எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெண் கல்வி : கேள்விக்குறியாகவே உள்ளது

பள்ளிக்கல்வி துறையில் தொடர்ந்து பல புதிய அறிவிப்புகள் வந்தாலும், தமிழகத்தில் பெண் கல்வி  கேள்விக்குறியாகவே இருக்கிறது. பொருளாதார அடிப்படையில் பெரும்பாலான பெண் களின் கல்வி தடைபட்டுப் போகிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பெண்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் முனைவர் பட்டம் பெறும் வரை இலவசக் கல்வி என்று அறிவிப்பு செய்து அம்மாநில முதல்வர் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். தமிழகத்தில் இலவசக் கல்வி நிலைமை குறித்து ஒரு சிலரிடம் கேட்டோம்.கவிஞர் தி.பரமேசுவரி இது குறித்து கூறுகையில், பெண்கல்வியும் இலவசக் கல்வியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இலவசக் கல்வி  அனைவருக்குமே பொதுவான ஒன்று. என்றபோதிலும் இன்று பல கிராமங்களில் இலவசக் கல்வி இல்லை என்றால் பெண்கள் அடிப்படை கல்வியைக்கூட பெற முடியாது.

இலவசக் கல்வியைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் வழங்கப் பட்ட இலவச மிதி வண்டி திட்டத்திற்குப் பிறகு கிராமப்புறப் பெண்கள் பள்ளிக்கு வருவது அதிகரித்தது. பெற்றோர்களுக்கு தன்னுடைய பெண் குழந்தை பேருந்தில் பள்ளிக்குச் சென்று வருவதை ஒப்புக்கொள்வதில் சிக்கல் இருந்தது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண்களுக்கான உதவித்தொகை இருக்கிறது. இப்படி பல திட்டங்கள் பெண் கல்வியை ஊக்குவித்தது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் நெடுங்காலமாகவே பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பாலான கிராமப்புற பெண்களுக்கு அடிப்படை கல்வி கிடைக்கிறது என்றால் அரசுப் பள்ளிகளே அதற்கு முக்கிய காரணம்.இதுவரை அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மீதும் ஆசிரியர் பற்றாக்குறை போன்ற விஷயங்களாலும் மக்களிடையே அவற்றின் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தது. கல்வித்துறை பல முயற்சிகளை எடுத்து இலவச கல்வி குறித்து மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. ஓரளவிற்கு அடிப்படைக் கல்வி பெண்களுக்கு சாத்தியப்பட்டிருக்கிறது என்றால் தமிழகத்தில் உள்ள இலவசக் கல்விதான் அதற்குக் காரணம்.

ஆனாலும் அடிப்படைக் கல்வியைத் தாண்டி பெண்களின் மேற்படிப்பு என்பது இன்றுவரையிலும் கேள்விக்குறியாக இருக் கிறது. இதற்கு பெற்றோர்களே முக்கிய காரணமாக இருக்கிறார்கள். கிராமப்புற பெண்கள் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் மேற் படிப்பிற்கான செலவு ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. மேற்படிப்பு, திருமணம் இப்படி தொடர் செலவுகளை மய்யப்படுத்தி கல்வி தடைபடுகிறது.இது குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தற்போது பெண் களுக்கு மேற்படிப்பு குறித்து ஆலோசனையை வழங்கி வரு கிறார்கள். கல்லூரிகளில் இலவசக்கல்வி  ஏற்பட்டால் கல்வி பெண் களுக்கு முழுமையாக கிடைக்கும். ஒவ்வொருவருக்கும் பெண் கல்வி குறித்து விழிப்புணர்வு தேவை.

அடிப்படையிலிருந்து ஓர் ஆணுக்கு கல்வி கொடுத்தால் அவர் குடும்பத்தையே பார்த்துக்கொள்வார் என்கிற மனநிலை நம் மக்களுக்கு இருக்கிறது. இந்த மனநிலை மக்கள் மத்தியில் மாற வேண்டும். அரசுக் கல்லூரிகளில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.  இதைப் பயன்படுத்தி பெற்றோர்கள் தங்களுடைய பெண் குழந்தைகளுக்கு முழுமையான கல்வியை அளிக்க வேண்டும் என்கிறார் தி.பரமேசுவரி.இதுகுறித்து கல்வியாளர் வசந்திதேவியிடம் கேட்டபோது, தமிழகத்தைப் பொறுத்தவரை ஆண்-பெண் இருவருக்குமே காசுக்கேற்ற கல்வி என்றுதான் வைத்திருக்கிறார்கள். தனியார் பள்ளிகளையே பெற்றோர்கள் தேடிச்செல்கிறார்கள். தற்போது உள்ள அரசு கல்வி முறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்தும் அறிவிப்புகள் ஒன்றும் இல்லை. டிஜிட்டல் வகுப்பறைகள் என்று அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தினாலும், தனியார் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறையுமா என்று தெரியவில்லை. தனியார் பள்ளிகளை குறைப்பதற்கு அரசு தயாராக இல்லை. தனியார் பள்ளி களுக்கு எந்த விதமான கட்டுப்பாடுகளையும் அரசு விதிப்பதும் இல்லை. முறையின்றி பல தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில்தான் பெண் குழந்தைகளை பெற்றோர் சேர்க்கிறார்கள். அங்கே அந்த பெண் குழந்தைக்கு பாதுகாப்பு என்பது கேள்விக் குறியாக இருக்கிறது.

பெண் கல்விக்கு ஆதரவான கல்விமுறை இங்கு இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அரசியல் பிரமுகர்கள் வழங்கக்கூடிய இலவசங்களைப் பெறுவதற்கு முந்திச் செல்கிற மக்கள், இலவசக் கல்வியை ஏற்க மறுக்கிறார்கள். தனியார் பள்ளிகளின் எண்ணிக் கையை குறைத்தால்தான் மக்களுக்கு இலவசக் கல்வி மீது நம்பிக்கை ஏற்படும். இங்கு இருக்கக்கூடிய தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்தாமல் இலவசக்கல்வி மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படாது என்கிறார் வசந்திதேவி.


கழிப்பறை இல்லாததால் விவாகரத்து

ராஜஸ்தானில் மனைவிக்குக் கழிப்பறை கட்டித் தராத கணவனிடமிருந்து பிரிந்து வாழ விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. 2011-இல் ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த சோட்டு லாலுக்கும் சங்கீதாவுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடப்பதற்கு முன்பே கழிப்பறை வசதி செய்துதரப்படும் என்று சோட்டு லால் குடும்பம் தரப்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. ஒவ்வொரு நாளும் இருள் வருவதுவரை காத்திருப்பதும் அதிகாலையிலேயே திறந்த வயல்வெளிகளைத் தேடிப் போவதும் சங்கீதாவுக்கு மிகுந்த சங்கடத்தை அளித்துவந்தது. இதனால், கடந்த ஆண்டு விவாகரத்து கோரி அவர் வழக்குப்பதிவு செய்தார். சங்கீதா மாலிக் தொடர்ந்த வழக்கு வடஇந்திய நாளிதழ்களில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டது. இந்நிலையில் நீதிபதி ராஜேந்திர குமார், விவாகரத்து வழங்கினார். மது, புகையிலை, மொபைல் போன்களுக்குச் செலவழிக்கப் பணம் உள்ள நிலையில், வீட்டில் கழிப்பறை கட்ட முடியாதது முரண்பாடானது என்றும் தனது தீர்ப்பில் அவர் கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner