எழுத்துரு அளவு Larger Font Smaller Font

விளையாட்டுத்  துறையின் பல்வேறு  துறைகளில்  தமிழகத்தைச்   சேர்ந்த   சதீஷ் சிவலிங்கம், ஆரோக்கிய  ராஜீவ், அய்யாசாமி தருண், மாரியப்பன், சாந்தி சவுந்தர ராஜன்  என்று நீளும் பட்டியலில்  புதிதாகச் சேர்ந்திருப்பவர்   நிவேதா.   ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்குப் பக்கத்தில்  இருக்கும்  காஞ்சிக்கோவிலைச் சேர்ந்தவர் நிவேதா. பத்தொன்பது வயதாகிறது. 

நிவேதா  பெருந்துறை கொங்கு பொறியியல்  கல்லூரி யில்  கணினி விஞ்ஞானம்  இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார்.  துப்பாக்கி கொண்டு குறி  பார்த்துச்  சுடுவதில் ஆர்வம் உடைய  நிவேதா,  பன்னிரண்டாவது வயதிலேயே  கோயம்புத்தூர்  ரைபிள் கிளப் உறுப்பினராகப்  பதிவு செய்து கொண்டு பயிற்சி பெற்று வருகிறார். ஏர் பிஸ்டல், ஸ்போர்ட்ஸ் பிஸ்டல், ஷாட் கன் போன்ற பிரிவுகளில் மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில்  2010 லிருந்து  கலந்து கொண்டு அய்ம்பதிற்கும்   மேற்பட்ட பதக்கங்களை வாங்கிக் குவித்ததுடன்,   2015-இல் கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற தேசிய துப்பாக்கிச்சுடும் போட்டியில் நிவேதா  கலந்துகொண்டு தங்கம்,  வெண்கலம் பதக்கங்களைப்பெற்றுள்ளார். தேசிய அளவில்  ஆறு  தங்கம்,  நான்கு   வெள்ளி,  நான்கு  வெண் கலப்  பதக்கங்களை குவித்துள்ளார். சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பு சார்பில்  வரும் ஆகஸ்ட் மாதம் 15 முதல் 22  வரை  இத்தாலியில் ப்ரபெட்டோ நகரில் உலகக் கோப்பை போட்டி நடக்க  உள்ளது.  தொடர்ந்து,  ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 11 வரை ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் “உலக வாகையர் பட்டப்போட்டி’யும் நடக்க இருக்கிறது.  இந்தப் போட்டிகளுக்கான  தேர்வு  சென்ற   மாதம்  டில்லியில் நடைபெற்றது. தேர்வுப் போட்டிகளில்  கலந்து கொண்ட  நிவேதா ,  இந்தியாவின் சார்பில் உலகக் கோப்பை போட்டியில் பங்கெடுக்கத் தேர்வாகி இருக்கிறார்.

துப்பாக்கி கொண்டு  குறி பார்த்து சுடுவதில்  சூட்டி கையான  நிவேதாவுக்கு  ஒரே ஒரு லட்சியம்தான். “2020-இல்  ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில், இந்திய அணியில் கலந்து கொண்டு தங்கம் வெல்ல வேண்டும்... ஒலிம்பிக்கில் தங்கம்  என்பதே  எனது  குறிக்கோள்.  அதை சாதித்துக் காட்டுவேன்’  என்கிறார்  நிவேதா...!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner