எழுத்துரு அளவு Larger Font Smaller Font


உடலால் முடங்கினாலும் தனது மன உறுதியால் கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் அசத்திவருகிறார் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த செல்லம்மை.

சுவாமித்தோப்பைச் சேர்ந்த செல்லம்மையின் உடன் பிறந்தவர்கள் மூன்று பேர். இரண்டு வயதில் தாக்கிய இளம்பிள்ளைவாதத்தால் இவரது இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டன. பெற்றோரின் மறைவுக்குப் பின் மருங்கூரில் உள்ள தன் சகோதரி தேவநாயகியின் வீட்டில் வாழ்ந்துவருகிறார். தனது உடலை முடக்கிய ஊனம், உள்ளத்தைத் தொட செல்லம்மை அனுமதிக்கவில்லை. விடாமுயற்சியால் சிறந்த கைவினைக் கலைஞராகத் திகழ்கிறார்.

ஊக்கம் தந்த கைவினைத் துறை

வீட்டில் முடங்கிக் கிடந்த செல்லம்மைக்குப் புன் னையடியைச் சேர்ந்த கைவினைஞர் தங்கஜோதியின் அறிமுகம் கிடைத்துள்ளது. அதன் பின்னர் அவரிடமே கைவினைத் தொழிலைக் கற்றுக்கொண்டுள்ளார். எவ் வளவு சிரமங்கள் ஏற்பட்டாலும் பயிற்சி வகுப்புக்குச் செல்வதை மட்டும் நிறுத்தவில்லை. பயணம் செய்வது கடினமாக இருந்தாலும் தொடர்ந்து புன்னையடிக்குச் சென்று கைவினைப் பொருட்கள் செய்யக் கற்றுக் கொண் டேன். நாகர்கோவிலில் உள்ள கைவினைத் துறையின் உதவி இயக்குநர் பாலுவும் என் நிலையைப் பார்த்து எனக்கு மிகுந்த ஊக்கம் அளித்தார். தொடர்ந்து உற்சாக மாகக் கைவினைத் தயாரிப்பில் இறங்கினேன் என்கிறார்.

அரசு தந்த அங்கீகாரம்

நீராதாரங்கள் நிரம்பிய கன்னியாகுமரி மாவட்டத்தில் கோரைப் புற்கள் அதிக அளவில் வளரும். வீணாகும் கோரைப் புற்களைத் தன்னுடைய தொழிலுக்கு மூலதனமாக மாற்றியுள்ளார் செல்லம்மை.

கோரைப் புல்லில் கூடை செய்கிறேன். ஒரு கூடையைப் பின்னுவதற்குச் சரியாக ஒரு வாரம் ஆகி விடும். ஆனால், இந்தக் கூடை குறைந்தது 500 ரூபாய்வரை விலை போகும். மாற்றுத்திறனாளியான என்னால் குளத்தில் இறங்கிக் கோரைப் புல்லைப் பறித்துவர முடியாது. இதன் காரணமாக என் சகோதரியின் கணவர் பரமசிவம் எனக்காக இதைச் சேகரித்துத் தருகிறார் என்கிறார் செல்லம்மை.

நார்ப்பொருளில் கைவினைப் பொருட்கள் செய்து வரும் இவருக்குக் கடந்த 2011ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த கைவினைத் தயாரிப்புக்கான விருது கிடைத்துள்ளது.


கூகுளால் நினைவுகூரப்பட்ட பெண்கள்

பேகம் ரொக்கையா
(9 டிசம்பர் 1880 - 9 டிசம்பர் 1932 )

பெண் விடுதலைக்கு ஆதாரமான பெண் கல்விக்காகப் போராடிய பேகம் ரொக்கையா, வங்கதேசத்தில் 1880இல் பிறந்தவர். கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் ஆகியவற்றின் வழியாக எழுத்தாளராக அறியப்பட்டவர். பெண்ணிய லட்சியவாதம் பரிபூரணமாக உலவும் ஒரு கற்பனை உலகை உருவாக்கி சுல்தானாஸ் ட்ரீம் என்ற பெயரில் எழுதிய அறிவியல் மிகைப்புனைவு இவருக்குப் புகழைக் கொடுத்தது. இசுலாமியப் பெண் குழந்தை களுக்கான முதல் பள்ளியை கொல்கத்தாவில் உருவாக்கியவர் இவர்.

ஹோமாய் வியாரவல்லா
(9 டிசம்பர் 1913 - 15 ஜனவரி 2012)

20ஆம் நூற்றாண்டின் மிகப் பெரும் ஆளுமைகளைத் தன் கேமராவுக்குள் அடக்கியவர். சேலை கட்டிக்கொண்டு முதுகில் ஒளிப்படக்கருவி, துணை உபகரணங்கள் கொண்ட பெரிய பையைச் சுமந்து இருசக்கர ஊர்தியில்  பயணித்து ஒளிப்படங்களை எடுத்தவர் ஹோமாய் வியாரவல்லா.  தலாய்லாமா, காந்தி, மார்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகியோரை இவர் எடுத்த ஒளிப்படங்கள் இன்றும் நினைவுகூரப்படுபவை.

விடுதலைப் போராட்ட வரலாற்றுத் தருணங்களை லென்சு வழியாகப் பதிவுசெய்த முதல் இந்தியப் பெண் ணான இவருக்கு இந்திய அரசின் உயர்ந்த மரியாதைகளில் ஒன்றான பத்ம விபூஷண் 2010இல் வழங்கப்பட்டது.

இந்தியாவின் முதல் பெண் ஒளிப்படப் பத்திரிகை யாளர் ஹோமாய் வியாரவல்லா, முன்னோடி வங்காளப் பெண்ணியவாதி பேகம் ரொக்கையா இருவரும் கூகுளால் நினைவுகூரப்பட்டுள்ளனர்.

சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் எரின்

நீரின்றி அமையாது உலகு என்பதெல்லாம் பழைய கதை. இன்றைக்கு அந்தச் சொற்றொடருக்கு முன்னால் மாசுபட்ட என்ற சொல்லைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். காற்று, நில மாசுபாடுகளைக் காட்டிலும் நீர் மாசுபாடு மிகவும் ஆபத்தானது. காரணம், நீர் கரைக்கும் தன்மையைக் கொண்டது. நீர் மாசு பாட்டைப் பற்றிப் பேசும்போது திருப்பூர், வேலூர் எனத் தமிழகத்திலேயே அதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. குறிப்பாக வேலூரில், தோல் தொழிற் சாலைக் கழிவுகளால் பாலாறு சீர்கெட்டது. இங்கு வேலூரைக் குறிப்பாகச் சுட்டிக்காட் டுவதற்குக் காரணம் உண்டு. வேலூரில் எந்தவிதமான ரசாயனத் தால் நீர் நிலைகள் சீர்கெட்டனவோ, அதே ரசாயனத்தால்தான் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹிங்க்லி எனும் பகுதியின் நீர்நிலைகளும் சீர்கெட்டன.

வேலூருக்கும் ஹிங்க்லிக்கும் தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கும் அந்த ரசாயனம் குரோமியம்! அந்த ரசாய னத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியவர்தான் எரின் ப்ரொகோவிச்.

1960 ஜூன் 22 அன்று அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் பிறந்தார் எரின் ப்ரொகோவிச். இவருடைய தந்தை ஃப்ராங்க் பேட்டீ, தொழிற்சாலை ஒன்றில் பொறி யாளராக இருந்தார். இவருடைய தாய் பெட்டி ஜோ, பத்திரிகையாளராகப் பணியாற்றினார். எரினுக்கு டிஸ்லெக் ஸியா எனும் கற்றல் குறைபாடு இருந்தது. அதனால், அவரது பெற்றோர் அவரை மிகவும் செல்லமாக வளர்த்தனர். அவர்கள் கொடுத்த சுதந்திரம், எரினை, சகலவிதமான விளையாட்டுத் தனங்களிலும் அச்சமில் லாமல் ஈடுபட வைத்தது. அந்தத் துணிச்சல் காரணமாகத்தான், கன்சாஸ் மாகாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து வேலைக்காகக் காத்திருந்த அவரை, 1981ஆம் ஆண்டு மிஸ் பசிபிக் கோஸ்ட் அழகிப் போட்டியில் பங்கேற்கத் தூண்டியது. அதில் வெற்றியும் பெற்றார்.

விபத்து தந்த திருப்புமுனை

அவர் வாழ்க்கையில் திருப்புமுனையாக, அந்த விபத்து அமைந்தது. எரின் காரில் சென்றுகொண்டிருந்தபோது, இன்னொரு கார் எரினின் கார் மீது மோதியது. அந்த விபத்துக் கான இழப்பீட்டைப் பெறுவதற்காக எட் மேஸ்ரி எனும் வழக் குரைஞரைச் சந்தித்தார் எரின். அந்த வழக்கில் வெற்றிபெற்றாலும், மிகவும் குறைந்த இழப்பீடே வழங்கப் பட்டது. அந்தப் பணத் தைக் கொண்டு நீண்ட நாட்கள் வாழ முடியாது என்பதால், அந்த வழக்கில் வாதாட அவர் நியமித்த வழக்குரைஞரின் அலுவல கத்திலேயே மிகவும் குறைவான ஊதியத்துக்கு எரின், வேலைக்குச் சேர்ந்தார். அங்கே, பசிபிக் கேஸ் அண்ட் எலெக்ட் ரிக் எனும் நிறுவனம், சுமார் 30 ஆண்டுகாலமாக ஹிங்க்லி பகுதியில் உள்ள நீர்நிலைகளை எல்லாம் மாசுபடுத்தி வந்திருப் பதை அறிந்தார். அந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை எல்லாம் முழுமையாகப் படித்து அந்த நிறுவனத்தின் தகிடுதத் தங்கள் எல்லாவற்றையும் அறிந்துகொண்டார். 1905இல் சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்ட அந்நிறுவனத்தின் முக்கியப் பணி, இயற்கை எரிவாயு எடுப்பது. 1952இல், ஹிங்க்லி பகுதியில் அந்நிறுவனம், நீரேற்று நிலையம் ஒன்றை அமைத்தது.

அதிலுள்ள இயந்திரங்களின் வெப்பத்தைத் தணிக்க, குளிரூட்டி கோபுரமும் அமைக்கப்பட்டது. அந்தக் கோபுரத்தின் உதிரி பாகங்கள் துருப்பிடித்துப் போகாமல் இருக்க ஹெக்ஸா வேலண்ட் குரோமியம் எனும் ரசாயனத்தை அந்நிறுவனம் பயன்படுத்தியது. ரசாயனம் கலந்த கழிவுநீரை, அருகில் உள்ள நீர்நிலைகளில் கலக்க விட்டது அந்நிறுவனம். இதனால் அப் பகுதி நீர், மாசுபட்டது. அந்த நீரைப் பயன்படுத்திய மக்களைப் புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் தாக்கின. அந்த நிறுவனம், உண்மை வெளியே கசிந்துவிடாமல் இருக்க, அந்த மக்களுக்கான மருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொண்டது. அந்த ஆவணங்கள் எல்லாவற்றையும் படித்த எரின், அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று சந்தித்தார். அந்த நிறுவனத்திடமிருந்து இழப்பீட்டைப் பெறுவதற்கு உதவி யாக இருந்தார்.

முறையான சட்டக் கல்வி ஏதுமில்லாமல், தன்னுடைய சொந்த முயற்சியால், இந்த வழக்கு தொடர்பான சட்ட நுணுக் களைக் கற்றுக்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக வழக்குகளைத் தொடர்ந்தார். இந்த வழக்கை ஆங்கிலத்தில் டைரக்ட் ஆக்சன் லாசூட் என்பார்கள். அதாவது, ஒரு நிறு வனம் செய்யும் தவறுக்காக, அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடராமல், அது காப்பீடு செய்திருக்கும் காப்பீட்டு நிறுவ னத்தின் மீதே நேரடியாக வழக்கு தொடுப்பதுதான் டைரக்ட் ஆக்சன் லாசூட். சுமார் 650 பேர், அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டி ருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரையும் தேடித் தேடிச் சென்று, நிறுவனத்துக்கு எதிராக இழப்பீடு கோரி வழக்கு தொடர வைத்தார். காரணம், இவ்வாறான வழக்குகளில், இவ் வளவு சதவீதத்தினர் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில விதிமுறைகள் இருக்கின்றன. 10, 20 பேர்தான் என்றால், அந்த வழக்கு தோல்வியடைந்துவிடும். எனவே, அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட அனை வரையும் இந்த வழக்கில் ஈடுபடுத்துவது முக்கியமானது. அதைச் சாதிப்பதற்கு, உடல்ரீதி யாகவும் மனரீதியாகவும் எரின் எதிர்கொண்ட சவால்கள் ஏராளம். இறுதியில் 1996இல், பாதிக்கப்பட்டவர்களுக்கு 333 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.1,998 கோடி) இழப்பீடாக வழங்கப்பட்டன. அமெரிக்க வரலாற்றில், டைரக்ட் ஆக்சன் லாசூட் வழக்கின் மூலம் இவ்வளவு பெரிய தொகை இழப்பீடாக வழங்கப்பட்டது அதுவே முதல்முறை.

இவர் எந்த விருதையும் எதிர்பார்க்காமல், தற்போதும் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறார்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner