எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஒரு காலத்தில் சைக்கிள் வைத்திருந்தாலே கிராமப்புறத்தில் மதிப்பு அதிகம். சைக்கிள் பயன்பாடு மெல்ல மெல்லத் தேய்ந்து, தற்போது பள்ளி மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வாகனமாக மாறிப்போனது. பைக், கார் போன்ற மோட்டார் வாகனங்களில் பறக்கவே பலரும் ஆசைப்படும் இந்தக் காலத்திலும், மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் கே.வளர்மதி சைக்கிளிலேயே மதுரை வீதிகளில் உலா வருகிறார். சிறுவயதில் ஆசைப்பட்ட சைக்கிளை வாங்க முடியாத வறுமையே, வசதி வந்த பின்னும் அவரை எளிமையான வாழ்க்கைக்குப் பழக்கியது என்கிறார்.

எளிமையும் சுற்றுப்புறத் தூய்மையும்

மதுரை வடக்கு வெளி வீதியில் பிறந்து வளர்ந்தேன். மாநகராட்சிப் பள்ளியில் படித்தேன். 10ஆம் வகுப்பு முடித்து, ஒரு ஓட்டலில் வேலை செய்தேன். என் தோழி மலர்விழி காவல்துறை வேலையில் இருந்தார். அவரே நானும் காவல்துறையில் வேலையில் சேர முடியும் என்று நம்பிக்கை ஊட்டினார். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு 2000இல் தேர்வானேன். 1996இல் அப்பாவை இழந்திருந்தேன். காவலர் பணிக்குத் தேர்வான தகவலைத் தாயிடம் சொன்னேன். பணியில் சேரும் முன்பே, அவரும் இறந்துவிட்டார்.

இந்தப் பணியை நான்கு பேருக்கு உதவக் கிடைத்த வாய்ப்பாகப் பார்க்கிறேன். அரசு வேலை, நல்ல சம்பளம் என்று வசதி வந்தாலும் எளிமையாக வாழ முடிவெடுத்தேன். அதோடு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு என்னால் இயன்ற சிறு பங்களிப்பாகப் புகை மாசுவை வெளியிடும் இருசக்கர வாகனத்தைத் தவிர்த்தேன். பணிக்குச் சேர்ந்ததற்கு முன்பிருந்து கடந்த 20 ஆண்டுகளாக எங்கு சென்றாலும், சைக்கிளில்தான் செல்கிறேன்.

சைக்கிள் இல்லை என்றால் பேருந்து  அல்லது ஆட்டோவில் செல்வேன். நினைத்தால் மானிய விலையில் கார் வாங்கலாம். ஆனாலும், அதில் விருப்பம் இல்லை. திருமண வாழ்க்கையை நம்பவில்லை. எளிமையாக ஆன்மிக வழியில் வாழ்கிறேன். என்கிறார் வளர்மதி.

அத்துடன் சைக்கிள் ஓட்டுவதால் தனக்குக் கிடைத்துள்ள நன்மைகளை விவரிக்கிறார் வளர்மதி. தொடர்ந்து சைக்கிள் ஓட்டுவதால் தலைமுதல் பாதம் வரை ரத்த ஓட்டம் சீராக இருக்கிறது. உடலில் கெட்ட நீர் வியர்வையாக வெளியேறிவிடுகிறது.
இரவில் தாமதமாகத் தூங்கினாலும், காலையில் சுறுசுறுப்புடன் எழ முடிகிறது. காவல் துறையில் 24 மணி நேரமும் பணிக்குத் தயாராக இருக்க வேண்டும், சைக்கிள் ஓட்டுவதால் எப்போதும் சோர்வின்றி இருக்க முடிகிறது என்கிறார்.


 

சாதிக்கத் தூண்டும் சாதனையாளர்

பள்ளி ஆசிரியை ஆகியிருக்க வேண் டிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளம்பெண் சாதனைகள் செய்வதிலும் மாணவர்களை சாதனை செய்ய ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்தினார். இதன் மூலம் அந்த மாவட்டத்தின் முக்கிய ஆளுமையாக தற்போது உயர்ந்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் களஞ்சியம் நகரைச் சேர்ந்தவர் கலைவாணி (23). எம்.ஏ. ஆங்கில இலக்கியம், பி.எட். படித்துள்ள இவருக்குத் தன்னம்பிக்கைப் பேச்சாளர், கவிஞர், சாதனையாளர்களை உருவாக்கும் சாதனையாளர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூக ஆர்வலர் எனப் பல முகங்கள். ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் படித்த காலத்திலேயே பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் பலவற்றில் பங்கேற்றுப் பரிசுகளைப் பெற் றுள்ளார். அதன் பின்பு கல்லூரியிலும் அவருடைய பரிசுவேட்டை தொடர்ந்தது.
கீழக்கரை தாசீம்பீவி கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் படித்தேன். கல்லூரி நிர்வாகம் என் ஆர்வத்தை ஊக்குவித்தது. இத னால் மாநில, தேசிய அளவிலான சாதனைப் புத்தகங்கள் தொடங்கி, அசிஸ்ட், லிம்கா உள்ளிட்ட உலக சாதனைப் புத்தகங்கள்வரை இடம்பெற்றேன் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் கலைவாணி.

இவர் எழுதிய கவிதை மிக நீளமான கவிதை என்ற பெயரில் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.  சாத னைப் புத்தகங்களில் இடம்பெறத் தன் தோழி தஹ்மிதா பானு மிகவும் உதவியாக இருந்ததை நன்றியுடன் நினைவுகூரும் கலைவாணி, தற்போது மற்றவர்கள் சாதனைகளைப் படைத்து அங்கீகாரம் தேட வழிகாட்டியாக இருந்துவருகிறார்.

சாதனையாளர்களின் வழிகாட்டி


தமிழகத்தில் பலர் திறமையும் ஆர்வமும் இருந்தும் இதுபோன்ற சாதனைகள் செய்ய வழி தெரியாமல் உள்ளனர். இந்த நிலையை மாற்றும் நோக்கில் களமிறங்கினேன். அதன்படி திருச்சியை மய்ய மாகக்கொண்டு செயல்படும் உலக சாதனைப் புத்தக அமைப்பில் ஒருங்கிணைப்பாளராக இணைந்து பணியாற்றினேன். ராமநாதபுரம் மாவட்டச் சிறுவர்கள் சிலரை உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற வைத்தேன். தனியார் அமைப்புகள் நடத்தும் உலக சாதனைப் போட்டிகளில் பங்கேற்க அதிகக் கட்டணம் வசூலிப்பதால், பலரால் பங்குபெற முடியாமல் போகிறது. அதனால் ராமநாதபுரத்தில் வில் மெடல் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அன்ட் ரிசர்ச் பவுன்டேசன் என்ற அமைப்பை ஒரு மாதத்துக்கு முன் தொடங்கினேன். அதன் மூலம் உலக சாதனையாளர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறேன் என்கிறார்.