எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பல ஆண்டுகளாக தன்னை ஆண் என காட்டிக்கொண்ட ஒரு பெண் தற்போது கோடீஸ்வரியாக உயர்ந்துள்ளார். இது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தான்சானியா நாட்டை சேர்ந்தவர் பிளி ஹூசைன். இவர் சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை கால்நடை பராமரிப்பாளர். அவருக்கு 6 மனைவிகள், 38 குழந்தைகள். இவர்களது குடும்பம் மிகப்பெரியது. குடும்ப சூழ்நிலை காரணமாக என் அப்பா என்னை ஓர் ஆணைப் போலவே பழக்கினார். எனக்கு கால்நடைகள் பராமரிக்கும் வேலை கொடுக்கப்பட்டது. ஆனால், எனக்கு அந்த வேலை கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆனாலும் அந்த வேலையை செய்து வந்தேன். இந்நிலையில் எனக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. அதன் பிறகாவது எனது வாழ்க்கைத்தரம் மாறும் என்று நினைத்தேன். ஆனால் எனது கனவு மீண்டும் பொய்த்து போனது. எனக்கு வாய்த்த கணவனால் என் வாழ்க்கை மீண்டும் நரகமாகவே இருந்தது. இதன் காரணமாக தனது 31 வயதில் அவரிடம் இருந்து பிரிந்துவிட்டேன் என்று கூறும் ஹுசைன் தொடர்ந்து வாழ்க்கை நடத்த சிரமப்பட்டதாகவும், அதன் காரணமாக வேலை தேடி அலைந்ததாகவும், ஆனால் வேலை கிடைப்பது மிகவும் சிரமமாக இருந்ததாகவும் கூறுகிறார்.

தொடர்ந்து முயற்சித்ததன் காரணமாக ஆப்பிரிக்காவின் உயர்ந்த மலையான கிளிமாஞ்சாரோவின் அடிவாரத்தில் இருக்கும் சிறிய நகரான மெரெரானி பகுதியில் உள்ள சுரங்கத் தொழிலில் வேலை கிடைத்துள்ளது. இந்த சுரங்கத் தொழிலில் ஆண்கள் மட்டுமே பணிபுரிய முடியும். பெண்களுக்கு அனுமதி கிடையாது. அதன் காரணமாக, தான் பெண் என்பதை தெரிவிக்காமல், பெயரை ஹுசைன் என்று மாற்றி பணியில் சேர்ந்ததாக கூறுகிறார். என்னை இங்குள்ளவர்கள் அங்கிள் ஹுசைன் என்றுதான்  அழைப்பார்கள்,  நான் பெண் என்பது தெரிந்தபிறகும் அங்கிள் என்றே அழைக்கப்படுகிறேன் என்றும் பிளி ஹுசைன் கூறுகிறார்.

சுரங்கத்தில் 600 மீட்டர் ஆழம் வரை சென்று ஆண்களுக்கு இணையாக இந்த வேலைகளை செய்வேன் என்றும், நான் பெண் என்பதே  தெரியாதவாறு பணி செய்ததாகவும் கூறுகிறார். தான் சுரங்கத்தில் வேலை செய்தபோது, பெண் என்று தெரிய வந்ததும், சிலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதன் காரணமாக தனது ஆண் அடையாளத்தைத் துறந்ததாகவும் கூறுகிறார். நான்  பெண் என்று சொன்னதை காவல்துறையினர் கூட முதலில் நம்பவில்லை என்றும் கூறுகிறார். 2001ஆம் ஆண்டு எனக்கு திருமணமாகி, குடும்பம் நடத்தத் தொடங்கியதற்கு பிறகுதான், நான் பெண் என்பதை அனைவரும் நம்பினார்கள் என்றும் கூறி உள்ளார்.  நான் உண்மையிலேயே பெண் தானா என்ற கேள்வி என் கணவரின் மனதிலும் இருந்தது என்று சொல்லும் பிளி, என்னிடம் நெருங்குவதற்கு அவருக்கு அய்ந்து ஆண்டுகள் ஆனது என்பதையும் வெளிப்படையாகவே சொல்கிறார்.

சில ஆண்டுகளில் தனக்கு இரண்டு விலை உயர்ந்த தன்சானைட் ரத்தினக் கற்கள் கிடைத்ததாகவும், அதன் காரணமாக தற்போது தான் செல்வந்தராகிவிட்டதாகவும் கூறுகிறார். தற்போது தன்னிடம் உள்ள பணம் காரணமாக, பெற்றோருக்காகவும், தனது இரட்டைச் சகோதரிகளுக்காகவும் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், தானே தனியாக சுரங்கத் தொழில் நடத்தி வருவதாகவும், சுரங்கத்தில் வேலை செய்பவர்கள் பயன்படுத்தும் புதிய வகையான கருவிகள் வாங்கி, பல சுரங்கத் தொழிலாளிகளுக்கு வேலை கொடுத்துள்ளதாகவும் கூறுகிறார்.  வெற்றிகரமாக தொழிலை அமைத்துக்கொண்ட பிளி, 70 தொழிலாளிகள் கொண்ட ஒரு சுரங்க நிறுவனத்தின் முதலாளியாக உயர்ந்துவிட்டார். அதில் மூன்று பேர் பெண்கள் என்றாலும், அவர்களின் வேலை சமைப்பதுதான், சுரங்க வேலை அல்ல. தான் இந்தத் தொழிலில் ஈடுபட்டபோது இருந்ததை விட இப்போது இந்தத் துறையில் பெண்கள் அதிகமாகிவிட்டாலும், இன்றும் அவர்களின் எண்ணிக்கை சொற்பமே என்று பிளி கூறுகிறார்.

கற்களை சுத்தப்படுத்துவது, இடைத் தரகர்கள், சமையல் வேலை போன்ற தொழில்களில் சில பெண்கள் ஈடுபட்டிருக்கின்றனர். சுரங்கத்திற்குள் சென்று யாரும் வேலை செய்வதில்லை. அங்கு சென்று, நான் செய்ததைப் போன்ற வேலைகளை செய்வது என்பது சுலபமானதல்ல என்று பிளி சுட்டிக்காட்டுகிறார். பிளி தனது கடின உழைப்பினால் அடைந்த வெற்றியால் தனது உடன் பிறந்தவர்களின் முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள், பேரக் குழந்தைகளுக்கு கல்வியளிக்கிறார். ஆனால், தன் மகள் தனது வழியை பின்பற்றுவதை பிளி விரும்பவில்லை. என்னுடைய கடின உழைப்பு, அதன் மூலம் நிறைய பணம் சம்பாதித்தது என பெருமைப்பட நிறைய விஷயங்கள் இருந்தாலும், அது சுலபமானதல்ல. நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும் என்கிறார் பிளி. வேறு யாரும் அதுபோன்ற கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளக்கூடாது என்று நினைக்கும் பிளி. தனது மகள் நன்றாக கல்வி கற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். பிற்காலத்தில் அவள் விரும்பும் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கட்டும், ஆனால் எனக்கு கிடைத்ததைப் போன்ற அனுபவங்கள் அவளுக்கு ஒருபோதும் கிடைக்கக்கூடாது என்கிறார் உறுதியாக.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner