மகளிர்

கருநாடகாவின் கூர்க்கில் 1924 -ஆம் ஆண்டு பிறந்தவர் சோகிவியா (கோனிரா) பேலியப்பா முத்தம்மா (சி.பி.முத்தம்மா). 1949-ஆம் ஆண்டு இந்திய வெளிநாட்டு இலாகாவில் சேர்ந்து இந்திய தூதராக பிரான்சு, இங்கிலாந்து, பர்மா, ஹங்கேரி மற்றும் கானா போன்ற நாடுகளில் பணி யாற்றினார். இதன் காரணமாக “முதல் பெண் அயல்நாட்டுத் தூதர்’ என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

இந்தியாவின் உயர் அதிகாரிகளாக அய்.ஏ. எஸ்., அய்.எப்.எஸ்., போன்ற தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால் அப்படி வெற்றி பெற்றாலும் அதில் பெண்கள் சேர முடியாது. அதை உடைத்து வெற்றி பெற்ற முதல் பெண் சி.பி. முத்தம்மா.

சென்னையில் உள்ள பெண்கள் கிறித்துவக் கல் லூரியில் பட்டப்படிப்பையும், பின் சென்னை பிரசிடன்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்ட மேற்படிப்பையும் முடித்தார்.  கல்லூரியில் படிக்கும்போதே மூன்று முறை தங்கப்பதக்கம் வென்ற மாணவி.

இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத் துறை அதிகாரியாக 1949-இல் பணியில் சேர்ந்தார்.  பின்னர் அரசு அவரை நெதர் லாந்துக்கான இந்தியத் தூதராக நியமித்தது. இந்த வழக்குக்குப் பிறகு ஆணாதிக்க விதிகள் உடனே மாற்றப்பட்டன. அதன்பிறகு, வெளிநாட்டு தூதர், ஹைகமிஷனர் பதவிகளிலும் அமர்ந்த முதல் இந்தியப் பெண் ஆனார். 32 ஆண்டுகள் அரசுப் பணியயைச் செய்த பிறகு 1982- இல் ஓய்வு பெற்றார். ஆதரவற்றோர் ஆசிரமம் கட்ட அன்னை தெரசாவுக்கு டில்லியில் இருந்த தனது சொந்த நிலம் 15 ஏக்கரைத் தந்தார். தனது 85-ஆவது வயதில் 2009இல் காலமானார்.

விளையாட்டுத்  துறையின் பல்வேறு  துறைகளில்  தமிழகத்தைச்   சேர்ந்த   சதீஷ் சிவலிங்கம், ஆரோக்கிய  ராஜீவ், அய்யாசாமி தருண், மாரியப்பன், சாந்தி சவுந்தர ராஜன்  என்று நீளும் பட்டியலில்  புதிதாகச் சேர்ந்திருப்பவர்   நிவேதா.   ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்குப் பக்கத்தில்  இருக்கும்  காஞ்சிக்கோவிலைச் சேர்ந்தவர் நிவேதா. பத்தொன்பது வயதாகிறது. 

நிவேதா  பெருந்துறை கொங்கு பொறியியல்  கல்லூரி யில்  கணினி விஞ்ஞானம்  இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார்.  துப்பாக்கி கொண்டு குறி  பார்த்துச்  சுடுவதில் ஆர்வம் உடைய  நிவேதா,  பன்னிரண்டாவது வயதிலேயே  கோயம்புத்தூர்  ரைபிள் கிளப் உறுப்பினராகப்  பதிவு செய்து கொண்டு பயிற்சி பெற்று வருகிறார். ஏர் பிஸ்டல், ஸ்போர்ட்ஸ் பிஸ்டல், ஷாட் கன் போன்ற பிரிவுகளில் மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில்  2010 லிருந்து  கலந்து கொண்டு அய்ம்பதிற்கும்   மேற்பட்ட பதக்கங்களை வாங்கிக் குவித்ததுடன்,   2015-இல் கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற தேசிய துப்பாக்கிச்சுடும் போட்டியில் நிவேதா  கலந்துகொண்டு தங்கம்,  வெண்கலம் பதக்கங்களைப்பெற்றுள்ளார். தேசிய அளவில்  ஆறு  தங்கம்,  நான்கு   வெள்ளி,  நான்கு  வெண் கலப்  பதக்கங்களை குவித்துள்ளார். சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பு சார்பில்  வரும் ஆகஸ்ட் மாதம் 15 முதல் 22  வரை  இத்தாலியில் ப்ரபெட்டோ நகரில் உலகக் கோப்பை போட்டி நடக்க  உள்ளது.  தொடர்ந்து,  ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 11 வரை ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் “உலக வாகையர் பட்டப்போட்டி’யும் நடக்க இருக்கிறது.  இந்தப் போட்டிகளுக்கான  தேர்வு  சென்ற   மாதம்  டில்லியில் நடைபெற்றது. தேர்வுப் போட்டிகளில்  கலந்து கொண்ட  நிவேதா ,  இந்தியாவின் சார்பில் உலகக் கோப்பை போட்டியில் பங்கெடுக்கத் தேர்வாகி இருக்கிறார்.

துப்பாக்கி கொண்டு  குறி பார்த்து சுடுவதில்  சூட்டி கையான  நிவேதாவுக்கு  ஒரே ஒரு லட்சியம்தான். “2020-இல்  ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில், இந்திய அணியில் கலந்து கொண்டு தங்கம் வெல்ல வேண்டும்... ஒலிம்பிக்கில் தங்கம்  என்பதே  எனது  குறிக்கோள்.  அதை சாதித்துக் காட்டுவேன்’  என்கிறார்  நிவேதா...!

பொதுவாக “ஆர்ம் ரெஸ்லிங்’ எனப்படும் “கை மல் யுத்தம்‘, சிலர் தங்கள் கை வலுவை வெளிப்படுத்தவும், சாதாரண சண்டைகளின் போது எதிராளியை வீழ்த்தவும் பயன்படுத்துவதுண்டு. இதில் ஆண்கள்தான் அதிகம் ஈடுபடுவதுண்டு. கருநாடகாவில் மண்டியா மாவட்டம், பாலஹள்ளியில் வசிக்கும் ரீட்டா பிரியங்கா இதில் கடுமையான பயிற்சி பெற்று, இதை ஒரு தீவிர விளையாட்டாக கருதி தேசிய அளவில் பங்கேற்று இதுவரை 16 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

“கோர் நேச்சர் ஃபிட்னஸ் சென்டர்’ இயக்குநர் விஸ்வ நாத்திடம் பயிற்சி பெற்ற ரீட்டா பிரியங்கா, வரும் செப்.2-ஆம் தேதி முதல் 12 -ஆம் தேதி வரை ஹங்கேரி நாட்டில் புடாபெஸ்ட்டில் நடைபெறும் 39ஆவது “உலக ஆர்ம் ரெஸ்லிங்’ வாகைர் பட்டப் போட்டியில் பங்கேற்க நிதி உதவி செய்யும் - உதவும் கரங்களை எதிர்பார்க்கும் ரீட்டா கூறுகையில்:

என்னுடைய தந்தை அந்தோனிராஜ் ஒரு மல்யுத்த வீரர். அவரிடம் பயிற்சி பெற்ற நான், மைசூரில் ஆண்டுதோறும் நடக்கும் தசரா குஸ்தி பந்தயத்தில் முதன் முறையாக 2004- ஆம் ஆண்டு பங்கேற்றேன். தொடர்ந்து 15 ஆண்டுகளாக தேசிய அளவில் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றதோடு, சித்தூர் ராணி சென்னம்மா, சாமுண்டீஸ்வரி விருதுகளையும் பெற்றுள்ளேன். கடந்த அய்ந்தாண்டுகளாக கை மல்யுத்தத்தில் விஸ்வநாத் சார் மூலம் பயிற்சி பெற்று போட்டிகளில் பங்கேற்க தொடங்கினேன்.

இந்த முயற்சிக்கு என்னுடைய தந்தைதான் இதற்கு காரணம். நான் மல்யுத்த பயிற்சி பெறும்போது கருநாடகாவில் பெண் மல்யுத்த வீராங்கனைகள் யாருமே இல்லை. நான் பயிற்சி பெறுவது பலரது விமர்சனத்திற்குள்ளானது. ஆனால் என் பெற்றோர் அளித்த ஊக்கம், தேசிய அளவில் போட்டிகளில் பங்கேற்க வைத்தது. மேலும் பல பெண்கள் பயிற்சி பெற விரும்பினர். மைசூரு சாமுண்டி மைதானத்தில் மல்யுத்த பயிற்சியளிக்கும் மய்யமொன்றை துவங்கும்படி அரசிடம் கோரினோம். எவ்வித பதிலும் வராததால் என்னுடைய தந்தையே பயிற்சி மய்யமொன்றை துவங்க, விஸ்வநாத் சார் பெரிதும் உதவியளித்து வருகிறார்.

தற்போது நான் 63 கிலோ எடை பிரிவில் பங்கேற்பதால் என்னுடைய எடையை பராமரிப்பது முக்கியமாகும். உடல் எடையில் ஏற்ற இறக்கம் இருக்கக் கூடாது என்பதால் தினமும் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிடுவது, பயிற்சியில் ஈடுபடுவது என முறைப் படுத்திக் கொண்டுள்ளேன். மேலும் இந்த விளையாட்டிற்குத் தேவையான சக்தியைப் பெற வெளிப்புறங்களிலும் கவனம் செலுத்துவது, புஜ வலிமைக்கு மிகவும் அவசியம்.

நான் சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதால் உணவில் அதிக புரதம் கலந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆனால் பணநெருக்கடியால் அனைத்து தேவை யான உணவுகளையும் சாப்பிட முடிவதில்லை. உணவில் புரதம் மற்றும் நார் சத்து அதிகம் இருக்க வேண்டுமென்பதால் கேழ்வரகு, முட்டை, பால், வெண்ணெய், உலர்ந்த பழங்கள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்கிறேன்.

நான் கை மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க எனக்கு ஊக்கமளித்தவரே விஸ்வநாத் சார்தான். அவர் ஒரு சிறந்த பாடி பில்டர் மட்டுமின்றி பயிற்சியாளரும் கூட. நான் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதால், இலவசமாக பயிற்சியளித்து வருகிறார். இதுவரை அவர் அளித்து வரும் பயிற்சிக்கு பணம் எதுவும் வாங்கவே இல்லை. அவரது பெருந்தன்மைக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளேன்.

கை மல்யுத்தம் பற்றி....

இந்த விளையாட்டில் ஈடுபடும் வீரர்களை 50 கிலோ எடை பிரிவில் 5 பேர், 60 கிலோ எடை பிரிவில் பத்து பேர் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். போட்டியில் பங்கேற்கும் அனைவரையும் வரிசைப்படி திரும்ப திரும்ப வீழ்த்த வேண்டும்.

நான் அங்கேரியில் நடைபெறவுள்ள சர்வதேச கை மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்பது பெருமையாக உள்ளது. அதே நேரத்தில் செப்டம்பரில் நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்க நான் பெடரேஷனுக்கு 2 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். இந்த பணத்தை கொடுத்துதவும்படி அமைச்சர்கள் உள்பட பலரிடம் கேட்டேன். முதலில் பணத்தை செலுத்தி, வெற்றி பெற்று வந்தவுடன் திரும்ப கொடுப்பதாக அவர்கள் சொல்கிறார்களே தவிர, போவதற்கே பணம் இல்லாமல் நான் தவிப்பதை புரிந்து கொள்ளவில்லை.

மாநிலத்தில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க ஆதரவு இல்லை. இறுதியில் தேவையான பணத்தை என்னுடைய தந்தையும் நானும்தான் புரட்டினோம் என்றார்.ஆதி மருத்துவர்கள் பெண்கள்தான். உணவில் தொடங்கி மகப்பேறுவரை பெண்களே மருத்துவத்தின் ஆணிவேராக அன்றும் இன்றும் திகழ்ந்துவருகின்றனர். நவீன அறிவியலின் ஒரு கூறான அலோபதி மருத்துவத் துறையில் 19ஆம் நூற்றாண்டில் நுழைந்து பெண்கள் சாதிக்கத் தொடங்கினர். இந்திய அளவில் அப்படி சாதித்த அய்ந்து பெண்கள் பற்றிப் பார்ப்போம்.

சென்னையின் அடையாளம்

பிரிட்டனிலும் அதன் காலனி நாடுகள் எதிலும் மருத்துவம் படிக்கப் பெண்கள் அனுமதிக்கப்படாத காலம். இந்தப் பின்னணியில் ஒரு பெண் மருத்துவம் படிக்க அனுமதிக்கப்பட்டது எங்கே தெரியுமா? சென்னையில்! 1875இல் மதராஸ் மருத்துவக் கல்லூரியில் படிக்க அனுமதிக்கப்பட்டார் பிரிட்டனைச் சேர்ந்த மேரி ஆன் டகாம்ப் ஷார்லீப். அதற்கு முன்னர் அமெரிக்காவில் மட்டுமே பெண்கள் மருத்துவம் படிக்க முடிந்தது. சென்னையில் படித்த பிறகு இங்கிலாந்தில் உள்ள ராயல் லண்டன் மருத்துவப் பள்ளியில் மேற்படிப்பு படித்து, பிரிட்டனின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையை ஷார்லீப் பெற்றார். சென்னையில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையை நிறுவியவர் இவரே.

இருபது ஆண்டு சேவை

எடித் பீச்சி, பிரிட்டனின் ஆரம்பகால பெண் மருத்துவர்களில் ஒருவர். பெண்ணுரிமைச் செயல்பாட் டாளரும் கூட. ஸ்விட்சர்லாந்தில் 1877இல் மருத்துவப் பட்டம் பெற்றார். 1883ஆம் ஆண்டு இந்தியா வந்த அவர், பம்பாயின் புகழ்பெற்ற காமா மருத்துவமனையின் பெண்கள் பிரிவுக்குத் தலைமை ஏற்று சேவை புரிந்தார். 1896இல் பம்பாயில் பரவிய ஆட்கொல்லி நோயான பிளேக், காலராவைத் தடுப்பதில் முக்கியப் பங்காற்றினார். 20 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் பணியாற்றினார். ஆண்  பெண் மருத்துவர்களுக்கு இடையிலான ஊதிய வேறுபாட்டை எதிர்த்து, சம ஊதியம் தர வலியுறுத்தினார். பம்பாய் பல்கலைக்கழக செனட்டின் முதல் பெண் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.

நாட்டின் முதல் பெண்

ஆனந்தி பாய், இந்தியாவின் முதல் பெண் மருத்துவர். அமெரிக்காவில் மருத்துவம் படித்த முதல் இந்தியப் பெண்ணும்கூட. குழந்தைத் திருமணம் செய்துகொண் டாலும், பெண்கள் படிக்க வேண்டுமென்பதில் அவருடைய கணவர் கோபால் ஆர்வம் கொண்டிருந்தார். அமெரிக் காவில் மருத்துவம் படிக்க ஆனந்தியைத் தனியாக அனுப் பும் துணிச்சலான முடிவை 1883இல் அவர் எடுத்தார். மேற்கு நாடு ஒன்றுக்கு ஆனந்தி படிக்கச் செல்வதை இந்துப் பழைமைவாதிகள் கடுமையாகக் கண்டித்தனர்.

உலகிலேயே இரண்டாவது மகளிர் மருத்துவக் கல்லூரியான பென்சில்வேனியா கல்லூரியில் 19 வயதில் ஆனந்தி மருத்துவம் படிக்க ஆரம்பித்தார். இளங்கலைப் படிப்பை முடித்தாலும், முதுகலை படிப்பை முடிக்க இயலாத வகையில், அவரை காசநோய் தாக்கியது. 1886இல் ஆனந்தி நாடு திரும்பினார். கோலாப்பூர் அரசவை, அந்த ஊரில் இருந்த ஆல்பர்ட் எட்வர்டு மருத்துவ மனையின் பெண்கள் பிரிவுத் தலைவராக அவரை நியமித்தது. ஆனால் அடுத்த ஆண்டே அவர் காலமானார்.

இந்தியாவில் பயின்ற முதல் பெண்

காதம்பினி கங்குலி. கல்கத்தா பெத்யூன் கல்லூரியில் படித்ததன் மூலம் இந்தியாவில் பட்டம் பெற்ற முதல் இரண்டு பெண்களில் ஒருவர். பிரிட்டிஷ் ஆட்சியிலேயே முதல் பட்டம் (1878) பெற்றவரும் இவர்தான். 1883இல் பிரம்ம ஞான சபை சீர்திருத்தவாதி துவாரகாநாத் கங்குலியை அவர் மணந்தார். அதற்குப் பிறகு ஆசிரி யர்கள், பழமைவாதிகளின் எதிர்ப்பை மீறி காதம்பினி மருத்துவம் படித்தார்.

இதன்மூலம் தெற்காசியக் கல்லூரி ஒன்றில் அலோபதி மருத்துவம் படித்த முதல் பெண் என்ற பெருமையை காதம்பினி பெற்றார். ஆனந்தி பாய் அமெரிக்காவிலும், காதம்பினி கல்கத்தா மருத்துவக் கல்லூரியிலும் ஒரே ஆண்டில் (1886) மருத்துவப் பட்டம் பெற்றனர். 1892இல் பிரிட்டனுக்குச் சென்று தன் மருத்துவப் படிப்பை கூர்தீட்டிக் கொண்டார். இந்தியா திரும்பிய கொஞ்ச காலத்திலேயே தனியாக மருத்துவம் பார்க்க ஆரம்பித்தார்.

மக்கள் சேவைக்கு வந்த முதல் பெண்


ரக்மா பாய், நாட்டின் மகளிர் மருத்துவமனை ஒன்றில் சேவையாற்றிய முதல் இந்தியப் பெண். அவரது மாற்றாந்தந்தை ஷாகாராம் அர்ஜுன் மருத்துவர் என்பது இதற்கு முக்கியக் காரணம். குழந்தைத் திருமணத்துக்கு ஆட்பட்டாலும், மணமகன் வீட்டுக்குச் செல்ல மறுத்து மருத்துவம் படிக்க முனைந்தார் ரக்மா. அதற்கான சட்டப் போராட்டத்திலும் வென்றார்.

லண்டன் மருத்துவப் பள்ளியில் அவர் படிக்கச் செல்வதற்கான செலவுக்குப் பொது நிதி திரட்டப்பட்டது. நிதி திரட்ட ஊக்குவித்தவர் பம்பாய் காமா மருத்துவ மனையின் பெண் மருத்துவர் எடித் பீச்சி. 1889இல் லண்டன் சென்ற ரக்மா, 1895இல் நாடு திரும்பி சூரத் பெண்கள் மருத்துவமனையில் பணியாற்றினார். அந்த வகையில் பொது மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிய முதல் இந்தியப் பெண்ணும் இவரே.கேப்டன் அனி திவ்யா (30 வயது), இவர் பதான்கோட்டில் பிறந்தாலும் தன் குழந்தைப் பருவம் முதலே ஆந்திரபிரதேச மாநிலத்தின் விஜயவாடாவில் வசித்து வருகிறார். இவரது தந்தை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார்.

இந்நிலையில், போயிங் 777 ரக விமானத்தை இயக்கிய முதல் இளம் கமாண்டர் என்ற சாதனையைப் படைத்தார் அனி திவ்யா.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் எனது பெற்றோர், ஆசிரியருக்கு முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பல தடைகளைக் கடந்து, ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து கடின முயற்சியின் மூலமாக இந்த இடத்தை தற்போது அடைந்துள்ளேன்.

சிறு வயது முதலே பொருளாதார சிக்கல், மொழிப் பிரச்சினை, கலச்சார வேற்றுமை ஆகியவற்றை வெற்றியுடன் கடந்து வந்ததற்கு எனது பெற்றோரும், நண்பர்களும் பெரிதும் உதவினர்.


நான் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்பதால், பைலட் பயிற்சி பெற போதுமான அளவு பண வசதி இல்லை. இருப்பினும், எனது பெற்றோர் என் மீது நம்பிக்கை வைத்து பல சங்கடங்களுக்கு இடையில் பைலட் பயிற்சி பெற வைத்தனர். அவர்கள் இதற்காக செலவு செய்த பணத்தை அவ்வளவு எளிதில் என்னால் சம்பாதித்து விட முடியாது. இதற்கிடையில் பலர் என்னை கேலி செய்தனர். அதிலும் குறிப்பாக எனக்கு ஆங்கிலம் தெரியாது. ஏனென்றால், விஜயவாடாவில் யாரும் ஆங்கிலத்தில் பேசுவது கிடையாது. ஆகவே எனக்கும் முழுமையாக தெரியாது.


நான் சிறு வயது முதலே, தெலுங்கு மொழியில் தான் எழுதி, படித்து, பேசிக்கொண்டிருந்தேன். மற்ற இடங்களிலும் தெலுங்கு மொழியே பிரதானமாக இருந்தது. ஆனால், இந்த மொழிப் பிரச்சினையில் இருந்து வெளிவர எனது பயிற்சி மய்யம் பெரிதும் உதவியது. சரியாக ஆங்கிலத்தை உச்ச ரிக்கவும், புரிந்துகொள்ளவும் சிறிது சிரமப்பட்டேன். பிறகு அவற்றை சரி செய்து கொண்டேன். இருந்தாலும், அதை நினைத்து நான் வருந்திய நாட்கள் அதிகம். எனது பைலட் பயிற்சி மய்யம் மிகவும் தரமானது. அங்குதான் விமானியாக அனைத்து திறமைகளையும் வளர்த்துக் கொண்டேன். இப்போது பைலட்டாக பணியாற்றுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. என் வாழ்நாள் கனவு நிறைவேறியது என்றார்.

Banner
Banner