மகளிர்

பெரும்பாலான விளையாட்டுகளில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும்போதும் துப்பாக்கி சுடுதல் விளையாட்டைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். 2000-க்கு முன்புவரை ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த விளையாட்டாக அது இருந்தது. இந்த நிலையை மாற்றியவர் அஞ்சலி பாகவத். சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற முதல் இந்தியப் பெண்; உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் கோப்பை வென்ற முதல் இந்தியப் பெண்; உலகத் துப்பாக்கி சுடும் வீராங்கனைகளில் இந்தியாவின் முகமாக நீண்ட காலம் கோலோச்சியவர் எனப் பல சிறப்புகளுக்குச் சொந்தக்காரர் அவர்.

பள்ளிப் பருவத்தில் மும்பையில் வசித்த அஞ்சலி பாகவத்துக்குத் துப்பாக்கி சுடும் விளையாட்டு, தேசிய மாணவர் படை (என்.சி.சி.) மூலமே அறிமுகமானது. என்.சி.சி. பயிற்சியின்போது துப்பாக்கி பிடிக்கக் கற்றுக்கொண்டதுமே இந்த விளையாட்டின் மீது அவருக்குக் காதல் மலர்ந்தது. பள்ளிப் பருவத்தில் மட்டுமல்ல; கல்லூரியில் காலடி எடுத்த வைத்தபோதும் என்.சி.சி. அமைப்பு இருக்கும் கல்லூரியாகத் தேடிச் சேர்ந்தார்.

முறைப்படி துப்பாக்கி சுடக் கற்றுக்கொள்ள விரும்பிய போது அவர் கல்லூரிப் படிப்பையே முடித்திருந்தார். 21 வயதில்தான் மகாராஷ்டிர ரைபிள் சங்கத்தில் சேர்ந்து துப்பாக்கி சுடும் பயிற்சியை எடுக்கத் தொடங்கினார். ஒரே வாரத்துக்குள் துப்பாக்கியைப் பிடிக்க மட்டுமல்ல; குறி பார்த்துச் சுடவும் கற்றுக்கொண்டார்.

1990-களின் தொடக்கத்தில் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று, துப்பாக்கி சுடுதலில் அஞ்சலி தன் திறமையை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். 1995இல் சென்னையில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று, சர்வதேச அளவிலான பதக்க வேட்டைக்குப் அடித்தளமிட்டார்.  1999இல் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியும் அஞ்சலிக்கு மறக்க முடியாத தொடர்தான். இந்தத் தொடரில் மட்டும் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று முத்திரை பதித்தார்.

விளையாட்டைப் பொறுத்தவரை வீரர், வீராங்கனைகள் எல்லாருக்குமே 30 வயது என்பது வேகத் தடையைப் போன்றது. குறிப்பாக, இளம் போட்டியாளர்களுடன் போட்டி போட்டு விளையாடும் திறன் குறையத் தொடங்கிவிடும். ஆனால், அஞ்சலி பாகவத் தலைகீழாக இருந்தார். இரண்டாயிரமாவது ஆண்டுக்கு பிறகு அஞ்சலி பாகவத் மீண் டெழுந்தார். அப்போது 31 வயதை எட்டியிருந்த அஞ்சலி, அதன் பிறகு சர்வதேச அளவில் பதக்கங்களைக் குவித்தார்.

முதன்முறையாக 2000இல் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பங்கேற்கஅஞ்சலி பாகவத்துக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒலிம்பிக்கில் பதக்கம் எதுவும் கிடைக்கவில்லை யென்றாலும், குறிப்பிடத்தக்க சாதனையைப் படைக்க அவர் தவறவில்லை. துப்பாக்கி சுடும் போட்டியின் இறுதிச் சுற்றுவரை முன்னேறினார். இந்தியப் பெண் ஒருவர் துப்பாக்கி சுடுதலில் இறுதிச் சுற்றுவரை முன்னேறியது அதுதான் முதல்முறை.

2002இல் அஞ்சலியின் விளையாட்டு வாழ்க்கையின் வசந்த காலம். அந்த ஆண்டு மான்செஸ்டரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றன. இந்தத் தொடரில் மட்டும் 10 மீட்டர் ஏர் ரைபிள், 3 விதமான 50 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவுகளில் பங்கேற்ற அஞ்சலி பாகவத், நான்கு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கத்தைத் தனதாக்கி, உலக சாதனை படைத்தார். இதேபோல 2003இல் இந்தோ - ஆப்ரிக்கத் துப்பாக்கி சுடுதல்  வாகையர் பட்டப் போட்டியிலும் இரு பிரிவுகளில் பங்கேற்றுத் தங்கம், வெள்ளி என இரு பதக்கங்களை வென்றார். இந்தத் தொடரிலும் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனைக்கு அஞ்சலி சொந்தக்காரர் ஆனார். இந்தக் காலகட்டத்தில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவுத் தரவரிசைப் பட்டியலில் அஞ்சலி பாகவத் முதலிடத்துக்கு முன்னேறி புதிய உச்சத்தைத் தொட்டார்.

பதக்க வேட்டை

2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக, 8ஆவது இடத்தைப் பிடித்தார். ஆனால், இரண்டாவது முறையாக ஒலிம்பிக்கில் இறுதிச் சுற்றுவரை முன்னேறியவர் என்ற பெருமையோடு அவர் நாடு திரும்ப வேண்டியிருந்தது. மூன்றாவது முறையாக 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தபோது அவர் அதை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். அப்போது அவர் 39 வயதை எட்டியிருந்தாலும், ஆட்டத் திறனில் கொஞ்சமும் தடுமாற்றம் இல்லாமல் தோட்டாவைப் போல் சீறினார்.

சுமார் 20 ஆண்டுகள் நீடித்த அஞ்சலியின் விளையாட்டுப் பயணத்தில், அவர் குவித்த பதக்கங்கள் ஏராளம். சர்வதேச அளவிலான போட்டிகளில் மட்டும் 28 தங்கம், 22 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கிறார். இதில் காமன்வெல்த் போட்டிகளில் மட்டும் 13 தங்கப் பதக்கங்களைப் பெற்றிருக்கிறார். தேசிய அளவில் 54 தங்கப் பதக்கங்களை வென்ற ஒரே வீராங்கனை அஞ்சலி மட்டுமே.

குறி பார்த்து பதக்கத்தைச் சுடுவதில் தேர்ந்தவராக இருந்ததால்தான் அவரை இந்தியாவின் அர்ஜூனா, இந்தியாவின் ஷூட்டிங் ராணி எனப் பெருமையோடு அழைக்கிறார்கள். அர்ஜூனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது உள்பட 14 விருதுகளை அவர் வாங்கிக் குவித்திருக்கிறார்.

2010க்குப் பிறகு விளையாட்டுப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற அஞ்சலி, தொடர்ந்து விளையாட்டுத் துறை சார்ந்த பணிகளிலும் சமூக சேவையிலும் ஈடுபட்டுவருகிறார். இந்தியப் துப்பாக்கி சுடும் போட்டியில் பெண்களின் எண்ணிக்கை இன்று கணிசமாகக் கூடியிருப்பதில் அஞ்சலி பாகவத்துக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. ஆண்கள் மட்டுமே கோலோச்சிக்கொண்டிருந்த ஒரு விளையாட்டில், தனி ஒருவராக ராஜ்ஜியத்தை நிறுவியவர் அஞ்சலி. துப்பாக்கி சுடுதல் போட்டியில் அவர் போட்ட விதை இன்று ஆல மரமாகக் கிளை பரப்பி நிற்கிறது.

1980இல் சோவியத் யூனியன் (ரஷ்யா) தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு 76 இந்தியர்கள் சென்றனர். அவர்களில் 16 வயதுப் பெண் ஒருவருக்கும் இடம் கிடைத்தது. தடகளத் தில் மலைகள் மோதிய அந்த ஓட்டப் போட்டியில், இறுதிச் சுற்றுவரை முன்னேறி னார். பதக்கம் எதுவும் அவருக்குக் கிடைக்கவில்லை. ஆனால், ஒலிம்பிக்கில் இறுதிச் சுற்றுவரை முன்னேறிய முதல் இந்தியப் பெண், முதல் இளம் பெண் என இரண்டு சாதனைகளுக்குச் அந்தப் பெண் சொந்தக்காரரானார்.

நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் தடம் பதிக்கும் நோக்கத்தோடு அந்தப் பெண் பங்கேற்றார். 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தின் அரையிறுதிச் சுற்றில் முதலிடம் பிடித்தார். இறுதிச் சுற்றில் எப்படியும் அவர் பதக்கம் வெல்வார் என நாடே காத்திருந்தது. ஆனால், 0.01 விநாடி வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். நூலிழையில் பதக்க வாய்ப்பை அவர் தவறவிட்டிருந்தாலும், அந்தத் தோல்வி அவரை சர்வதேச அளவில் உயரத்துக்குக் கொண்டுசென்றது. அவர், இந்தியாவின் தங்க மங்கை, ஆசிய தடகள ராணி, பையொலி எக்ஸ்பிரஸ் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் பி.டி. உஷா. 1980-1990-களில் தடகள விளையாட்டில் ஆதிக்கம் செலுத்திய ஒரே இந்திய வீராங்கனை.

நம்பிக்கை நட்சத்திரம்

1991ஆம் ஆண்டு அவரது வாழ்க்கையில் முக்கியமானது. அந்த ஆண்டுதான் அவர் திருமணம் செய்துகொண்டார். மத்திய தொழில் படை இன்ஸ்பெக்டராக இருந்த சீனிவாசன் அவரது வாழ்க்கைத் துணையானார். திருமணத்துக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் தடகள பக்கமே அவர் எட்டிப் பார்க்கவில்லை. பி.டி. உஷா இனி, மைதானத்துக்கு வரப்போவதில்லை என்று நினைத்த வேளையில், நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என்பதுபோல் களத்தில் வந்து நின்றார். சர்வதேச அளவில் தடகளத்தில் சாதனை படைக்க வேண்டும் என்று தன் கணவருடைய ஆசையை நிறைவேற்றுவதற்காகக் களத்துக்குத் திரும்பினார். மீண்டும் பல்வேறு தடகளப் போட்டிகளில் பங்கேற்றார்.

குறிப்பிடும்படியான பல வெற்றிகளை 1998இல் குவித்தார். ஆசிய வாகையர் பட்டப் போட்டியின் நான்கு பிரிவுகளில் பங்கேற்று ஒரு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றார். ஒட்டுமொத்தமாக தடகளத்தில் மட்டும் 101 சர்வதேசப் பதக்கங்கள் பெற்று சாதனையிலும் சதமடித்திருக்கிறார். தடகளத்தில் இந்த அளவுக்குச் சாதனை படைத்த வீராங்கனைகள் இந்தியாவில் வேறு எவரும் இல்லை. 23 ஆண்டுகள் ஓயாமல் ஓடிய அவரது கால்கள் 2000ஆம் ஆண்டோடு ஓய்வுபெற்றன.  அவரைப் பின்பற்றி இளம் பெண்கள் ஆர்வத்துடன் தடகளத்தில் காலடி எடுத்துவைத்தனர். இன்றும் பி.டி. உஷாவை மனதில்கொண்டு தடகளத்துக்கு வரும் பெண்கள் ஏராளம்.


காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறு வதால், அங்கே கலக்கிக் கொண்டிருக்கும் வீரர்கள் வீராங்கனைகள் குறித்த செய்திகள் பரவலாக வெளியிடப்படுகின்றன.

விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் சர்வதேச அளவில் வாங்கினால் ஓரளவுக்குப் பெயரும், சன்மானமும் கிடைக்கும். அதுவே மாநில அளவில் தங்கப் பதக்கம் பெற்றாலும் கொஞ்ச நாட்களுக்குள் மறக்கப்பட்டுவிடுகின்றனர்.

உதாரணம் 41 கி. மீ பெண்கள் மாரத்தான் போட்டியில் தமிழகத்தில் நான்கு முறை தங்கப் பதக்கம் வென்றவர் கலியமணி.

கோயம்புத்தூரில் வசித்து வரும் கலியமணி குடும்ப வருமானத்திற்காக தேநீர் கடை வைத்து நடத்தி வருகிறார். கலியமணிக்கு நாற்பத்தைந்து வயதாகிறது.

தனது தேநீர் கடையில் ஏறக்குறைய முழு நேர ஊழியராக இருக்கும் கலிய மணி, பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். படிக்கும் போது, கபடி, தடகள போட்டிகளில் கலந்து கொள்வார்.
விளையாட்டில் இருந்த விருப்பம்தான் கலியமணியை மாரத்தான் ஓட்டப் போட்டிக்கு அழைத்து வந்தது. நான்கு முறை தமிழ்நாடு மாநில அளவில் தங்கப் பதக்கம் வாங்கினாலும்,  திருமணம், குடும்ப

சுமை, மூன்று குழந்தைகள்  இருந்தாலும், தினமும் குறைந்தது இருபது கி. மீ ஓட மறக்கவில்லை.
சரி தேநீர் கடை தொடங்கலாம் என்று கலியமணி முடிவு செய்தாலும் முதலீடு, கடை அட்வான்ஸ் , வாடகை ஒரு பிரச்சினையாக இருந்தது. தங்கப் பதக்கங்களுடன் கடன் உதவி கேட்டு பல வங்கிகளில்

ஏறி இறங்கினார். கடன் தர எந்த வங்கியும் முன்வரவில்லை.
“முன் வைத்த காலை பின் வைக்க விரும்பவில்லை. தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி தேநீர் கடையைத் தொடங்கினேன். மாரத்தான் ஓட்டத்திலும் கலந்து கொண்டேன் இப்படி போய்க் கொண்டிருக்கிறது’

என்கிறார் கலியமணி.

வறுமைக்கிடையே ஜொலிக்கும் மங்கை

ஆஸ்திரேலியாவில் கோல்டு கோஸ்ட் நகரில் நடை பெறும் காமன்வெல்த் போட்டிகளில் 48 கிலோ எடைப் பிரிவில், ஆறு முறை பளுதூக்கி, ஏப்ரல் 5இல் ஆறு சாதனைகளை நிகழ்த்தி, போட்டிகள் தொடங் கிய முதல் நாளில் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம் பெற்றுத் தந்திருக்கிறார் மீராபாய் சானு.

மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு மொத்தம் 194 கிலோ (ஸ்னாட்ச் பிரிவில் 86 கிலோ + கிளீன் & ஜெர்க் பிரிவில் 110 கிலோ) எடையை தூக்கி புதிய சாதனை படைத்திருக்கிறார். உயரத்தில் அய்ந்தடிக்கு ஓர் அங்குலம் குறைவாக இருக்கும் சானுவுக்கு வயது இருபத்துமூன்று.

மீராபாய் 2016 -இல் ரியோ ஒலிம்பிக்சிற்கு தகுதி பெற்றாலும், ஒலிம்பிக்ஸ் போட்டியில் பதட்டத்தால் சரிவரச் செய்ய முடியவில்லை. சோர்ந்து சோகத்தில் ஆழ்ந்திருந்த மீராபாய் “இனி அவ்வளவுதான்..’ என்று சுருண்டு போனார் . சிறிய கால இடைவெளியில், சானு சுதாரித்துக் கொண்டு ஃபீனிக்ஸ் பறவை போன்று மீண்டும் பிரம்மாண்டமாகக் கிளம் பினார்.

2016 இல் தெற்கு ஆசிய நாடுகளுக்கிடையே நடந்த போட்டியில் சானுவுக்குத் தங்கப் பதக்கம் கிடைத்தது. 2017 இல் அமெரிக்காவில் நடந்த உலகப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.
காமன்வெல்த் 2018 -இல் வெற்றி குறித்து சானு என்ன சொல்கிறார்..?

“புதிய சாதனையை நிகழ்த்த ஆசைப்பட்டாலும் அது நிறைவேறும் என்று நினைக்கவில்லை. இனி அடுத்தது ஆசிய விளையாட்டுப் போட்டிகள். சவால்கள் நிறைந்த போட்டியை எதிர் நோக்கியி ருக்கிறேன். அதற்கேற்றவாறு என்னைத் தயார் செய்து கொள்வேன். அதற்குப் பிறகு 2020 ஒலிம் பிக்ஸ். “ஒலிம்பிக்சில் ஒரு பதக்கம் பெற வேண்டும்‘ என்பது எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் லட்சியம். அது எனக்கும் இருக்கிறது’’. என்றார்.

தற்சமயம் சானு இந்திய ரயில்வேயில் ஒரு சாதாரண வேலையில் இருக்கிறார். உலகப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றதற்காக மணிப்பூர் அரசு சானுவுக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருபது லட்சம் அன்பளிப்பு செய்தது. இப்போது காமன்வெல்த் போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பதால் மேலும் பதினைந்து லட்சம் மணிப்பூர் அரசிடமிருந்து ஊக்கத் தொகையாகக் கிடைக்கும். அங்கே சானுவின் கிராமத்தில், சானு பளு தூக்கி புதிய சாதனை படைத் ததை பெற்றோர்கள் உட்பட கிராமமே ஆனந்தக் கண்ணீருடன் சின்னத்திரையில் பார்த்தது. தங்கப் பதக்கம் கிடைத்ததும், ஒருவருக்கொருவர் பல வித நிறங்களை தடவி “தபல் சோங்பா’ நாட்டுப்புற நடனம் ஆடினர். சானுவுக்குப் பிடித்த சூப்பும், இனிப்பும் அனைவருக்கும் வழங்கப்பட்டன. “சானுவுக்கு கவுரவமான பதவி தரப்பட வேண்டும்‘ என்று சானுவின் கிராம மக்கள் மணிப்பூர் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சமீப காலமாக சானு காதுகளில் வளைய வடிவில் தோடு அணிகிறார். “அந்த வளையங்கள் என் காது களில் ரியோ தோல்வி பற்றி கிசுகிசுக்கும். கை நழுவிப் போன 2016 ஒலிம்பிக்ஸ் பதக்கத்தை அப்படியே மறந்துவிடலாமா.. 2020 ஒலிம்பிக்சில் நழுவிப் போனதை கை வசப்படுத்த வேண்டும்‘ என்று என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருப்பதாக உணருகிறேன்’’ என்கிறார் மீராபாய் சானு.

ஆஸ்திரேலியாவில் நடக்கும் காமன்வெல்த் போட்டிகளில் சானு நிகழ்த்திய சாதனையை 2020 ஒலிம்பிக்சில் நிகழ்த்தினால், குறைந்தது வெண்கலப் பதக்கம் கிடைக்கும்‘ என்று பளு தூக்கும் போட்டி ஆர்வலர்கள் சொல்கிறார்கள்

இல்லத்தரசியும் தொழில் முனைவோர் ஆகலாம்

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அனை வரும் வெளியே வேலைக்குச் சென்றுதான் வருமானம் ஈட்ட வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியேவும் ஏதேனும் சுயதொழில் அல்லது கைத்தொழில் செய்வதன் மூலம் குடும்பத்திற்கு ஒரு உபரி வருமானத்தை உண்டாக்க முடியும். மேலும் பெண்கள் தங்களது  சின்னசின்ன தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள் வதற்கும் இந்தப் பணம் உபயோகப்படும். இன்று சிறியதாக செய்துவரும் சுயத்தொழில் ஒரு நாளில் பெரிய அளவில் வளரவும் வாய்ப்புண்டு. எனவே, பெண்களே! கிடைக்கும் ஓய்வு நேரங்களை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்’’ என்கிறார் சுயதொழில் ஆலோசகர் உமாராஜ்.

வீட்டில் பழைய செய்தித்தாள் இருந்தால் அதை வைத்து லாண்டரி பேக் தயாரிக்கலாம். இவற்றை பெரிய ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யலாம். இவற்றை சுலபமாக தயாரிக்கமுடியும். அதுபோன்று மெடிக்கல் கவர், பல்வேறு உபயோகத்திற்கான பை போன்றவற்றையும் தயார் செய்து விற்கலாம்.

தற்போது வெயில் காலம் தொடங்கிவிட்டது. அனைவருக்கும் குளிர்ச்சியாக பருக பழச்சாறு தேவைப்படும்.

அதனால் நாவிற்கு இனிய, பழச்சாறுகளைக் கொண்டு இயற்கை பழ ரசங்கள் தயார் செய்து கடைகளில் கொடுக்கலாம். நண்பர்கள் மூலமாகவும் விற்பனை செய்யலாம். இதில் வீட்டில் இருந்தபடியே கணிசமான வருமானத்தைப் பெற முடியும்.

தற்போது கோடை விடுமுறை என்பதால் குழந்தைகளை, பலவித கோடைக்கால பயிற்சி வகுப்புகளுக்கு  அனுப்போம். அதில் ஒன்று கேலி கிராஃபி (கையெ ழுத்துப் பயிற்சி) பயிற்சி வகுப்பு. இது தெரிந்தவர்கள் பிள்ளைகளுக்கு பயிற்சி வகுப்புகள் எடுக்கலாம். இது படிப்பு சம்பந்தமான பயிற்சி என்பதால் நல்ல வரவேற்பும் இருக்கும். பிள்ளைகளிடம் ஈர்ப்பு அதிகமாக இருக்கும். உங்களுக்கும் கணிசமான வருமானம் கிடைக்கும்.


ஜப்பான், பிரான்சு, ஜெர்மனி ஆகிய வல்லரசுகள் உட்பட மொத்தம் 43 நாடுகளின் பிரதிநிதிகளை தன்னை நோக்கி ஈர்த்திருக் கிறது தமிழகத்தின் ஓடந்துறை கிராமம்.

ஓடந்துறை கிராமப் பஞ்சாயத்து கோவை மாவட்டம், கோத்தகிரி மலையடிவாரத்தில் பவானி ஆற்றை ஒட்டி அமைந்திருக்கிறது. வாழைத் தோட்டங்களும் பாக்குத் தோப்பு களும் நிறைந்த பசுமையான பூமி. பெரும் பாலானோர் நகரத்தின் வாடையே அறியாத மலைவாழ் மக்கள். கடந்த அய்ந்தாண்டுகளில் இவர்களது கிராம பஞ்சாயத்து செலுத்தி யிருக்கும் மின் கட்டணம் சுமார் 1.20 கோடி ரூபாய் என்கிறார்கள்! இதில் அதிசயமான விஷயம் இந்த பஞ்சாயத்தின் சார்பாக ஆண்டுக்கு 6.75 லட்சம் யூனிட் வீதம் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 67.50 லட்சம் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்திருக்கிறார்கள். அதில் ஆண்டுக்கு 2.15 லட்சம் யூனிட் வீதம் கடந்த 10 ஆண்டுகளில் 21.5 லட்சம் யூனிட் மின்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியத்துக்கு விற்பனை செய்திருக்கிறார்கள். அதன் மூலம் சுமார் ரூ. 65 லட்சம் வருவாய் கிடைத்திருக் கிறது. இப்போதும் இது தொடர்கிறது. இதில் சிறப்பு என்னவென்றால், அந்த ஊரில் மின் உற்பத்தி நிலையம் என்று எதுவும் இல்லை.

1996 தொடங்கி 2006 வரைக்கும் ஓடந் துறை பஞ்சாயத்து பொதுப் பஞ்சாயத்தாக இருந்திருக்கிறது. ஓடந்துறை கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் 1996 முதல் 2006 வரை முதல் பத்து ஆண்டுகள் சண்முகம். 2006-இல் அந்த பஞ்சாயத்தை பெண்களுக்காக ஒதுக் கியதும், சண்முகம் ஒதுங்கிக் கொள்ள, அவரது மனைவியான லிங்கம்மாளை தலைவியாக தேர்ந்தெடுத்திருக்கின்றனர் கிராம மக்கள். கடந்த பத்து ஆண்டுகளாக பஞ்சாயத்து தலை வராக தொடர்பவர் லிங்கம்மாள் சண்முகம்.

கணவன், மனைவி இருவருமாக இந்த கிராமத்தில் செய்திருக்கும் புதுமைகள், சாதனைகள் பலரையும் இந்த கிராமத்திற்கு வரவழைத்திருக்கின்றன. ஒரு கிராமப் பஞ்சாயத்து தனது வரிகளை நூறு சதவீதம் வசூலித்தால் தமிழக அரசு அதற்கு இணையாக மூன்று மடங்கு ஊக்கத் தொகை வழங்குகிறது. இந்த சலுகைகள் குறித்து, ஊர் மக்களிடம் பேசி இருக்கிறார் லிங்கம்மாள். அரசுக்கு முழுமையாக வரி செலுத்த வேண் டிய அவசியத்தை விளக்கி இருக்கிறார்கள். சிறப்பு முகாம்கள் நடத்தி வீட்டு வரி, கடை வரி, குடிநீர் வரி, தொழில் வரி, வரைபட அங்கீகாரக் கட்டணம் என்று நூறு சதவீதம் வரியை வசூலித்தார். ரூ.20 ஆயிரமாக இருந்த வரி வருவாய் ரூ.1.75 லட்சமாக உயர்ந்தது. அதற்கு ஈடாக மும்மடங்கு ஊக்கத் தொகை யாக தமிழக அரசு ரூ.5.25 லட்சம் கொடுத் திருக்கிறது. மறு ஆண்டு 3.5 லட்சம் வரி வசூலித்தார். அதே போன்று, தமிழக அரசிட மிருந்து ஈடாக 10.5 லட்சம் ஊக்கத் தொகை பெற்றார். சரி, இந்தத் தொகையை எல்லாம் என்ன செய்கிறார்கள்?

லிங்கம்மாள் சொல்கிறார்:

“எங்க கிராமத்துல யாரும் வெளியே வட் டிக்கு கடன் வாங்குறதில்லைங்க. கிராமத்துல இருக்குற ஒவ்வொரு வாக்காளருக்கும் கிராமப் பஞ்சாயத்தே கடன் வழங்குது. ஒரு ரூபா வட்டிங்க. கடன் பெறுவதற்கு ரெண்டு தகுதி வேணுமுங்க. தகுந்த காரணம் இருக் கோணும். பழைய பாக்கி இருக்கக் கூடாது. மருத்துவச் செலவு, பிரசவ செலவு, கல்விக் கட்டணம், சிறு கடை வைக்க கடன் தர்றோ முங்க. கல்யாணம், காது குத்து, நல்லது, கெட்டதுகளுக்கும் கடன் உண்டுங்க. ஆயிரம் ரூபாய் தொடங்கி 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கொடுத்திருக்கோம்‘’ என்கிறார். கொடுக்கும் தொகைக்கு எழுதி வாங்குவது கிடையாது. சரியான காரணமாக இருந்தால் உடனே பணம் தருகிறார்கள். பதிவேட்டில் தவணைத் தொகை வரவு வைக்கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக நடந்துவரும் இந்தத் திட்டத்தில் திரும்ப வராதகடன் என்கிற பேச்சுக்கே இதுவரை இடம் இல்லை. இங்கிருக்கும் பழங்குடியினர் காலம் காலமாக தனியார் தோட்டங்களில் கொத்தடிமைகள் போல இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கென நிரந்தர வசிப்பிடம் கிடையாது. அவர்களுக்கு தனியார் தோட்ட முதலாளிகளிடம் போராடி நிலத்தைப் பெற்று வீடுகள் கட்டிக் கொடுத் திருக்கிறார் லிங்கம்மாள். “கிராமத்துல இருக் கிற மொத்தப் பேருக்குமே சொந்த வீடு இருக்கு. அதுல பாதி வீடுகள் சர்க்கார் வீடுங்க. வாடகை வீடுங்கிற கலாச்சாரமே இங்கே கிடையாதுங்க.’’

இத்தோடு நிற்கவில்லை சாதனைகள். இந்த கிராமத்தில் நூறு சதவீதம் மாணவர்களும் கல்வி பெறுகிறார்கள். இடை நின்ற மாணவர் ஒருவர் கூட கிடையாது. மின்சாரத்தை மிச்சப் படுத்தும் சோலார் தெருவிளக்குகள், எல்.இ.டி. விளக்குகள் ஜொலிக்கின்றன. ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் கிடைக் கிறது. தெருக்கள் தூய்மையாகப் பளிச்சிடு கின்றன. இதற்காக மத்திய, மாநில மற்றும் உலக நாடுகள் அளித்திருக்கும் விருதுகள் கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தை அலங்கரிக்கின்றன. வாசிங்டனிலிருந்து உலக வங்கி இயக்குநர் தலைமையிலான குழு ஒன்று ஓடந்துறையை ஆய்வு செய்திருக்கிறது. ஜெர்மனி, ஜப்பான், பிரான்சு ஆகிய வளர்ந்த நாடுகளின் உள் ளாட்சிப் பிரதிநிதிகள் கூட இங்கே நேரில் வந்து பல விசயங்களை பார்த்துச் சென்றிருக் கிறார்கள். மின்சார உற் பத்தி மற்றும் தொகுப்பு வீடுகளை பார்வையிட்ட ஆப் பிரிக்க நாடுகளின் அமைச் சர்கள் தங்கள் நாட்டில் இதுபோன்ற திட்டங் களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். சிக்கிம், கேரளம், கருநாடகம் ஆகிய மாநிலங்களின் அரசு செயலர்கள் கூட ஓடந்துறையை வந்து பார்வையிட்டுச் சென்றி ருக்கிறார்கள். சென்னை அண்ணா மேலாண்மையகத்தில் பேரூராட்சி தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றியிருக் கிறார் கிராமப் பஞ்சாயத்து தலைவர் லிங் கம்மாள்.

இயற்கை உரத்தில் காய்கறி விளைவிக்கும் பெண்

இப்போதெல்லாம் காய்கறி களைப் பச்சையாகச் சாப்பிட யோசிக்க வேண்டியிருக்கிறது. அவற்றின் மீது என்னென்ன பூச்சிக்கொல்லிகளைத் தெளித் திருப்பார்களோ ரசாயன உரங் களைப் பயன்படுத்தி யிருப்பார் களோ என்ற அச்சம்தான் அதற்குக் காரணம். எங்களுக்கு அப்படி எந்த பயமும் இல்லை என்று சொல்லும் சசிகலா, மண் புழு உரத்தைத் தயாரித்து அதைத் தன் தோட்டத்துப் பயிர் களுக்கு இடுகிறார்.

சசிகலா, சேலம் மாவட்டம் அழகா புரத்தைச் சேர்ந்தவர். ஒரு ஏக்கர் நிலத்தில் தொட்டிகள் அமைத்து அவற்றில் மண்புழுக்களை வளர்த்து மண்புழு உரம் தயாரித்து வருகிறார். எனக்குச் சிறு வயதிலிருந்தே தோட்டக்கலையில் ஆர்வம் அதிகம். வீட்டைச் சுற்றி விழும் காய்ந்த சருகுகளையும் காய்கறிக் கழிவையும் செடிகளுக்கு உரமாகப் போடுவேன். இயற்கை உரங்களைப் பயன்படுத்திய தால் அவற்றிலிருந்து கிடைக்கும் பழங்களும் காய்கறி களும் சுவையாக இருக்கும். ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கப் படும் காய்கறிகளில் அந்த அளவுக்குச் சுவை இருப் பதில்லை. அதனால் நாங்கள் ரசாயன பூச்சிக் கொல்லிகளையோ ரசாயன உரங்களையோ பயன் படுத்துவதில்லை என்று சொல்கிறார் சசிகலா.

பாராட்டு கொடுத்த வளர்ச்சி

அரசு சார்பில் நடத்தப்பட்ட மண்புழு உரம் தயாரிப்பது குறித்த முகாம், சசி கலாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. முகா மில் பங்கேற்ற சசிகலா, அங்கு கொடுக்கப்பட்ட மண்புழுக்களை வாங்கிவந்து மண் தொட்டிகளில் வளர்த்தார். தொட்டிகளில் கிடைத்த மண் புழு உரம் பார்ப் பதற்குச் சீரகம் போல் இருந்தது. அதை எங்க வீட்டுக் காய்கறிச் செடிகளுக்குப் போட்டோம். பக்கத்துல இருக் கிறவங்களுக் கும் கொடுத்தோம். மண்புழு உரத்தைப் பயன் படுத்தினதால காய்கறிகள் சுவையா இருக் குன்னு அவங்க எல்லாம் பாராட் டினாங்க என்று சொல்லும் சசிகலா, அதன் பிறகு தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் தொட் டிகள் அமைத்து சிறு பண்ணையைத் தொடங்கினார்.

மண்புழுவுக்கு மாட்டுச் சாணம்தான் பிடித்த உணவு என்பதால் அதை மட்டுமே கொடுப்பேன். மண்புழுவைத் தொட்டிகளில் விடுவதற்கு முன் மாட்டுச் சாணத்தை மண்ணுடன் கலந்து அதில் போதிய அளவு தண்ணீர் கலக்க வேண்டும். சாணத் தில் உள்ள உஷ்ணம் குறைந்ததும் மண்புழுக்களை அதில் விட வேண்டும். சாணத்தில் தண்ணீர் விட்டதுமே மண்புழுவை விட்டால் உஷ்ணம் தாங்காமல் அவை இறந்துபோகக்கூடும்.

நிலத்தில் மண்புழுக்களை வளர்த்தால் அவற் றைச் சிறு பூச்சிகள் தின்றுவிடும். அதனால் தொட்டிகளில் வளர்ப்பதே சிறந்தது. மண்புழுவைத் தொட்டிகளில் விட்டு நல்ல உணவு கொடுத்து சுமார் 45 நாட்கள் கழித்து மண்புழுக்களின் கழிவு நமக்கு உரமாகக் கிடைக்கும் என்கிறார் சசிகலா.

இந்தியாவில் பெண்கள் நிர்வகிக்கும் முதல் ரயில் நிலையம்!

பெண்களால் நிர்வகிக்கப்படும் காவல் நிலை யங்கள் பல இந்தியாவில் உள்ளன. பெண்களால் நிர்வகிக்கப்படும் பள்ளிகள், கல்லூரிகளும் அநேகம் இருக்கின்றன. ஆனால் முழுக்க முழுக்க பெண்களால் நிர்வகிக்கப்படும் ரயில் நிலையம் ஒன்று கூட இந்தியாவில் கிடையாது. அந்தக் குறையைப் போக்க இந்திய ரயில்வேத் துறை, ஜெய்ப்பூர் நகரில் இயங்கும் துணை ரயில் நிலையமான “காந்தி நகர்’ ரயில் நிலை யத்தை முழுக்க முழுக்க பெண்களின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்திருக்கிறது. காந்திநகர் ரயில் நிலையம் இந்தியாவில் பெண்களால் நிர்வகிக்கப்படும் முதல் ரயில் நிலையம் என்ற பெருமையும் பெற் றுள்ளது. இங்கே ஸ்டேஷன் மாஸ்டரிலிருந்து கடைநிலை ஊழியர் வரை பெண்கள்தான். நாற்பது ஊழியர்கள் இந்த ரயில் நிலையத்தில் பணிபுரி கிறார்கள். பெண்களுக்கு மாதாந்திர அசவுகரியத்தைப் போக்க நாப்கின்களை வழங்கும் மெசின் ஒன் றையும் இந்த நிலையத்தில் நிறுவியுள்ளனர். ஏதோ தினமும் ஒன்றிரண்டு வண்டிகள் போகும். அதனால் தான் காந்திநகர் ரயில் நிலையத்தைப் பெண்களைக் கொண்டு நிர்வாகம் செய்யச் சொல்லியிருக்கிறார்கள் என்று நினைத்துவிட வேண்டாம். தினமும் அய்ம்பது ரயில் வண்டிகள் போய் வருவதால் இந்த ரயில் நிலையம் எப்போதும் பிசியாக இருக்கும்.

கால்பந்து விளையாட்டுக்கும் பெண்களின் பங்கேற்புக்கும் இடையே இருக்கும் தொலைவைத் தன் அசாத்திய வெற்றி மூலம் குறைத்திருக்கிறார் ரூபாதேவி. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரூபாதேவி, சர்வதேசக் கால்பந்தாட்ட அமைப்பு  நடத்தும் போட்டிகளில் நடுவராக இருக்கிறார். ரூபாதேவி ஆறாம் வகுப்பு படித்தபோது கால்பந்து விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார். பிறகு மாவட்டம் தொடங்கி தேசிய அளவிலான போட்டிகள்வரை பங்கேற்றார்.

தொடர்ந்து கால்பந்துப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை உடற்கல்வி படித்தார். இளங்கலைக் கல்வியை முடித்த பிறகு ரூபாவுக்குத் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர் வேலை கிடைத்தது.

ஆனால், பள்ளி நிர்வாகம் அவரைக் கால் பந் தாட்டப் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்க வில்லை. இதனால் ஆசிரியர் பணியை விட்டு விட்டுத் தொடர்ச்சியாகத் தேசிய அளவிலான கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்றார்.

இந்நிலையில் ரூபாவின் பெற்றோர் அடுத்தடுத்த ஆண்டுகளில் உடல்நலக் குறைவு காரணமாக இறந்துவிட, கால்பந்தாட்டம்தான் ரூபாவுக்குப் பொருளாதார ரீதியாகவும் மனத்தளவிலும் துணையாக இருந்தது. கால்பந்தாட்டத்தில் நடுவராக உள்ள நண்பர்களின் ஆலோசனைக்குப் பிறகு கால்பந்தாட்ட நடுவர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி எடுத்துக்கொண்டார். கடந்த 2012 முதல் தேசிய சப் ஜூனியர் கால்பந்தாட்டப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றினார்.

அர்ப்பணிப்பு குணம்கொண்ட ரூபாவுக்கு அடுத்தடுத்து சர்வதேச மகளிர் கால்பந்தாட்டப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. இந்நிலையில் 2016இல் சர்வதேசக் கால்பந்தாட்ட அமைப்பான  நடத்திய போட்டிகளில் நடுவராகப் பணியாற்றும் வாய்ப்பு ரூபாவுக்குக் கிடைத்தது. ஒலிம்பிக் போட்டிகளில் நடுவராகப் பணியாற்ற வேண்டும் என்பதே தன் கனவு என்கிறார் ரூபாதேவி.

Banner
Banner