எழுத்துரு அளவு Larger Font Smaller Font


டென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் 209 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்தவர். ஒற்றையர் பிரிவில் 5 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், இரட்டையர் பிரிவில் 13, கலப்பு இரட்டையர் பிரிவில் 7 என மொத்தம் 25 கிராண்ட்ஸ்லாம்களை வென்றவர்.

அத்துடன், ஆண்டுதோறும் தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் டிபிள்யூடிஏ உலக டூர் பைனல்ஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் 2 முறையும், இரட்டையர் பிரிவில் 3 முறையும் வாகையர் பட்டங்களையும், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியவர்.

இத்தனை சாதனைகளுக்கும் சொந்தக்காரர் சுவிட்சர் லாந்து டென்னிஸ் வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ்.

இளமைக் காலம்: மத்திய அய்ரோப்பாவில் உள்ள செக்கோஸ்லோ வியாவில் கரோல் ஹிங்கிஸ், மெலானி மோலிட்ரோவாவுக்கு  கடந்த 1980ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி பிறந்தார் மார்டினா ஹிங்கிஸ். தாய், தந்தை இருவருமே டென்னிஸில் வீரர்கள். இதனால், குழந்தைப் பருவத்திலேயே டென்னிஸ் மீதான காதல் மார்டினாவுக்குள் துளிர்த்தது.

அவரை உலகம் போற்றும் டென்னிஸ் வீராங்கனையாக்க வேண்டும் என்று அவரது தாயும் கனவு கண்டார். தனது 2 வயதில் டென்னிஸ் பந்தையும், மட்டையையும் வைத்து விளையாடத் தொடங்கினார் மார்டினா. 4 வயதில் பல பேர்களை எதிர்கொள்ள வேண்டிய போட்டியில் முதன் முதலில் விளையாடினார். இவர் 6 வயதை எட்டும்போது பெற்றோர் விவாகரத்து பெற்றனர். அதைத் தொடர்ந்து தாயாருடன் 7 வயதில் சுவிட்சர்லாந்துக்குச் சென்றார். அங்கு, இயல்புரிமை அடிப்படையில் குடியுரிமைப் பெற்றார்.

12 வயதில் பட்டம்: கடந்த 1993-ஆம் ஆண்டில் நடை பெற்ற பிரெஞ்ச் ஓபன் ஜூனியர் டென்னிஸ் போட்டியில் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் மார்டினா. அப்போது அவருக்கு வயது 12. அதைத் தொடர்ந்து 1994-ஆம் ஆண்டில் தனது 14 வயதில் மதிப்புமிக்க விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்று மீண்டும் சாதனை படைத்தார்.

ஆஸ்திரேலிய ஓபனில் முன்னாள் வாகையர் மேரி பியர்சை  வீழ்த்தி 16 வயதில் கிராண்ட்ஸ்லாம் வென்றார்.

இதன்மூலம், இருபதாம் நூற்றாண்டில் மிக இளம் வயதில் ஒற்றையர் மகளிர் பிரிவில் கிராண்டஸ்லாம் வென்ற வீராங்கனை என்ற புதிய சாதனையைப் படைத்தார். ஓராண்டில் 4 கிராண்ட்ஸ்லாம்: ஆஸ்திரேலியா ஓபன், அமெரிக்கா ஓபன், பிரெஞ்ச் ஓபன் (களிமண் தரைத்தளம்), விம்பிள்டன் ஓபன் ஆகியவற்றில் கடந்த 1998-ஆம் ஆண்டில் மகளிர் இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று டென்னிஸ் உலகைத் தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்.

ஓய்வை அறிவித்த பிறகும் டென்னிஸ் மீதான தீராத காதலால் மீண்டும் 2005-ஆம் ஆண்டில் டென்னிஸ் உலகுக்குள் நுழைந்தார். சில தோல்விகளைச் சந்தித்தாலும் வெற்றிகளை மீண்டும் ருசிக்கத் தொடங்கினார்.

இந்திய டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியுடன் கூட்டணி அமைத்து கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்தி ரேலியா ஓபனில் கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் வெற்றியைப் பதிவு செய்தார் மார்டினா.

ஊக்க மருந்து சர்ச்சை: மார்டினாவை ஊக்கமருந்து பயன்பாட்டுக்காக இரண்டாண்டுகள் தடை செய்தது சர்வதேச டென்னிஸ் சங்கம். அதைத் தொடர்ந்து, இரண் டாவது முறையாக ஓய்வை அறிவித்தார் மார்டினா. ஊக்க மருந்து சர்ச்சையில் டென்னிஸ் ரசிகர்களும், சில சக வீரர், வீராங்கனைகளும் இவருக்கு ஆதரவாக இருந்தனர். இதுபோன்ற சவால்களைக் கடந்து, 2013-ஆம் ஆண்டு மீண்டும் பல்வேறு போட்டிகளில் களம் கண்டார்.

2015ஆம் ஆண்டில், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் போட்டிகளிலும், 2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனிலும் இந்தியாவின் சானியா மிர்ஸாவுடன் இணைந்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றார். அதேபோன்று, கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயாசுடன் இணைந்து கிராண்ட்ஸ்லாம்களை வென்ற இவர் மீது மீண்டும் புகழ் வெளிச்சம் பரவத் தொடங்கியது.

கழிவில் இருந்து ஒரு கலை: தடம் பதிக்கும் ஷிகா

இன்றைய உலகில் புதிய புதிய தொழில்கள், தொழில் யோசனைகள் நாளுக்கு நாள் உருவாகிக் கொண்டே வருகின்றன. அந்த வகையில் உபயோகமில்லை என்று கருதி தூக்கி எறியும் கழிவுப் பொருள்களைச் சேகரித்து அவற்றை உபயோகமுள்ள கலைப் பொருள்களாக மாற்றும் பணியை ஓர் இளம்பெண் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்தவர் 27 வயதாகும் ஷிகா ஷா. பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த இவர் கல்லூரியில் படிப்பதற்காக டில்லி வந்தார். ஆனால் டில்லி மாநகரமே அவருக்கு படிப்பினையாக மாறிப்போனது. வாழ்வாதாரத்துக்காக வறுமை, மாசுபாடு, சுற்றுப் புறச்சூழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தாங்கி, அன்றாடம் மக்கள் போராடுவதைக் கண்டார். சிறிய நகரில் பிறந்த அவருக்கு இது ஓர் அதிர்ச்சியாகவே இருந்தது. கல்லூரியிலும் சுற்றுச்சூழல் அறிவியல் படிப்பையை தேர்ந்தெடுத்துப் படித்தார். அதன் பின்பு சென்னை அய்அய்டியில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.  கல்லூரிப் படிப்பை முடித்த அவர் ரிலையன்ஸ் நிறுவனத்தில் சமூக பங்களிப்புத் துறையில் பணியாற்றினார். அதன் காரணமாக சேவை புரிவதற்காக நாடு முழுவதும் சுற்றி வந்தார். அந்தச் சமயத்தில் பல்வேறு கிராமப்புற சமுதாயத்தினருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது ஷிகாவுக்கு.

இறுதியாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும், வேலையில்லாத பலருக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் வகையிலும் தொழில் தொடங்க முடிவெடுத்தார். தனது வேலையைத் துறந்தார்; சொந்த ஊருக்குத் திரும்பினார். “பல நாள்கள் யோசனைக்குப் பிறகு பயன்பாட்டுக்கு உதவாது என்று மக்கள் தூக்கியெறியும் மக்காத குப்பைகள் அல்லது பொருள்களைச் சேகரித்து, அதிலிருந்து கலைநயமிக்க அழ கான பொருள்களை உருவாக்கத் தீர்மானித்தேன்.

உத்தரப்பிரதேசம் பாரம்பரியத்துக்கும், கலை மற்றும் கைவினைப் பொருள்களுக்கும் பெயர் போன மாநிலம். ஆனால் இயந்திரமயமாக்கலுக்கு பின்னர் என் நகரத்தைச் சேர்ந்த பல்வேறு கைவினைக் கலைஞர்கள் வேலையில்லாமலும், வேலைகளை இழந்தும் கஷ்டப்பட்டும் வந்தனர். எனவே, அவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கத் தீர்மானித்தேன்’’ என்றார் ஷிகா.

முதலில் தனது வீட்டில் கிடைக்கும் கழிவுப் பொருள்களைக் கொண்டு உபயோகமான பொருள்களை உருவாக்கியுள்ளார். அதன் பின்பு ஒரு நகராட்சி அலுவலகத்துக்கு சென்று அங்கு கிடைத்த கழிவுப் பொருள்களைக் கொண்டு கலைப் பொருள்களை உருவாக்கினார்.

இப்போது பல்வேறு இடங்களில் இருந்து சேகரித்து பல கண்ணைக் கவரும் வண்ணமயமான பொருள்களை உருவாக்கி வருகிறார். “என்னுடைய நிறுவனத்துக்கு “ஸ்கிராப்சாலா’ என்று பெயர் வைத்தேன் (ஆங்கிலத்தில் ஸ்கிராப் என்றால் கழிவுப் பொருள்கள் என்று பொருள்). கழிவுப் பொருள்களில் இருந்து கலைப் பொருள்களை உருவாக்கும் கைவினைஞர்களைக் கண்டறிந்து வேலைக்கு அமர்த்துவதில் எனக்கு சிக்கல் ஏற்படவில்லை. ஆனால் அவர்களைத் தொடர்ந்து பணியாற்ற வைப்பது தான் சவாலாக இருந்தது. பணியாற்றும் கைவினைஞர்களிடம் அவர்கள் இத்தனை ஆண்டுகளாக எதை உருவாக்கினார்களோ அதையே இங்கும் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தேன்.  எதையோ உரு வாக்குகிறோம் என்று அந்தக் கைவினைஞர்களுக்குத் தெரியும். ஆனால் அது விற்பனையாகுமா, யார் அதனை வாங்குவார்கள், தங்களுக்கு வாழ்வாதாரத்துக்கு வழி கிடைக்குமா என்ற குழப்பம் அவர்களைப் பீடித்தது. இதனால் சில மாதங்களிலேயே பல கைவினைஞர்கள் வேலையை விட்டு விட்டுப் போய் விட்டனர்.  மேலும் தொழிற்சாலைத் தொடங்குவதற்காக கழிவுப் பொருள்களைக் கொண்டு பொருள்கள் தயாரிக்கும் தொழில் என்பதைப் புரிந்து கொள்ளும் நில உரிமையாளரைக் கண்டறியவும் சிரமப்பட்டோம்  என்றார் ஷிகா.

பிளாஸ்டிக், ரப்பர், கண்ணாடி என மக்காத கழிவுப் பொருள்கள், மரம் உள்ளிட்டவற்றைச் சேகரித்து கலைப் பொருள்களைச் செய்யத் தொடங்கினர். சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளை மாசுபடுத்தும் வகையிலும், வீசப்பட்டிருந்த பல்வேறு பொருள்களை கிலோ கணக்கில் சேகரித்து வந்து, அவற்றைக் கலைப் பொருள்களாக மாற்றியுள்ளனர்.

18 மாதங்களில் 196 நாடுகள்

அமெரிக்காவின் கனெக்டிகட் என்ற பகுதியைச் சேர்ந்த காஸி தி பேகால் என்ற 27 வயது இளம் பெண் உலகின் அனைத்து நாடு களையும் வேகமாகச் சுற்றி வந் தவர் என்ற பெருமையைப் பெற உள்ளார். ஒவ்வொரு நாட்டையும் சுற்றிப் பார்க்கச் செல்வதை ஆவணப்படுத்திய முதல் பெண் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது. 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது நாட்டை விட்டு புறப்பட்டார் காஸி. இறுதியாக அவரது பட்டியலில் 196ஆவது நாடாக காணப்பட்ட ஏமன் நாட்டில் பயணத்தை முடித்தார்.

இவருக்கு உலகைச் சுற்றி வர 18 மாதங்கள் 26 நாள்கள் ஆகியுள்ளது. முந்தைய சாதனையை   இவர் முறியடித் துள்ளார். இந்தப் பயணம் தொடர்பான விவரங்களை கின்னஸ் சாதனைப் புத்தகத்துக்கும் அனுப்பும் இறுதி கட்டப் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner