எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பொதுவாக “ஆர்ம் ரெஸ்லிங்’ எனப்படும் “கை மல் யுத்தம்‘, சிலர் தங்கள் கை வலுவை வெளிப்படுத்தவும், சாதாரண சண்டைகளின் போது எதிராளியை வீழ்த்தவும் பயன்படுத்துவதுண்டு. இதில் ஆண்கள்தான் அதிகம் ஈடுபடுவதுண்டு. கருநாடகாவில் மண்டியா மாவட்டம், பாலஹள்ளியில் வசிக்கும் ரீட்டா பிரியங்கா இதில் கடுமையான பயிற்சி பெற்று, இதை ஒரு தீவிர விளையாட்டாக கருதி தேசிய அளவில் பங்கேற்று இதுவரை 16 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

“கோர் நேச்சர் ஃபிட்னஸ் சென்டர்’ இயக்குநர் விஸ்வ நாத்திடம் பயிற்சி பெற்ற ரீட்டா பிரியங்கா, வரும் செப்.2-ஆம் தேதி முதல் 12 -ஆம் தேதி வரை ஹங்கேரி நாட்டில் புடாபெஸ்ட்டில் நடைபெறும் 39ஆவது “உலக ஆர்ம் ரெஸ்லிங்’ வாகைர் பட்டப் போட்டியில் பங்கேற்க நிதி உதவி செய்யும் - உதவும் கரங்களை எதிர்பார்க்கும் ரீட்டா கூறுகையில்:

என்னுடைய தந்தை அந்தோனிராஜ் ஒரு மல்யுத்த வீரர். அவரிடம் பயிற்சி பெற்ற நான், மைசூரில் ஆண்டுதோறும் நடக்கும் தசரா குஸ்தி பந்தயத்தில் முதன் முறையாக 2004- ஆம் ஆண்டு பங்கேற்றேன். தொடர்ந்து 15 ஆண்டுகளாக தேசிய அளவில் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றதோடு, சித்தூர் ராணி சென்னம்மா, சாமுண்டீஸ்வரி விருதுகளையும் பெற்றுள்ளேன். கடந்த அய்ந்தாண்டுகளாக கை மல்யுத்தத்தில் விஸ்வநாத் சார் மூலம் பயிற்சி பெற்று போட்டிகளில் பங்கேற்க தொடங்கினேன்.

இந்த முயற்சிக்கு என்னுடைய தந்தைதான் இதற்கு காரணம். நான் மல்யுத்த பயிற்சி பெறும்போது கருநாடகாவில் பெண் மல்யுத்த வீராங்கனைகள் யாருமே இல்லை. நான் பயிற்சி பெறுவது பலரது விமர்சனத்திற்குள்ளானது. ஆனால் என் பெற்றோர் அளித்த ஊக்கம், தேசிய அளவில் போட்டிகளில் பங்கேற்க வைத்தது. மேலும் பல பெண்கள் பயிற்சி பெற விரும்பினர். மைசூரு சாமுண்டி மைதானத்தில் மல்யுத்த பயிற்சியளிக்கும் மய்யமொன்றை துவங்கும்படி அரசிடம் கோரினோம். எவ்வித பதிலும் வராததால் என்னுடைய தந்தையே பயிற்சி மய்யமொன்றை துவங்க, விஸ்வநாத் சார் பெரிதும் உதவியளித்து வருகிறார்.

தற்போது நான் 63 கிலோ எடை பிரிவில் பங்கேற்பதால் என்னுடைய எடையை பராமரிப்பது முக்கியமாகும். உடல் எடையில் ஏற்ற இறக்கம் இருக்கக் கூடாது என்பதால் தினமும் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிடுவது, பயிற்சியில் ஈடுபடுவது என முறைப் படுத்திக் கொண்டுள்ளேன். மேலும் இந்த விளையாட்டிற்குத் தேவையான சக்தியைப் பெற வெளிப்புறங்களிலும் கவனம் செலுத்துவது, புஜ வலிமைக்கு மிகவும் அவசியம்.

நான் சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதால் உணவில் அதிக புரதம் கலந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆனால் பணநெருக்கடியால் அனைத்து தேவை யான உணவுகளையும் சாப்பிட முடிவதில்லை. உணவில் புரதம் மற்றும் நார் சத்து அதிகம் இருக்க வேண்டுமென்பதால் கேழ்வரகு, முட்டை, பால், வெண்ணெய், உலர்ந்த பழங்கள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்கிறேன்.

நான் கை மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க எனக்கு ஊக்கமளித்தவரே விஸ்வநாத் சார்தான். அவர் ஒரு சிறந்த பாடி பில்டர் மட்டுமின்றி பயிற்சியாளரும் கூட. நான் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதால், இலவசமாக பயிற்சியளித்து வருகிறார். இதுவரை அவர் அளித்து வரும் பயிற்சிக்கு பணம் எதுவும் வாங்கவே இல்லை. அவரது பெருந்தன்மைக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளேன்.

கை மல்யுத்தம் பற்றி....

இந்த விளையாட்டில் ஈடுபடும் வீரர்களை 50 கிலோ எடை பிரிவில் 5 பேர், 60 கிலோ எடை பிரிவில் பத்து பேர் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். போட்டியில் பங்கேற்கும் அனைவரையும் வரிசைப்படி திரும்ப திரும்ப வீழ்த்த வேண்டும்.

நான் அங்கேரியில் நடைபெறவுள்ள சர்வதேச கை மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்பது பெருமையாக உள்ளது. அதே நேரத்தில் செப்டம்பரில் நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்க நான் பெடரேஷனுக்கு 2 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். இந்த பணத்தை கொடுத்துதவும்படி அமைச்சர்கள் உள்பட பலரிடம் கேட்டேன். முதலில் பணத்தை செலுத்தி, வெற்றி பெற்று வந்தவுடன் திரும்ப கொடுப்பதாக அவர்கள் சொல்கிறார்களே தவிர, போவதற்கே பணம் இல்லாமல் நான் தவிப்பதை புரிந்து கொள்ளவில்லை.

மாநிலத்தில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க ஆதரவு இல்லை. இறுதியில் தேவையான பணத்தை என்னுடைய தந்தையும் நானும்தான் புரட்டினோம் என்றார்.தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner