மகளிர்


மனிதர்களைப் போலவே தாவரங்களுக்கும் உணர் வுகள் உண்டு. ஆனால், அந்த உணர்வுகளை மதிப்பவர்கள் வள்ளலார் போன்ற சிலரே!
மனிதர்கள் தங்களது ஆரம்ப காலத்திலிருந்து தாவரங் களைச் சார்ந்திருக்கிறார்கள். உணவாகவும் மருந்தாகவும் உடலை மறைக்கவும் எனத் தாவரங்கள் பலவிதங்களில் மனிதர்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கின்றன.

உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கின்ற, மருத்துவக் குணங்களைக் கொண்ட தாவரங்கள் பலவற்றை ஆய்வு செய்து, அவற்றைப் பாதுகாக்க, இந்தியாவில் ஒரு பெண் பெருமுயற்சிகளை மேற்கொண்டார். அதுவும் நாடு விடுதலை அடைந்து சுதந்திர இந்தியாவாகத் திகழ்ந்த
50-களில்! அவர் ஜானகி அம்மாள்.

அவருடைய தந்தை இ.கே.கிருஷ்ணன் தலசேரியில் துணை நீதிபதியாகப் பணியாற்றினார். இயற்கை மீது அவருக்கிருந்த காதலால், தன்னுடைய வீட்டில் பல வகையான தாவரங்களைக் கொண்ட தோட்டம் ஒன்றைப் பராமரித்துவந்தார். அவர் மூலமாகவே ஜானகிக்கும் தாவரங்கள் மீது ஈர்ப்பு வந்திருக்க வேண்டும்.

சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் தாவரவியலில் பட்டம் பெற்றார் ஜானகி. பிறகு, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் தாவரவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். அதன் பிறகு, சில காலம் அங்கேயே ஆசிரிய ராகவும் பணியாற்றினார். கொஞ்ச காலத்துக்குப் பிறகு, அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் படித்து, தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்றார். ஒரு அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில், தாவரவியல் துறையில் முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்ற இந்தியப் பெண், அநேகமாக ஜானகியாகவே இருப்பார்!

இன்று நாம் உண்ணும் இந்திய கரும்பில் இனிப்பு இருப்பதற்குக் காரணம் ஜானகி அம்மாள்தான். 1934 முதல் 1939-ஆம் ஆண்டுவரை கோவையில் உள்ள கரும்பு நிறுவனத்தில் மரபணுவியலாளராகப் பணியாற்றினார். ஹைபிரிட் வகைக் கரும்புப் பயிர்களை அவர் உருவாக்கினார். அதற்கு முன்புவரை இனிப்புச் சுவையுள்ள கரும்புகளை இந்தியா, ஜாவா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியப் பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்துவந்தது.

ஒரு பெண்ணாகவும், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவராகவும் இருந்த ஜானகிக்கு அந்த நிறுவனத்தில் பல்வேறு வகைகளில் துன்பங்கள் நேரிட்டன. எனவே அங்கிருந்து விலகி, 1940 முதல் 1945-ம் ஆண்டுவரை லண்டனில் உள்ள ஜான் இன்னேஸ் தோட்டக்கலை நிறுவனத்தில் உயிரணுவியலாளராகப் பணியாற்றினார். பிறகு இங்கிலாந்தின் விஸ்லி பகுதியில் இருந்த ராயல் தோட்டக்கலைச் சங்கத்தில் மக்னோலியா எனும் ஒருவகைத் தேயிலைத் தாவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதன் காரணமாக, அந்தத் தாவரத்தின் இன்னொரு வகைக்கு மக்னோலியா கோபஸ் ஜானகி அம்மாள் என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் தான், சி.டி.டார்லிங்டன் எனும் பிரபல உயிரியலாளருடன் இணைந்து தி குரோமோசோம் அட்லஸ் ஆஃப் கல்டி வேடட் பிளாண்ட்ஸ் எனும் புத்தகத்தை எழுதினார்.

ராயல் தோட்டக்கலைச் சங்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ஜானகி அம்மாளுக்கு, அன்றைய இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, இந்தியத் தாவரவியல் ஆய்வு நிறுவனம் (பொட்டானிக்கல் சர்வே ஆஃப் இந்தியா) அமைப்பைத் திருத்தி அமைக்க அழைப்பு விடுத்தார். 1951-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த அவர், மரபுசார் தாவரவியல் அல்லது இனக்குழு தாவரவியல் என்று பொருள்படும் எத்னோபாட்டனி ஆய்வுகளை முதன்முதலாக முன்னெடுத்தார்.

அதன் தொடர்ச்சியாக 1956-ம் ஆண்டு சிகாகோவில் நடந்த பூமியில் ஏற்படும் மாற்றத்தில் மனிதனின் பங்கு எனும் மாநாட்டில், பழங்குடி மக்களின் மரபு அறிவைப் பற்றிக் கட்டுரை ஒன்றைச் சமர்ப்பித்தார்.

1970-ம் ஆண்டு சென்னைக்குத் திரும்பிய அவர், தனது இறுதிக் காலத்தை மதுரவாயலில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் உயராய்வு மய்யத்தின் கள ஆய்வுக்கூடத்தில் கழித்தார். அங்கு, மருத்துவக் குணங்கள் கொண்ட தாவ ரங்களை உடைய தோட்டம் ஒன்றை அவர் பராமரித்து வந்தார். அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த போது 1984-ம் ஆண்டு பிப்ரவரி 7 அன்று இயற்கை எய்தினார். தாவரவியல் ஆராய்ச்சியுடன் தனது பணியை நிறுத்திக்கொள்ளாமல், கேரளத்தின் அமைதிப் பள்ளத்தாக்கு பாதுகாப்புப் போராட் டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் அவர்.

அவரின் நினைவாக 2000-ஆம் ஆண்டிலிருந்து தாவரவியல், விலங்கியல் வகைப்பாட்டியலில் சிறந்து விளங்குபவர்களுக்கு, இ.கே.ஜானகி அம்மாள் வகைப் பாட்டியல் தேசிய விருது வழங்கப்படுகிறது. அதைச் சிரத்தையாகச் செய்த அரசு, அவரின் கடைசி காலத்தில் அவர் பணியாற்றிய மதுரவாயல் ஆய்வுக்கூடத்தை மறந்துவிட்டது. அங்கு அவர் வளர்த்த தோட்டம் இன்று பராமரிப்பின்றிப் புல்லும் பூண்டும் மண்டிப் புதராகக் காட்சியளிக் கிறது. அந்த ஆய்வுக்கூடக் கட்டிடங்கள் பாழடைந்துகிடக்கின்றன. ஆனால் அதே நேரம், ஜம்முவில் அவரின் நினைவாக உருவாக்கப்பட்ட ஜானகி அம்மாள் மூலிகைப் பூங்கா போற்றிப் பாதுகாக்கப்படுகிறது. வடக்கில் வாழ்கிறது தெற்கில் அழிகிறது!

கண் பார்த்தா கை வேலை செய்யணும் என்பார்கள். அத் தகைய திறமை ஒரு சிலருக்கே வாய்க்கும். அது மாதிரியான ஒரு பிறவிதான் உஷா. கந்தர்வ் கலைக்கூடம் ஆரம்பித்து கடந்த 18 ஆண்டுகளாக கை வினைப்பொருட்கள் மட்டு மல்லாது பொம்மைகள், ஓவியம், ஜடை தைத்தல்,  காய்கனி அலங்காரம், மெழுகுவர்த்தி தயாரித் தல், செயற்கை ஆபரணங்கள் தயா ரித்தல், மருதாணி இடுதல், குக்கிங் அண்டு பேக்கிங் போன்ற பல விஷயங் களின் செய்முறையை பலருக்கும் கற்றுத் தருகிறார்.

உஷா தனது சிறுவயதிலே யார் என்ன பொருட்கள் செய்தாலும் அதை அப்படியே செய்ய முயற்சி செய்வாராம். வீட்டில் இருக்கும் எதாவது ஒரு பொருளை பார்த்து அது போல செய்ய முயற்சிப்பாராம். விளையும் பயிரை முளையிலே அறிந்து கொள்ளலாம் என்பார்கள். அது அத்தனை உண்மை என சிறு வயதிலே நிரூபித்திருக்கிறார் உஷா.

என் சொந்த ஊர் நாகர்கோவில். அங்கே ஏதாவது முக்கிய நாள் என்றால் என் வீட்டில் கோலம் போடுவது போக அந்த தெருவில் உள்ள முக்கால்வாசி வீட்டுக்கு நான்தான் கோலம் போடுவேன்.  வயர்களில் விதவிதமாக பல வண்ணங்களில் கிளி பொம்மைகள் செய்வேன். பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்த போதும் பதினொன்றாம் வகுப்பில் கைவினைப் பொருட்கள் மீது கொண்ட தீராத ஆசையால் ஹோம் சயின்ஸ் குரூப்பில் சேர்ந்தேன்.

அதன் பிறகு ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றபோதும் அடிப்படை ஓவியம் மற்றும் எம்ப்ராய்ட்ரி ஒர்க்கில் டிப்ளமோ படித்து ஹையர் கிரேடு முடித்தேன். பள்ளியிலும், கல்லூரியிலும் நடைபெற்ற கைவினைப் பொருட்கள் போட்டிகளில் பங்கேற்று நிறைய பரிசுகள் வாங்கினேன்.

பஞ்சு வைத்து தயாரிக்கும் சாஃப்ட் டாய்ஸைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எனக்கு வெகுநாளாக ஆசை. நிறைய பேரிடம் கேட்டும் யாரும் கற்றுத் தரவில்லை. அதன்பிறகு பெங்களூரில் இருந்த எங்கள் உறவுக்காரர்களின் பக்கத்து வீட்டில் இருந்த தெரிந்த பெண் ஒருவர் எனக்கு அந்த பொம்மைகள் செய்யக் கற்றுத் தந்தார். நான் அதற்குப் பதிலாக அவருக்கு தஞ்சாவூர் பெயின்டிங் கற்றுக்கொடுத்தேன். இது மாதிரி பல கைவினைப்பொருட்களின் செயல் முறைகளை தெரிந்து கொண்டேன்.

1999ஆம் ஆண்டு கணவர் லஷ்மணன் உதவியோடு கந்தர்வ் கலைக்கூடம் ஆரம்பித்தேன். நிறைய பெண்கள் என்னிடம் இதனைக் கற்று பலன் பெற்று வருகின்றனர். சம்பாதிக் கவும் செய்கின்றனர்.

ஒரு தனியார் நிறுவனத்தின் எக்ஸ்பர்ட் டீச்சராக இருக்கிறேன். பல கண்காட்சியினை, பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றை நடத்தி வருகிறேன். விடுமுறைக் காலங்களில் பிள்ளைகளுக்காக ஸ்பெஷல் பயிற்சி முகாம்களும் நடத்தி வருகிறேன். பள்ளி, கல்லூரி, அலுவலகம் போன்ற வற்றில் டெமோ வகுப்புகள் நடத்தி சான்றிதழ்களும் வழங்கி வருகிறோம்.
மூன்று நாட்கள் கைவினைப் பொருட்கள் சம்பந்தப்பட்ட ஒர்க் ஷாப் மற்றும் கண்காட்சியினை எங்கள் செலவில் நானும் என் கணவரும் இது சம்பந்தப்பட்ட சில ஆசிரியைகளுடன் இணைந்து நடத்தினோம். அங்கு வந்த அனைவருக்கும் இலவசமாக பயிற்சிகள் வழங்கினோம். இன்றைக்கு அதை நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது.

ஒரு கல்யாணத்தை நடத்துவதும் இத்தகைய ஒர்க் ஷாப்பை நடத்துவதும் ஒன்று தான். அவ்வளவு சிரமங்களுக்கிடையே அதனை செய்தோம். நல்ல வரவேற்பு இருந்தது.    இதன் மூலம் பெண்கள் தனக்கான பொருளாதார சுதந்திரத்தையும் பெற முடியும், வீட்டில் இருந்தபடியே குழந்தைகள், குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள முடியும்.

தனது சொந்தக் காலிலும் நிற்க முடியும். பெண்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதே என் எண்ணம். இது மட்டுமல்லாது பலரும் பயன்படும் வகையில் மேலும் பல பத்திரிகைகள், தொலைக்காட்சி நிறுவனங்களில் நிகழ்ச்சிகள் மூலம் பயிற்சிகள் அளித்து வருகிறேன். பெண்கள் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கும் முறைகளை அவர்களுக்குக் கற்றுத்தருகிறேன் என்பதில் திருப்தி அடைகிறேன் என்பவர் இத்துடன் நிற்கவில்லை,

பத்திரிகைகளில் சமையல் வகைகளை எழுதுவது,  செயற்கை பூக்கள் தயாரிப்பது என இவரது திறமையின் பட்டியல் நீள்கிறது.உலக அரங்கில் விளையாட்டு வீராங்கனைகள் வெற்றிகளைக் குவித்துவரும் காலம் இது. இப்போது சென்னையைச் சேர்ந்த வாள் வீச்சு வீராங்கனை ஒருவர் சர்வதேச வெற்றியைப்பெற்றுள்ளார். ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கோலோச்சிவரும் வாள் வீச்சுப் போட்டியில் இந்தியா பெறும் முக்கிய சர்வதேச வெற்றி இது. இந்தச் சாதனைக்குச் சொந்தக்காரர் சென்னையைச் சேர்ந்த சி.ஏ. பவானிதேவி.

சென்ற வாரம் அய்ஸ்லாந்தில் நடைபெற்ற சர்வதேச வாள் வீச்சுப் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் மொத்த தேசத்தையும் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் இந்தச் சென்னைப் பெண். இந்த வெற்றி மட்டுமல்லாது ஆசிய வாகையர் போட்டியிலும் காமன்வெல்த் போட்டியிலும் ஏற்கெனவே வெள்ளிப் பதக்கங்களைக் குவித்திருக்கிறார். இவ்வளவு சாதனைகளைச் செய்துள்ள பவானி, ஆரம்பத்தில் வகுப்புகளிலிருந்து தப்பிக்க மைதானத்தில் ஒதுங்கி யவர். ஏதாவது விளையாட்டு ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற சூழ்நிலையில் வாள் வீச்சைத் தேர்வுசெய்தவர்.

தண்டையார் பேட்டையிலுள்ள முருக தனுஷ்கோடி பள்ளியில் ஆரம்பக் கல்வி படித்தார். அவரது சாதனைக்கான முதல் விதை இங்கேதான் தூவப்பட்டது. பள்ளியில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வாள் வீச்சை அவர் தேர்வுசெய்தது அவரது வாழ்க்கைக்கு மட்டுமல்ல, இந்திய வாள் வீச்சு விளையாட்டுக்கும் முக்கியமான தருணம்.

பள்ளி அளவிலான வாள் வீச்சுப் போட்டியில் எதிர்பார்க்காத வெற்றிகளைக் குவித்தார். அதுவரை அவருக்கான பயிற்சி செலவுகளை அவரது குடும்பமே கவனித்துவந்தது. இந்தத் தொடர் வெற்றிகளால் கேரள மாநிலம் தலசேரியில் உள்ள இந்திய விளையாட்டுத் துறை பயிற்சி மய்யத்தில் பயிற்சிபெறும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இங்கு இந்தியாவின் புகழ்பெற்ற வாள் வீச்சுப் பயிற்சியாளரான சாகர் சுரேஷ் லாகுவிடம் வாள்வீச்சு நுட்பங்களைக் கற்றுத் தேர்ந்தார். 2007 துருக்கியில் நடந்த வாள் வீச்சுப் போட்டியின் மூலம் சர்வதேச வாள் வீச்சுப் போட்டிகளில் அறிமுகமானார். ஆனால், அந்தப் போட்டியில் 3 நிமிடம் தாமதமாக வந்ததற்காக அவருக்கு பிளாக் கார்டு காட்டப்பட்டு விளையாட அனுமதிக்கப்படவில்லை.

சாதாரணப் பின்னணியுடன் பல தடைகளுக்குப் பின்னர் சர்வதேசப் போட்டிக்கு வந்து விளையாட  முடியாமல் போனாலும் மனோதிடம் அவரை வலுப்படுத்தியது. அந்த ஆண்டிலேயே மலேசியாவில் நடந்த காமன்வெல்த் வாகையர் பட்டப் போட்டியில் வெண்கலம் வென்றார். சர்வதேச அளவில் பவானிக்குக் கிடைத்த முதல் பதக்கம் அது. அதற்கு அடுத்த ஆண்டு பிலிப்பைன்சில் நடந்த ஆசிய வாகையர் போட்டியில் வெண்கலம் வென்று, தனது முத்திரை வெற்றிகளைத் தொடர்ந்தார். இந்த வெற்றியின் மூலம் உலகத் தரவரிசையில் 93-ஆவது இடத்துக்கு முன்னேறினார்.  மூத்த வாள் வீச்சு வீராங்கனைகளான ரீஷா புத்துசேரி, டயானா தேவி ஆகியோர் முறையே 144, 142 இடங்களுக்குத்தான் முன்னேறியுள்ளனர்.

வெண்கலப் பதக்கங்களாக வாங்கிக் குவித்த பவானி, அடுத்தடுத்த ஆண்டுகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்றார். 2012-ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நடந்த காமன்வெல்த் வெட்டரன் வாள் வீச்சுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆசிய வாகையர் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2014-ஆம் ஆண்டு இத் தாலியில் நடந்த டஸ்கனி போட்டியில் முதலிடம் பெற்றார். சர்வதேசப் போட்டி யில் பவானி வென்ற முதல் தங்கம் இதுதான்.  பவானியுடன் இணைந்து அவரு டைய பெற்றோரும் உதவிக்காக அலைந் துள்ளனர். அதன் பலனாகத் தமிழக அரசின் உதவி கிடைத்திருக்கிறது. சமீபத்தில் 'கோ ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன்' உதவியும் கிடைத்துள்ளது.

இந்த உதவியால் உலகப் பிரசித்திபெற்ற பயிற்சி யாளர்களான அமெரிக்காவின் எட்வார்ட் கோர்ஃபெண்டி, இத்தாலியின் நிக்கோலோ சனோட்டி ஆகியோரிடம் பவானி பயிற்சி எடுத்துள்ளார். இந்தப் பயிற்சி மூலம் சர்வ தேசப் போட்டிகளின் சில நுட்பங்களைக் கற்ற பிறகு தான் அவரால் சர்வதேச வெற்றிகளைச் சுவைக்க முடிந்தது.

அய்ஸ்லாந்தில் பெற்ற வெற்றியின் மூலம் பவானி, சர்வதேச வாள் வீச்சுத் தரவரிசையில் 81-ஆவது இடத்திலிருந்து 36-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதல் அய்ம்பது இடங்களுக்குள் பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி வீராங்கனைகளே தொடர்ந்து இருந்துவரும் நிலையில், முதன்முறையாக இந்திய வீராங்கனை பவானி இடம்பிடித்துள்ளார்.

சக இந்திய வீராங்கனைகளான டயானா தேவி, ஜோஸ்னா கிறிஸ்டி, ரீஷா, நிஷா ராம் நிரஞ்சன், சங்கீர்த் தனா, ரவீணா, மனுதீப்தி ஆகியோர் தரவரிசையில் 300-க்கும் கீழே உள்ளனர். ஆனால், இந்த வெற்றிகளுடன் பவானி நின்றுவிடப் போவதில்லை. டோக்கியோ ஒலிம் பிக்கில் தங்கம் வெல்வதுதான் எனது கனவு என்கிறார். ஆம், பெண்களின் கனவுகள் நனவாகும் காலம் இது!

ஆட்டோ இயக்கும் சுகமதி!

குண்டும் குழியுமான கிராமத்துச் சாலைகளில் குலுங்கியபடி ஓடுகிறது குட்டியானை என்று அழைக்கப்படும் சுமையேற்று ஆட்டோ. வண்டி முழுக்கக் காய்கறி மூட்டைகள் நிறைந்திருக்கின்றன. குறுகிய சாலையில்கூட மிக லாகவமாக அந்த ஆட்டோவை இயக்குபவர் சுகமதி.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இ.கண்டியங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். சுத்துப்பட்டுக் கிராமங்களில் நடக்கும் சந்தைகளுக்குத் தினமும் சுமையேற்று ஆட்டோவில் காய்கறிகளை ஏற்றிச் செல்கிறார். அங்கே தன் பெற்றோருடன் சந்தை யில் காய்கறிகளை விற்றுவிட்டுத் திரும் புகிறார். சும்மாயில்லை, தினமும் சுமார் 300 கி.மீ. தூரத் துக்கு சுமையேற்று ஆட்டோவை இயக்குகிறார் சுகமதி.

ஜெகநாதன், கோமதி தம்பதியின் மகளான சுகமதி, நான்காம் வகுப்புவரை படித்திருக்கிறார். இவருடைய கணவர் அய்யப்பன், வெளிநாட்டில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்துவருகிறார். சுகமதி சிறு வயதில் தறி வேலைக்குச் சென்று புடவைகள் நெய்திருக்கிறார். பின்னர் பெற்றோருக்கு உதவியாக அவர்கள் நடத்திவந்த செங்கல்சூளையிலும் வேலை செய்துள்ளார்.

அப்போது செங்கல் வாங்க வந்த சிலர் கற்களை வீட்டில் கொண்டுவந்து இறக்கித் தரும்படி கேட்டுள்ளனர். வாகனம் ஓட்டத் தெரிந்தால் வாடிக்கையாளரின் தேவையை நிறைவேற்றலாம் என்று நினைத்தார் சுகமதி. உடனே ஓட்டுநர் பயிற்சி பெற்றார். பாதிவிலையில் லோடு ஆட்டோ ஒன்றையும் வாங்கினார். தேவைப்படுகிற வாடிக்கையாளர்களுக்கு அவரவர் வீடுகளுக்கே செங்கற்களைக் கொண்டுபோய் இறக்கினார்.

"கடனுக்குத்தான் ஆட்டோவை வாங்கினேன். செங்கல்சூளையில் போதிய வருமானம் இல்லாததால், அந்த வேலையை நிறுத்திவிட்டோம். ஆட்டோ கடனை அடைக்கணும், குடும்பத்தையும் நடத்தணும். வருமானத்துக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சேன். காய்கறிகளை மொத்தமா வாங்கி ஊர்ஊரா போயி நானும் அம்மா, அப்பாவும் வித்துட்டு வர்றோம்" என்று சொல்லும் சுகமதி, வாரம் முழுவதும் ஒவ்வொரு ஊரில் நடைபெறும் சந்தையில் கடைபோடுகிறார்.

திங்கள்கிழமை கும்பகோணம், செவ்வாய் திருப்பனந்தாள், புதன் சோழபுரம், வியாழன் சிலால், வெள்ளி பாண்டிபஜார், சனி விக்கிரமங்கலம், ஞாயிறு சிறீபுரந்தான் என ஓய்வு ஒழிச்சல் இல்லாத வேலை சுகமதிக்கு. இரவு பத்து மணிவரை நடக்கும் வாரச் சந்தை முடிந்து, மீதமுள்ள காய்கறிகளை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட இரவு 11 மணி ஆகிவிடும். வீட்டுக்கு வந்து கோழித்தூக்கம் போல் கண்ணயர்வதுதான் இவருக்கு ஒய்வு. மீண்டும் அதிகாலை 2 மணிக்கு எழுந்து திருச்சி-சேலம் இடையிலுள்ள தலைவாசல் மார்க்கெட்டுக்குப் போய் காய்கறி வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர மதியம் மணி 3 ஆகிவிடும். தூக்கத்தைக் கட்டுப்படுத்த இடையிடையே ஒரு டீ அல்லது காபி மட்டும் குடிப்பாராம்.

எப்பவும் முக்கிய சாலைகளில் மட்டுமே ஆட்டோவை எடுத்துச் செல்வேன். குறுக்கு வழியைப் பயன்படுத்த மாட்டேன். அவ்வப்போது வாகன சோதனையில் ஈடுபடும் காவல்துறையினர் எனது ஆவணங்களைப் பார்த்துவிட்டுப் பாராட்டுவாங்க. கவனமாகப் போகும்படி ஆலோசனை சொல்லுவாங்க.

தாசில்தார், ஆர்.டி.ஓ. இவங்க எல்லாம்கூட வாகன சோதனையின்போது என்னைப் பாராட்டியிருக்காங்க என்று பெருமிதத்தோடு சொல்கிறார் சுகமதி. தன்னைப் பார்த்து ஏளனம் செய்பவர்களையெல்லாம் தான் கண்டுகொள்வதில்லை என்றும் சொல்கிறார்.

எனக்கு 12 வயசிருக்கும்போது செய்தித்தாளில் பெண் விமானிகள் பற்றிப் படித்தேன். நாமும் படித்திருந்தால் விமானி ஆகியிருக்கலாம் என நினைத்தேன். இப்போ என் குழந்தைகள் இந்த வாகனத்தை ஓட்டக் கேட்கும்போது இதைவிட பெரிய வாகனமான விமானத்தை ஓட்ட நீங்கள் படிக்கணும்னு சொல்லுகிறேன்.

20 ஆண்டுகளுக்கு பிறகு எனது குழந்தைகள் விமான ஓட்டியாக வருவார்கள் என்று நம்புகிறேன் என்று சொல்கிறபோது சுகமதியின் முகத்தில் எதிர்காலம் குறித்த நம்பிக்கை ஒளிர்கிறது.

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், 2005

இந்தச் சட்டத்தின்படி பெண்கள், தன் கணவரோ, மாமியாரோ துன்புறுத்தினால் தண்டனை பெற்றுத் தரலாம். கணவன் வீட்டில் மட்டும்தான் என்றில்லாமல் பெற்றோர் தன்னை துன்புறுத்தினாலும் இந்தச் சட்டத்தின் கீழ் புகாரளிக்கலாம். பெரும்பாலும் காதல் திருமணம் செய்ய விழையும் பெண்ணை அடித்து உதைத்துத் துன்புறுத்துவது போன்றவற்றில் இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தலாம். இச்சட்டத்தின்படி காவல் நிலையம் சென்று புகாரளிக்கத் தேவை யில்லை. காவல் நிலையத்தில் புகாரளித்தால் எஃப்.அய்.ஆர். போடப்படுவதுபோல, மாவட்ட பாதுகாப்பு அதிகாரியிடம் புகாரளித்தால் டி.அய்.ஆர் பதிவு செய்யப்படும். இதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். பெரும்பாலான பெண்கள் கணவனுக்கு எதிராக காவல்நிலையம் செல்லத் தயங்குவதால் இச்சட்டத்தில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுவர் திருமண தடைச் சட்டம், 2006 

சர்வதேச மகளிர் ஆராய்ச்சி மய்யம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் 48 சதவிகிதப் பெண்கள் 18 வயதுக்குள்ளேயே திருமணம் புரிந்து கொள்வதாகக் கூறுகிறது. குழந்தைத் திருமணத்தில் இந்தியா 13ஆவது இடத்தில் இருக்கிறது. இப்பழக்கம் தொன்றுதொட்டு இருப்பதால் அதைத் தடுப்பது சிரமமாக இருக்கிறது. 2007ஆம் ஆண்டு முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, பெண்ணுக்கு குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகவும் ஆணுக்கு 21 ஆகவும் ஆக்கப்பட்டது.இச்சட்டத்தின்படி குறிப்பிட்ட வயதிற்குள் திருமணம் செய்துவைப்பது குற்றம். ஆயினும் சட்டத்தின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு இன்றும் பல குழந்தை திருமணங்கள் நடைபெற்றுதான் வருகின்றன.


சிறப்பு திருமணச் சட்டம், 1954

இந்தியாவில் பல மதங்களும், ஜாதி அமைப்புகளும் இருப்பதால் மதம் மற்றும் ஜாதி தாண்டி திருமணம் புரிகிறவர்கள் திருமணத்தை முறையாக பதிவு செய்ய வேண்டுமென்றாலோ,  திருமணத்துக்குப் பின்னான வாழ்க்கையில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டு விவாகரத்து நோக்கிய பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வை நாடவோ இச்சட்டத்தின் படி முறையாக பதிவு செய்தால்தான் மண முறிவு கிடைக்கும். இச்சட்டத்தின்படி திருமணம் செய்ய விரும்புவோர் திருமணப் பதிவு அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பித்தபின் மணம் செய்ய விரும்புவோரின் பெயர்கள் அலுவலகத்தின் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டிருக்கும். ஒரு மாதத்திற்குப் பின் திருமணம் முறையாக பதிவு செய்யப்படும்.

வரதட்சணை தடுப்புச் சட்டம்,1961

வரதட்சணை என்பது காலம் காலமாக நம் சமூகத்தில் வேரூன்றியிருக்கும் கொடிய விஷம். வரதட்சணை கொடுக் காததற்காக கணவர் வீட்டில் தொடர்ச்சியாக துன்புறுத்தல்களுக்கு பெண்கள் ஆளாகின்றனர். வரதட்சணைக்காக மனைவியை உயிருடன் எரித்த சம்பவங்களும் நாம் அறிந்ததுதான். வரதட்சணை வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் எனக் கூறுகிறது இச்சட்டம். வரதட்சணை கேட்பவர்கள் மீதும் கொடுப்பவர்கள் மீதும் இச்சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கலாம். இச்சட்டத்தின்படி பலர் தண்டனை பெற்றுள்ளனர்.

இந்திய  விவாகரத்துச் சட்டம், 1969

திருமண வாழ்வில் திருப்தியின்மை, வெறுமை, கட்டாயம் போன்ற பல காரணங்களால் இருவரும் மனமொத்தோ அல்லது இணையர்களில் ஒருவரோ விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம். குடும்ப நீதிமன்றத்தில் இதற்கான வழக்கு நடத்தப்பட்டு, விவாகரத்து வழங்கப்படும்.

பிரசவகால பலன்கள் சட்டம், 1861

பிரசவ காலத்தின்போது பணிபுரியும் பெண்ணுக்கு அந்நிறுவனம் 80 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையும், மருத்துவ செலவையும் வழங்க வேண்டும் எனக்கூறுகிறது இச்சட்டம். இச்சட்டம் பெண்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய சட்டம். பொருளாதாரரீதியாக பெண்களுக்கு உதவவும், வேலையை உறுதி செய்யவும் இச்சட்டம் உதவுகிறது.

