எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கால்நடை மருத்துவம் படித்து, அமெரிக்காவில் மருத்துவராகப் பணியாற்ற வாய்ப்பு வந்தபோதும் அதை மறுத்துவிட்டு இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவதற்காகத் தாய்நாடு திரும்பியவர், ஆனந்தி.

கும்பகோணத்தில் வசிக்கும் அவர் விவசாயப் பணியில் ஈடுபட்டதோடு ஏழு ஆண்டுகளாக அதில் சாதித்தும் வருகிறார்.  
இது குறித்து அவர் கூறுகையில், 

என் சொந்த ஊர் தர்மபுரி. சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் படித்தேன். அப்போது என்னுடன் கும்பகோணத்தைச் சேர்ந்த ஆனந்தும் படித்தார். இருவரும் காதலித்து 2003ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் மணமுடித்துக்கொண்டோம். திருமணத்துக்குப் பின் அமெரிக்காவுக்குப் போனோம். இருவரும் அங்கு எம்.எஸ். படித்தோம்.

பத்து ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தோம். அங்கு என் கணவருக்கு வேலை கிடைத்தது. எனக்கும் அங்கேயே கால்நடை மருத்துவராகப் பணியாற்ற வாய்ப்பு வந்தது. எனக்கு அங்கு வேலை பார்க்க விருப்பமில்லை. சொந்த ஊருக்குச் சென்று விவசாயத்தில் ஈடுபட நினைத்தேன் என்று முன்கதையைச் சொல்கிறார் ஆனந்தி.

அமெரிக்காவில் எம்.எஸ். படித்துக்கொண்டிருந்த போது எண்டோசல்பான் பூச்சிக்கொல்லியின் தாக்கம் குறித்துத் தெரிந்துகொண்டோம். பூச்சிக்கொல்லி பூச்சி களையும் பறவைகளையும் மட்டும் கொல்லும் உயிர் கொல்லி என்பதைவிட மனிதனைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் நச்சு என்பதை உணர்ந்தோம்.

நாம் உண்ணும் உணவு மூலம் நம்மை அறியாமலேயே நச்சுப் பொருட்கள் நம் உடலுக் குள் செல்வதை அறிய முடிந்தது. ஆகவே நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்ய முடிவு செய்தோம் என்கிறார் ஆனந்தி.

2010ஆம் ஆண்டு கும்பகோணம் அருகே தில்லை யம்பூரில் 15 ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் இயற்கை சாகுபடி முறையில் பயிர் செய்தார். விவசாயம் குறித்த அரிச்சுவடிகூட ஆனந்திக்குத் தெரியாது. இருந்தாலும் களத்துக்குச் சென்றால் எல்லாமே தானாக வந்துவிடும் என்று குடும்பத்தினர் கொடுத்த ஊக்கம் அவரை வழிநடத்தியது.

தொடக்ககால அறைகூவல்கள்


முதல் மூன்று ஆண்டுகளில் நிலத்தைச் செம்மைப் படுத்தவும் நிலத்தில் தண்ணீர்க் குழாய் பதிக்கவும் பெரும் தொகையைச் செலவிட்டார். மண்புழு உரம்,   அமிர்தக் கரைசல், ஜீவாமிர்தம், மீன் அமிலம், பூச்சு விரட்டி ஆகியவற்றை வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்துகிறார்கள்.

பாரம்பரிய நெல்களின் விளைச்சல்

நெல் ரகங்களை மட்டுமே பயிரிடுகின்றனர். குறுவைப் பட்டத்தில் கருங்குறுவை, குள்ளக்கார், அறுபதாம் குறுவை ஆகிய வற்றையும், சம்பா பட்டத்தில் மாப்பிள்ளைச் சம்பா, சீரகச் சம்பா, மதுரைப் பொன்னி, ஆத்தூர் கிச்சிலி சம்பா ஆகியவற்றையும் பயிரிட்டுவருகிறோம் என்கிறார் ஆனந்தி.

அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தொடக்கத்தில் சிரமப்பட்டிருக்கிறார். தற்போது இவருக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்தி ருக்கின்றனர்.

காய்கறி வகை களையும் பயிரிடுகிறார். கீரை, மஞ்சள், தக்காளி, அவரை, புடலை போன்ற வற்றைப் பயிரிடுகிறோம். இதற்காகவே வாட்ஸ்அப் குழு ஒன்றை வைத்துள்ளேன். என்னுடன் படித்தவர் களுக் கும் பேராசிரியர்களுக்கும் சென்னைக்கு பார்சல் மூலம் அனுப்பி வைக்கிறேன் என்கிறார் ஆனந்தி.

விவசாயமே வாழ்க்கை

இவரது வீடு கும்பகோணத்தில் உள்ளது. குழந்தை களைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு மதிய சாப்பாட்டுடன் வயலுக்கு வந்து விட்டு மாலை நான்கு மணிக்கு வீடு திரும்புகிறார். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு மகள்களையும் உடன் அழைத்து வருகிறார்.
தற்போது சிறிய ரக இயந்திரத்தை வைத்து உழவு செய்கிறேன். விரைவில் டிராக்டர் மூலம் உழவுப் பணியில் ஈடுபடுவேன். கால்நடை மருத்துவராகப் பணியாற்றினால் அதிகமாகச் சம்பாதிக்கலாம். ஆனால், இயற்கை விவசாயத்தில் கிடைக்கிற நிறை வுக்கு அது ஈடாகாது என்கிறார் ஆனந்தி.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner