மகளிர்

பெண் கல்வி : கேள்விக்குறியாகவே உள்ளது

பள்ளிக்கல்வி துறையில் தொடர்ந்து பல புதிய அறிவிப்புகள் வந்தாலும், தமிழகத்தில் பெண் கல்வி  கேள்விக்குறியாகவே இருக்கிறது. பொருளாதார அடிப்படையில் பெரும்பாலான பெண் களின் கல்வி தடைபட்டுப் போகிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பெண்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் முனைவர் பட்டம் பெறும் வரை இலவசக் கல்வி என்று அறிவிப்பு செய்து அம்மாநில முதல்வர் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். தமிழகத்தில் இலவசக் கல்வி நிலைமை குறித்து ஒரு சிலரிடம் கேட்டோம்.கவிஞர் தி.பரமேசுவரி இது குறித்து கூறுகையில், பெண்கல்வியும் இலவசக் கல்வியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இலவசக் கல்வி  அனைவருக்குமே பொதுவான ஒன்று. என்றபோதிலும் இன்று பல கிராமங்களில் இலவசக் கல்வி இல்லை என்றால் பெண்கள் அடிப்படை கல்வியைக்கூட பெற முடியாது.

இலவசக் கல்வியைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் வழங்கப் பட்ட இலவச மிதி வண்டி திட்டத்திற்குப் பிறகு கிராமப்புறப் பெண்கள் பள்ளிக்கு வருவது அதிகரித்தது. பெற்றோர்களுக்கு தன்னுடைய பெண் குழந்தை பேருந்தில் பள்ளிக்குச் சென்று வருவதை ஒப்புக்கொள்வதில் சிக்கல் இருந்தது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண்களுக்கான உதவித்தொகை இருக்கிறது. இப்படி பல திட்டங்கள் பெண் கல்வியை ஊக்குவித்தது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் நெடுங்காலமாகவே பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பாலான கிராமப்புற பெண்களுக்கு அடிப்படை கல்வி கிடைக்கிறது என்றால் அரசுப் பள்ளிகளே அதற்கு முக்கிய காரணம்.இதுவரை அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மீதும் ஆசிரியர் பற்றாக்குறை போன்ற விஷயங்களாலும் மக்களிடையே அவற்றின் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தது. கல்வித்துறை பல முயற்சிகளை எடுத்து இலவச கல்வி குறித்து மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. ஓரளவிற்கு அடிப்படைக் கல்வி பெண்களுக்கு சாத்தியப்பட்டிருக்கிறது என்றால் தமிழகத்தில் உள்ள இலவசக் கல்விதான் அதற்குக் காரணம்.

ஆனாலும் அடிப்படைக் கல்வியைத் தாண்டி பெண்களின் மேற்படிப்பு என்பது இன்றுவரையிலும் கேள்விக்குறியாக இருக் கிறது. இதற்கு பெற்றோர்களே முக்கிய காரணமாக இருக்கிறார்கள். கிராமப்புற பெண்கள் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் மேற் படிப்பிற்கான செலவு ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. மேற்படிப்பு, திருமணம் இப்படி தொடர் செலவுகளை மய்யப்படுத்தி கல்வி தடைபடுகிறது.இது குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தற்போது பெண் களுக்கு மேற்படிப்பு குறித்து ஆலோசனையை வழங்கி வரு கிறார்கள். கல்லூரிகளில் இலவசக்கல்வி  ஏற்பட்டால் கல்வி பெண் களுக்கு முழுமையாக கிடைக்கும். ஒவ்வொருவருக்கும் பெண் கல்வி குறித்து விழிப்புணர்வு தேவை.

அடிப்படையிலிருந்து ஓர் ஆணுக்கு கல்வி கொடுத்தால் அவர் குடும்பத்தையே பார்த்துக்கொள்வார் என்கிற மனநிலை நம் மக்களுக்கு இருக்கிறது. இந்த மனநிலை மக்கள் மத்தியில் மாற வேண்டும். அரசுக் கல்லூரிகளில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.  இதைப் பயன்படுத்தி பெற்றோர்கள் தங்களுடைய பெண் குழந்தைகளுக்கு முழுமையான கல்வியை அளிக்க வேண்டும் என்கிறார் தி.பரமேசுவரி.இதுகுறித்து கல்வியாளர் வசந்திதேவியிடம் கேட்டபோது, தமிழகத்தைப் பொறுத்தவரை ஆண்-பெண் இருவருக்குமே காசுக்கேற்ற கல்வி என்றுதான் வைத்திருக்கிறார்கள். தனியார் பள்ளிகளையே பெற்றோர்கள் தேடிச்செல்கிறார்கள். தற்போது உள்ள அரசு கல்வி முறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்தும் அறிவிப்புகள் ஒன்றும் இல்லை. டிஜிட்டல் வகுப்பறைகள் என்று அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தினாலும், தனியார் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறையுமா என்று தெரியவில்லை. தனியார் பள்ளிகளை குறைப்பதற்கு அரசு தயாராக இல்லை. தனியார் பள்ளி களுக்கு எந்த விதமான கட்டுப்பாடுகளையும் அரசு விதிப்பதும் இல்லை. முறையின்றி பல தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில்தான் பெண் குழந்தைகளை பெற்றோர் சேர்க்கிறார்கள். அங்கே அந்த பெண் குழந்தைக்கு பாதுகாப்பு என்பது கேள்விக் குறியாக இருக்கிறது.

பெண் கல்விக்கு ஆதரவான கல்விமுறை இங்கு இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அரசியல் பிரமுகர்கள் வழங்கக்கூடிய இலவசங்களைப் பெறுவதற்கு முந்திச் செல்கிற மக்கள், இலவசக் கல்வியை ஏற்க மறுக்கிறார்கள். தனியார் பள்ளிகளின் எண்ணிக் கையை குறைத்தால்தான் மக்களுக்கு இலவசக் கல்வி மீது நம்பிக்கை ஏற்படும். இங்கு இருக்கக்கூடிய தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்தாமல் இலவசக்கல்வி மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படாது என்கிறார் வசந்திதேவி.


கழிப்பறை இல்லாததால் விவாகரத்து

ராஜஸ்தானில் மனைவிக்குக் கழிப்பறை கட்டித் தராத கணவனிடமிருந்து பிரிந்து வாழ விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. 2011-இல் ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த சோட்டு லாலுக்கும் சங்கீதாவுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடப்பதற்கு முன்பே கழிப்பறை வசதி செய்துதரப்படும் என்று சோட்டு லால் குடும்பம் தரப்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. ஒவ்வொரு நாளும் இருள் வருவதுவரை காத்திருப்பதும் அதிகாலையிலேயே திறந்த வயல்வெளிகளைத் தேடிப் போவதும் சங்கீதாவுக்கு மிகுந்த சங்கடத்தை அளித்துவந்தது. இதனால், கடந்த ஆண்டு விவாகரத்து கோரி அவர் வழக்குப்பதிவு செய்தார். சங்கீதா மாலிக் தொடர்ந்த வழக்கு வடஇந்திய நாளிதழ்களில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டது. இந்நிலையில் நீதிபதி ராஜேந்திர குமார், விவாகரத்து வழங்கினார். மது, புகையிலை, மொபைல் போன்களுக்குச் செலவழிக்கப் பணம் உள்ள நிலையில், வீட்டில் கழிப்பறை கட்ட முடியாதது முரண்பாடானது என்றும் தனது தீர்ப்பில் அவர் கூறியுள்ளார்.

ஆணாதிக்கம் காரணமாக 47 சதவீதம் பெண்கள் படித்தவர்களாக இருந்தாலும், உழைப்புப் பங்களிப்பு என்று வருகிறபோது பெண்கள் 29 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறார்கள்.

வேலைக்குப் போகும் பெண்கள் என்று வரும் போதே பொதுவாக வெள்ளுடைப் பணிகள் என்ற ழைக்கப்படும் அலுவலக வேலைகளை மட்டுமே நாம் நினைத்துப் பார்க்கிறோம். பெண்கள் வேலைக் குப் போகலாமா வேண்டாமா என்பது குறித்தெல்லாம் பெரும் விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டவை இந்தப் பணிகள் பற்றி மாத்திரம்தான். இந்த வேலைகளுக்குப் பெண்களை அனுப்புவதில்தான் இந்தச் சமுதாயத் துக்குச் சங்கடமெல்லாம். பெண் மென்மையானவள், அவளை வேலைக்கு அனுப்பி சிரமப்படுத்தக் கூடாது என்று சொல்வதெல்லாம்கூட இந்தப் பணி களுக்குப் பெண்களை அனுப்புவது குறித்து மட்டும் தான்.

இந்த விவாத வரையறைகளுக்குள் கிராமங் களில் காலங்காலமாகத் தங்கள் உடலுழைப்பைச் செலுத்திக் கொண்டிருக்கிற பெண்கள் வரமாட் டார்கள். வயல் காட்டில் சேற்றிலும் சகதியிலும் பெண்கள் இறங்காத காலம் என்ற ஒன்று எப்போதும் இருந்தது கிடையாது. உச்சி வெயிலில் அவர்கள் குனிந்தபடியே வேலை பார்க்கிறார்கள். பெண் வேலைக்குப் போகலாமா என்ற விவாதத்தில் இவர் களுக்கு இடமில்லை. இன்றும்கூட வேலைக்குச் செல்லும் பெண்கள் எண்ணிக்கை நகரத்தோடு ஒப்பிடும்போது கிராமத்தில் தான் அதிகம். ஆனால், பொதுப்புத்தியில் நகரங்களில் தான் பெண்கள் வேலைக்குப் போவதாகப் பதிந்துபோயுள்ளது.

பெண் உழைப்பு என்பதை கிராமம் சார்ந்தும், நகரம் சார்ந்தும் பிரித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. இதை ஒருவகையில் உடல் சார்ந்த உழைப்பு, அறிவு சார்ந்த உழைப்பு என்று வகைப்படுத்தலாம். உடலு ழைப்பில் (பெரும்பகுதியும் கிராமத்தில்) பெண்கள் திருமணத்துக்கு முன் குறைவாகவும் திருமணத் துக்குப் பின் அதிகமாகவும் ஈடுபடுகிறார்கள். அறிவுசார் உழைப்பில் (பெரும்பகுதி நகரத்தில்) பெண்கள் திருமணத்துக்கு முன் அதிகமாகவும் திருமணத்துக்குப் பின் குறைவாகவும் ஈடுபடு கிறார்கள். கிராமங்களில் பெண்கள் திருமணத்துக்குப் பின் அதிகமாக வேலைக்கு அனுப்பப்படுவதோடு தள்ளாத முதுமையிலும் தங்கள் உழைப்பைத் தொடர வேண்டிய நெருக்கடி இருக்கிறது.

அனைத்து நிலைகளிலும் குடும்ப வறுமையும் பல நேரங்களில் ஆதரவற்ற நிலையுமே வெளியில் வேலைக்குச் செல்லும் நிர்ப்பந்தத்தை இவர்களுக்கு ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் பெண் வெளியில் வேலைக்குச் செல்ல நேர்வதே அவளுக்கு நேரும் துன்பமாகவே பார்க்கப்படுகிறது, உணரப்படுகிறது. அந்த வேலை அவளின் தன்மதிப்பை உயர்த்து வதாகப் பார்க்கப்படுவதில்லை. ஒருவகையில் அந்தப் பெண் வேலைக்குச் செல்வது என்பது அந்த வீட்டு ஆணின் இயலாமையாகவோ அவமான மாகவோ பார்க்கப்படுகிறது. எனவே, குடும்ப வருமானம் ஓரளவு அதிகரித்தால்கூட, உடனே பெண் வேலைக்குப் போவது நிறுத்தப்பட்டு விடுகிறது.

உழைப்புச் சந்தையில் அவள் எப்போதுமே உதிரியாகவே இருக்கிறாள். இந்தச் சமுதாயச் சூழலில் அந்தப் பெண்ணே தான் உழைக்க நேர்ந்தது குறித்து கழிவிரக்கத்துடனேயே சிந்திக் கிறாள். தன் உழைப் பின் மீது பெருமிதம் கொள்ள முடியாத நிலையில், அந்தப் பணியிடங்கள் அவ ளுக்குக் கவுரமான வையாக இல்லை என்பதன் தொடர்ச்சியாக அவை பாதுகாப்பானவையாகவும் இருப்பதில்லை. இந்தப் பின்னணியில்தான் பெண் ணின் உழைப்பு அந்தச் சந்தையில் பொருளாதார ரீதியாக ஆணின் உழைப் புக்குச் சமமான மதிப்பைப் பெறாமல் குறைவான ஊதியத்துக்குரியதாக இருக் கிறது.

வளங்குன்றா வளர்ச்சியின் வழிகாட்டி!

1914 மே 23 அன்று இங்கிலாந்தில் பிறந்தார் பார்பரா வார்ட். அவருடைய தந்தை வால்டர் வார்ட்,  பார்பராவின் தாய் தெரசா மேரி பர்ஜ்.  
1935-ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற பார்பரா, 1938-ஆம் ஆண்டு தி இண்டர்நேஷனல் ஷேர் அவுட் எனும் தனது முதல் புத்தகத்தை எழுதினார். சிறுவயதில் ஃபிரான்ஸ், ஜெர்மனி போன்ற அய்ரோப்பிய நாடுகளில் படித்ததால், அய்ரோப்பியக் கண்டத்தில் உள்ள பொருளாதார, அரசியல் பிரச்சினைகள் குறித்து அவருக்குத் தெளிவான பார்வை இருந்தது. அதனால் ஹிட்லரின் இன அழிப்புக்கு எதிராகவும், உலகப் போர்களுக்குப் பின் அய்ரோப்பிய நாடுகளின் ஒற்றுமைக்காகவும் போராடிவந்தார்.

தேச, சர்வதேச மேம்பாட்டுக்குப் பொருளாதாரம் மட்டுமே வழிகோலும் என்று சொல்லப்பட்டுவந்த காலத்தில், சமத்துவமின் மையும் சுரண்டலும் இல்லாத பொருளாதாரமே சர்வதேச மேம் பாட்டுக்குப் பயன்படும் என்று வலியுறுத்தியவர் பார்பரா. அதனா லேயே, அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் ஜான் கென்னடி, லிண்டன் ஜான்சன், பிரிட்டனின் முன்னாள் பிரதமர்கள் ஹரால்ட் வில்சன், ஜேம்ஸ் கல்லகன், கனடாவின் முன்னாள் பிரதமர்கள் லெஸ்டர் பியர்சன், பியர் த்ரூதோ போன்றவர்களுக்குத் தனிப்பட்ட அளவில் அறிவுரைகளை வழங்குபவராகத் திகழ்ந்தார். இந்த அரசியல் தொடர்புகள், அவரை அய்க்கிய நாடுகள் மன்றத்துக்கு அழைத்துச் சென்றன.

சர்வதேச அளவில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதை முக்கியமான அரசியல் நடவடிக்கையாக, வளர்ச்சித் திட்டங்களில் ஒன்றாக, உலக நாடுகள் 1972-ஆம் ஆண்டில்தான் ஏற்றுக்கொண்டன. அந்த ஆண்டில்தான் மனிதச் சுற்றுச்சூழல் குறித்து அய்க்கிய நாடுகள் மன்றத்தின் மாநாடு ஸ்டாக் ஹோமில் நடந்தது. 

அய்.நா. மன்றத்தின் அன்றைய துணைப் பொதுச் செயலாளராக இருந்த மவுரிஸ் ஸ்ட்ராங், சுற்றுச்சூழல் குறித்து ஒரு மாநாடு நடத்தப் போகிறோம். அதில் என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்பட வேண் டும் என்று எங்களுக்கு ஓர் அறிக்கை தாருங்கள் என்று பார்பராவிடம் கேட்டார். அதை ஏற்றுக் கொண்ட பார்பரா, 58 நாடுகளைச் சேர்ந்த 152 பல்துறை அறிஞர்களிடம் ஆலோசனை செய்தார்.

ரெனே த்யூபோ என்பவருடன் இணைந்து ஒன்லி ஒன் எர்த் என்ற தலைப்பில் ஓர் அறிக்கையைத் தயாரித்து 1972-ஆம் ஆண்டு அய்.நா.விடம் சமர்ப்பித்தார் பார்பரா. இந்த அறிக்கைதான் பின்னாளில் அதே தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது.

'வளங்குன்றா வளர்ச்சி' எனும் கருத்தாக்கத்தைப் பற்றிப் பேசிய முதல் புத்தகமாக இது கருதப்படுகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி, நிலம், நீர், காற்று மாசுபாடு, புதைபடிவ எரிபொருட்கள், மக்கள்தொகை அதிகரிப்பு, பசுமைப் புரட்சி போன்ற முக்கியமான விஷயங்களைப் பற்றி இந்தப் புத்தகத்தில் பார்பரா அலசியிருக்கிறார். 

45 ஆண்டுகள் கழிந்து, பருவநிலை மாற்றம் பூதாகரமாக உருவெடுத்து வரும் நிலையிலும் இந்த உலகுக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. இயற்கை, வளங்குன்றா வளர்ச்சி, சுரண்டல் இல்லாத பொருளாதாரம் போன்றவை குறித்து 15-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதிய பார்பரா வார்ட், புற்றுநோய் காரணமாக 1981 மே மாதம் 31 ஆம் தேதி மறைந்தார்.

பெண்களுக்கான சட்டங்கள்

1925    இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் மனைவி, பெண் குழந்தைகளுக்கு சொத்து உரிமை வழங்கப்பட்டது.

1929  குழந்தை திருமணத் தடைச் சட்டம் இயற்றப்பட்டது.

1955 திருமணச் சட்டப்படி பெண்களின் திருமண வயது 17 வயதாக அறிவிக்கப்பட்டு, தற்பொழுது 21 வயதாக உயர்த்தப்பட்டு பின்பற்றப் படுகின்றது.

1956  வாரிசுரிமைச் சட்டம், பெற்றோர்களின் சொத்துக்களையடைய பெண்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.

1956 விதவைகள் மறுமணச் சட்டம்,  விதவைகள்  மறுமணத்தை அங்கீகரிகத்து சட்டம்.

1961   மகப்பேறு நலச்சட்டம் - மகப்பேறு காலத்தில் பெண்கள் விடுப்பு எடுக்கவும் அக்காலத்தில் ஊதியம் பெறவும் உறுதி செய்யப்பட்டது.

1961 வரதட்சணை ஒழிப்புச் சட்டம் (1984 இல் திருத்தப்பட்டது). வரதட்சணை வாங்குபவர்களுக்கு சிறைத் தண்டணை.

1986  பெண்களை அநாகரிகமாகக் காட்டுவதை தடை செய்யும் சட்டம்.

1989 வாரிசுரிமைச்  சட்டம் - பெண்களுக்குப் பரம்பரை சொத்தில் சமபங்குரிமை.

1990  பெண்களுக்கான தேசிய ஆணையம்.

1994      குழந்தை பிறப்புக்கு முன் பாலியல் பகுப்பாய்வு நுட்பங்கள் சட்டம் - பெண் சிசுவை கருவிலே அழிப்பதை தடுப்பதற்கு சட்டம்

2005 குடும்ப வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு சட்டம்.

2013  பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, தடை, தீர்வு சட்டம்.


மனிதர்களைப் போலவே தாவரங்களுக்கும் உணர் வுகள் உண்டு. ஆனால், அந்த உணர்வுகளை மதிப்பவர்கள் வள்ளலார் போன்ற சிலரே!
மனிதர்கள் தங்களது ஆரம்ப காலத்திலிருந்து தாவரங் களைச் சார்ந்திருக்கிறார்கள். உணவாகவும் மருந்தாகவும் உடலை மறைக்கவும் எனத் தாவரங்கள் பலவிதங்களில் மனிதர்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கின்றன.

உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கின்ற, மருத்துவக் குணங்களைக் கொண்ட தாவரங்கள் பலவற்றை ஆய்வு செய்து, அவற்றைப் பாதுகாக்க, இந்தியாவில் ஒரு பெண் பெருமுயற்சிகளை மேற்கொண்டார். அதுவும் நாடு விடுதலை அடைந்து சுதந்திர இந்தியாவாகத் திகழ்ந்த
50-களில்! அவர் ஜானகி அம்மாள்.

அவருடைய தந்தை இ.கே.கிருஷ்ணன் தலசேரியில் துணை நீதிபதியாகப் பணியாற்றினார். இயற்கை மீது அவருக்கிருந்த காதலால், தன்னுடைய வீட்டில் பல வகையான தாவரங்களைக் கொண்ட தோட்டம் ஒன்றைப் பராமரித்துவந்தார். அவர் மூலமாகவே ஜானகிக்கும் தாவரங்கள் மீது ஈர்ப்பு வந்திருக்க வேண்டும்.

சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் தாவரவியலில் பட்டம் பெற்றார் ஜானகி. பிறகு, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் தாவரவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். அதன் பிறகு, சில காலம் அங்கேயே ஆசிரிய ராகவும் பணியாற்றினார். கொஞ்ச காலத்துக்குப் பிறகு, அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் படித்து, தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்றார். ஒரு அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில், தாவரவியல் துறையில் முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்ற இந்தியப் பெண், அநேகமாக ஜானகியாகவே இருப்பார்!

இன்று நாம் உண்ணும் இந்திய கரும்பில் இனிப்பு இருப்பதற்குக் காரணம் ஜானகி அம்மாள்தான். 1934 முதல் 1939-ஆம் ஆண்டுவரை கோவையில் உள்ள கரும்பு நிறுவனத்தில் மரபணுவியலாளராகப் பணியாற்றினார். ஹைபிரிட் வகைக் கரும்புப் பயிர்களை அவர் உருவாக்கினார். அதற்கு முன்புவரை இனிப்புச் சுவையுள்ள கரும்புகளை இந்தியா, ஜாவா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியப் பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்துவந்தது.

ஒரு பெண்ணாகவும், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவராகவும் இருந்த ஜானகிக்கு அந்த நிறுவனத்தில் பல்வேறு வகைகளில் துன்பங்கள் நேரிட்டன. எனவே அங்கிருந்து விலகி, 1940 முதல் 1945-ம் ஆண்டுவரை லண்டனில் உள்ள ஜான் இன்னேஸ் தோட்டக்கலை நிறுவனத்தில் உயிரணுவியலாளராகப் பணியாற்றினார். பிறகு இங்கிலாந்தின் விஸ்லி பகுதியில் இருந்த ராயல் தோட்டக்கலைச் சங்கத்தில் மக்னோலியா எனும் ஒருவகைத் தேயிலைத் தாவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதன் காரணமாக, அந்தத் தாவரத்தின் இன்னொரு வகைக்கு மக்னோலியா கோபஸ் ஜானகி அம்மாள் என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் தான், சி.டி.டார்லிங்டன் எனும் பிரபல உயிரியலாளருடன் இணைந்து தி குரோமோசோம் அட்லஸ் ஆஃப் கல்டி வேடட் பிளாண்ட்ஸ் எனும் புத்தகத்தை எழுதினார்.

ராயல் தோட்டக்கலைச் சங்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ஜானகி அம்மாளுக்கு, அன்றைய இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, இந்தியத் தாவரவியல் ஆய்வு நிறுவனம் (பொட்டானிக்கல் சர்வே ஆஃப் இந்தியா) அமைப்பைத் திருத்தி அமைக்க அழைப்பு விடுத்தார். 1951-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த அவர், மரபுசார் தாவரவியல் அல்லது இனக்குழு தாவரவியல் என்று பொருள்படும் எத்னோபாட்டனி ஆய்வுகளை முதன்முதலாக முன்னெடுத்தார்.

அதன் தொடர்ச்சியாக 1956-ம் ஆண்டு சிகாகோவில் நடந்த பூமியில் ஏற்படும் மாற்றத்தில் மனிதனின் பங்கு எனும் மாநாட்டில், பழங்குடி மக்களின் மரபு அறிவைப் பற்றிக் கட்டுரை ஒன்றைச் சமர்ப்பித்தார்.

1970-ம் ஆண்டு சென்னைக்குத் திரும்பிய அவர், தனது இறுதிக் காலத்தை மதுரவாயலில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் உயராய்வு மய்யத்தின் கள ஆய்வுக்கூடத்தில் கழித்தார். அங்கு, மருத்துவக் குணங்கள் கொண்ட தாவ ரங்களை உடைய தோட்டம் ஒன்றை அவர் பராமரித்து வந்தார். அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த போது 1984-ம் ஆண்டு பிப்ரவரி 7 அன்று இயற்கை எய்தினார். தாவரவியல் ஆராய்ச்சியுடன் தனது பணியை நிறுத்திக்கொள்ளாமல், கேரளத்தின் அமைதிப் பள்ளத்தாக்கு பாதுகாப்புப் போராட் டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் அவர்.

அவரின் நினைவாக 2000-ஆம் ஆண்டிலிருந்து தாவரவியல், விலங்கியல் வகைப்பாட்டியலில் சிறந்து விளங்குபவர்களுக்கு, இ.கே.ஜானகி அம்மாள் வகைப் பாட்டியல் தேசிய விருது வழங்கப்படுகிறது. அதைச் சிரத்தையாகச் செய்த அரசு, அவரின் கடைசி காலத்தில் அவர் பணியாற்றிய மதுரவாயல் ஆய்வுக்கூடத்தை மறந்துவிட்டது. அங்கு அவர் வளர்த்த தோட்டம் இன்று பராமரிப்பின்றிப் புல்லும் பூண்டும் மண்டிப் புதராகக் காட்சியளிக் கிறது. அந்த ஆய்வுக்கூடக் கட்டிடங்கள் பாழடைந்துகிடக்கின்றன. ஆனால் அதே நேரம், ஜம்முவில் அவரின் நினைவாக உருவாக்கப்பட்ட ஜானகி அம்மாள் மூலிகைப் பூங்கா போற்றிப் பாதுகாக்கப்படுகிறது. வடக்கில் வாழ்கிறது தெற்கில் அழிகிறது!

கண் பார்த்தா கை வேலை செய்யணும் என்பார்கள். அத் தகைய திறமை ஒரு சிலருக்கே வாய்க்கும். அது மாதிரியான ஒரு பிறவிதான் உஷா. கந்தர்வ் கலைக்கூடம் ஆரம்பித்து கடந்த 18 ஆண்டுகளாக கை வினைப்பொருட்கள் மட்டு மல்லாது பொம்மைகள், ஓவியம், ஜடை தைத்தல்,  காய்கனி அலங்காரம், மெழுகுவர்த்தி தயாரித் தல், செயற்கை ஆபரணங்கள் தயா ரித்தல், மருதாணி இடுதல், குக்கிங் அண்டு பேக்கிங் போன்ற பல விஷயங் களின் செய்முறையை பலருக்கும் கற்றுத் தருகிறார்.

உஷா தனது சிறுவயதிலே யார் என்ன பொருட்கள் செய்தாலும் அதை அப்படியே செய்ய முயற்சி செய்வாராம். வீட்டில் இருக்கும் எதாவது ஒரு பொருளை பார்த்து அது போல செய்ய முயற்சிப்பாராம். விளையும் பயிரை முளையிலே அறிந்து கொள்ளலாம் என்பார்கள். அது அத்தனை உண்மை என சிறு வயதிலே நிரூபித்திருக்கிறார் உஷா.

என் சொந்த ஊர் நாகர்கோவில். அங்கே ஏதாவது முக்கிய நாள் என்றால் என் வீட்டில் கோலம் போடுவது போக அந்த தெருவில் உள்ள முக்கால்வாசி வீட்டுக்கு நான்தான் கோலம் போடுவேன்.  வயர்களில் விதவிதமாக பல வண்ணங்களில் கிளி பொம்மைகள் செய்வேன். பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்த போதும் பதினொன்றாம் வகுப்பில் கைவினைப் பொருட்கள் மீது கொண்ட தீராத ஆசையால் ஹோம் சயின்ஸ் குரூப்பில் சேர்ந்தேன்.

அதன் பிறகு ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றபோதும் அடிப்படை ஓவியம் மற்றும் எம்ப்ராய்ட்ரி ஒர்க்கில் டிப்ளமோ படித்து ஹையர் கிரேடு முடித்தேன். பள்ளியிலும், கல்லூரியிலும் நடைபெற்ற கைவினைப் பொருட்கள் போட்டிகளில் பங்கேற்று நிறைய பரிசுகள் வாங்கினேன்.

பஞ்சு வைத்து தயாரிக்கும் சாஃப்ட் டாய்ஸைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எனக்கு வெகுநாளாக ஆசை. நிறைய பேரிடம் கேட்டும் யாரும் கற்றுத் தரவில்லை. அதன்பிறகு பெங்களூரில் இருந்த எங்கள் உறவுக்காரர்களின் பக்கத்து வீட்டில் இருந்த தெரிந்த பெண் ஒருவர் எனக்கு அந்த பொம்மைகள் செய்யக் கற்றுத் தந்தார். நான் அதற்குப் பதிலாக அவருக்கு தஞ்சாவூர் பெயின்டிங் கற்றுக்கொடுத்தேன். இது மாதிரி பல கைவினைப்பொருட்களின் செயல் முறைகளை தெரிந்து கொண்டேன்.

1999ஆம் ஆண்டு கணவர் லஷ்மணன் உதவியோடு கந்தர்வ் கலைக்கூடம் ஆரம்பித்தேன். நிறைய பெண்கள் என்னிடம் இதனைக் கற்று பலன் பெற்று வருகின்றனர். சம்பாதிக் கவும் செய்கின்றனர்.

ஒரு தனியார் நிறுவனத்தின் எக்ஸ்பர்ட் டீச்சராக இருக்கிறேன். பல கண்காட்சியினை, பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றை நடத்தி வருகிறேன். விடுமுறைக் காலங்களில் பிள்ளைகளுக்காக ஸ்பெஷல் பயிற்சி முகாம்களும் நடத்தி வருகிறேன். பள்ளி, கல்லூரி, அலுவலகம் போன்ற வற்றில் டெமோ வகுப்புகள் நடத்தி சான்றிதழ்களும் வழங்கி வருகிறோம்.
மூன்று நாட்கள் கைவினைப் பொருட்கள் சம்பந்தப்பட்ட ஒர்க் ஷாப் மற்றும் கண்காட்சியினை எங்கள் செலவில் நானும் என் கணவரும் இது சம்பந்தப்பட்ட சில ஆசிரியைகளுடன் இணைந்து நடத்தினோம். அங்கு வந்த அனைவருக்கும் இலவசமாக பயிற்சிகள் வழங்கினோம். இன்றைக்கு அதை நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது.

ஒரு கல்யாணத்தை நடத்துவதும் இத்தகைய ஒர்க் ஷாப்பை நடத்துவதும் ஒன்று தான். அவ்வளவு சிரமங்களுக்கிடையே அதனை செய்தோம். நல்ல வரவேற்பு இருந்தது.    இதன் மூலம் பெண்கள் தனக்கான பொருளாதார சுதந்திரத்தையும் பெற முடியும், வீட்டில் இருந்தபடியே குழந்தைகள், குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள முடியும்.

தனது சொந்தக் காலிலும் நிற்க முடியும். பெண்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதே என் எண்ணம். இது மட்டுமல்லாது பலரும் பயன்படும் வகையில் மேலும் பல பத்திரிகைகள், தொலைக்காட்சி நிறுவனங்களில் நிகழ்ச்சிகள் மூலம் பயிற்சிகள் அளித்து வருகிறேன். பெண்கள் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கும் முறைகளை அவர்களுக்குக் கற்றுத்தருகிறேன் என்பதில் திருப்தி அடைகிறேன் என்பவர் இத்துடன் நிற்கவில்லை,

பத்திரிகைகளில் சமையல் வகைகளை எழுதுவது,  செயற்கை பூக்கள் தயாரிப்பது என இவரது திறமையின் பட்டியல் நீள்கிறது.உலக அரங்கில் விளையாட்டு வீராங்கனைகள் வெற்றிகளைக் குவித்துவரும் காலம் இது. இப்போது சென்னையைச் சேர்ந்த வாள் வீச்சு வீராங்கனை ஒருவர் சர்வதேச வெற்றியைப்பெற்றுள்ளார். ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கோலோச்சிவரும் வாள் வீச்சுப் போட்டியில் இந்தியா பெறும் முக்கிய சர்வதேச வெற்றி இது. இந்தச் சாதனைக்குச் சொந்தக்காரர் சென்னையைச் சேர்ந்த சி.ஏ. பவானிதேவி.

சென்ற வாரம் அய்ஸ்லாந்தில் நடைபெற்ற சர்வதேச வாள் வீச்சுப் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் மொத்த தேசத்தையும் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் இந்தச் சென்னைப் பெண். இந்த வெற்றி மட்டுமல்லாது ஆசிய வாகையர் போட்டியிலும் காமன்வெல்த் போட்டியிலும் ஏற்கெனவே வெள்ளிப் பதக்கங்களைக் குவித்திருக்கிறார். இவ்வளவு சாதனைகளைச் செய்துள்ள பவானி, ஆரம்பத்தில் வகுப்புகளிலிருந்து தப்பிக்க மைதானத்தில் ஒதுங்கி யவர். ஏதாவது விளையாட்டு ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற சூழ்நிலையில் வாள் வீச்சைத் தேர்வுசெய்தவர்.

தண்டையார் பேட்டையிலுள்ள முருக தனுஷ்கோடி பள்ளியில் ஆரம்பக் கல்வி படித்தார். அவரது சாதனைக்கான முதல் விதை இங்கேதான் தூவப்பட்டது. பள்ளியில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வாள் வீச்சை அவர் தேர்வுசெய்தது அவரது வாழ்க்கைக்கு மட்டுமல்ல, இந்திய வாள் வீச்சு விளையாட்டுக்கும் முக்கியமான தருணம்.

பள்ளி அளவிலான வாள் வீச்சுப் போட்டியில் எதிர்பார்க்காத வெற்றிகளைக் குவித்தார். அதுவரை அவருக்கான பயிற்சி செலவுகளை அவரது குடும்பமே கவனித்துவந்தது. இந்தத் தொடர் வெற்றிகளால் கேரள மாநிலம் தலசேரியில் உள்ள இந்திய விளையாட்டுத் துறை பயிற்சி மய்யத்தில் பயிற்சிபெறும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இங்கு இந்தியாவின் புகழ்பெற்ற வாள் வீச்சுப் பயிற்சியாளரான சாகர் சுரேஷ் லாகுவிடம் வாள்வீச்சு நுட்பங்களைக் கற்றுத் தேர்ந்தார். 2007 துருக்கியில் நடந்த வாள் வீச்சுப் போட்டியின் மூலம் சர்வதேச வாள் வீச்சுப் போட்டிகளில் அறிமுகமானார். ஆனால், அந்தப் போட்டியில் 3 நிமிடம் தாமதமாக வந்ததற்காக அவருக்கு பிளாக் கார்டு காட்டப்பட்டு விளையாட அனுமதிக்கப்படவில்லை.

சாதாரணப் பின்னணியுடன் பல தடைகளுக்குப் பின்னர் சர்வதேசப் போட்டிக்கு வந்து விளையாட  முடியாமல் போனாலும் மனோதிடம் அவரை வலுப்படுத்தியது. அந்த ஆண்டிலேயே மலேசியாவில் நடந்த காமன்வெல்த் வாகையர் பட்டப் போட்டியில் வெண்கலம் வென்றார். சர்வதேச அளவில் பவானிக்குக் கிடைத்த முதல் பதக்கம் அது. அதற்கு அடுத்த ஆண்டு பிலிப்பைன்சில் நடந்த ஆசிய வாகையர் போட்டியில் வெண்கலம் வென்று, தனது முத்திரை வெற்றிகளைத் தொடர்ந்தார். இந்த வெற்றியின் மூலம் உலகத் தரவரிசையில் 93-ஆவது இடத்துக்கு முன்னேறினார்.  மூத்த வாள் வீச்சு வீராங்கனைகளான ரீஷா புத்துசேரி, டயானா தேவி ஆகியோர் முறையே 144, 142 இடங்களுக்குத்தான் முன்னேறியுள்ளனர்.

வெண்கலப் பதக்கங்களாக வாங்கிக் குவித்த பவானி, அடுத்தடுத்த ஆண்டுகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்றார். 2012-ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நடந்த காமன்வெல்த் வெட்டரன் வாள் வீச்சுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆசிய வாகையர் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2014-ஆம் ஆண்டு இத் தாலியில் நடந்த டஸ்கனி போட்டியில் முதலிடம் பெற்றார். சர்வதேசப் போட்டி யில் பவானி வென்ற முதல் தங்கம் இதுதான்.  பவானியுடன் இணைந்து அவரு டைய பெற்றோரும் உதவிக்காக அலைந் துள்ளனர். அதன் பலனாகத் தமிழக அரசின் உதவி கிடைத்திருக்கிறது. சமீபத்தில் 'கோ ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன்' உதவியும் கிடைத்துள்ளது.

இந்த உதவியால் உலகப் பிரசித்திபெற்ற பயிற்சி யாளர்களான அமெரிக்காவின் எட்வார்ட் கோர்ஃபெண்டி, இத்தாலியின் நிக்கோலோ சனோட்டி ஆகியோரிடம் பவானி பயிற்சி எடுத்துள்ளார். இந்தப் பயிற்சி மூலம் சர்வ தேசப் போட்டிகளின் சில நுட்பங்களைக் கற்ற பிறகு தான் அவரால் சர்வதேச வெற்றிகளைச் சுவைக்க முடிந்தது.

அய்ஸ்லாந்தில் பெற்ற வெற்றியின் மூலம் பவானி, சர்வதேச வாள் வீச்சுத் தரவரிசையில் 81-ஆவது இடத்திலிருந்து 36-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதல் அய்ம்பது இடங்களுக்குள் பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி வீராங்கனைகளே தொடர்ந்து இருந்துவரும் நிலையில், முதன்முறையாக இந்திய வீராங்கனை பவானி இடம்பிடித்துள்ளார்.

சக இந்திய வீராங்கனைகளான டயானா தேவி, ஜோஸ்னா கிறிஸ்டி, ரீஷா, நிஷா ராம் நிரஞ்சன், சங்கீர்த் தனா, ரவீணா, மனுதீப்தி ஆகியோர் தரவரிசையில் 300-க்கும் கீழே உள்ளனர். ஆனால், இந்த வெற்றிகளுடன் பவானி நின்றுவிடப் போவதில்லை. டோக்கியோ ஒலிம் பிக்கில் தங்கம் வெல்வதுதான் எனது கனவு என்கிறார். ஆம், பெண்களின் கனவுகள் நனவாகும் காலம் இது!

ஆட்டோ இயக்கும் சுகமதி!

குண்டும் குழியுமான கிராமத்துச் சாலைகளில் குலுங்கியபடி ஓடுகிறது குட்டியானை என்று அழைக்கப்படும் சுமையேற்று ஆட்டோ. வண்டி முழுக்கக் காய்கறி மூட்டைகள் நிறைந்திருக்கின்றன. குறுகிய சாலையில்கூட மிக லாகவமாக அந்த ஆட்டோவை இயக்குபவர் சுகமதி.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இ.கண்டியங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். சுத்துப்பட்டுக் கிராமங்களில் நடக்கும் சந்தைகளுக்குத் தினமும் சுமையேற்று ஆட்டோவில் காய்கறிகளை ஏற்றிச் செல்கிறார். அங்கே தன் பெற்றோருடன் சந்தை யில் காய்கறிகளை விற்றுவிட்டுத் திரும் புகிறார். சும்மாயில்லை, தினமும் சுமார் 300 கி.மீ. தூரத் துக்கு சுமையேற்று ஆட்டோவை இயக்குகிறார் சுகமதி.

ஜெகநாதன், கோமதி தம்பதியின் மகளான சுகமதி, நான்காம் வகுப்புவரை படித்திருக்கிறார். இவருடைய கணவர் அய்யப்பன், வெளிநாட்டில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்துவருகிறார். சுகமதி சிறு வயதில் தறி வேலைக்குச் சென்று புடவைகள் நெய்திருக்கிறார். பின்னர் பெற்றோருக்கு உதவியாக அவர்கள் நடத்திவந்த செங்கல்சூளையிலும் வேலை செய்துள்ளார்.

அப்போது செங்கல் வாங்க வந்த சிலர் கற்களை வீட்டில் கொண்டுவந்து இறக்கித் தரும்படி கேட்டுள்ளனர். வாகனம் ஓட்டத் தெரிந்தால் வாடிக்கையாளரின் தேவையை நிறைவேற்றலாம் என்று நினைத்தார் சுகமதி. உடனே ஓட்டுநர் பயிற்சி பெற்றார். பாதிவிலையில் லோடு ஆட்டோ ஒன்றையும் வாங்கினார். தேவைப்படுகிற வாடிக்கையாளர்களுக்கு அவரவர் வீடுகளுக்கே செங்கற்களைக் கொண்டுபோய் இறக்கினார்.

"கடனுக்குத்தான் ஆட்டோவை வாங்கினேன். செங்கல்சூளையில் போதிய வருமானம் இல்லாததால், அந்த வேலையை நிறுத்திவிட்டோம். ஆட்டோ கடனை அடைக்கணும், குடும்பத்தையும் நடத்தணும். வருமானத்துக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சேன். காய்கறிகளை மொத்தமா வாங்கி ஊர்ஊரா போயி நானும் அம்மா, அப்பாவும் வித்துட்டு வர்றோம்" என்று சொல்லும் சுகமதி, வாரம் முழுவதும் ஒவ்வொரு ஊரில் நடைபெறும் சந்தையில் கடைபோடுகிறார்.

திங்கள்கிழமை கும்பகோணம், செவ்வாய் திருப்பனந்தாள், புதன் சோழபுரம், வியாழன் சிலால், வெள்ளி பாண்டிபஜார், சனி விக்கிரமங்கலம், ஞாயிறு சிறீபுரந்தான் என ஓய்வு ஒழிச்சல் இல்லாத வேலை சுகமதிக்கு. இரவு பத்து மணிவரை நடக்கும் வாரச் சந்தை முடிந்து, மீதமுள்ள காய்கறிகளை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட இரவு 11 மணி ஆகிவிடும். வீட்டுக்கு வந்து கோழித்தூக்கம் போல் கண்ணயர்வதுதான் இவருக்கு ஒய்வு. மீண்டும் அதிகாலை 2 மணிக்கு எழுந்து திருச்சி-சேலம் இடையிலுள்ள தலைவாசல் மார்க்கெட்டுக்குப் போய் காய்கறி வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர மதியம் மணி 3 ஆகிவிடும். தூக்கத்தைக் கட்டுப்படுத்த இடையிடையே ஒரு டீ அல்லது காபி மட்டும் குடிப்பாராம்.

எப்பவும் முக்கிய சாலைகளில் மட்டுமே ஆட்டோவை எடுத்துச் செல்வேன். குறுக்கு வழியைப் பயன்படுத்த மாட்டேன். அவ்வப்போது வாகன சோதனையில் ஈடுபடும் காவல்துறையினர் எனது ஆவணங்களைப் பார்த்துவிட்டுப் பாராட்டுவாங்க. கவனமாகப் போகும்படி ஆலோசனை சொல்லுவாங்க.

தாசில்தார், ஆர்.டி.ஓ. இவங்க எல்லாம்கூட வாகன சோதனையின்போது என்னைப் பாராட்டியிருக்காங்க என்று பெருமிதத்தோடு சொல்கிறார் சுகமதி. தன்னைப் பார்த்து ஏளனம் செய்பவர்களையெல்லாம் தான் கண்டுகொள்வதில்லை என்றும் சொல்கிறார்.

எனக்கு 12 வயசிருக்கும்போது செய்தித்தாளில் பெண் விமானிகள் பற்றிப் படித்தேன். நாமும் படித்திருந்தால் விமானி ஆகியிருக்கலாம் என நினைத்தேன். இப்போ என் குழந்தைகள் இந்த வாகனத்தை ஓட்டக் கேட்கும்போது இதைவிட பெரிய வாகனமான விமானத்தை ஓட்ட நீங்கள் படிக்கணும்னு சொல்லுகிறேன்.

20 ஆண்டுகளுக்கு பிறகு எனது குழந்தைகள் விமான ஓட்டியாக வருவார்கள் என்று நம்புகிறேன் என்று சொல்கிறபோது சுகமதியின் முகத்தில் எதிர்காலம் குறித்த நம்பிக்கை ஒளிர்கிறது.

Banner
Banner