மருத்துவரீதியிலான கருக்கலைப்புச் சட்டம், 1971

கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா?  என்பதைத் தெரிந்து கொண்டு, கருக்கலைப்பு செய்வதற்கு எதிராக இச்சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. ஆனால் இன்றும் பல நகரங்களில் சட்டவிரோதமாக கருவில் இருக்கும் பெண் ஆணா பெண்ணா என்று அறிந்துகொள்ளும் வசதியை ரகசியமாக தரும் இடங்களும் செயல்படுகின்றன என்பது உண்மைதான்.

பணியிடங்களில் பெண்களின் மேல் பாலியல் கொடுமை தடுப்புச் சட்டம் 2013 

பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுகளை தடுப்பதற்காக இச்சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. 36 சதவீத இந்திய நிறுவனங்களும், 25 சதவீத பன்னாட்டு நிறுவனங்களும் தங்களது நிறுவனங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை நடப்பதில்லை என உறுதிப்படுத்தியிருக்கின்றன. பணியிடங்களில் பாலியல் தொந்தரவு, நெருக்கமாக அணுகுதல், பாலியல்ரீதியிலான சீண்டல் ஆகியவற்றுக்கெதிராக இச்சட்டத்தின் மூலம் தண்டனை பெற்றுத் தர முடியும்.

பெண்களை ஆபாசமாக சித்தரித்தல் தடைச் சட்டம், 1986

எழுத்து, ஓவியம், விளம்பரங்கள் மற்றும் இன்ன பிற ஊடகங்களில் பெண்களை தவறாக சித்தரிப்பதற்கு எதிரான சட்டம் இது. குறிப்பிட்ட ஒரு பெண்ணை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த பெண் சமூகம் பற்றிய தவறான சித்தரிப்புக்கும் இதன் மூலம் தண்டனை பெற்றுத் தர முடியும். ஆனால் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது குறைவாகவே உள்ளது.

தேசிய மகளிர் ஆணையச் சட்டம், 1990 

இச்சட்டத்தின்படி லலிதா குமாரமங்கலம் தலைமையில் மகளிர் உரிமைகளுக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது. பெண்களின் உரிமைகளுக்காகவும், அவர்களுக்கு எதிராக நடக்கக் கூடிய அனைத்து பிரச்சினைகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்கிறது. பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், பொருளாதார ரீதியில் வலுவுடையவர்களாக்குவதற்கான முன்னெடுப்புகளை இந்த ஆணையம் மேற்கொள்கிறது.

சம ஊதியச் சட்டம், 1976

எந்தப் பணியிலும் ஆண்-பெண் இருபாலினருக்கும் சமமான அளவிலான வாய்ப்பும், ஊதியமும் வழங்கப்பட வேண்டும் என இச்சட்டம் கூறுகிறது. எந்தப் பணியிடமாக இருந்தாலும் பெண் என்கிற காரணத்தால் ஊதியம் மறுக்கப்படக் கூடாது அல்லது குறைக்கப்படக்கூடாது. ஆண்கள் கற்றுக்கொள்ளும், மேற்கொள்ளும் அனைத்துப் பணிகளையும் பெண்களும் மேற்கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும் என இச்சட்டம் கூறுகிறது.


பல ஆண்டுகளாக தன்னை ஆண் என காட்டிக்கொண்ட ஒரு பெண் தற்போது கோடீஸ்வரியாக உயர்ந்துள்ளார். இது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தான்சானியா நாட்டை சேர்ந்தவர் பிளி ஹூசைன். இவர் சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை கால்நடை பராமரிப்பாளர். அவருக்கு 6 மனைவிகள், 38 குழந்தைகள். இவர்களது குடும்பம் மிகப்பெரியது. குடும்ப சூழ்நிலை காரணமாக என் அப்பா என்னை ஓர் ஆணைப் போலவே பழக்கினார். எனக்கு கால்நடைகள் பராமரிக்கும் வேலை கொடுக்கப்பட்டது. ஆனால், எனக்கு அந்த வேலை கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆனாலும் அந்த வேலையை செய்து வந்தேன். இந்நிலையில் எனக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. அதன் பிறகாவது எனது வாழ்க்கைத்தரம் மாறும் என்று நினைத்தேன். ஆனால் எனது கனவு மீண்டும் பொய்த்து போனது. எனக்கு வாய்த்த கணவனால் என் வாழ்க்கை மீண்டும் நரகமாகவே இருந்தது. இதன் காரணமாக தனது 31 வயதில் அவரிடம் இருந்து பிரிந்துவிட்டேன் என்று கூறும் ஹுசைன் தொடர்ந்து வாழ்க்கை நடத்த சிரமப்பட்டதாகவும், அதன் காரணமாக வேலை தேடி அலைந்ததாகவும், ஆனால் வேலை கிடைப்பது மிகவும் சிரமமாக இருந்ததாகவும் கூறுகிறார்.

தொடர்ந்து முயற்சித்ததன் காரணமாக ஆப்பிரிக்காவின் உயர்ந்த மலையான கிளிமாஞ்சாரோவின் அடிவாரத்தில் இருக்கும் சிறிய நகரான மெரெரானி பகுதியில் உள்ள சுரங்கத் தொழிலில் வேலை கிடைத்துள்ளது. இந்த சுரங்கத் தொழிலில் ஆண்கள் மட்டுமே பணிபுரிய முடியும். பெண்களுக்கு அனுமதி கிடையாது. அதன் காரணமாக, தான் பெண் என்பதை தெரிவிக்காமல், பெயரை ஹுசைன் என்று மாற்றி பணியில் சேர்ந்ததாக கூறுகிறார். என்னை இங்குள்ளவர்கள் அங்கிள் ஹுசைன் என்றுதான்  அழைப்பார்கள்,  நான் பெண் என்பது தெரிந்தபிறகும் அங்கிள் என்றே அழைக்கப்படுகிறேன் என்றும் பிளி ஹுசைன் கூறுகிறார்.

சுரங்கத்தில் 600 மீட்டர் ஆழம் வரை சென்று ஆண்களுக்கு இணையாக இந்த வேலைகளை செய்வேன் என்றும், நான் பெண் என்பதே  தெரியாதவாறு பணி செய்ததாகவும் கூறுகிறார். தான் சுரங்கத்தில் வேலை செய்தபோது, பெண் என்று தெரிய வந்ததும், சிலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதன் காரணமாக தனது ஆண் அடையாளத்தைத் துறந்ததாகவும் கூறுகிறார். நான்  பெண் என்று சொன்னதை காவல்துறையினர் கூட முதலில் நம்பவில்லை என்றும் கூறுகிறார். 2001ஆம் ஆண்டு எனக்கு திருமணமாகி, குடும்பம் நடத்தத் தொடங்கியதற்கு பிறகுதான், நான் பெண் என்பதை அனைவரும் நம்பினார்கள் என்றும் கூறி உள்ளார்.  நான் உண்மையிலேயே பெண் தானா என்ற கேள்வி என் கணவரின் மனதிலும் இருந்தது என்று சொல்லும் பிளி, என்னிடம் நெருங்குவதற்கு அவருக்கு அய்ந்து ஆண்டுகள் ஆனது என்பதையும் வெளிப்படையாகவே சொல்கிறார்.

சில ஆண்டுகளில் தனக்கு இரண்டு விலை உயர்ந்த தன்சானைட் ரத்தினக் கற்கள் கிடைத்ததாகவும், அதன் காரணமாக தற்போது தான் செல்வந்தராகிவிட்டதாகவும் கூறுகிறார். தற்போது தன்னிடம் உள்ள பணம் காரணமாக, பெற்றோருக்காகவும், தனது இரட்டைச் சகோதரிகளுக்காகவும் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், தானே தனியாக சுரங்கத் தொழில் நடத்தி வருவதாகவும், சுரங்கத்தில் வேலை செய்பவர்கள் பயன்படுத்தும் புதிய வகையான கருவிகள் வாங்கி, பல சுரங்கத் தொழிலாளிகளுக்கு வேலை கொடுத்துள்ளதாகவும் கூறுகிறார்.  வெற்றிகரமாக தொழிலை அமைத்துக்கொண்ட பிளி, 70 தொழிலாளிகள் கொண்ட ஒரு சுரங்க நிறுவனத்தின் முதலாளியாக உயர்ந்துவிட்டார். அதில் மூன்று பேர் பெண்கள் என்றாலும், அவர்களின் வேலை சமைப்பதுதான், சுரங்க வேலை அல்ல. தான் இந்தத் தொழிலில் ஈடுபட்டபோது இருந்ததை விட இப்போது இந்தத் துறையில் பெண்கள் அதிகமாகிவிட்டாலும், இன்றும் அவர்களின் எண்ணிக்கை சொற்பமே என்று பிளி கூறுகிறார்.

கற்களை சுத்தப்படுத்துவது, இடைத் தரகர்கள், சமையல் வேலை போன்ற தொழில்களில் சில பெண்கள் ஈடுபட்டிருக்கின்றனர். சுரங்கத்திற்குள் சென்று யாரும் வேலை செய்வதில்லை. அங்கு சென்று, நான் செய்ததைப் போன்ற வேலைகளை செய்வது என்பது சுலபமானதல்ல என்று பிளி சுட்டிக்காட்டுகிறார். பிளி தனது கடின உழைப்பினால் அடைந்த வெற்றியால் தனது உடன் பிறந்தவர்களின் முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள், பேரக் குழந்தைகளுக்கு கல்வியளிக்கிறார். ஆனால், தன் மகள் தனது வழியை பின்பற்றுவதை பிளி விரும்பவில்லை. என்னுடைய கடின உழைப்பு, அதன் மூலம் நிறைய பணம் சம்பாதித்தது என பெருமைப்பட நிறைய விஷயங்கள் இருந்தாலும், அது சுலபமானதல்ல. நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும் என்கிறார் பிளி. வேறு யாரும் அதுபோன்ற கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளக்கூடாது என்று நினைக்கும் பிளி. தனது மகள் நன்றாக கல்வி கற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். பிற்காலத்தில் அவள் விரும்பும் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கட்டும், ஆனால் எனக்கு கிடைத்ததைப் போன்ற அனுபவங்கள் அவளுக்கு ஒருபோதும் கிடைக்கக்கூடாது என்கிறார் உறுதியாக.

Banner
Banner