எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தேவர்கள் என்றும், பல தெய்வங்கள் என்றும், அவற்றின் அவதாரமென்றும், உருவமென்றும், அதற்காக மதமென்றும், சமயமென்றும், மதாச்சாரியார்கள் என்றும், சமயாச்சாரியார்கள் என்றும் கட்டியழு பவர்கள் ஒன்று பகுத்தறிவில்லாதவர் களாக இருக்க வேண்டும்; அல்லது வயிற்றுப் பிழைப்புக்குப் புறப்பட்ட புரட்டர்களாயிருக்க வேண்டும் என்பதை அபிப்பிராயமாகக் கொண்டு, வெகு கால முதலே பல தடவைகளில் பல பெரியார்கள் வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.

அதுபோலவே சிவன் என்றோ, விஷ்ணு என்றோ, பிரம்மா என்றோ, அல்லது ஒரு ஆசாமி என்றோ, அல்லது ஒரு உருவமென்றோ கொள்ளுவதும் உண்மை ஞானமற்றவர்களின் கொள்கை என்றும் பலர் சொல்லிவந்திருக்கிறார்கள். இதைத்தான் சுயமரியாதைக்காரர்கள் எடுத்துக்காட்டி வருகிறார்கள். ஆதலால் உலகத் தோற்றமும், அதில் நடைபெறும் உற்பத்தி, வாழ்விப்பு, அழிவிப்பு என்பவையான மூவகைத் தன்மைகளையும், மேற்படி சாமிகளோ, ஆசாமிகளோ ஒவ்வொரு தன்மையை ஒவ்வொரு ஆசாமி நடத்துகிறான் என்றோ, அல்லது ஒவ் வொரு தன்மைக்கு ஒவ்வொரு ஆசாமி பொறுப்பாளியாய் இருக்கின்றான் என்றோ நினைத்துக் கொண்டிருப்பவர்கள் விசார ஞானமற்றவர்கள் என்றே சொல்லுவோம்.

மற்றபடி மேல்கண்ட ஒவ்வொரு தன்மைக்கும் மேல்கண்ட ஒவ்வொரு பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது என்றும், அது ஒரு உருவமல்ல, ஒரு உருப்படி அல்ல என்றும், உற்பத்தி, வாழ்வு, அழிவு என்னும் தன்மையையும், அத்தன்மைக்கு ஆதாரமான தோற்றங்களைத்தான் கடவுள் என்றோ, தெய்வம் என்றோ, சாமி என்றோ, ஆண்டவன் என்றோ கருதுகிறோம் என்பதாகவும், தானாகத் தோன்றிற்று, தானாக வாழ்ந்தது, தானாக அழிகின்றது என்கின்ற யாவும் இயற்கைதான் என்றும் அவ்வியற்கைக்குத்தான் கடவுள், ஆண்டவன், சாமி, தெய்வம் என்று சொல்லுகின் றோம் என்பதாகவும், மற்றும் இவ்வி யற்கைத் தோற்றங்களுக்கு ஏதாவது ஒரு காரணமோ அல்லது ஒரு சக்தியோ இருக்கவேண்டுமே என்றும், அந்தக் காரணத்திற்கோ, சக்திக்கோதான் கடவுள், சாமி, ஆண்டவன், தெய்வம் என் கின்ற பெயர் கொடுக்கபட்டிருக்கின்றது என்பதாகவும் சொல்லிக்கொண்டு மாத் திரம் இருப்பவர்களிடத்தில் நமக்கு இப்போது பெரியதொரு தகராறு இல்லை.

ஆனால் அந்தக் கடவுள் என்பவை களுக்கு கண்,மூக்கு, வாய், கை, கால், தலை, பெயர், ஆண் பெண் தன்மை, பெண்ஜாதி, புருஷன், வைப்பாட்டி, தாசி, குழந்தை குட்டி, தாய், தகப்பன் முதலியவைகளைக் கற்பித்து, அவைகளினிடத்தில் பக்தி செய்யவேண்டும் என்றும், அவற் றிற்குக் கோவில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்து தினம் பல வேளை பாலாபிஷேகம், படைப்பு, பூஜை முதலியன செய்யவேண்டும் என்றும், அச்சாமிகளுக்குக் கல்யாணம் முதலியவை செய்வதோடு அந்தக் கடவுள் அப்படிச் செய்தார், இந்தக் கடவுள் இப்படிச் செய்தார் என்பதான திருவிளை யாடல்கள் முதலியவை செய்து காட்ட வருஷா வருஷம் உற்சவம் செய்யவேண்டும் என்றும், அக்கடவுள்களின் பெருமையைப் பற்றியும் திருவிளையாடல்களைப் பற்றியும் பாடவேண்டும் என்றும், அப்பாடல்களை வேதமாக திருமுறையாக பிரபந்தமாக அப்படிப்பட்ட கடவுள்கள் உண்டு என்பதற்கு ஆதாரமாகக் கொள்ளவேண்டும் என்றும், அப்பாடல்களைப் பாடினவர்களை சமயாச்சாரியார்களாக ஆழ்வார்களாக, சமயகுரவர்களாக, நாயன்மார்களாக அற்புதங்கள் பல செய்த அவதாரங் களாகக் கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற இன்னும் பல செய்தால் அக்கடவுள்கள் நமது இச்சைகளை நிறைவேற்றுவார்கள் என்றும், மற்றும் நாம் செய்த - செய்கின்ற - செய்யப்போகின்ற எவ்வித அக்கிரமங்களையும், அயோக்கி யத்தனங்களையும், கொடுமைகளையும் மன்னிப்பார் என்றும் சொல்லப்படுபவை களான மூடநம்பிக்கையும் வயிற்றுப் பிழைப்பும், சுயநலப்பிரசாரமும் ஒழிய வேண்டுமென்பதுதான் நமது கவலை. ஏனெனில், இந்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்திற்கும், மக்களை மக்கள் ஏமாற்றிக் கொடுமைப்படுத்துவதற்கும், மற்ற நாட்டார்கள்போல நம் நாட்டு மக்களுக்குப் பகுத்தறிவு விசாலப்படாமல் மற்ற நாட்டார்களைப்போல விஞ்ஞான (சையன்ஸ்) சாஸ்திரத்திலே முன்னேற்றமடையாமல் இருப்பதற்கும், அந்நிய ஆட்சிக் கொடுமையிலிருந்து தப்பமுடியா மல் வைத்த பளுவைச் சுமக்க முதுகைக் குனிந்து கொடுத்துக் கொண்டிருப்பதற்கும் இம்மூடநம்பிக்கைகளும், சில சுயநலமிகளின் வயிற்றுச் சோற்றுப் பிரசாரமும், இவைகளினால் ஏற்பட்ட கண்மூடி வழக்கங்களும், செலவுகளுமேதான் காரணங்கள் என்பதாக நாம் முடிவு செய்து கொண்டிருக்கின்றோம்.

நாமும் நமது நாடும் அடிமைப்பட்டுக் கிடப்ப தற்கும், ஒருவரையொருவர் உயர்வு -தாழ்வு கற்பித்துக் கொடுமைப்படுத்தி ஒற்றுமையில்லாமல் செய்திருப்பதற்கும், மக்கள் பாடுபட்டுச் சம்பாதிக்கும் பொருள்கள் எல்லாம் நாட்டின் முன்னேற்றத்திற்கும் பயன்படாமல் பாழாவதற்கும், மக்களின் அறிவு வளர்ச்சி கட்டுப்பட்டுக் கிடப்பதற்கும், சிறப்பாக மக்களின் ஒழுக்கங்கள் குன்றி மக்களிடத்தில் மக்களுக்கு அன்பும் உபகாரமும் இல்லாமல் இருப்பதற்கும் மேற்கண்ட கொள்கைகள் கொண்ட கடவுள் என்பதும், அதன் சமயமும், சமயாச்சாரியார்கள் என்பவர்களும் அவர்களது பாடல்களும் நெறிகளுமே முக்கிய காரணம் என்பதை வலியுறுத்திக் கூறுகிறோம். சொல்லத் தயாராயிருக்கின்றோம்.

நிற்க, இக்கடவுள்களின் பொருட்டாக நம் நாட்டில் பூஜைக்கும், அபிஷேகத்திற்கும், அவற்றின் கல்யாணம் முதலிய உற்சவத்திற்கும், பஜனை முதலிய காலட்சேபத்திற்கும், இக்கடவுள்களைப் பற்றிய சமயங்களுக்காக மடங்களுக்கும், மடாதிபதிகளுக்கும், மூர்த்தி ஸ்தலம், தீர்த்த ஸ்தலம் முதலிய யாத்திரைகளுக் கும், இக்கடவுள் அவதார மகிமைகளையும், திருவிளையாடல்களையும், இக்கடவுள் களைப்பற்றிப் பாடின பாட்டுகளையும் அச்சடித்து விற்கும் புத்தகங்களையும் வாங்குவதற்கும், மற்றும் இவைகளுக் காகச் செலவாகும் பொருள்களாலும் நேரங்களாலும் ஏற்படும் செலவும் நம் ஒரு நாட்டில் மாத்திரம் சுமார் இருபது கோடி ரூபாய்களுக்குக் குறைவில்லாமல் வருஷா வருஷம் பாழாகிக்கொண்டு வருகின்றன என்று சொல்லுவது மிகையாகாது.

இவ்விருபது கோடி ரூபாய்கள் இம்மாதிரியாக பாழுக்கிறைக்காமல், மக்களின் கல்விக்கோ, அறிவு வளர்ச்சிக்கோ விஞ்ஞான (சையன்ஸ்) வளர்ச்சிக்கோ, தொழில் வளர்ச்சிக்கோ செலவாக்கப்பட்டு வருமானால் நம்நாட்டில் மாத்திரம் வாரம் லட்சக்கணக்கான மக்களை நாட்டை விட்டு அந்நிய நாட்டிற்குக் கூலிகளாக ஏற்றுமதி செய்ய முடியுமா? அன்றியும் தொழிலாளர்கள் கஷ்டங்கள் என்பதும் ஏற்படுமா? தீண்டக் கூடாத - நெருங்கக்கூடாத - பார்க்கக் கூடாத - மக்கள் என்போர்கள் கோடிக் கணக்காய் புழு, பூச்சி, மிருகங்களுக்கும் கேவலமாயிருந்து கொண்டிருக்க முடி யுமா? 100-க்கு மூன்று பேர்களாயிருக்கும் பார்ப்பனர்கள் மற்ற 100-க்கு 97 பேர்களைச் சண்டாளர், மிலேச்சர், சூத்திரர், வேசி மக்கள், தாசி மக்கள், அடிமைப்பிறப்பு என்று சொல்லிக்கொண்டு அட்டை இரத்தத்தை உறிஞ்சுவதுபோல் உறிஞ்சிக்கொண்டும், நம்மையும் நம் நாட்டையும், அந்நியனுக்குக் காட்டிக் கொடுத்து நிரந்தர அடிமைகளாக இருக்கும்படி செய்து கொண்டும் இருக்க முடியுமா? என்று கேட்கின்றோம்.

நமக்குக் கல்வி இல்லாததற்குச் சர்க்கார் மீது குற்றம் செலுத்துவதில் கவலை கொள்ளுகின்றோமேயல்லாமல் நம் சாமியும், பூதமும், சமயமும் நம் செல்வத்தையும் அறிவையும் கொள்ளை கொண்டிருப்பதைப் பற்றி யாராவது கவலை கொள்ளுகின்றோமா என்று கேட்கின்றோம்.

