்றோர் தந்த ஊக்கத்தால், தொடுதிரை உதவியோடு பள்ளிப் படிப்பைத்  தொடர்ந்தார். தொடர்ந்து மும்பைக் கல்லூரியில் பட்டப் படிப்பையும் முடித்தவர், டில்லியில் உள்ள சர்வதேசக் கல்லூரியில் எம்.ஃபில்.   மற்றும்  பி.எச்டி. பட்டங்களையும் வென்றார்.

சிறு வயதிலிருந்தே சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்துடன் பிரஞ்ஜால் பட்டீல் வளர்ந்திருக்கிறார். அதன் காரணமாக  ஆட்சியராக வேண்டும் என்று முடிவெடுத்தவர், கடந்த 2014இல் தனது ஆட்சியர் கனவை நிறைவேற்றிக்கொள்ள அய்.ஏ.எஸ். தேர்வினை  எழுதி இருக்கிறார். தேர்வின் முடிவில் அவருக்கு 773ஆவது இடம் கிடைக்கவே, அவரின் ஆட்சியர் கனவிற்கு தற்காலிகத் தடை  ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் ரயில்வேத் துறையில் தேர்வாகி, கணக்குப் பிரிவில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். தன்னால் ஆட்சியர் ஆக  முடியவில்லையே என்ற எண்ணம் மனதிற்குள் இருந்துகொண்டே இருந் திருக்கிறது. தனது லட்சியத்தை அணைய விடாமல் பார்த்துக்கொண்ட அவர், 2017இல் மீண்டும் அய்.ஏ.எஸ். தேர்வை எழுதினார். இந்த முறை அவருக்கு 124ஆவது இடம் கிடைத் துள்ளது. தேர்வில் வென்று,  தனது ஆட்சியர் கனவை நிறைவேற்றிக் கொண்ட பிரஞ்ஜால், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த  மாதம் பயிற்சிக்  ஆட்சியராக பொறுப்பேற்று தான் கண்ட  கனவை நிஜமாக்கியிருக்கிறார்.

ஆட்சியர் பொறுப்பை ஏற்றதும் பத்திரிகையாளர் களைச் சந்தித்த பிரஞ்ஜால், சிறுவயது முதலே எனது கனவு அய்.ஏ.எஸ். ஆக வேண்டும்  என்பதே. பார்வை இழந்த காரணத்திற்காக என் கனவை விட்டுக் கொடுக்க நான் தயாராக இல்லை. என் கனவுக்காக கடுமையாக  உழைத்தேன். இதோ, இப்போது என் கனவு நனவாகி விட்டது. என் லட்சியம் வென்றது என பெருமையுடன் தெரிவித்தார். மேலும்,  உடல்  குறைகளைப் பற்றி நாம் கவலைப் பட்டுக் கொண்டே இருந்தால், வாழ்க்கையில் எதையுமே சாதிக்க முடியாது. கண் பார்வை பறிபோனாலும்,  அதை நினைத்து நான் ஒருபோதும் வருந்தியது இல்லை. வாழ்வில் வெற்றி பெற நிறைய வழிகள் உள்ளன. நமக்கு என்ன தேவையோ  அதற்காக மட்டுமே அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் வெற்றி என்பது நம் கைகளில் என்கிறார் இவர்.

Banner
Banner