மகளிர்


பணியின்போது உயிரிழந்த இரண்டு ராணுவ வீரர்களின் மனைவிகள், தங்களு டைய கணவரின் கனவை நனவாக்கும் வகையில் ராணுவத்தில் அதிகாரியாகப் பணியில் சேர்ந் துள்ளனர்.

சென்னை, பரங்கிமலையில் ராணுவப் பயிற்சி அகாடமி உள்ளது. ராணுவத்தில் அதிகாரியாகப் பணியில் சேரும் வீரர் களுக்கு இங்கே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 104ஆவது பிரிவைச் சேர்ந்த 322 பேர் பயிற்சி நிறைவுபெற்றுப் பணிக்குத் தேர்வுசெய்யப் பட்டனர். இந்தப் பயிற்சியின் சிறப்பம்சமாகக் கணவனை இழந்த இரண்டு பெண்கள், அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டுப் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் லெப்டினென்ட் ஸ்வாதி மகாதிக் (38). இவருடைய கணவர் கர்னல் சந்தோஷ் மகாதிக் காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீவிரவாதிகளுடன் போரிட்டு வீர மரணம் அடைந்தார். இவர்களுக்கு கார்த்திக்கி (12) என்ற மகளும் ஸ்வராஜ் (6) என்ற மகனும் உள்ளனர். கணவரைப் போரில் இழந்ததால் இவருக்கு ராணுவத்தில் சேர வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டது. இதையடுத்து இவர் ராணுவத்தில் சேர்ந்தார். பயிற்சி முடித்த ஸ்வாதி மகாதிக் தற்போது புனேவில் உள்ள ராணுவப் போர்த் தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள் ளார்.  ராணுவத்தில் சேருவதற்கு முன்பு இவர் ஆசிரியராகப் பணியாற்றினார்.

என் கணவரைத் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாக எனக்குத் தகவல் கிடைத்தது. அந்த நிமிடம் என் வாழ்க் கையே முடிந்து போனதுபோல் இருந்தது. உயிரில்லாத அவரது உடலைப் பார்த்தபோது நானும் என் வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைத்தேன். ஆனால் தன்னோட அப்பா இறந்ததுகூடத் தெரியாம விளையாடிட்டு இருந்த என் மகனின் முகத்தைப் பார்த்ததும் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். என் மகனுக்காக நான் வாழணும். என் கணவர், நாட்டுக்காக இறந்தார்.

வாழ்க்கையில் எந்த நிலையிலும் நம்பிக்கையைக் கைவிடக் கூடாது அவர் சொல்வார்.  இந்த வரிகள் எனக்குள் ஒலித்தன என்று சொல்லும் ஸ்வாதி மகாதிக், அதன் பிறகு ராணுவத்தில் சேர முடிவு செய்தார்.

வெற்றிகரமாகப் பயிற்சியை முடித்த நான் இனி அவரது கனவை நிறைவேற்றும் வகையிலும் பணியாற்றுவேன் என்றார் ஸ்வாதி மகாதிக்.

பணியில் சேர்ந்த இன்னொரு பெண், நிதி துபே (25). இவருடைய கணவர் முகேஷ்குமார் துபே. இவர் ராணு வத்தில் நாயக் ஆக இருந்தார். கடந்த 2009ஆம் ஆண்டு மாரடைப்பால் இறந்தார். நிதி துபே, எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் கணவர் இறந்த போது இவர் நான்கு மாதம் கருவுற்றிருந்தார். மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். மனிதவள மேம்பாட்டு நிறுவனத்திலும் ராணுவப் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றினர்.

கணவனை இழந்த ஒரு பெண், ராணுவத்தில் அதிகாரி யாகச் சேர்ந்ததைக் கண்ட நிதி துபே தானும் அதில் சேர தீர்மானித்தார். இதற்காக ராணுவத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றார். இதையடுத்து இவரும் பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மய்யத்தில் பயிற்சி முடித்து, மத்தியப் பிரதேச மாநிலம், ஜான்சி மாவட்டத்தில் உள்ள ராணுவத் தளவாடப் பிரிவில் அதிகாரியாகச் சேர்ந்துள்ளார்.

விண்வெளி நிஞ்சாவின் 665 நாட்கள்!


இலக்கில் தெளிவு இருந்தால் உலகத்தையே கடந்து விடலாம் என்று சொல்வார்கள். விண்வெளி வீராங்கனை பெக்கி ஆனெட் விட்சன் அதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி, விண்வெளியில் 665 நாட்கள் தங்கியிருந்த முதல் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார். விண்வெளிப் பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த வாரம் தன் குழுவினருடன் கஜகஸ்தான் நாட்டில் வெற்றிகரமாகத் தரையிறங்கினார் பெக்கி.   அமெரிக்காவை சேர்ந்த இவர், உயிர் வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். 1997ஆம் ஆண்டு சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மய்யமான நாசாவில் விண்வெளி ஆய்வாளராகச் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். இதுவரை விண்வெளிப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க விண்வெளி வீரர்கள் அதிகபட்சமாக 288 நாட்கள்தான் தங்கியுள்ளனர். ஆனால், பெக்கி விட்சன் கடந்த ஆண்டு சென்ற பயணத்துடன் சேர்த்து இதுவரை 665 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து சாதனை படைத்துள்ளார்.

சவால்களுக்கு நடுவில் செயல்படும்

சிரியாவின் பெண் சாரணியர் குழு

1950களில், சிரியாவில் முதன்முதலில் பெண் சாரணியர் கூட்டங்களை நடத்த துவங்கினர். இந்த வாரம், அந்த குழுவினரை முழுநேர உறுப்பினராக அங்கீகரித்துள்ளது சர்வதேச பெண்கள் சாரணியர் அமைப்பு.

கடந்த 6 ஆண்டுகளில் நடந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு, 1.2 கோடி பேர் வீட்டை விட்டு வெளி யேற்றப்பட்ட டமஸ்கஸ் மற்றும் ஹாமாவில் பகுதிகளில் இருந்து, அலப்போவிற்கும், கடற்கரைநகரமாக லடாக்கியா விற்கும் இந்த பெண்கள் சாரணியர் குழு தம் பயணத்தை தொடர்ந்தது.

இயல்பான உணர்வு

சிரிய பெண்கள் சாரணர் அமைப்பில் உள்ள ஆயிரத் திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு, “இயல்பான உணர்வை அளித்தும்“, “விளையாடவும், நட்பை உருவாக்கவும் பாதுகாப்பான இடங்களை உருவாக்கி வரும் இந்த குழுவின் வியக்கத்தக்க பணிகளை , உலக பெண்கள் சாரண மற்றும் சாரணியர் அமைப்பு பாராட்டியுள்ளது.

தலைநகர் டமஸ்கஸில் வாழும் 22 வயதான ஷாம் கூறுகையில், “எல்லோரும் நாங்கள் மடிந்து வருவதாக நினைக்கிறார்கள். நாங்கள் இயல்பான வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறோம்“ என்கிறார்.

இது பொருத்தமற்றதாகத் தெரியக்கூடும் . காரணம், டமஸ்கஸ் பல தற்கொலை தாக்குதல்களையும், வான் வழி தாக்குதல் களையும் பெற்றதோடு, அரசுக்கும் கிளர்ச்சியா ளர்களுக்கும் இடையேயான பல யுத்தங்களை பார்த்துள்ளது.

எந்த போரிலும், நீங்கள் எங்கு உள்ளீர்கள் என்பதை பொருத்து, அந்த மோதலின் வீரியம் மாறுபடும். பல நகரங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்ட போதிலும், பல குடும்பங்கள் ஆதரவற்று உள்ள நிலையிலும், இலட்சக் கணக்கான மக்கள் சிரியாவை விட்டு வெளியேறிவிட்டாலும் கூட, அரசின் கீழ் உள்ள டமஸ்கஸில், தேநீர் விடுதிகளும், கடைவீதிகளும், வான்வழிதாக்குதலுக்கு இடையேவும் திறந்தே இருக்கும்.

தலைநகரின், நடுத்தர குடும்பங்கள் வாழும் சூழலில் உள்ள ஷாம் கூறும்போது,

“போர் எங்கள் நாட்டைப் பெரிய அளவில் பாதித்துள்ளது, எனினும் , தனிப்பட்ட முறை யில் என்ன அது இன்னும் பாதிக்கவில்லை என்பதற்கு நான் மகிழ்ச்சிகொள்கிறேன்” என்றார் அவர்.

“அதற்கு பதிலாக, என்னை அது வலுப்படுத்தியதோடு, வாழ்க்கையில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்கு உணர வைத்துள்ளது. கல்வி எல்லாவற்றிற் குமான சாவியாக இருக்கும் என்பதை நான் தற்போது அறிவேன் .

“பெண்கள் சாரணர்கள் குழு எனக்கு எல்லையில்லா உதவிகளை செய்துள்ளது. நான் வாழ்க்கையில் வெற்றிபெற்ற வராக உணர அதுவும் ஒரு காரணம்”.

“சிரியாவை மீண்டும் கட்டமைக்கும் முயற்சியில் நான் ஒரு அங்கம் வகிக்கிறேன் ஏனெனில் நான் ஒரு சாரணர்கள் குழுவின் தலைவியாக உள்ளேன்” என்கிறார் ஷாம்.

அரசின் சக்திகளை ஒன்றிணைக்க நினைத்த அப்போ தைய ஆளும் கட்சி, 1980களில் பெண்கள் சாரணர்களுடன் சேர்த்து பிற இளைஞர்கள் அமைப்புகளுக்கும் தடை விதித்தது.

ரிம் என்னும் பெண்மணி, 6 வயதில் இருந்து இந்த குழுவில் உள்ளார். இந்த இயக்கம் தனக்கு மிக முக்கியம் என கூறும் அவர், பலமுறை, இந்த அமைப்புகளுக்கு இருந்த தடையை மீறி,  சாரணர் கூட்டங்களை நடத்தியுள்ளார்.

2000ஆம் ஆண்டில், பெண் சாரணர்கள் மீதுள்ள தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து, ரிம் தற்போது, ஒரு தலைவராகவும், அமைப்பு உறுப்பினராகவும், பயிற்சி வகுப்புகளில் இணை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.
இந்த ஆண்டின் துவக்கத்தில், ஷாம்சூடானுக்கு பயணித்து, அங்குள்ள சாரணர் பெண்களுக்கு உடல் மீது கொள்ள வேண்டிய நம்பிக்கை குறித்த பயிற்சி அளித்தார். இந்த திட்டத்தை செயல்பட துவங்கியது முதல், ஒப்பனை செய்து கொள்வதை நிறுத்திய அவர், பிற பெண்களும், தத்தமது உடல்கள் குறித்து பெருமைகொள்ள வேண்டும் என்றார்.  

அம்மாவாக, தங்கையாக, மனைவியாக, தோழியாக எனப் பெண்ணின் எந்தப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டாலும் எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் பிம்பம்தான் நமக்கெல்லாம் சட்டென்று தோன்றும். இப்படி ஓய்வில்லாமல் உழைத் துக்கொண்டிருக்கும் பெண்களில் பெரும்பாலோர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது மத்திய அரசின் கணக்கெடுப்பு.

நம் நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் முதல் வாரம் ஊட்டச்சத்து வாரமாகக் கடைபிடிக்கப் படுகிறது. பச்சிளம் குழந்தைகளுக்கு சரியான பாலூட்டு தல் மற்றும் வழிகாட்டுதல் என்பதுதான் இந்த ஆண்டு ஊட்டச்சத்து வாரத்தின் மய்யக்கரு. பச்சிளம் குழந்தை களின் உடல்நலன் பாதுகாக்கப்பட வேண்டிய அதே நேரம், தாய்மார்களின் உடல்நலனும் கவனிக்கப்பட வேண்டியது அவசியம். மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய குடும்ப சுகாதார மய்யத்தின் சார்பில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 15 வயது முதல் 49 வயதுவரை உள்ள இந்தியத் தாய்மார்களில் அய்ம்பது சதவீதம் பேர் ரத்தசோகைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது.

உடலில் உள்ள ரத்த நாளத்தின் வேலை என்பது ஆக்சிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்வதாகும். உடலுக்கு போதிய இரும்புச்சத்து, ஊட்டச்சத்து இல் லாதபோது ரத்த சோகை ஏற்படுகிறது. இதன்காரணமாக ரத்த நாளங்கள் உடல் முழுவதும் போதிய அளவு ஆக் சிஜனை எடுத்து செல்ல முடியாமல் போகும். இதனால் உடலில் உள்ள உறுப்புகள் பாதிக்கப்படும்.

கருவுற்றுள்ள தாய்மார்களுக்கு ரத்த சோகை ஏற்பட்டிருந்தால் அவர்கள் எப்போதும் சோர்வாகவும் உற்சாகம் இழந்தும் காணப்படுவார்கள். தாய்மார்க ளுக்கு ஏற்படும் இந்த ரத்த சோகைக் குறைபாட்டை ‘அனீமியா’  என மருத்துவரீதியாக அழைக்கிறார்கள். இதனால் கருவில் உள்ள குழந்தையின் உடல் வளர்ச்சி பாதிக்கப்படும். ஒரு குழந்தையின் வளர்ச்சி அந்த தாயின் நலனை சார்ந்தே உள்ளது என எச்சரிக்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

மேலும் இந்த ஆய்வில், பெண்களுக்கு சராசரியாக இருக்க வேண்டிய ஊட்டச்சத்து அளவைவிட 22 சத வீத பெண்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ள னர். அதேபோல் பதினொன்று வயதுக்கு உட்பட்ட 58 சதவீதமான இந்தியக் குழந்தைகள் ரத்த சோகைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 வயது முதல் 49 வயதுக்குட்பட்ட இந்தியப் பெண்கள் 53 சதவீதம் பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய தலைமுறைக் குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவதே குறைந்துவிட்டது. வெளியே சென்று மற்ற குழந்தைகளுடன் விளையாடினால்தான் அவர்களால் எந்த அளவுக்கு, எவ்வளவு மணி நேரம் விளையாட முடிகிறது என்பதைக் கண்காணிக்க முடியும். அல்லது விளையாடி கொண்டிருக்கும்போதே குழந்தைகள் சோர்வாகி விடுகிறார்களா என்பதையும் கண்டறிய முடியும். ஆனால், இப்போதுள்ள குழந்தை கள் வீட்டில் உட்கார்ந்துக்கொண்டு வீடியோ கேம், கைபேசிகளுடன் பொழுதைக் கழிக்கிறார்கள். இதனால் இன்றைய குழந்தைகளுக்கு என்ன பிரச் சினை இருக்கிறது என்பதை ஆரம்பத்தில் கண்டு பிடிப்பதே கஷ்டமாக உள்ளது.

ரத்த சோகைக் குறைபாடுடைய குழந்தைகளுக்கு கவனச் சிதறல், நினைவு ஆற்றல் குறைவாக இருக்கும். வீட்டுப் பாடம், ஓவியம் வரைதல் போன்று ஒரே இடத் தில் உட்கார்ந்து கவனம் செலுத்தி செய்யும் விஷயங் களை, அவர்களால் செய்ய முடியாது. குறிப்பாக எட்டு முதல் பன்னிரெண்டு வயதுள்ள பெண் குழந்தை களுக்குதான் அதிகளவு ரத்த சோகை பாதிப்பு ஏற்படு கிறது. இந்த வயதில் பொதுவாக பெண் குழந்தை பரு வம் அடைவதால், இந்த பாதிப்பு உள்ளது. குறிப்பாக இந்த காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு அதிக இரும்புச் சத்துள்ள கீரை, பழங்கள், பேரீச்சை போன்ற வற்றைக் கொடுக்க வேண்டும் என்கிறார் உமா ராகவன்.

தமிழகத்தை பொறுத்தவரை 55 சதவீதமான பெண்கள் ரத்த சோகைக் குறைபாட்டுடன் உள்ளனர். அதேபோல் 14 சதவீதமான பெண்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கப்பலில் உலகை சுற்றும் இந்திய கடற்படை வீராங்கனைகள்

இந்திய கடற்படையின் ஆறு வீராங்கனையர் உலகம் சுற்றும் பயணத்தை செப். 10இல் துவக்கினர். கோவா தலைநகர் பனாஜியில் உள்ள இந்திய கடற்படை தளத்திலிருந்து கடற்படை வீராங்கனையர் ஆறு பேர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'அய்.என்.எஸ்.வி., தாரிணி' கப்பலில் உலகம் சுற்றும் பயணத்தை துவக்கினர்.

உலகம் சுற்றும் கப்பல் பயணத்தில், இந்திய கடற்படையை சேர்ந்த, ஆறு வீராங்கனையர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவுக்கு, லெப்டினென்ட் கமாண்டர், வர்த்திகா ஜோஷி தலைமை வகிக்கிறார். லெப்டினென்ட் கமாண்டர்கள், பிரதிபா ஜம்வல், பி.சுவாதி, விஜயா தேவி, பயல் குப்தா, அய்ஸ்வர்யா ஆகியோர், இடம் பெற்றுள்ளனர். இவர்கள், 165 நாள் பயணம் மேற்கொள்ள உள்ளனர். பயணத்தின் போது, ஆஸ்திரேலியாவில், பிரீமான்டில், நியூசிலாந்தின், லைடெல்டன், பால்க் தீவின், போர்ட் ஸ்டான்லி, தென் ஆப்பிரிக்காவின், கேப் டவுன் ஆகிய துறைமுகங்களில், இந்த கப்பல் நிறுத்தப்படும்.

விண்வெளியில் 665 நாட்கள் தங்கியிருந்த சாதனைப் பெண் பெக்கி

இலக்கில் தெளிவு இருந்தால் உலகத்தையே கடந்துவிடலாம் என்று சொல்வார்கள். விண்வெளி வீராங்கனை பெக்கி ஆனெட் விட்சன் அதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி, விண்வெளி யில் 665 நாட்கள் தங்கியிருந்த முதல் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார். விண்வெளிப் பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த வாரம் தன் குழுவினருடன் கஜகஸ்தான் நாட்டில் வெற்றிகர மாகத் தரையிறங்கினார் பெக்கி.   அமெரிக்காவை சேர்ந்த இவர், உயிர் வேதியியல் துறையில் முனை வர் பட்டம் பெற்றவர். 1997ஆம் ஆண்டு சர்வ தேச விண்வெளி ஆராய்ச்சி மய்யமான நாசாவில் விண்வெளி ஆய்வாளராகச் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். இதுவரை விண்வெளிப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க விண்வெளி வீரர்கள் அதிகபட்சமாக 288 நாட்கள்தான் தங்கியுள்ளனர். ஆனால், பெக்கி விட்சன் கடந்த ஆண்டு சென்ற பயணத்துடன் சேர்த்து இதுவரை 665 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து சாதனை படைத்து உள்ளார்.

விண்வெளியில் அமைந்த ஆய்வு மய்யத்தில் பல உணவு வகைகளைச் சாப்பிட பெக்கி முயன்றி ருக்கிறார். விண்வெளி வீரர்களுக்கு என கொடுக் கப்பட்ட உணவுப் பொருட்களை வைத்து பீட்சா செய்வது, ரொட்டித் துண்டுகளில் ஆப்பிள் போல் வெட்டி தன்னுடைய கை கடிகாரத்தில் வைத்துக் கொள்வது போன்ற வித்தியாசமான முயற்சிகளை அவர் செய்து பார்த்தார்.

விண்வெளிப் பயணத்தில் தன் துறை சார்ந்த பல ஆராய்ச்சிகளைச் செய்தார். குறிப்பாக நுரை யீரல் திசு புற்றுநோய், எலும்பு செல்கள் போன்றவை குறித்த ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டார். அதே போல் விண்வெளி ஆய்வுக் கூடத்துக்கு வெளிப் புறமாக நான்கு முறை சென்று வந்துள்ளார்.

அது மட்டுமில்லை, பெண் விண்வெளி வீராங் கனைகளிலேயே பெக்கி மிகவும் அதிக வயதுடை யவர். அதிக அனுபவம் கொண்ட முதல் விண் வெளி ஆராய்ச்சியாளர். சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தில் இரண்டு முறை தளபதியாக இருந்த முதல் பெண், விண்வெளியில் அதிக தூரம் நடந்த முதல் பெண் உள்ளிட்ட பல்வேறு சாதனை களையும் பெக்கி விட்சன் படைத்துள்ளார்.

தரையிறங்குவதற்கு முன்பு விண்வெளி ஆராய்ச்சி மய்யத்திலிருந்து பேசிய பெக்கி விட் சன், பூமியை அடைந்ததும் பீட்சா சாப்பிட ஆசை யாக இருக்கிறது எனச் சொல்லியிருக்கிறார்!

கஜகஸ்தானில் தரை இறங்கியதும் பெக்கி விட்சனுக்கு முதலில் சன் கிளாஸ் கொடுக்கப்பட்டது. பின்னர் அவருக்கு வெல்கம் பேக் பெக்கி என்ற வாசகம் கொண்ட அழகான பூங்கொத்து வழங்கப் பட்டது. பெக்கி விட்சன் குழுவினரின் வருகை குறித்து அமெரிக்க விண்வெளி வீரரான பிரேஸ் நிக், உங்களின் அர்ப்பணிப்பு உணர்வு எங்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது என்று சொன்னது மட்டுமல்லாமல் பெக்கி விட்சனை அமெரிக்காவின் விண்வெளி நிஞ்சா எனப் புகழாரமும் சூட்டி யுள்ளார். விண்வெளியில் அதிக நாட்கள் பணிபுரிந் தவர்கள் பட்டியலில் பெக்கி விட்சன் தற்போது எட்டாவது இடத்தில் உள்ளார்.

விண்வெளியில் பணிபுரிவது எனக்கு மகிழ்ச்சி யாக இருக்கிறது. விண்வெளியில் இருந்து பூமியின் அழகைப் பார்க்கும் வாய்ப்பு இப்போது எனக்கு இல்லை. என் இறுதி நாட்கள்வரை இந்தப் பூமியின் அடிவானத்தைத் சுற்றியிருக்கும் வளையத்தின் அழகை என் கண்கள் தேடிக்கொண்டே இருக்கும். எதிர்காலத்தில் எனக்கு வழங்கப்படும் பணி என்னவாக இருக்கும் என்று இப்போது எனக்குத் தெரியாது. ஆனால், மீண்டும் விண்வெளிக்குச் சென்று பணிபுரியவே விரும்புகிறேன் எனத் தரையிறங்கியதும் உணர்வுப்பூர்வமாகப் பேசினார் பெக்கி.

பெண்களுக்கு தகுந்த ஊதியம் வழங்க பணி இடங்களில் வலிமையான கொள்கைகள் கொண்டு வர வேண்டும் என பேஸ்புக் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஷெரில் சாண்ட்பர்க் தெரிவித்துள்ளார். பேட்டியில், ''இதற்கு முதல்படி பெண்களுக்கு நல்ல ஊதியம் வழங்குவதுதான்'' என்று தெரிவித்தார்.

"நாம் சிறு வயது பெண்களிடம், இளம் வயதில் பொறுப்பேற்க வேண்டாம் என்றும், ஆண்களை, இளம் வயதில் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் கூறுவதே தவறு. தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு ஒவ்வொருக்கும் திறமை இருப்பதாக நான் நம்புகிறேன். அவர்கள் யார் என்பதை பொறுத்தும் அவர்கள் என்னவாக விரும்புகிறார்கள் என்பதை பொறுத்தும் அதை அவர்கள் தீர்மானிப்பார்கள்; பாலினத்தை வைத்து நாம் தீர்மானிக்க கூடாது. உணர்ச்சிகர மான அந்த நேர்காணலில், 2015-ஆம் ஆண்டில் தனது கணவர் திடீரென மரணம் அடைந்தது குறித்தும், அதனால் தனது இரண்டு பிள்ளைகளிடம் ஏற்பட்ட தாக்கம் குறித்தும் அவர் பேசினார். 2013ஆம் ஆண்டு பணிபுரியும் இடங்களில் பெண்கள் முன்னேற்றம் குறித்து அவர் எழுதிய "லீன் ன்" புத்தகத்தால் அவர் பெரும் புகழ்பெற்றார்.

அந்த புத்தகம் உலகளவில் நன்றாக விற்பனையானது; ஆனால் உயர் பதவியிலிருக்கும் பெண்களுக்கு மட்டுமே அது பொருந்தும் எனவும், அவரை போன்ற உயர் பதவியில் இல்லாமல் இருக்கும் பெண்களுக்கு அது இயல்பிற்கு மாறாக உள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

`கொள்கை தேவை`

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே இருக்கும் ஊதிய வித்தியா சத்தை சரி செய்யவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஹார்வேடில் தன்னை குறித்து தனக்கு சந்தேகம் எழுந்ததாகவும், மேலும் ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிகமான அளவில், முன்னேறி செல்லமுடியாமல் அல்லது ஊதிய உயர்வு கோர முடியாத அளவு, தங்களின் திறமையை குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்பதை அவர் உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.

"பெண்களுக்கு நல்லமுறையில் ஊதியம் வழங்க வேண்டும் என்றும் பொது மற்றும் கார்ப்பொரேட் கொள்கைகள் அவ்வாறு அமைய வேண்டும் என்றும் தெரிவித்த அவர், "ஆண்களின் எண்ணிக்கைக்கு ஈடாக பெண்களும் பணிக்கு விண்ணபிக்கின்றனர், ஆண்கள் வேலை செய்யும் அதே நேரம் பெண்களும் வேலை செய்கின்றனர் அதுவே இதற்கு பதிலாக அமைந்து உள்ளது." என்றும் தெரிவித்தார்.

`நான் வருத்தமாக இருந்தேன்`

தனது கணவர் டேவ் கோல்ட்பர்க் திடீரென மரணமடைந்ததையடுத்து, தனக்குள் மாற்றம் வந்ததாக அவர் தெரிவித்தார்.
வார இறுதியில் வெளியில் சென்றிருந்த போது, உடற்பயிற்சி கூடத்தில் திடீரென மாரடைப்பு வந்து, தலையில் காயங்களுடன் அவர் தரையில் கிடப்பதை சாண்ட்பர்க் பார்த்தார். நேர்காணலில், சில சமயங்கள் கண்ணில் நீருடன் பேசிய அவர், "நான் வருத்தமாக இருந்தேன். யாரேனும் இந்தளவு அழ முடியுமா என எனக்கு தெரியவில்லை. எனது சகோதரி மருத்துவரை அவரிடம் இதைப் பற்றி கேட்ட போது உனது உடல் பெரும்பாலும் நீராலானது என கிண்டல் செய்தார்" என்கிறார் சாண்ட்பர்க். அவரின் கணவர் இணைய இசைத்தளமான லான்ச் மீடியாவின் நிறுவனர் ஆவார்.

வெளிநாடுவாழ் இந்தியர்களின் திருமணங்களை ஒழுங்கு முறைப்படுத்த தற்போதைய சட்டங்கள், விதிகள், கொள்கை கள் ஆகியவற்றில் திருத்தம் செய்வது குறித்து ஆராய பஞ்சாபில் உள்ள வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆணையத்தின் மேனாள் தலைவரும் பஞ்சாப் உயர்நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதியுமான அரவிந்த் குமார் கோயல் தலைமையிலான குழுவை மத்திய அரசு அண்மையில் நியமித்தது. இந்த விவகாரம் குறித்து பொதுமக்கள், பெண்கள் அமைப்புகளின் நிர்வாகிகள், சமூக செயற் பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களி டமிருந்து மத்திய அரசு கருத்துகளை கோரியிருந்த நிலையில் மீண்டும் அந்தப் பணி ஏ.கே.கோயல் குழுவிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் திருமண சட்டங்களில் என்ஆர்அய் திருமணங்களால் எழும் பிரச்சினைகளைக் களைய சட்டத்தில் திருத்தம் செய்ய உத்தேசித்துள்ள மத்திய அரசின் முயற்சியை, தமிழகத்தைச் சேர்ந்த பெண் கவிஞர் சல்மா வரவேற்றுள்ளார். கவிஞர் சல்மா கூறுகையில், "என்ஆர்அய் திருமணத்தை ஒழுங்குமுறைப்படுத்த புதிய சட்டங்கள் தேவையில்லை; தற்போது அமலில் உள்ள சட்டங்களை வலுப்படுத்தினாலே போதும். வெளிநாடு  களில் இந்திய தம்பதி பிரிந்து விட்டால், அதனால் பாதிக்கப்படும் அவர்களின் குழந்தைகளின் பாது காப்பை உறுதிப்படுத்த தற்போதைய சட்டங்கள் வலுவாக இல்லை" என்றும் கவிஞர் சல்மா கவலை தெரிவித்தார்.

தாய்க்கு ஆதரவாக தீர்ப்புகள்

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுரிந்தர் கவுர் சாந்து  ஹர்பாக்ஸ் சிங் சாந்து என்ற தம்பதி இங்கிலாந்தில் வசித்த போது பிரிந்து விட்டனர். அவர்களின் குழந்தைகள் இங்கிலாந் தில்தான் இருக்க வேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சுரிந்தர் கவுர், இந்தியா வில் உள்ள தமது தாய் வீட்டில் தமது குழந்தைகளை விட்டுச் சென்றார். அந்த வழக்கில், குழந்தைகளின் நலன்கருதி அவர்கள் தாயி டமே இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுபோல பல வழக்குகளில் என்ஆர்அய் கணவருக் கும், இந்திய பெண்ணுக்கும் இடையிலான குழந்தைகள் தாயிடம் வளருவதே சரி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

மற்றொரு வழக்கில், அமெரிக்காவைச் சேர்ந்த என்ஆர் அய் கணவர் சுஷீல் சர்மா, தமது மனைவி சரிதா சர்மாவிடம் இருந்து பிரிந்து வாழ விவகாரத்து கோரி அந்நாட்டு நீதி மன்றத்தை அணுகினார். அந்த வழக்கு நிலுவையில் உள்ள போதே, அவரது மனைவி சரிதா, தங்களின் குழந்தைகளை அழைத்துக் கொண்டு இந்தியா வுக்கு வந்து விட்டார். இதையடுத்து இந்திய உயர் நீதிமன் றத்தில் சுஷீல் சர்மா தொடர்ந்த வழக்கில் சட்டவிரோதமாக தமது குழந்தைகளை சரிதா வைத்துள்ளதாக முறையிட் டார். அதை ஏற்று குழந்தைகளை கணவரிடம் ஒப் படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மேல் முறையீட்டு வழக்கில், மைனர் வயதில் உள்ள குழந்தைகள் தாயிடம் வளருவதே சரியாக இருக்கும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்தது.

சட்டம் வலுவாக இல்லை


இதே போல இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள், என் ஆர்அய் கணவர், மனைவி விவகாரங்களில் தாய்க்கு சாதக மாக இருந்தாலும், அவர்களின் குழந்தைகளுக்கு சட்டப் பாது காப்பு வழங்கப்படுவதை இந்திய சட்டங்கள் உறுதிப்படுத்த வில்லை என்கிறார் புதுச்சேரி மகளிர் ஆணையத்தின் தலைவர் கே.சுந்தரி.

மேலும் அவர் கூறுகையில், "இந்தியாவில் தற்போது அமலில் உள்ள இந்து, முசுலீம் உள்ளிட்ட பிற மதங்களின் திருமண சட்டங்களை வலுப்படுத்த, அவற்றில் திருத்தங் களை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ள பெண்களை திருமணம் செய்து வெளிநாடு அழைத்துச் சென்று அவர்களை திடீரென பரிதவிக்கவிடும் கணவன் மார்களுக்கு விதிக்கப்படும் தண்டனை இந்தியாவில் கடுமையாக இல்லை. தமது தலைமையிலான ஆணையத் துக்கு வரும் பெண்களின் புகாரில் வெளிநாடுவாழ் இந்தி யர்களை திருமணம் செய்து விட்டு, பின்னர் அவர்களால் தவிக்க விடப்படும் பெண்களின் புகார்களே அதிகம். இந்தியாவில் திருமணம் செய்யும் என்ஆர்அய் நபர் களுக்கு இந்திய நீதிமன்றங்கள் மட்டுமே விவாகரத்து வழங்க முடியும் என்ற நிலை ஏற்பட வேண்டும் என்றும், வெளிநாட்டு நீதிமன்றங்கள் அவர்களின் விவகாரத்து வழக்குகளை விசாரணைக்கு ஏற்பதைத் தடுக்கும் உடன் படிக்கையை பிற நாடுகளுடன் இந்திய அரசு செய்து கொள்ள வேண்டும்" என்று கூறுகிறார்.

இந்த நிலையில், வெளிநாடுவாழ் இந்தியர் திருமணங் களின்போது தம்பதி பிரிந்து விட்டால் அவர்களின் குழந்தை களின் நிலை என்ன ஆகும்? அக்குழந்தைகளின் சமூக, மனோநிலை, சட்டப்பூர்வ பாதுகாப்பு போன்றவை தொடர்பான பிரச்சினைகளை ஆராய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தை (என்சிபிசிஆர்) மத்திய பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

என்ஆர்அய் நபரை திருமணம் செய்து கொள்ளும் முன்பு, கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்களை விளக்கும் வழிகாட்டுதல் கையேட்டை, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அந்த வழிகாட்டுதல்கள் பற்றிய பரப்புரையை செய்து வருவதாக இந்திய மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சக உயரதிகாரி தெரிவித்தார்.

கருநாடகா என்ஆர்அய் அமைப்பின் துணைத்தலை வரும், வாசிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் சமுதாய வளர்ச்சித் துறை முன்னாள் அதிகாரியுமான ஆர்த்தி கிருஷ்ணா கூறுகையில்,  என்ஆர்அய் நபர்களை திரு மணம் செய்து கொள்ளும் முன்பாக அவர்களை பற்றி விசாரிக்க ஒவ்வொரு வெளிநாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் சமுதாய விவகாரங்களுக்கான அதிகாரியின் உதவியை பெண் வீட்டார் அணுகலாம். இந்தியாவில் என்ஆர்அய் வாங்கிய சொத்துகளில் பிரச்சினைகள், சொத்து ஆவணங்கள் சரிபார்ப்பு போன்ற விவகாரங் களுக்கு மட்டுமே தற்போது மத்திய, மாநில அரசுகள் அளவில் சட்டப்பூர்வ ஆய்வு, பாதுகாப்பு ஆகியவற்றுக் கான சட்டங்கள் உள்ளன" என்று அவர் குறிப்பிட்டார்.

பெண் கல்வி : கேள்விக்குறியாகவே உள்ளது

பள்ளிக்கல்வி துறையில் தொடர்ந்து பல புதிய அறிவிப்புகள் வந்தாலும், தமிழகத்தில் பெண் கல்வி  கேள்விக்குறியாகவே இருக்கிறது. பொருளாதார அடிப்படையில் பெரும்பாலான பெண் களின் கல்வி தடைபட்டுப் போகிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பெண்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் முனைவர் பட்டம் பெறும் வரை இலவசக் கல்வி என்று அறிவிப்பு செய்து அம்மாநில முதல்வர் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். தமிழகத்தில் இலவசக் கல்வி நிலைமை குறித்து ஒரு சிலரிடம் கேட்டோம்.கவிஞர் தி.பரமேசுவரி இது குறித்து கூறுகையில், பெண்கல்வியும் இலவசக் கல்வியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இலவசக் கல்வி  அனைவருக்குமே பொதுவான ஒன்று. என்றபோதிலும் இன்று பல கிராமங்களில் இலவசக் கல்வி இல்லை என்றால் பெண்கள் அடிப்படை கல்வியைக்கூட பெற முடியாது.

இலவசக் கல்வியைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் வழங்கப் பட்ட இலவச மிதி வண்டி திட்டத்திற்குப் பிறகு கிராமப்புறப் பெண்கள் பள்ளிக்கு வருவது அதிகரித்தது. பெற்றோர்களுக்கு தன்னுடைய பெண் குழந்தை பேருந்தில் பள்ளிக்குச் சென்று வருவதை ஒப்புக்கொள்வதில் சிக்கல் இருந்தது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண்களுக்கான உதவித்தொகை இருக்கிறது. இப்படி பல திட்டங்கள் பெண் கல்வியை ஊக்குவித்தது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் நெடுங்காலமாகவே பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பாலான கிராமப்புற பெண்களுக்கு அடிப்படை கல்வி கிடைக்கிறது என்றால் அரசுப் பள்ளிகளே அதற்கு முக்கிய காரணம்.இதுவரை அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மீதும் ஆசிரியர் பற்றாக்குறை போன்ற விஷயங்களாலும் மக்களிடையே அவற்றின் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தது. கல்வித்துறை பல முயற்சிகளை எடுத்து இலவச கல்வி குறித்து மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. ஓரளவிற்கு அடிப்படைக் கல்வி பெண்களுக்கு சாத்தியப்பட்டிருக்கிறது என்றால் தமிழகத்தில் உள்ள இலவசக் கல்விதான் அதற்குக் காரணம்.