நிற்க, அன்பையோ, அருளையோ, ஒழுக்கத்தையோ, உபசாரத்தையோ மாறு பெயரால் கடவுள் என்று கூப்பிடுகின்றேன் அதனால் உனக்கு என்ன தடை? என்று யாராவது சொல்ல வருவார்களானால், அதையும் (அதாவது அக்குணங்கள் என்று சொல்லப்பட்ட கடவுள் என்பதையும்) பின்பற்றும்படியான குணங்களாகவோ, கடவுள்களாகவோதான் இருக்க வேண்டும் என்று சொல்லுகின்றோமே ஒழியக் குணங்களைப் பின்பற்றாமல் வெறும் வணங்கும்படியான கடவுளாக இருக்க நியாயம் இல்லை என்றே சொல்லுவோம்.

மதம்

இதுபோலவேதான் மதம் என்பதும், சமயம் என்பதும், சமயநெறி என்பதும் மற்ற ஜீவன்களிடத்தில் மனிதன் நடந்து கொள்ளவேண்டிய நடையைபற்றிய கொள்கைகளைக் கொண்டது என்பவர்களிடத்தில் நமக்குத் தகராறு இல்லை! அன்பே சிவம் என்பதான சிவனிடத்தில் நமக்குச் சண்டையில்லை! அன்பு என்னும் குணம்தான் சிவம்; அந்த அன்பைக்கொண்டு ஜீவன்களிடத்தில் அன்பு செலுத்துவதுதான் சைவம் என்பதானால் நாமும் சைவன் என்று சொல்லிக் கொள்ளவே ஆசைப்படுகின்றோம். அதுபோலவே ஜீவன்களிடத்தில் இரக்கம் காட்டுவது, ஜீவன்களுக்கு உதவி செய்வது ஆகிய குணங்கள்தான் விஷ்ணு, அக்குணங்களைக் கைக்கொண்டு ஒழுகுவதுதான் வைணவம் என்பதான விஷ்ணுவிடத்திலும் வைணவனிடத்திலும் நமக்குத் தகராறில்லை என்று சொல் லுவதோடு நாமும் நம்மை ஒரு வைணவன் என்று சொல்லிக் கொள்ளும் நிலைமை ஏற்பட வேண்டும் என்றே ஆசைப்படுகின்றோம். நமக்கும் மற்றும் உள்ள மக்களுக்கும் அச்சைவத் தன்மையும் வைணவத் தன்மையும் ஏற்பட வேண்டும் என்றும் வேண்டுகின்றோம்.

அப்படிக்கில்லாமல், இன்னமாதிரி உருவம் கொண்ட அல்லது குணம் கொண்டதுதான் கடவுள் என்றும், அதை வணங்குகின்றவன்தான் சைவனென்றும், அப்படி வணங்குகிறவன் இன்ன மாதிரியான உடை பாவனை கொண்டவனாகவும் இன்னமாதிரி குறி இடுகிறவனாகவும் இருப்பதுதான் சைவம் என்றும், இன்ன பேருள்ள இன்ன காரியம் செய்த கடவுள்களைப் பற்றிப் பாடின, எழுதின ஆசாமிகளையும் புஸ்தகத்தையும் வணங்குவதும் மரியாதை செய்வதும்தான் சைவம் என்றும், மற்றபடி வேறு இன்ன உருவமோ, பேரோ உள்ள கடவுள் என்பதை வணங்குகிறவர் களையும் வேறு குறி இடுகின்றவர்களையும் யாதொரு குறியும் இடாதவர் களையும் சைவரல்லாதவர் என்று சொல்வதுமான கொள்கைக்காரரிடமே நமக்குப் பெரிதும் தகராறு இருக்கின்றது என்று சொல்வதுடன் அக்கொள்கை களையும், அச்சமயங்களை யும், அக்கடவுள்களையும் பாமர மக்களிடம் பரவவிடக் கூடாது என்றும் சொல்லு கின்றோம்.

அன்றியும், பல சமயப் புரட்டர்கள் இம்மாதிரி விவகாரம் வரும்போது நான் கடவுள் என்பதாக ஒரு தனி வஸ்துவோ, ஒரு குணமோ இருப்பதாகச் சொல்ல வில்லை என்றும், மலைதான் கடவுள், ஆறுதான் கடவுள், சமுத்திரம்தான் கடவுள், மரம் செடிதான் கடவுள், புஷ்பம்தான் கடவுள், அதன் மணம்தான் கடவுள், அழகுதான் கடவுள், பெண்தான் கடவுள், அதன் இன்பம்தான் கடவுள், இயற்கைதான் கடவுள், அத்தோற்றம்தான் கடவுள், என்பதாக தமக்கே புரியாமல் உளறுவதும், மறுபடியும் சிவன்தான் முழுமுதற் கடவுள், மற்றபடி விஷ்ணுவும் பிரம்மாவும் அவரது பரிகார தேவதைகள், சைவ சமயம்தான் உண்மைச்சமயம் அது தான் முக்தி அளிக்கவல்லது என்பதும் அல்லது விஷ்ணுதான் முழுமுதற்கடவுள் என்பதும், அதுதான் பரத்துவம் கொண் டது. மற்றவை விஷ்ணுவின் பரிவார தேவதைகள் என்பதும், வைஷ்ணவ சமயம்தான் உண்மை சமயம் அதில்தான் பரத்திற்கு மார்க்கம் உண்டு என்பதும் அச்சிவனையோ, விஷ்ணுவையோ முழுமுதற் கடவுளாகக் கொண்டு அக்கடவுள்களை யும், அச்சமயங்களையும் பாடினவர்கள் தான் கடவுள் நெறியையும் நிலைமையையும் உணர்த்திய பெரியார்கள் - சமயாச் சாரியார்கள் என்பதுமாக மக்கள் முன் உளறிக்கொட்டி அவர்களது மனதை குழப்பச் சேற்றில் அழுத்துகின்றவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களது புரட்டையும் பித்தலாட்டங்களையும் வெளி யாக்கி மக்களைக் குழப்பச் சேற்றிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று தான் சொல்லுகின்றோம்.

உலகத்தில் கடவுள் என்பது இன்னது என்பதாக மனதில் விளம்பரப்படுத்திக் கொள்ளாமலே கடவுளைப் பற்றிய தர்க்கங்களும் தகராறுகளும் தினமும் நடைபெற்று வருகின்றன. இது இன்று நேற்று ஏற்பட்ட விவகாரம் அல்ல என்றுங்கூடச் சொல்லுவோம்.

எனவே, மக்களின் பாரம்பரியமானதும் எங்கும் பரவியிருக்கும் படியானதுமான மடமைக்கு இதைவிட வேறு உதாரணம் கிடையாது என்பது நமது அபிப்பிராயம். ஏனெனில், இந்த விவகாரம் பாமர மக்களிடையில் மாத்திரம் நடைபெற்று வருகின்றது என்று சொல்லுவதற்கில்லை. இது பெரும்பாலும் படித்தவன், ஆராய்ச்சிக்காரன், பண்டிதன், பக்திமான் என்கின்ற கூட்டத்தாரிடையேதான் பெரிதும் (இவ்வறியாமை) இடம்பெற்று உரம் பெற்றிருக்கின்றது. இவைகள் ஒழியச் செய்யும் காரியத்தை நாஸ்திகமென்றும், பாபச் செயல் என்றும் யார் சொன்னாலும் சுயமரியாதைக்காரர்கள் பயப்படக்கூடாது.

(தந்தை பெரியார் அவர்கள்

17 வருஷத்திற்கு முன் (1928) பேசியது)

‘குடிஅரசு' சொற்பொழிவு - 09.06.1945

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner