எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெண் கவிஞர் நெல்லியின் துயர்மிகு பயணம்

நெல்லி லியோனி சாக்ஸ் (1891-1970) என்ற ழைக்கப்படும் நெல்லி சாக்ஸ் பெர்லினில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார். வசதியான குடும்பம். சிறுவயதில் இசையும் நடனமும் கற்ற நெல்லி சாக்ஸுக்கு நடனக் கலைஞராக ஆக வேண்டும் என்று ஆசை. அவரது பெற்றோர் அதற்கு அனுமதிக் காததால் எழுத்தின் பக்கம், குறிப்பாக, கவிதையின் பக்கம் திரும்பினார். ஸெல்மா லாகர்லாஃப், ஹில்டே டோமின் போன்ற இலக்கியவாதிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார்.

வதை முகாமிலிருந்து தப்பினார்கள்

ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்குப் பிறகு அங்கிருந்த எல்லா யூதக் குடும்பங்களைப் போலவும் நெல்லி சாக்ஸின் குடும்பமும் பெரும் இன்னலுக்குள்ளானது. சித்திரவதை முகாமுக்குக் கொண்டு செல்லப்படும் அபாயத்தில் நெல்லியும் அவரது தாயும் இருந்த சமயத்தில் நாஜிகள் தரப்பிலிருந்த நெல்லியின் நண்பர் ஒருவர் அவரைத் தப்பிச்செல்ல வலியுறுத்தினார். 1940-ல் ஜெர்மனியிலிருந்து விமானம் மூலம் சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகருக்கு இருவரும், கையில் ஒரு பெட்டியுடனும் சிறிதளவு பணத்துடனும் தப்பிச் சென்றார்கள். சுவீடனில் அவர்களுக்குத் தஞ்சம் கிடைப்பதற்கு ஸெல்மா லாகர்லாஃப் உள்ளிட்டோர் உதவி புரிந்தனர்.

சுவீடனுக்கு வந்த பிறகுதான் நெல்லியின் தீவிரமான இலக்கிய வாழ்க்கை தொடங்கியது. அதாவது, 50 வயதுக்குப் பிறகு. இளம் வயதில் கவிதைகள் எழுதினாலும் அவையெல்லாம் ரொமாண்டிசிஸக் கவிதைகள்தான். சுவீடனில்தான் தீவிரமான ஒரு கவிஞராக நெல்லி உருவெடுத்தார். கவிஞர் பால் செலானின் நட்பு நெல்லியின் கவிதைகளை வேறு தளத்துக்கு எடுத்துச் சென்றது.
மொழி ஏற்படுத்திய பதற்றம்

சுவீடன் மொழிக்கும் ஜெர்மானிய மொழிக்கும் இடையில் பல்வேறு மொழிபெயர்ப்புகளைச் செய்த வாறு சுவீடனில் நெல்லி வாழ்க்கை நடத்தினார். அவரது தாயைப் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு வேறு அவருக்கு இருந்தது. அவரது முதல் கவிதைத் தொகுப்பு மரண வீடுகளில் என்ற தலைப்பில் 1947-இல் வெளியானது.

ஹிட்லரின் நாஜிப் படையினரிடமிருந்து தப்பி வந்தாலும் அவர்களது சித்திரவதைகளின் நினை விலிருந்து நெல்லி சாக்ஸ் தப்பவேயில்லை. நாஜிகளிடம் அகப்பட்டுச் சித்திரவதைக்குள்ளாவது போல் பிரமைநோயும் பீதிநோயும் அவரை அவ்வப் போது பீடிக்க, தீவிர மனநலச் சிக்கலுக்கு ஆளானார். சில ஆண்டுகள் மனநல மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார். அதிலிருந்து மீண்டாலும் ஜெர்மானிய மொழியில் யாராவது பேசுவதைக் கேட்டாலே அஞ்சி நடுங்கும் அளவுக்கு, அவரது மனம் மிகவும் பாதிப்படைந்துதான் இருந்தது.

அவரது கவிதைகளுக்காகவும் நாடகங்களுக் காகவும் மொழிபெயர்ப்புகளுக்காகவும் நெல்லி சாக்ஸ் பரவலான கவனமும் அங்கீகாரமும் விருதுகளும் பெற்றார். அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது 1966-இல் அவருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு. இஸ்ரேலிய எழுத்தாளர் எஸ்.ஒய். அக்னானுடன் இந்தப் பரிசை அவர் பகிர்ந்து கொண்டார். 1970-இல் குடல் புற்றுநோயால் நெல்லி சாக்ஸ் மரணமடைந்தார்.

80 வயது கின்னஸ் வீராங்கனை!

சாதிக்க வேண்டும் என்ற சிறு தூண்டுதலே ஒருவரை எந்த வயதிலும் இலக்கை எட்டிப்பிடிக்க வைத்துவிடும். சாதிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் எர்னெஸ்டைன் ஷெப்பர்டை உலகின் வயதான உடல்கட்டு வீராங்கனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் 80 வயது எர்னெஸ்டைன் ஷெப்பர்ட் தினமும் அதிகாலை இரண்டரை மணிக்கு எழுந்துவிடுகிறார். முட்டைகளையும் வாதுமைப் பருப்புகளையும் எடுத்துக் கொள்கிறார். தலையில் விளக்கைக் கட்டிக் கொண்டு, பத்து கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் உடற்பயிற்சிக் கூடத்துக்கு மெது ஓட்டம் (ஜாகிங்) செய்துகொண்டே சென்றுவிடுகிறார்.

கடினமான கருவிகளை மிக எளிதாகக் கையாண்டு, உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார். இவருக்குப் பிடித்த நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோன் போல் உடற்பயிற்சிகளுக்கு இடையே முட்டைகளைக் குடிக்கிறார்.

என் எல்லா செயல்களுக்கும் அன்புத் தங்கை வெல்வட்தான் காரணம். எங்கள் இருவருடைய எண் ணங்களும் செயல்களும் ஒன்றாகவே இருக்கும். ஒரு நாள், நாம் ஏன் இப்படித் துரித உணவுகளைச் சாப்பிட்டுக்கொண்டு சோம்பேறிகளாக இருக்கிறோம்? என்று கேட்டவள், உடற்பயிற்சி செய்யும் ஆலோ சனையைச் சொன்னாள். அன்று முதல் நாங்கள் இருவரும் ஒன்றாக உடற்பயிற்சி செய்துவந்தோம். ஆண்களைப் போல உடல் கட்டுமானராக (பாடி பில்டர்) நாமும் மாறி, கின்னஸில் இடம்பெற வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பாள்.

ஆனால் உடல்நலக் குறைவால் அவள் மறைந்து விட்டாள். அவளின் பிரிவு எனக்குத் தாங்க முடியாத வேதனையைக் கொடுத்தது. மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டேன். ஒருநாள் என் கனவில் வந்த தங்கை, ஏன் இப்படி இருக்கிறாய்? நம் லட்சியத்தைச் செயல்படுத்த உடனே எழுந்து ஓடு என்றாள். அன்று முதல் இன்றுவரை நான் ஓடிக்கொண்டே இருக்கிறேன். மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்கிறார் எர்னெஸ்டைன் ஷெப்பர்ட்.

கடினமாகப் பயிற்சி செய்து உடல்கட்டுப் போட்டியில் கலந்துகொண்டு, எட்டாவது இடத்தைப் பிடித்தார். ஒரு மாதம் கழித்து அவருடைய பயிற்சி யாளர் அழைத்து, உலகின் வயதான முதல் பெண் உடற்கட்டு வீராங்கனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பதாகச் சொன்னார்! எர்னெஸ்டைன் ஷெப்பர்டின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

என் தங்கையின் லட்சியத்தை நிறைவேற்றி விட்டேன் என்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி! அனைத் தையும் மகிழ்ச்சியாகச் செய்துவருகிறேன். ஓய்வு என்பது நாம் விரும்பும் செயலைச் செய்வதுதானே தவிர, மூலையில் முடங்கிக் கிடப்பது இல்லை என்று சொல்லும் எர்னெஸ்டைன் ஷெப்பர்ட், உடற்பயிற்சிக் கூடத்தை நடத்திவருகிறார்.


கயிற்றால் உயர்ந்த வாழ்க்கை

சுய உதவிக் குழு ஆரம்பிப்பவர்களில் பலரும் தொழில் செய்வது இல்லை. அதேநேரம், கடலூர் அருகே வாழை நாரில் கயிறு திரிக்கும் தொழிலை ஒரு பெண்கள் குழு வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

கடலூர் அருகே உள்ள மேற்கு ராமாபுரம் கிராமத்தில் 10 பேர் கொண்ட பெண்கள் குழு ஒன்றிணைந்து வாழை நாரில் இருந்து கயிறு திரித்து விற்பனை செய்துவருகின்றனர். இதன்மூலம் தங்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்கிகொள்ள முடியும் என்கின்றனர். இது குறித்து அக்குழுவை சேர்ந்த தமிழ்ச்செல்வி, செல்வக்குமாரி, அஜிதா ஆகியோர் பகிர்ந்துகொண்டது:

தொழில் தொடங்க ஆர்வம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் கிராமத்துக்கு ரியல் தொண்டு நிறுவன பணியாளர் வந்து ஊரில் கூட்டம் போட்டு மகளிர் சுயஉதவிக் குழு ஆரம்பித்து வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள அறிவுறுத்தினார். அதன் பிறகு 12 பேர் கொண்ட ரியல் ஆலயம் மகளிர் குழு என்ற பெயரில் குழுவை ஆரம்பித்தோம். இதற்கு முன்பு சுய உதவிக்குழு பற்றி எங்களுக்குத் தெரியாது. பிறகு குழுவாகச் செயல்படுவது, பணிபுரிவதன் முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்துகொண்டோம்.

எங்கள் குழுவின் மூலம் சிறுதொழில் நடத்தி வருமானம் ஈட்ட முடிவு செய்தோம். எங்களில் ஆர்வமுள்ள பெண்கள் 10 பேர் ஒன்றிணைத்து வாழை நாரிலிருந்து கயிறு திரிக்கும் தொழிலைத் தொடங்க நினைத்தோம். ரியல் நிறுவ னத்தினர் எங்கள் குழுவுக்கு மூன்று நாட்களுக்குத் தொழிற்பயிற்சி அளித்தார்கள். தொழில் தொடங்குவதற்கான உதவிகளையும் செய்தார்கள். அந்த நிறுவனமே வாழை நாரிலிருந்து கயிறு திரிக்கும் கருவிகளை இலவசமாக வழங்கியது.

விரிவுபடுத்தத் திட்டம்

இப்போது 10 பேரும் ஒன்றாகச் சேர்ந்து இத்தொழிலை செய்து வருகிறோம். எங்கள் குழுவில் உள்ள ஒருவர் கடலூர் சென்று கயிறு திரிப்பதற்கான மூலப்பொருட்களை வாங்கி வருவார். அதன் பிறகு நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கயிறு திரித்துக் கட்டுகட்டாக சேர்த்து பார்சல்செய்து, ஈரோட்டில் உள்ள கம்பெனிக்குப் பேருந்து மூலம் அனுப்பி வைக்கிறோம்.

இந்தத் தொழில் செய்வதற்கு எங்களுக்கு மாதம் ரூ. 4,100 முதலீடு தேவைப்படுகிறது. இந்த தொழில் மூலம் எங்கள் குழுவுக்கு மாதந்தோறும் ரூ.17,300 வருமானம் கிடைக்கிறது. செலவு போக ஒரு நபருக்கு ரூ.2,640 வருமானமாகக் கிடைக்கிறது. இந்தத் தொழில் எங்கள் குழுவுக்கு முக்கிய வாழ்வாதாரத் தொழிலாக உள்ளது. இந்தத் தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். அதன் மூலம் ரூ.5,000 முதல் ரூ.8,000 வரை ஒரு நபருக்கு மாத வருமானமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம் என்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner