எழுத்துரு அளவு Larger Font Smaller Font


நாற்பது வயதிலேயே வெள்ளெழுத்து வந்துவிடுகிறது. சிறிய எழுத்துகளைப் படிப்பதே சிரமம். துப்பாக்கி என்பதைத் துப்பாக்கி என்று வாசித்தாலே அதிசயம்தான். அதுவும் அறுபது வயதாகிவிட்டால் கேட்கவே வேண் டாம். ஆனால், அறுபது வயதுக்குப் பின்னர் துப்பாக்கிச் சுடுதலில் பயிற்சி பெற்று உலகிலுள்ளோரை வியப்பில் ஆழ்த்தி வருகிறார் ஷூட்டர் தாதி எனச் செல்லமாக அழைக்கப்படும் சந்த்ரோ தோமர்.

எண்பது வயதைக் கடந்துவிட்ட நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாக்பத் மாவட்டத்திலுள்ள ஜோரி என்னும் ஊரில் வசித்துவருகிறார் ஷூட்டர் தாதி. அறுபத்தைந்து வயதுவரை இவரும் பிற பாட்டிகளைப் போல் மிகவும் சாதாரண வாழ்வைத்தான் மேற்கொண் டிருந்தார். தன் பேத்தி ஷிபாலி துப்பாக்கிச் சுடுதலுக்குச் செல்லும்போது பாதுகாப்பாக அவருடன் செல்வதே இவரது வழக்கம். எல்லாவற்றை யும் புரட்டிப்போடும் அசாதாரண நிகழ்வுகள் சாதாரண மனிதர்களது வாழ் விலும் நிகழ்வது உண்டு. அப்படியான ஒரு சாதாரண நிகழ்வுதான் இந்தப் பாட்டியை ஷூட்டர் தாதி ஆக மாற்றி, உலகப் பிரபலம் ஆக்கியது..

அதுவரை சாதாரண ஜாட் இனப் பெண்கள் போல் வீட்டுக்குள்ளேயே இருந்து வீட்டுப் பணிகளிலேயே தன் பொழுதைப் போக்கியவர் இவர். ஷூட்டர்களில் பெரும் பாலானோர் ஆண்களாக இருந்த காரணத்தாலேயே அங்கு போகவே பயப்படுவார் ஷிபாலி. அதனால் தான் தன் பாட்டியைத் துணைக்கு அழைத்துச்சென்றிருக்கிறார் அவர்.

1998ஆம் ஆண்டில் ஒரு நாள் துப்பாக்கியில் குண்டு களை நிரப்ப உதவியிருக்கிறார் பாட்டி சந்த்ரோ தோமர். அதன் பின்னர் துப்பாக்கிச் சுடுதலில் பயிற்சிபெற வேண்டும் என்ற எண்ணம் இவரிடம் தலைதூக்கியது.

65 வயதில் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு பயிற்சியில் சேரப்போகிறேன் என்று ஒருவர் சொன்னால் வரவேற்பு எப்படி இருக்கும் நினைத்துப்பாருங்கள். பெரிய வரவேற்பில்லை.

இவருடைய கணவரோ தோள் தட்டவும் இல்லை, தோளைப் பிடித்து இழுக்கவும் இல்லை. வெறும் மவுன சாட்சியாக வேடிக்கை மட்டுமே பார்த்திருக்கிறார். குடும்பத்தின் ஆதரவு கிடைக்கவில்லை என்பதற்காகச் சோர்வடையவில்லை சந்த்ரோ தோமர்.

தன்னம்பிக் கையுடன் ஜோரி ரைஃபிள் கிளப்பின் தலைவர் டாக்டர் ராஜ்பால் சிங்கிடம் இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்கிறார்.

முதன்முறை துப்பாக்கிச் சுடும் போட்டிக்குச் சென்ற போது தன் பேத்தியுடன் சென்று கலந்துகொண்டிருக்கிறார். அந்தப் போட்டியில் இருவருமே பதக்கங்களை வென்றி ருக்கிறார்கள்.

அந்த நாளைப் பற்றி நினைவுகூரும்போது, ஷூட்டர் தாதியின் மனம் எல்லையற்ற உற்சாகத்தை அனு பவிக்கிறது. அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. மறுநாளைய செய்தித் தாள்களில் என் புகைப்படம் வெளியாகியிருந்தது. அதைக் குடும்பத்தி னரிடமிருந்து மறைத்துவிட வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால், எல்லோரது கண்ணிலும் அந்தப் படம் பட்டுவிட்டது. அப்போதும் அவர்கள் ஊக்க மளிக்க வில்லை. ஆனாலும் எனது பயணத்தை அவர்களால் தடுத்து நிறுத்த இயலவில்லை என்கிறார் இவர்.

தன் பாட்டியைப் பற்றி பேத்தி ஷிபாலி கூறும் போது, தாதிக்குப் படிப்பறிவு அதிகம் கிடையாது. ஆகவே, ஆங்கிலம் நன்றாகவெல்லாம் தெரியாது. என்றாலும் எதையாவது சொல்லிக்கொடுத்தால் அதைச் சட்டென்று கிரகித்துக்கொள்ளும் புத்தி சாதுர்யம் உண்டு என்கிறார். இப்போதெல்லாம் வெளிநாட்டினருடன் அவரே உரை யாடுகிறார். தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தை வைத்துச் சமாளித்துக் கொள்கிறார் என்கிறார் ஷிபாலி.

உடம்புக்குத் தான் வயதாகிறதே ஒழிய மனத்துக்கு வயதாவதேயில்லை என்கிறார் ஷூட்டர் தாதி. அந்தத் தெம்பின் காரணமாகத்தான் தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறார் இவர்.

இதுவரை 25-க்கும் மேற்பட்ட தேசிய சேம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொண்டு வென்றிருக்கிறார். கிராமத் திலும் இளம் வயதுப் பெண் களுக்கும் ஆண்களுக்கும் துப்பாக்கிச் சுடுதலில் பயிற்சி அளித்துவருகிறார்.

நாற்காலியில் சுழலும் டென்னிஸ் பெண்

நாம் யார் என்பதை உணரும் தருணம் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டு மானாலும் வாய்க்கலாம். பிரதிமா ராவுக்கு அது 28 வயதில் வாய்த்தது. இத்தனைக்கும் போ ராட்டம் என்பது அவருக்குப் புதிதல்ல.

மூன்று வயதிலேயே போலியோவால் வலது கால் செயலிழந்துபோனது. இதனால் வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலியை மட்டுமே நம்பி, தன்னுடைய வாழ்க்கையை நகர்த்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார் பிரதிமா. அதைவிட அவரை விளிம்புக்குத் தள்ளியது அவருக்கு ஏற்பட்ட மணமுறிவு. அதுவும் ஆறு வயது மகனோடு தனித்து விடப்பட்டார். ஆனால் அந்தத் தருணத்திலும் தன்னை நினைத்துத் துவண்டு போகவில்லை. வாழ்க்கை விளையாட்டைத் துணிந்து விளையாட முடிவெடுத்தார். கர்நாடகாவின் மங்களூ ரூவில் பிறந்து வளர்ந்தவர் தன்னுடைய மகனோடும் பெற் றோரோடும் பெங் களூருவுக்கு இடம்பெயர்ந்தார்.

அதுவரை தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்து ரசித்த டென்னிஸ், வில் வித்தை இரண்டையும் தானே ஏன் ஆடக் கூடாது என நினைத்தார். 28 வயதாகும் தன்னால் என்ன விளையாட முடியும் என்றுகூட அவர் அதுவரை அறிந்திருக்க வில்லை. தன்னுடைய தோளின் வலிமை, தன்னம்பிக்கை இரண்டை மட்டுமே மூலதனமாக வைத்து முன்னேற ஆரம்பித்தார். தடகளம், வில்வித்தை, டென்னிஸ் ஆகிய மூன்று விளையாட்டுகளிலும் பயிற்சி பெற்றார். லியாண்டர் பயஸையும் சானியா மிர்சாவையும் சிறு வயது முதலே பார்த்து வியந்தவர் தனக்குள் இருக்கும் டென்னிஸ் நாயகியை வெளிக்கொண்டுவர ஆரம்பித்தார்.

கர்நாடக மாநில லான் டென்னிஸ் சங்கத்தின் அரங்கத்தில் முறையாகப் பயிற்சி மேற்கொண்டார். மாற்றுத் திறனாளி களுக்கான வீல்சேர் டென்னிஸ் என்ற தனிப் பிரிவில் தயாரானார். ஆனால், ஒரு கையில் டென்னிஸ் மட்டையைப் பிடித்து நொடிக்கு நொடி வீசி விளையாடியபடியே மற்றொரு கையால் சக்கர நாற்காலியையும் சுழற்றுவது மிகக் கடினமான காரியமாக இருந்தது. விடாமல் தினந்தோறும் விடியற்காலை இரண்டு மணிநேரம் பயிற்சி மேற்கொண்டார். ஆனால் டென்னிஸ் விளையாடும் இந்த ஃபீனிக்ஸ் பறவை அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்ளப் பணிக்குச் செல்வது கட்டாய மானது. விடியற் காலையில் பயிற்சி, அதைத் தொடர்ந்து மின்சாரக் கம்பிகள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை என வாழ்க்கை சுழன்றது.

நாமெல்லாம் வாரக் கடைசிக்குக் காத்திருப்பது ஓய்வு தரும் விடுமுறை நாளுக்காகத்தான். ஆனால் பிரதிமா காத்திருப்பதோ இடைவிடாத பயிற்சிக்காக! விடுமுறை நாட்களில் பிரதிமாவுக்குப் பயிற்றுவிப்பவர் பயிற்சியாளர் ரமேஷ்.

நான்கு ஆண்டுகள் கடுமையான பயிற்சியின் காரணமாக 2013இல் தேசிய பாராலிம்பிக்ஸ் வீல்சேர் டென்னிஸ் சாம்பியன் ஷிப் பிரிவில் அரையிறுதிப் போட்டிவரைக்கும் முன்னேறினார். 2015இல் தேசிய அளவிலான வீல்சேர் சாம்பியன் ஷிப் போட்டியில் ஒற்றையர், இரட்டையர் ஆகிய இரு பிரிவுகளிலும் பதக்கங்கள் வென்றார். அதைத் தொடர்ந்து தாய்லாந்து, மலேசியாவில் நடைபெற்ற சர்வதேசப் போட்டிகளுக்கு முன் னேறினார். ஆனால் அவரது சக்கர நாற்காலி கனமாக இருந்ததால் அதை, துரிதமாக இயக்கி, வேகமாக நகர்ந்து அவரால் டென்னிஸ் விளையாட முடிய வில்லை. இதனால் சர்வதேசப் போட்டிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

கனம் குறைவான சக்கர நாற்காலியின் விலை மூன்று லட்சம் ரூபாய். அதை வாங்கும் சூழலில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பிரதிமா இல்லை. இருந்தபோதும் மனம் தளராமல் கிர வுட்ஃபண்டிங் பிரச்சாரத்தை மேற்கொண்டார். பொதுமக்களின் உதவியால் புதிய எடை குறைவான சக்கர நாற்காலியை வாங்கினார். தற்போது உலகத் தரவரிசைப் பட்டியலில் 182ஆவது இடத்தில் இருக்கும் இவர் விரைவில் முதல் நூறு இடங்களுக்குள் இடம்பெறும் இலக்கை நோக்கிப் பயிற்சி எடுத்துவருகிறார். பாராலிம்பிக்ஸ் 2020இல் போட்டியிடும் இலக்கைத் தனக்குத் தானே நிர்ணயித்துக்கொண்டு உற்சாகத்தோடு முயற்சித்து வருகிறார் இந்த டென்னிஸ் புயல்.


பிரதமரைக் கேள்வி கேட்ட பினாலட்சுமி!

பினாலட்சுமி நெப்ரம், மணிப்பூரைச் சேர்ந்த மனித உரிமைச் செயல்பாட்டாளர். இந்திய ஆயுதக் கட்டுப்பாடு மய்யம், துப்பாக்கிகளுக்குத் தப்பிப் பிழைத்த மணிப்பூர் பெண்கள் கட்டமைப்பு  போன்றவற்றை நடத்திவருகிறார். 2004ஆம் ஆண்டு தொடங்கிய இவரது சமூகச் செயல்பாடுகள் இன்றளவும் தீவிரமாகத் தொடர்ந்துவருகின்றன.

மணிப்பூரின் ஆளும் கட்சி பாஜக. முதல்வர் என். பீரேன் சிங்கின் மகன் அஜய், ஒரு கொலைக் குற்றவாளி. முதல்வரின் மகனுக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததால் பினாலக்ஷ்மி, மாநிலக் காவல் துறையால் மிரட்டப்பட்டுவருகிறார். சில வாரங் களுக்கு முன் காவல் துறையினர் பினாலக்ஷ்மியின் வீட்டுக்கு ஆயுதங்களுடன் சென்று, அவருடைய வயதான பெற்றோரை மிக மோசமான முறையில் மிரட்டியிருக்கின்றனர். இந்த மிரட்டலைத் துணிச்சலுடன் டிவிட்டரில் பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டவர்களின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார் பினாலட்சுமி. பினாலட்சுமிக்கு இன்று வரை இரு வருமே பதிலளிக்கவில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner