மகளிர்

கலப்படத்துக்கு எதிராகப் போராடும் அனுபமா

நாம் உண்ணும் உணவு தரமான தாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டியது அரசின் கடமை. பாதுகாப்பான உணவை மக்களுக்கு அளிப்பதைத் தன்னுடைய கடமையாகச் செய்துவருகிறார் கேரள மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அனுபமா.

இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் நான்காம் இடத்தைப் பிடித்தவர். இவர் பதவியேற்ற 15 மாதங்களுக்குள் சுமார் 6,000 கலப்பட உணவுப் பொருட்களைக் கண்டறிந்துள்ளார். 750 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.

இப்போது கேரளாவில் அனுபமாவின் பெயரைக் கேட்டாலே உணவுக் கலப்படம் செய்வோர் தலைதெறிக்க ஓடுகின் றனர். தான் ஆணையராக இருந்தாலும் களத்துக்குச் செல்லத் தயங்கு வதில்லை அனுபமா.

கேரளாவில் பல்வேறு சந்தைகளுக்குச் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். ஆய்வில் காய்கறிகள், பழங்களில் கிட்டத்தட்ட 300 சதவீதத்துக்குப் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டிருப்பதைக்

கண்டு பிடித்துள்ளார். இது அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிக அதிகம். இவை மனிதர்களுக்குப் பெரும் ஆபத்தை உண்டாக்கு
பவை.

இந்த விஷயம்தான் கலப்பட உணவுப் பொருட்களைக் கண்டறிவதில் இன்னும் முனைப்புடன் அனுபமாவைச் செயல்பட வைத்தது. மக்கள் மத்தியில் அரசு நிர்வாகத்தின் மீது நன்மதிப்பையும் உருவாக்கியது.

வீட்டிலேயே தோட்டம் அமைக்கலாம் என்ற இவரது யோசனை, விழிப்புணர்வுப் பிரசாரமாகக் கேரளாவில் பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதன் பயனாகக் கேரள மக்கள் தற்போது தங்களது வீட்டிலேயே காய்கறித் தோட்டம் அமைக்க ஆரம்பித்து விட்டனர். கேரள இதற்கு அரசு ஊக்கத் தொகை வழங்கிவருகிறது.

கேரளாவுக்கு 70 விழுக்காடு காய்கறிகள் தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களில் இருந்துதான் கொண்டு செல்லப்படுகின்றன. வீடு களிலேயே தோட்டம் அமைத்துவருவதால் வெளிமாநிலங்களிலிருந்து கேரளாவுக்கு வரும் காய்கறி இறக்குமதியின் அளவு சற்றுக் குறைந்துள்ளது.

மக்களுக்கு ஆரோக் கியமாக உணவளிப்பது இன்றைய தேவை. என்னுடைய வெற்றிக்குப் பொதுமக்கள்தான் காரணம். அவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் பல விஷயங்களை என்னால் செயல்படுத்தியிருக்க முடியாது என்கிறார் அனுபமா.

கல்விக்காக போராடும் பெண்

நிலமும் கல்வியும் சமூகத்தில் ஒடுக்கப் பட்ட மக்களின் எதிர்கால வாழ்க்கைக்கான ஆதாரம் என்பதைத் தன்னுடைய செயல் களால் நிரூபித்துக்காட்டியிருக்கிறார் விஜயா. நரிக்குறவர் சமூக மக்களுக்காக மாநில அரசு கொடுத்த விவசாய நிலத்தைப் பல ஆண்டு களாகப் பயன்படுத்திவந்துள்ளனர் பெரம் பலூர் மாவட்டம் முப்பத்தியாறு எறையூரைச் சேர்ந்த நரிக்குறவர் சமூகத்தினர். ஆனால், சமூகத்தினர் அதே அரசு ஜவுளிப் பூங்கா அமைப்பதற்காக அந்த விவசாய நிலத்தை எடுத்துக் கொள்ள முயன்றது. சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரமாக இருந்த நிலத்தை அரசு எடுத்துக்கொள்ள அவர்கள் அனுமதிக்கவில்லை. நிலத்தை மீட்பதற்கான போராட் டத்தில் முன்னணியில் நின்றவர்களில் விஜயாவும் ஒருவர்.

நரிக்குறவர்கள் தொன்றுதொட்டு நிரந்தரமாக வசிக்க ஒரு இடம் இல்லாமல் ஊர் ஊராகச் சென்று வியாபாரம் செய்துவந்தனர். அரசு வழங்கிய நிலத்தால்தான் நூற் றுக்கும் மேற்பட்டவர்கள் நிரந்தரமாக விவசாயம் செய்து, தங்களின் வாழ்க்கையை நடத்திவந்தனர். இந்த நிலையில் அரசு எங்களுக்குக் கொடுத்த நிலத்தை மறுபடியும் கேட்டபோது, நாங்கள் கொடுக்கத் தயாராக இல்லை. அந்த விவசாய நிலத்தை நம்பித்தான் எங்களின் வாழ்க்கையே இருக்கிறது என்கிறார் விஜயா.

ஜவுளிப் பூங்காவை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி உண்ணாநிலை உள்ளிட்ட பல போராட்டங்களில் ஈடுபட்டனர். நரிக்குறவர் நாடோடிகள் நலச் சங்கம் என்ற அமைப்பொன்றை ஆரம்பித்தனர். இந்தப் போராட் டங்களில் பெண்களைத் திரட்டுவதில் முன்னணியில் இருந்தார் விஜயா. நரிக்குறவர் சமுதாயத்தில் படிக்கத் தொடங்கிய முதல் தலைமுறையினரில் விஜயாவும் ஒருவர்.

என் அம்மா பல ஊர்களுக்குச் சென்று வியாபாரம் செய்துவருவார். அப்படிச் சென்ற இடங்களிலிருந்து என் அம்மா கற்றுக்கொண்ட பாடம், தன் பிள்ளைகளைப் படிக்கவைக்க வேண்டும் என்பதுதான். கட்டுப்பாடுகள் நிறைந்தது எங்கள் சமூகம். அப்படியிருந்தும் நான் சென்னை சைதாபேட்டையில் உள்ள மகளிர் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை விடுதியில் தங்கிப் படித்தேன். ஒரு பெண்ணை இப்படிப் படிக்க வைக்கலாமா என்று என் அம்மாவிடம் பலரும் கேட்டார்கள். அதற் கெல்லாம் அஞ்சாமல் என்னை அவர் அந்தக் காலத்தில் படிக்கவைத்ததை நான் பெருமையாக நினைக்கிறேன் என்கிறார் விஜயா.

தனக்கு முழுமையாகக் கிடைக்காத கல்வியைத் தன்னுடைய பிள்ளைகளுக்கு அதிகமாகவே கொடுத்துள் ளார் விஜயா. முதல் மகனை எம்.ஃபில், இரண் டாவது மகனை பிளாஸ்டிக் தொழில் நுட்பம் படிக்க வைத்துள்ளார்.

விஜயாவின் கல்வி அறிவாலும் சிந்தித்துச் செயல்படும் திறமையாலும் போராட்டக் களத்துக்குப் பெண்கள் ஏராளமானோரை வரவழைக்க முடிந்தது. தொடர் போராட் டங்களால் முப்பத்தியாறு எறையூர், தமிழக மக்களின் கவனத்தைப் பெற்றது. இந்தப் போராட்டத்துக்கு அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தினர் துணை நின்றனர். தொடர் போராட்டங்களின் பலனாக, சென்னை உயர்நீதிமன்றம் விவசாய நிலத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்கத் தடை விதித்தது. விவசாய நிலத்தை மீட்ட மக்கள் தற்போது அதில் பயிர் செய்துவருகின்றனர்.

நாங்கள் அனைவரும் ஒன்றாகத்தான் பயிர் செய் வோம். சமீபத்தில் பயிர் செய்த சோளத்தில் ஒருவருக்கு முப்பது முதல் நாற்பது முட்டைகள் வரை கிடைத்தன என்று மகிழ்ச்சியாகச் சொல்லும் விஜயா, பள்ளியில் இடைநின்ற மாணவர்களை ஒருங்கிணைப்பதில் முழுமை யாக ஈடுபட்டுவருகிறார்.

பல்வேறு காரணங்களுக்காக மாணவர்கள் பள்ளியிலிருந்து பாதியில் நிற்பது அதிகமாக இருந்தது. இதற்காக சர்வ சிக்ஷ அபியான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை மக்களுக்குப் புரியவைத்து, ஒருங் கிணைப்பதில் நான் முழு வீச்சில் ஈடுபட்டேன். அதற்குப் பலனாகப் பல மாணவர்கள் தாங்கள் விட்ட படிப்பை மீண்டும் தொடர்ந்தார்கள். ஒரு மாணவி பி.காம். வரை படித்தார். ஆனால், எங்களின் நில மீட்புப் போராட்டத்துக்குப் பிறகு தற்போது இந்தத் திட்டம் எங்கள் பகுதியில் செயல்பட வில்லை என்று சொல்லும்போது விஜயாவின் குரலில் வருத்தம் தெரிந்தது.

இந்தத் திட்டம் மறுபடியும் தங்கள் பகுதி குழந்தைகளுக்கு வேண்டும் என்று வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை முறையிட்டும் ஏமாற்றமே மிஞ்சி யுள்ளது. எங்கள் குழந்தைகள் கொஞ்சம் தாமதமாகத்தான் பாடங்களைப் புரிந்துகொள்வார்கள். ஆனால் பழகி விட்டால் வேகமாகக் கற்றுக்கொள்வார்கள்.

இப்போது பள்ளியிலிருந்து இடையில் நிற்பது முன்பைவிட அதிகரித்துள்ளது. எங்கள் பகுதிக்கு மீண்டும் அந்தத் திட்டம் வந்தால் பலரும் கல்வி பயில வாய்ப்புள்ளது. இல்லையென்றால் தங்கள் பெற்றோர்களைப் போல் நாடோடிகளாக மாற வேண்டியிருக்கும். கல்வியால் மட்டுமே நாங்கள் முன்னேற முடியும் என்கிறார் துணிச்சலான போராட்டக்காரர் விஜயா.


துணை நிற்கும் தொழில்

துணைக்கு யாரும் இல்லாத நிலையிலும் ஒருவர் கற்று வைத் திருக்கும் கைத்தொழில் அவருக்கு எப்போதும் உறுதுணையாக இருக் கும் என்பதற்கு எடுத்துக் காட்டாக இருக்கிறார் கைவினைக் கலைஞர் ரமணி.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் வசித்துவரும் பகுதியில் அனைவருக்கும் அறிமுகமானவர் ரமணி. சிறுவயதில் இருந்தே எனக்கு கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் அதிகம். நான் பத்தாம் வகுப்பு வரை மட்டும்தான் படித்திருக்கிறேன். பிறகு சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்து கைவினைப் பொருட்கள் செய்வதற்கான படிப்பைப் படித்தேன். ஆனால் அங்கே நான் கத்துக்கிட்டதை எங்கும் செய்து பார்த்தது கிடையாது என்று சொல்லும் ரமணியை அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் திருப்பமே கைவினைக் கலைஞராக மாற்றியது.

தன் அம்மாவுக்குத் துணையாக இருந்தபோதுதான் கைவினைப் பொருட்கள் செய்து விற்பனை செய்யத் தொடங்கினார்.  மற்றவர்களைச் சார்ந்து ஒரு வேலை யைச் செய்வதைவிட நாமே ஒரு தொழில் தொடங்கினால் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என்பது ரமணியின் கொள்கை.

கடந்த நாற்பது ஆண்டுகளாகக் கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் ரமணி தற்போது அரசு உதவியுடன் சிறிய கடையை நடத்திவருகிறார். செயற்கைப் பூச்சுகளைத் தவிர்த்து சூழலுக்கு உகந்த வகையில் கம்பி பொம்மைகளை வடிவமைப்பது இவரது சிறப்பு. நடனமாடும் மங்கை, பல்வேறு மாநில  பொம் மைகள், கலம்காரி எனப்படும் காய்கறி வண்ணங்களால் செய்யப்பட்ட நகைப் பெட்டிகள் ஆகியவை இவரின் கைவண்ணத்தில் தனிச்சிறப்போடு கவர்கின்றன.

திருமணத்தின் போது நண்பர்களுக்கும் உறவினர் களுக்கும் தரப்படும் தாம்பூலம், பிளாஸ்டிக் பொருட் களுக்குப் பதிலாக நான் செய்யும் பொம்மைகளைப் பலர் நினைவுப் பொருளாகத் தருகின்றனர்.

அரசின் கைவினை அபிவிருத்தி மய்யத்தினரின் உதவியினால் அரசு சார்ந்த கண்காட்சிகளில் கலந்து கொண்டு பொருட் களை விற்பனை செய்ய முடிகிறது. யாரையும் சாராமல் வாழ வேண்டும் என்று நினைக்கும் எனக்கு எப்போதும் துணையாக இருப்பது இந்தக் கைவினைத் தொழில்தான் என நெகிழ்கிறார் ரமணி.

கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியின் மாணவி ஆதிரா. இவர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் ஆவார். பாகுபாடுகளுக்கு எதிராக பேசிவந்தார். அதனால், அவரை மனநிலை சரியில்லாதவர் என்று கூறி கல்வியைத் தொடர்வதற்கு பெரும் இடையூறு விளை விக்கப்பட்டது. திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியிலிருந்து (CTU) வெளியேறியநிலையில்,  பெரும் போராட்டத்துக்குப் பின்னர், அவர்மீதான நல்ல கருத்தின் படி, இறுதியில் ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (KTU) சேர்ந்து கல்வியைத் தொடர்கிறார்.

ஆதிரா இதுகுறித்து கூறும்போது,
என்னுடைய போராட்டத்தின் முடிவில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன். தற்போது  முன்னணி கல்லூரியில் என்னுடைய கல்வியை தொடர்கிறேன் என்றார்.

திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் இரண்டா மாண்டு மாணவி ஆதிரா. சமூகப்புறக்கணிப்புகளால் மிகவும் வேதனை அடைந்த ஆதிரா, தாழ்த்தப்பட்ட வகுப்பின மாணவர்களின்மீதான பாகுபாடுகளை எதிர்த்து துணிந்து குரல் கொடுக்கத் துவங்கினார். அதனாலேயே மனதளவில் பெருமளவில் தொல்லைபடுத்தப்பட்டார்.

இடுக்கி மாவட்டத்தில் உள்ள வஞ்சிவயல் எனும் பழங்குடியினரின் குக்கிராமத்திலிருந்து பொறியியல் படிப்பதற்காக வந்த ஆதிராவுக்கு மனநிலை பாதிப்பு என்கிற காரணத்தைக்கூறி, விடுதியில் தங்குதவதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.
முகநூலில் திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரி பணியாளர்களைக் கொண்ட குழுவில் ஆதிரா ஒரு கேள்வியை எழுப்பினார். சிஇடியில் மாணவர்களுக்கு அளிக்கப்படுகின்ற இடஒதுக்கீடு குறித்து உங்கள் கருத்து என்ன? என்று கேள்வி எழுப்பினார். அதிலிருந்துதான் ஆதிராவுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டன.

இதுகுறித்து அவர் கூறும்போது, நான் குற்றவாளியைப் போல் நடத்தப்பட்டேன். மிகவும் எரிச்சலுடன், மூத்த மாணவர்களும், ஆசிரியர்களும் தேவையில்லாத கேள்விகளுடன் ஏன் வருகிறாய்? என்றார்கள். கல்வி நிறுவனங்களில் இம்மாநிலத்தில் இடஒதுக்கீடுகுறித்த அணுகுமுறை இப்படித்தான்  உள்ளது.
மனநிலை சரியில்லாதவர் என்று முத்திரை குத்தப்பட்ட பின்னர், ஆதிரா சில காலத்துக்கு  மன அழுத்தத்துக்கான சிகிச்சை பெற

வேண்டியிருந்ததால், குறிப்பிட்ட ஆண்டு களில் தேர்வுகளில் பெறவேண்டிய தேர்ச்சியை பெறாத மாணவியாக ஆகிவிட்டார். கேரளா தொழில் நுட்ப பல்கலைக்கழகம் தேர்ச்சி பெறாத மாணவர்களை கல்வியைத் தொடர அனுமதிப்பதில்லை.

கல்வி தொடர உதவிய ஆளுநர் சதாசிவம்
கேரள மாநில ஆளுநர் பி.சதாசிவம் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோரை ஆதிரா துணிவாக சென்று சந்தித்து தன் பிரச்சினைகள் குறித்து எடுத்துக்கூறினார். கேரள மாநில ஆளுநர் பி.சதாசிவம் தலையீட்டைத் தொடர்ந்தும், கல்லூரி ஆசிரியர்கள் ஆதிராவுக்கு ஆதரவாக முயற்சிகள் எடுத் ததன் விளைவாக கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆதிராவின் பிரச்சினையை தனியான கவனத்துடன் பரிசீலித்து கல்வியைத் தொடர அனுமதித்தது.

பல்கலைக்கழகத்தின் உத்தரவின்படி, ஆதிரா தன்னுடைய இரண்டாவது பருவகால கல்விலிருந்து கல்வியைத் தொடர்ந்தார். முதல் பருவகாலக்கல்வியின் பாடங்களில் தேர்ச்சியடையாமல் இருந்த இரண்டு பாடங்களில் (Differential Equations and Engineering Graphics)
தேர்வெழுதவும் அனுமதிக்கப்பட்டார்.

ஆதிரா கூறும்போது, “இரண்டாம் பருவ காலகல்வியிலிருந்து மீண்டும் என்னுடைய படிப்பைத் தொடருகிறேன். மாநிலத்திலேயே முன்னணியில் உள்ள கல்லூரியில் பட்டதாரியாக வருவேன் என்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். பி.டெக் முடித்து, ஏதேனும் ஓர் அய்.அய்.டி.யில் எம்.டெக் படித்து முடிப்பேன்.  இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இல்லாமல், என்னுடைய திறமையின் காரணமாக முழுமையாக தகுதியின் (மெரிட்) அடிப்படையில் அதற்கான இடத்தைப் பெறுவேன். அதுபோலவே, என்னுடைய திறமையின் அடிப்படையில் வேலைவாய்ப்பையும் பெறுவேன். அதையே நான் மிகுந்த பெருமையாகக் கருதுவேன் என்றார்.

சமூகத்தில் நிலவிவரும் ஜாதிய பாகுபாடுகள், ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற்றம் அடைவதற்காக அவர்களுக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படுவதை விமர்சிக்கின்றவர்களிடம் ஜாதிய பாகுபாடுகள் இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய காரணத்தாலேயே மனநிலை பாதிக்கப்பட்டதாக முத்திரை குத்தி கல்வியைத் தொடரவிடாமல் செய்தார்கள். ஆனால், துணிவுடன் அனைத்தையும் எதிர்கொண்டு, தன்னால் சாதிக்க முடியும் என்கிற மன உறுதியுடன் கல்வியை தொடர்கிறார் பழங்குடியின மாணவி ஆதிரா.

ஒரு பழங்குடியினத்திலிருந்து குக்கிராமத்திலிருந்து பொறியியல் பட்டத்தில் முதுநிலை மட்டும் பணிவாய்ப்பு களிலும் தன்னுடைய திறமையின் அடிப்படையில் வென்று காட்டுவேன் என்கிற உறுதியை வெளிப்படுத்தி யுள்ளார் ஆதிரா.

குழந்தைகள் உலகம் அற்புதமானது! மிகக் கவனமாகவும் அக்கறையாகவும் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை என்பதை உணர்ந்த அரசு, 1975ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மய்யங்களை ஆரம்பித்தது. குழந்தைகள் பசியால் வாடி ஆரோக்கியம் குன்றுபவர்களாக மாறுவதைத் தடுப்பதும் ஊட்டச்சத்துக் குறை பாட்டைப் போக்குவதும் அங்கன்வாடி மய்யங்களின் முக்கியப் பணிகள்.  தமிழகத்தில் பால்வாடி என்று அறியப்படும் அங்கன்வாடி மய்யங்கள் போதிய பராமரிப்பின்றியும் முறையான பணியாளர்கள் இல்லாமலும் மக்களின் வரவேற்பைப் பெற முடியாமல் பாழடைந்த கட்டடங்களாகக் காட்சியளிக்கின்றன.

தற்போது சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பணியாளர்களுக்குப் புதிய வடிவிலான பயிற்சிகள் அளிக்கப்பட்டுவருகின்றன. அதன்மூலம் அங்கன்வாடி மய்யங்களின் தரம் உயர்த்தப்பட்டுவருகிறது. நகர்ப்புறம் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் அங்கன்வாடி மய்யங்களில் குழந்தைகளின் வருகை அதிகரித்துள்ளது. முதற்கட்டமாக அங்கன்வாடி கட்டிடங் களைத் தூய்மைப்படுத்தியுள்ளனர். குழந்தைகளைக் கவரக்கூடிய வண்ணங்களால் அறையை அலங்கரித்துள்ளனர். சிறிய விளையாட்டு உபகரணங்களையும் வைத்திருக்கின்றனர்.

விருத்தாசலம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் கிரிஜா, சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் கிராம மக்களுக்கு ஊட்டச்சத்து, சுகாதாரக் கல்வி ஆகியவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகிறது. குழந்தைகள் 3 கிலோ எடையுடன் பிறக்க வேண்டும் என்றும் ஊட்டச்சத்து குறைபாடின்றிப் பிறக்க வேண்டும் என்றும் செயல்பட்டு வருகிறோம். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளரிளம் பருவத்தினர் ஆகியோர் இந்தத் திட்டத்தில் தனிக் கவனம் பெறுகிறார்கள். தொடர்ந்து குழந்தைகள் பராமரிப்பு, வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அங்கன்வாடி மய்யங்களில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்கான நவீன விளையாட்டு உபகரணங்கள் மூலமாகவும் பாடல்கள் மூலமாகவும் மொழியையும் கல்வியையும் கற்பிக்கிறோம். வாரம் முழுவதும் விதவிதமான கலவை சாதங்கள், புதன், வியாழன் கிழமைகளில் முட்டை, பயறு வகைகளை வழங்குகிறோம் என்கிறார்.

வெற்றி பெற வைப்பதே லட்சியம்

மாணவர்களை சர்வதேச அரங்கில் வெற்றி பெற வைப்பதே தனது லட்சியமாகக் கொண்டு செயல்படும் தடகளப் பயிற்சியாளர் இந்திரா.

விளையாட்டைத் தன் வாழ்க்கையாகக் கொண்டு, நாட்டுக்காகப் பதக்கங்கள் வாங்க வேண்டும் என்பதே ஒவ்வொரு விளையாட்டு வீரரின் லட்சியமாக இருக்கிறது. தன்னிடம் பயிற்சி பெற்றுவரும் தடகள வீரர்களின் கனவை மெய்ப்பிக்க உறுதுணையாக இருக்கிறார் இந்திரா. இவரது சொந்த ஊர் ஊட்டி. கணவரும் மகனும் அங்கேயிருக்க, விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்காகச் சென்னை வந்துவிட்டார். 1982 -1985 ஆண்டு வரை தமிழ்நாட்டின் மாநில கோகோ குழுவின் கேப்டனாக இருந்திருக்கிறார். தேசிய அளவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார்.

எனக்கு சிறு வயது முதலே தடகள விளையாட்டில் ஆர்வம் அதிகம். சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். குடும்பச் சூழல் காரணமாகத் தடகளப் பயிற்சிக்குத் தேவையான உபகரணங்களைக்கூட வாங்க முடியவில்லை. தடகளப் போட்டி களின் போது பயன்படுத்தப் படும் ஸ்பைக் ஷு வாங்குவது பெரிய கனவாக இருந்தது. என்னுடைய தாத்தா வாங்கிக் கொடுத்த ஸ்பைக் ஷுவை நான்கு ஆண்டு களுக்கு மேலாகப் பத்திரமாக வைத்திருந்தேன். பயிற்சியாளர் இப்ராகிம்தான் என் திறமையை அடையாளம் கண்டு, பல போட்டிகளில் வெற்றிபெற உறுதுணையாக இருந்தார். அவரது ஊக்குவிப்பும் பயிற்சியும் இல்லாமல் நான் இன்று ஒரு தடகளப் பயிற்சியாளராக வந்திருக்க முடியாது. எனக்குள்ளே இருந்த திறமையை வெளிக்கொண்டுவந்த இப்ராகிம் போல் நானும் ஒரு பயிற்சியாளராக வேண்டும் என்று தீர்மானித்தேன் என்கிறார் இந்திரா.

பட்டப் படிப்புக்குப் பிறகு, பெங்களூரு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விளையாட்டுப் பயிற்சி அகாடமியில் தடகளப் பயிற்சியாளர் படிப்பை முடித்தார். பிறகு ஊட்டியில் ஒரு தனியார் பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக சில காலம் பணியாற்றினார் .

அரசு வேலைக்குத்தான் முயற்சி செய்து வந்தேன். 17 ஆண்டு முயற்சிக்குப் பிறகு, தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களின் விளையாட்டை ஊக்குவிக்கப் பயிற்சி மய்யம் தொடங்கப்பட்டது. எனக்கும் அதில் வேலை கிடைத்தது. தற்போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பள்ளி மாணவர்களுக்குத் தடகளப் பயிற்சியளித்துவருகிறேன். பெண் பயிற்சியாளர்களால் என்ன பெரியதாகச் சாதித்துவிட முடியும் என்ற விமர்சனத்தை நானும் எதிர்கொண்டேன். நான் பயிற்சியளித்த மாணவர்கள் இருவர் சமீபத்தில் ஆசிய இளையோர் தடகளப் போட்டி களில் பதக்கங்களை வென்றனர். இந்த வெற்றியைத்தான் அவர்களுக்குப் பதிலாகத் தர விரும்பினேன் என்கிறார் இந்திரா. ஒரு மாணவரையாவது ஒலிம்பிக் பதக்கம் வாங்க வைத்துவிட வேண்டும் என்ற லட்சியத்துடன் பணி யாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.


மக்களுக்கான மருத்துவர்

மருத்துவர்கள்தான் மக்களைத் தேடி வரவேண்டும். மருத்துவர்கள் நோயாளிகளின் எஜமானர்கள் அல்ல, சேவகர்கள்என்று வலியுறுத்தியவர் சீனாவில் பணியாற்றிய உலகப் புகழ்பெற்ற மருத்துவர் நார்மன் பெத்யூன். அவருடைய கருத்தைக் களத்தில் செயல்படுத்திவருகிறார் பொன்னேரி அரசு மருத்துவமனைத் தலைவர் (பொறுப்பு) மருத்துவர் அனுரத்னா.

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி கிராமத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் படித்தார் அனுரத்னா. மருத்துவராக வேண்டும், மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே இவரது லட்சியமாக இருந்தது.

கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைந்த காரணத்தால் தமிழகத்தில் மட்டுமல்லாமல் நாட்டின் எந்தப் பகுதியிலும் மருத்துவம் படிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. மருத்து வராகும் கனவு அவ்வளவுதானா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். என் அப்பா ரஷ்யாவில் மருத்துவம் படிக்கிறாயா என்று கேட்டார். மாஸ்கோ மருத்துவ பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்து, மருத்துவம் படிக்க வாய்ப்பும் கிடைத்தது. ரஷ்யாவில் ஆறரை ஆண்டுகள் மருத்துவம் படிக்கச் சென்றேன். எனக்கு மொழி ஒரு பிரச்சினையாகவே இல்லை. தமிழ் வழிக் கல்வியில் படித்துவிட்டதால் எந்த விதத்திலும் நான் கஷ்டப்பட்ட தில்லை. எந்த மொழியில் படித்தாலும் தமிழில்தான் உள்வாங்கிக்கொள்வேன். தாய்மொழியில் படிப்பது பெருமையான விஷயம்தான் என்கிறார் அனுரத்னா.

படிப்பு முடித்த பிறகு சிவகங்கையில் உள்ள பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த மருத்துவராகச் சேர்ந்தார். திருமணத்தால் தேனிக்குக் குடிபெயர்ந்தார். அங்கு மருத்துவர்கள் பற்றாக்குறை. மருத்துவப் பணிக்கு விண்ணப்பம் செய்ததும் கோம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த மருத்துவராக மீண்டும் பணியில் சேர்ந்தார். தமிழக அரசு சார்பில் மருத்துவர்களுக்காகச் சிறப்பு மருத்துவத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்று, நிரந்தர அரசு மருத்துவராகத் தகுதி பெற்றார் அனுரத்னா.

எம்.பி.பி.எஸ். படிப்பு மட்டும் மக்களுக்குச் சேவை செய்யப் போதாது என்பதால், மகப்பேறு மருத்துவப் படிப்பை முடித்தார். மகப்பேறு படிப்பு இரண்டு உயிர்களைக் காப்பாற்றுவதற்கான படிப்பு!. பணி நியமனக் கலந்தாய்வில் நான் விரும்பும் எந்த மருத்துவமனையையும் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு என்னிடம் இருந்தது. ஆனால் சக மருத்துவர்கள் பொன்னேரிக்கு மட்டும் போகாதே, மக்கள் பிரச்சினை செய்வார்கள் என்றனர். ஆனால் நான் பொன்னேரியைத்தான் தேர்வு செய்தேன். மக்கள் பிரச்சினை செய்கிறார்கள் என்றால், அதில் ஒரு நியாயம் இருக்கும். அதை என்னால் சரி செய்ய முடியும் என்று நம்பினேன் என்கிறார் அனுரத்னா.

பொன்னேரி அரசு மருத்துவமனையில் செய்ய முடியாமல் போகும் சிகிச்சைகளுக்காக, அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அனுப்பும் சூழ்நிலை இருந்தது. இதுதான் மக்களின் பிரச்சினை என்று புரிந்துகொண்டார் அனுரத்னா.

மருத்துவமனையின் தலைவர் (பொறுப்பு) பதவிக்கு வந்தவர், அரசு உதவியோடு பல விஷயங்களை மேற் கொண்டார். மாதத்துக்கு 40 பிரசவங்கள் மட்டும் பார்க்கப்பட்டு வந்த மருத்துவ மனையில் தற்போது 100 பிரசவங்கள் பார்க்க முடிகிறது. மூட்டு மாற்று அறுவைசிகிச்சை, தோல், பல், காது, மூக்கு, தொண்டை போன்ற சிகிச்சைகள் தற்போது பொன்னேரி அரசு மருத்துவமனையிலேயே நடைபெறுவதால் மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

தேடிவந்த விருதுகள்

2015ஆம் ஆண்டு டிசம்பரில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறின. பல முகாம்களில் பிரசவ வலியால் பெண்கள் அவதிப்பட்டனர். முகாம்களிலேயே சிசேரியன்கூடச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. எங்கள் மருத்துவக் குழுவினருடன் தைரியமாகச் செய்து முடித்தேன். வர்தா புயல் பாதிப்பின் போதும் ஒருநாள்கூட விடுமுறை எடுத்துக்கொள்ளாமல் மருத்துவமனையிலேயே தங்கிப் பணிகளை மேற்கொண் டேன் என்கிறார் அனுரத்னா.

அவசரக் காலத்தில் சிறப்பாகச் செயல்பட்ட காரணத் தால் அனுரத்னாவுக்கு இரண்டு முறை சிறந்த மருத்து வருக்கான மாவட்ட ஆட்சியர் விருது வழங்கப் பட்டுள்ளது. பொன்னேரியில் அதிக அளவில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டதற்காகவும் மாவட்ட ஆட்சியர் விருது வழங்கப்பட்டுள்ளது.

வர்தா புயலின்போது பொன்னேரி இருட்டில் மூழ்கியிருந்தது. ஆனால் எங்கள் மருத்துவமனையில் மட்டும் ஜெனரேட்டர் வைத்து இரவு, பகலாக மருத்துவ உதவி செய்தோம். அந்த நேரம் நான் உட்பட அனைத்து மருத்துவ ஊழியர்களும் தொய்வின்றி வேலை செய்தோம். அதை இப்போது நினைத்தாலும் நெகிழ்ச்சியாக உள்ளது. பொன்னேரி மருத்துவமனைக்குப் பெரும்பாலும் பின் தங்கிய மக்கள்தான் வருவார்கள். அவர்களுக்கு மருத் துவத் தேவை அதிகமாக உள்ளது.

தொலைவிலிருக்கும் இருளர் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு விடுமுறை நாட்களில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மருத்துவ முகாம்களை நடத்துவோம். திருநங்கைகளுக்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தியிருக்கிறோம். நான் படித்த மருத்துவம் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்த எண்ணமே என்னைச் சோர்வடை யாமல் வைத்துள்ளது என்று உற்சாகமாகக் கூறுகிறார் அனுரத்னா.


தேர்வை எதிர்கொள்ளும் மாணவிகளுக்காக...

இரவு படிப்பு: இரவில் அதிக நேரம் கண் விழித்துப் படிப்பது ஆரோக்கியமான விஷயம் அல்ல. 7 முதல் 8 மணி நேரம் நன்றாக உறங்க வேண்டும். மூளைக்குத் தேவையான ஓய்வு கொடுத்தால்தான் படிக்கும் விஷயங்கள் மறக்காமல் இருக்கும். காலை நேரங்களில் படிப்பது நல்லது.
படிக்கும் முறை:  நல்ல ஓய்வுக்குப் பின்னர் படிப்பது நல்லது. அதே போல் 50  நிமிடங்களுக்கு ஒருமுறை சிறிது நேரம் எழுந்து வெளியே சென்று வேடிக்கை பார்ப்பது, பிடித்த பாடலைக் கேட்பது, பெற்றோரிடம் கலகலப்பாகப் சிரித்துப் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம். காலையில் கடின மான பகுதிகளையும் மதிய உணவுக்குப் பிறகு சற்று எளிமையான பகுதிகளையும் படிக்க வேண்டும்.
தேவர்கள் என்றும், பல தெய்வங்கள் என்றும், அவற்றின் அவதாரமென்றும், உருவமென்றும், அதற்காக மதமென்றும், சமயமென்றும், மதாச்சாரியார்கள் என்றும், சமயாச்சாரியார்கள் என்றும் கட்டியழு பவர்கள் ஒன்று பகுத்தறிவில்லாதவர் களாக இருக்க வேண்டும்; அல்லது வயிற்றுப் பிழைப்புக்குப் புறப்பட்ட புரட்டர்களாயிருக்க வேண்டும் என்பதை அபிப்பிராயமாகக் கொண்டு, வெகு கால முதலே பல தடவைகளில் பல பெரியார்கள் வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.

அதுபோலவே சிவன் என்றோ, விஷ்ணு என்றோ, பிரம்மா என்றோ, அல்லது ஒரு ஆசாமி என்றோ, அல்லது ஒரு உருவமென்றோ கொள்ளுவதும் உண்மை ஞானமற்றவர்களின் கொள்கை என்றும் பலர் சொல்லிவந்திருக்கிறார்கள். இதைத்தான் சுயமரியாதைக்காரர்கள் எடுத்துக்காட்டி வருகிறார்கள். ஆதலால் உலகத் தோற்றமும், அதில் நடைபெறும் உற்பத்தி, வாழ்விப்பு, அழிவிப்பு என்பவையான மூவகைத் தன்மைகளையும், மேற்படி சாமிகளோ, ஆசாமிகளோ ஒவ்வொரு தன்மையை ஒவ்வொரு ஆசாமி நடத்துகிறான் என்றோ, அல்லது ஒவ் வொரு தன்மைக்கு ஒவ்வொரு ஆசாமி பொறுப்பாளியாய் இருக்கின்றான் என்றோ நினைத்துக் கொண்டிருப்பவர்கள் விசார ஞானமற்றவர்கள் என்றே சொல்லுவோம்.

மற்றபடி மேல்கண்ட ஒவ்வொரு தன்மைக்கும் மேல்கண்ட ஒவ்வொரு பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது என்றும், அது ஒரு உருவமல்ல, ஒரு உருப்படி அல்ல என்றும், உற்பத்தி, வாழ்வு, அழிவு என்னும் தன்மையையும், அத்தன்மைக்கு ஆதாரமான தோற்றங்களைத்தான் கடவுள் என்றோ, தெய்வம் என்றோ, சாமி என்றோ, ஆண்டவன் என்றோ கருதுகிறோம் என்பதாகவும், தானாகத் தோன்றிற்று, தானாக வாழ்ந்தது, தானாக அழிகின்றது என்கின்ற யாவும் இயற்கைதான் என்றும் அவ்வியற்கைக்குத்தான் கடவுள், ஆண்டவன், சாமி, தெய்வம் என்று சொல்லுகின் றோம் என்பதாகவும், மற்றும் இவ்வி யற்கைத் தோற்றங்களுக்கு ஏதாவது ஒரு காரணமோ அல்லது ஒரு சக்தியோ இருக்கவேண்டுமே என்றும், அந்தக் காரணத்திற்கோ, சக்திக்கோதான் கடவுள், சாமி, ஆண்டவன், தெய்வம் என் கின்ற பெயர் கொடுக்கபட்டிருக்கின்றது என்பதாகவும் சொல்லிக்கொண்டு மாத் திரம் இருப்பவர்களிடத்தில் நமக்கு இப்போது பெரியதொரு தகராறு இல்லை.

ஆனால் அந்தக் கடவுள் என்பவை களுக்கு கண்,மூக்கு, வாய், கை, கால், தலை, பெயர், ஆண் பெண் தன்மை, பெண்ஜாதி, புருஷன், வைப்பாட்டி, தாசி, குழந்தை குட்டி, தாய், தகப்பன் முதலியவைகளைக் கற்பித்து, அவைகளினிடத்தில் பக்தி செய்யவேண்டும் என்றும், அவற் றிற்குக் கோவில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்து தினம் பல வேளை பாலாபிஷேகம், படைப்பு, பூஜை முதலியன செய்யவேண்டும் என்றும், அச்சாமிகளுக்குக் கல்யாணம் முதலியவை செய்வதோடு அந்தக் கடவுள் அப்படிச் செய்தார், இந்தக் கடவுள் இப்படிச் செய்தார் என்பதான திருவிளை யாடல்கள் முதலியவை செய்து காட்ட வருஷா வருஷம் உற்சவம் செய்யவேண்டும் என்றும், அக்கடவுள்களின் பெருமையைப் பற்றியும் திருவிளையாடல்களைப் பற்றியும் பாடவேண்டும் என்றும், அப்பாடல்களை வேதமாக திருமுறையாக பிரபந்தமாக அப்படிப்பட்ட கடவுள்கள் உண்டு என்பதற்கு ஆதாரமாகக் கொள்ளவேண்டும் என்றும், அப்பாடல்களைப் பாடினவர்களை சமயாச்சாரியார்களாக ஆழ்வார்களாக, சமயகுரவர்களாக, நாயன்மார்களாக அற்புதங்கள் பல செய்த அவதாரங் களாகக் கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற இன்னும் பல செய்தால் அக்கடவுள்கள் நமது இச்சைகளை நிறைவேற்றுவார்கள் என்றும், மற்றும் நாம் செய்த - செய்கின்ற - செய்யப்போகின்ற எவ்வித அக்கிரமங்களையும், அயோக்கி யத்தனங்களையும், கொடுமைகளையும் மன்னிப்பார் என்றும் சொல்லப்படுபவை களான மூடநம்பிக்கையும் வயிற்றுப் பிழைப்பும், சுயநலப்பிரசாரமும் ஒழிய வேண்டுமென்பதுதான் நமது கவலை. ஏனெனில், இந்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்திற்கும், மக்களை மக்கள் ஏமாற்றிக் கொடுமைப்படுத்துவதற்கும், மற்ற நாட்டார்கள்போல நம் நாட்டு மக்களுக்குப் பகுத்தறிவு விசாலப்படாமல் மற்ற நாட்டார்களைப்போல விஞ்ஞான (சையன்ஸ்) சாஸ்திரத்திலே முன்னேற்றமடையாமல் இருப்பதற்கும், அந்நிய ஆட்சிக் கொடுமையிலிருந்து தப்பமுடியா மல் வைத்த பளுவைச் சுமக்க முதுகைக் குனிந்து கொடுத்துக் கொண்டிருப்பதற்கும் இம்மூடநம்பிக்கைகளும், சில சுயநலமிகளின் வயிற்றுச் சோற்றுப் பிரசாரமும், இவைகளினால் ஏற்பட்ட கண்மூடி வழக்கங்களும், செலவுகளுமேதான் காரணங்கள் என்பதாக நாம் முடிவு செய்து கொண்டிருக்கின்றோம்.

நாமும் நமது நாடும் அடிமைப்பட்டுக் கிடப்ப தற்கும், ஒருவரையொருவர் உயர்வு -தாழ்வு கற்பித்துக் கொடுமைப்படுத்தி ஒற்றுமையில்லாமல் செய்திருப்பதற்கும், மக்கள் பாடுபட்டுச் சம்பாதிக்கும் பொருள்கள் எல்லாம் நாட்டின் முன்னேற்றத்திற்கும் பயன்படாமல் பாழாவதற்கும், மக்களின் அறிவு வளர்ச்சி கட்டுப்பட்டுக் கிடப்பதற்கும், சிறப்பாக மக்களின் ஒழுக்கங்கள் குன்றி மக்களிடத்தில் மக்களுக்கு அன்பும் உபகாரமும் இல்லாமல் இருப்பதற்கும் மேற்கண்ட கொள்கைகள் கொண்ட கடவுள் என்பதும், அதன் சமயமும், சமயாச்சாரியார்கள் என்பவர்களும் அவர்களது பாடல்களும் நெறிகளுமே முக்கிய காரணம் என்பதை வலியுறுத்திக் கூறுகிறோம். சொல்லத் தயாராயிருக்கின்றோம்.

நிற்க, இக்கடவுள்களின் பொருட்டாக நம் நாட்டில் பூஜைக்கும், அபிஷேகத்திற்கும், அவற்றின் கல்யாணம் முதலிய உற்சவத்திற்கும், பஜனை முதலிய காலட்சேபத்திற்கும், இக்கடவுள்களைப் பற்றிய சமயங்களுக்காக மடங்களுக்கும், மடாதிபதிகளுக்கும், மூர்த்தி ஸ்தலம், தீர்த்த ஸ்தலம் முதலிய யாத்திரைகளுக் கும், இக்கடவுள் அவதார மகிமைகளையும், திருவிளையாடல்களையும், இக்கடவுள் களைப்பற்றிப் பாடின பாட்டுகளையும் அச்சடித்து விற்கும் புத்தகங்களையும் வாங்குவதற்கும், மற்றும் இவைகளுக் காகச் செலவாகும் பொருள்களாலும் நேரங்களாலும் ஏற்படும் செலவும் நம் ஒரு நாட்டில் மாத்திரம் சுமார் இருபது கோடி ரூபாய்களுக்குக் குறைவில்லாமல் வருஷா வருஷம் பாழாகிக்கொண்டு வருகின்றன என்று சொல்லுவது மிகையாகாது.

இவ்விருபது கோடி ரூபாய்கள் இம்மாதிரியாக பாழுக்கிறைக்காமல், மக்களின் கல்விக்கோ, அறிவு வளர்ச்சிக்கோ விஞ்ஞான (சையன்ஸ்) வளர்ச்சிக்கோ, தொழில் வளர்ச்சிக்கோ செலவாக்கப்பட்டு வருமானால் நம்நாட்டில் மாத்திரம் வாரம் லட்சக்கணக்கான மக்களை நாட்டை விட்டு அந்நிய நாட்டிற்குக் கூலிகளாக ஏற்றுமதி செய்ய முடியுமா? அன்றியும் தொழிலாளர்கள் கஷ்டங்கள் என்பதும் ஏற்படுமா? தீண்டக் கூடாத - நெருங்கக்கூடாத - பார்க்கக் கூடாத - மக்கள் என்போர்கள் கோடிக் கணக்காய் புழு, பூச்சி, மிருகங்களுக்கும் கேவலமாயிருந்து கொண்டிருக்க முடி யுமா? 100-க்கு மூன்று பேர்களாயிருக்கும் பார்ப்பனர்கள் மற்ற 100-க்கு 97 பேர்களைச் சண்டாளர், மிலேச்சர், சூத்திரர், வேசி மக்கள், தாசி மக்கள், அடிமைப்பிறப்பு என்று சொல்லிக்கொண்டு அட்டை இரத்தத்தை உறிஞ்சுவதுபோல் உறிஞ்சிக்கொண்டும், நம்மையும் நம் நாட்டையும், அந்நியனுக்குக் காட்டிக் கொடுத்து நிரந்தர அடிமைகளாக இருக்கும்படி செய்து கொண்டும் இருக்க முடியுமா? என்று கேட்கின்றோம்.

நமக்குக் கல்வி இல்லாததற்குச் சர்க்கார் மீது குற்றம் செலுத்துவதில் கவலை கொள்ளுகின்றோமேயல்லாமல் நம் சாமியும், பூதமும், சமயமும் நம் செல்வத்தையும் அறிவையும் கொள்ளை கொண்டிருப்பதைப் பற்றி யாராவது கவலை கொள்ளுகின்றோமா என்று கேட்கின்றோம்.

நிற்க, அன்பையோ, அருளையோ, ஒழுக்கத்தையோ, உபசாரத்தையோ மாறு பெயரால் கடவுள் என்று கூப்பிடுகின்றேன் அதனால் உனக்கு என்ன தடை? என்று யாராவது சொல்ல வருவார்களானால், அதையும் (அதாவது அக்குணங்கள் என்று சொல்லப்பட்ட கடவுள் என்பதையும்) பின்பற்றும்படியான குணங்களாகவோ, கடவுள்களாகவோதான் இருக்க வேண்டும் என்று சொல்லுகின்றோமே ஒழியக் குணங்களைப் பின்பற்றாமல் வெறும் வணங்கும்படியான கடவுளாக இருக்க நியாயம் இல்லை என்றே சொல்லுவோம்.