ஆனாலும் அடிப்படைக் கல்வியைத் தாண்டி பெண்களின் மேற்படிப்பு என்பது இன்றுவரையிலும் கேள்விக்குறியாக இருக் கிறது. இதற்கு பெற்றோர்களே முக்கிய காரணமாக இருக்கிறார்கள். கிராமப்புற பெண்கள் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் மேற் படிப்பிற்கான செலவு ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. மேற்படிப்பு, திருமணம் இப்படி தொடர் செலவுகளை மய்யப்படுத்தி கல்வி தடைபடுகிறது.இது குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தற்போது பெண் களுக்கு மேற்படிப்பு குறித்து ஆலோசனையை வழங்கி வரு கிறார்கள். கல்லூரிகளில் இலவசக்கல்வி  ஏற்பட்டால் கல்வி பெண் களுக்கு முழுமையாக கிடைக்கும். ஒவ்வொருவருக்கும் பெண் கல்வி குறித்து விழிப்புணர்வு தேவை.

அடிப்படையிலிருந்து ஓர் ஆணுக்கு கல்வி கொடுத்தால் அவர் குடும்பத்தையே பார்த்துக்கொள்வார் என்கிற மனநிலை நம் மக்களுக்கு இருக்கிறது. இந்த மனநிலை மக்கள் மத்தியில் மாற வேண்டும். அரசுக் கல்லூரிகளில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.  இதைப் பயன்படுத்தி பெற்றோர்கள் தங்களுடைய பெண் குழந்தைகளுக்கு முழுமையான கல்வியை அளிக்க வேண்டும் என்கிறார் தி.பரமேசுவரி.இதுகுறித்து கல்வியாளர் வசந்திதேவியிடம் கேட்டபோது, தமிழகத்தைப் பொறுத்தவரை ஆண்-பெண் இருவருக்குமே காசுக்கேற்ற கல்வி என்றுதான் வைத்திருக்கிறார்கள். தனியார் பள்ளிகளையே பெற்றோர்கள் தேடிச்செல்கிறார்கள். தற்போது உள்ள அரசு கல்வி முறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்தும் அறிவிப்புகள் ஒன்றும் இல்லை. டிஜிட்டல் வகுப்பறைகள் என்று அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தினாலும், தனியார் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறையுமா என்று தெரியவில்லை. தனியார் பள்ளிகளை குறைப்பதற்கு அரசு தயாராக இல்லை. தனியார் பள்ளி களுக்கு எந்த விதமான கட்டுப்பாடுகளையும் அரசு விதிப்பதும் இல்லை. முறையின்றி பல தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில்தான் பெண் குழந்தைகளை பெற்றோர் சேர்க்கிறார்கள். அங்கே அந்த பெண் குழந்தைக்கு பாதுகாப்பு என்பது கேள்விக் குறியாக இருக்கிறது.

பெண் கல்விக்கு ஆதரவான கல்விமுறை இங்கு இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அரசியல் பிரமுகர்கள் வழங்கக்கூடிய இலவசங்களைப் பெறுவதற்கு முந்திச் செல்கிற மக்கள், இலவசக் கல்வியை ஏற்க மறுக்கிறார்கள். தனியார் பள்ளிகளின் எண்ணிக் கையை குறைத்தால்தான் மக்களுக்கு இலவசக் கல்வி மீது நம்பிக்கை ஏற்படும். இங்கு இருக்கக்கூடிய தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்தாமல் இலவசக்கல்வி மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படாது என்கிறார் வசந்திதேவி.


கழிப்பறை இல்லாததால் விவாகரத்து

ராஜஸ்தானில் மனைவிக்குக் கழிப்பறை கட்டித் தராத கணவனிடமிருந்து பிரிந்து வாழ விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. 2011-இல் ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த சோட்டு லாலுக்கும் சங்கீதாவுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடப்பதற்கு முன்பே கழிப்பறை வசதி செய்துதரப்படும் என்று சோட்டு லால் குடும்பம் தரப்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. ஒவ்வொரு நாளும் இருள் வருவதுவரை காத்திருப்பதும் அதிகாலையிலேயே திறந்த வயல்வெளிகளைத் தேடிப் போவதும் சங்கீதாவுக்கு மிகுந்த சங்கடத்தை அளித்துவந்தது. இதனால், கடந்த ஆண்டு விவாகரத்து கோரி அவர் வழக்குப்பதிவு செய்தார். சங்கீதா மாலிக் தொடர்ந்த வழக்கு வடஇந்திய நாளிதழ்களில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டது. இந்நிலையில் நீதிபதி ராஜேந்திர குமார், விவாகரத்து வழங்கினார். மது, புகையிலை, மொபைல் போன்களுக்குச் செலவழிக்கப் பணம் உள்ள நிலையில், வீட்டில் கழிப்பறை கட்ட முடியாதது முரண்பாடானது என்றும் தனது தீர்ப்பில் அவர் கூறியுள்ளார்.

Banner
Banner