மதம்

இதுபோலவேதான் மதம் என்பதும், சமயம் என்பதும், சமயநெறி என்பதும் மற்ற ஜீவன்களிடத்தில் மனிதன் நடந்து கொள்ளவேண்டிய நடையைபற்றிய கொள்கைகளைக் கொண்டது என்பவர்களிடத்தில் நமக்குத் தகராறு இல்லை! அன்பே சிவம் என்பதான சிவனிடத்தில் நமக்குச் சண்டையில்லை! அன்பு என்னும் குணம்தான் சிவம்; அந்த அன்பைக்கொண்டு ஜீவன்களிடத்தில் அன்பு செலுத்துவதுதான் சைவம் என்பதானால் நாமும் சைவன் என்று சொல்லிக் கொள்ளவே ஆசைப்படுகின்றோம். அதுபோலவே ஜீவன்களிடத்தில் இரக்கம் காட்டுவது, ஜீவன்களுக்கு உதவி செய்வது ஆகிய குணங்கள்தான் விஷ்ணு, அக்குணங்களைக் கைக்கொண்டு ஒழுகுவதுதான் வைணவம் என்பதான விஷ்ணுவிடத்திலும் வைணவனிடத்திலும் நமக்குத் தகராறில்லை என்று சொல் லுவதோடு நாமும் நம்மை ஒரு வைணவன் என்று சொல்லிக் கொள்ளும் நிலைமை ஏற்பட வேண்டும் என்றே ஆசைப்படுகின்றோம். நமக்கும் மற்றும் உள்ள மக்களுக்கும் அச்சைவத் தன்மையும் வைணவத் தன்மையும் ஏற்பட வேண்டும் என்றும் வேண்டுகின்றோம்.

அப்படிக்கில்லாமல், இன்னமாதிரி உருவம் கொண்ட அல்லது குணம் கொண்டதுதான் கடவுள் என்றும், அதை வணங்குகின்றவன்தான் சைவனென்றும், அப்படி வணங்குகிறவன் இன்ன மாதிரியான உடை பாவனை கொண்டவனாகவும் இன்னமாதிரி குறி இடுகிறவனாகவும் இருப்பதுதான் சைவம் என்றும், இன்ன பேருள்ள இன்ன காரியம் செய்த கடவுள்களைப் பற்றிப் பாடின, எழுதின ஆசாமிகளையும் புஸ்தகத்தையும் வணங்குவதும் மரியாதை செய்வதும்தான் சைவம் என்றும், மற்றபடி வேறு இன்ன உருவமோ, பேரோ உள்ள கடவுள் என்பதை வணங்குகிறவர் களையும் வேறு குறி இடுகின்றவர்களையும் யாதொரு குறியும் இடாதவர் களையும் சைவரல்லாதவர் என்று சொல்வதுமான கொள்கைக்காரரிடமே நமக்குப் பெரிதும் தகராறு இருக்கின்றது என்று சொல்வதுடன் அக்கொள்கை களையும், அச்சமயங்களை யும், அக்கடவுள்களையும் பாமர மக்களிடம் பரவவிடக் கூடாது என்றும் சொல்லு கின்றோம்.

அன்றியும், பல சமயப் புரட்டர்கள் இம்மாதிரி விவகாரம் வரும்போது நான் கடவுள் என்பதாக ஒரு தனி வஸ்துவோ, ஒரு குணமோ இருப்பதாகச் சொல்ல வில்லை என்றும், மலைதான் கடவுள், ஆறுதான் கடவுள், சமுத்திரம்தான் கடவுள், மரம் செடிதான் கடவுள், புஷ்பம்தான் கடவுள், அதன் மணம்தான் கடவுள், அழகுதான் கடவுள், பெண்தான் கடவுள், அதன் இன்பம்தான் கடவுள், இயற்கைதான் கடவுள், அத்தோற்றம்தான் கடவுள், என்பதாக தமக்கே புரியாமல் உளறுவதும், மறுபடியும் சிவன்தான் முழுமுதற் கடவுள், மற்றபடி விஷ்ணுவும் பிரம்மாவும் அவரது பரிகார தேவதைகள், சைவ சமயம்தான் உண்மைச்சமயம் அது தான் முக்தி அளிக்கவல்லது என்பதும் அல்லது விஷ்ணுதான் முழுமுதற்கடவுள் என்பதும், அதுதான் பரத்துவம் கொண் டது. மற்றவை விஷ்ணுவின் பரிவார தேவதைகள் என்பதும், வைஷ்ணவ சமயம்தான் உண்மை சமயம் அதில்தான் பரத்திற்கு மார்க்கம் உண்டு என்பதும் அச்சிவனையோ, விஷ்ணுவையோ முழுமுதற் கடவுளாகக் கொண்டு அக்கடவுள்களை யும், அச்சமயங்களையும் பாடினவர்கள் தான் கடவுள் நெறியையும் நிலைமையையும் உணர்த்திய பெரியார்கள் - சமயாச் சாரியார்கள் என்பதுமாக மக்கள் முன் உளறிக்கொட்டி அவர்களது மனதை குழப்பச் சேற்றில் அழுத்துகின்றவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களது புரட்டையும் பித்தலாட்டங்களையும் வெளி யாக்கி மக்களைக் குழப்பச் சேற்றிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று தான் சொல்லுகின்றோம்.

உலகத்தில் கடவுள் என்பது இன்னது என்பதாக மனதில் விளம்பரப்படுத்திக் கொள்ளாமலே கடவுளைப் பற்றிய தர்க்கங்களும் தகராறுகளும் தினமும் நடைபெற்று வருகின்றன. இது இன்று நேற்று ஏற்பட்ட விவகாரம் அல்ல என்றுங்கூடச் சொல்லுவோம்.

எனவே, மக்களின் பாரம்பரியமானதும் எங்கும் பரவியிருக்கும் படியானதுமான மடமைக்கு இதைவிட வேறு உதாரணம் கிடையாது என்பது நமது அபிப்பிராயம். ஏனெனில், இந்த விவகாரம் பாமர மக்களிடையில் மாத்திரம் நடைபெற்று வருகின்றது என்று சொல்லுவதற்கில்லை. இது பெரும்பாலும் படித்தவன், ஆராய்ச்சிக்காரன், பண்டிதன், பக்திமான் என்கின்ற கூட்டத்தாரிடையேதான் பெரிதும் (இவ்வறியாமை) இடம்பெற்று உரம் பெற்றிருக்கின்றது. இவைகள் ஒழியச் செய்யும் காரியத்தை நாஸ்திகமென்றும், பாபச் செயல் என்றும் யார் சொன்னாலும் சுயமரியாதைக்காரர்கள் பயப்படக்கூடாது.

(தந்தை பெரியார் அவர்கள்

17 வருஷத்திற்கு முன் (1928) பேசியது)

‘குடிஅரசு' சொற்பொழிவு - 09.06.1945

Banner
Banner