எழுத்துரு அளவு Larger Font Smaller Font


தனியார் வங்கியின் துணைத் தலைவர், தேசிய நீச்சல் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றவர், இந்திய வீல்சேர் கூடைப்பந்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எனப் பன்முக அடையாளங்களுடன் வலம்வரும் மாதவி லதா, மாற்றுத் திறனாளி. தெலங்கானா மாநிலத்தில் உள்ள சாதுபள்ளி கிராமத்தில் பிறந்த இவர், ஏழு மாதக் குழந்தையாக இருந்தபோது, போலியோவால் பாதிக்கப்பட்டார்.

இடுப்பின் கீழ்ப் பகுதி முழுவதும்  பாதிக்கப் பட்டுச் செயலிழந்துபோனது. மாதவி தன் முதல் அடியைக்கூடச் சக்கர நாற்காலியுடன்தான் தொடங் கினார். ஆனால், அவரது அடுத்தகட்ட நகர்வுகள் அனைத்தும் புலியின் பாய்ச்சல்போல் அதிவேகமாக இருந்தன.

மாதவி லதாவுடைய தந்தை, பள்ளித் தலைமை ஆசிரியர். வீட்டின் கடைக்குட்டியான மாதவிக்கு உடன்பிறந்தவர்கள் நான்கு பேர். மற்ற குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதுபோல் மாதவியையும் அவருடைய பெற்றோர் பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். நான் உடலால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் என்னை உள்ளத்தால் பலமான பெண் ணாக உணரவைத்தவர்கள் என் குடும்பத்தினரும் நண்பர்களும்தான். நடக்க முடியாத என்னை மற்ற குழந்தைகளைப் போல் படிக்க வைத்தார்கள்.

எந்த விளையாட்டு என்றாலும் நான் இல்லாமல் அதை நடத்த மாட்டார்கள் என் நண்பர்கள். ஓட்டப்பந்தயத்தில்கூட என்னைத் தூக்கிக்கொண்டு ஓடுவார்கள் அவர்கள். எந்தச் சூழ்நிலையிலும் என்னைச் சுமையாகக் கருதாத மனிதர்கள் மத்தியில் வளர்ந்ததுதான் நான் தன்னம்பிக்கையுடன் வளர உதவியாக இருந்தது என உணர்வுப்பூர்வமாகச் சொல்கிறார் அவர்.

தடைகளைத் தாண்டிய பயணம்

நம் நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடிப்படைத் தேவைகள் தற்போதுவரை போதுமான அளவில் செய்துகொடுக்கப்படவில்லை. பேருந்து நிறுத்தங்கள், ரயில் நடைமேடைகள், பொதுக் கழிப்பிடங்கள் போன்றவை இன்னும்கூட மாற்றுத் திறனாளிகள் எளிதாகப் பயன் படுத்தும் வகையில் இல்லை. இதுபோன்ற அடிப்படைத் தேவைகளை மேம்படுத்தாத நிலையில் தினமும் பள்ளிக்குச் சென்றுவருவது மாதவிக்கு மிகுந்த சிரமமாக இருந்தது. இதனால் பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், வீட்டில் இருந்தபடியே தனியாக ஆசிரியர் வைத்து படித்துள்ளார். எம்.பி.ஏ. படிப்புடன் நீதித் துறையிலும் பட்டம் பெற்றுள்ளார் அவர். கணிதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட மாதவி, வங்கிப் பணியில் சேர்வதற்கான படிப்புகளையும் படித்துள்ளார்.

போராடிப் பெற்ற பணி

வங்கித் தேர்வில் இவர் நல்ல மதிப்பெண் பெற்றதால் ஸ்டேட் பாங்க் ஆஃப் அய்தராபாத்தில் வேலை கிடைத்தது. ஆனால், உடல்நிலையைக் காரணம்காட்டி அந்தப் பணிக்குத் தகுதியில்லாதவர் என்று தவறான மருத்துவச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த மாதவி, தான் அந்தப் பணிக்குத் தகுதியானவர் என முறையான மருத்துவச் சான்றிதழ்கள் மூலம் நிருபித்தார். அதன் பின்னர், சுமார் 15 ஆண்டுகள் அய்தராபாத் வங்கியில் பணிபுரிந்தார்.

சாதனைக்கு வித்திட்ட சிகிச்சை

பின்னர், சென்னையில் உள்ள பிரபல தனியார் வங்கியில் தலைமை மேலாளராகப் பணிக்குச் சேர்ந்தார். இதனிடையே மாதவியின் முதுகுத் தண்டு பகுதியில் அதிக வலி ஏற்பட்டு அவருக்கு பெரிய பிரச்சினையைத் தந்தது. பரிசோதனை செய்து பார்த்ததில் போலியோ நோயின் பிந்தைய தாக்கத்தால் அவர் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. நீண்ட காலம் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து இருப்பதால் முதுகுத்தண்டிலும் நுரையீரலிலும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

அந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக மருத்துவர்கள் பரிந்துரைத்தது இத்தனை ஆண்டுகள் அசைக்காமல் இருந்த அவரது கால்களுக்கு அசைவு கொடுக்க வேண்டும் என்பதுதான். அதைச் செயல்படுத்து வதற்காக நீர் சிகிச்சையைப் பரிந்துரைத்தார்கள்.

முதன்முறையாகத் தண்ணீருக்குள் இறங்கியபோது, என் கால்கள் பறவையின் சிறகு போல் மிக லகுவாக இருந்ததை உணர்ந்தேன். என்னால் தண்ணீருக்குள் கால்களை நன்றாக அசைக்க முடிந்தது. இதையடுத்து தைரியமாக நீச்சல் பழகினேன். ஒரு நாள் அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் தேசிய அளவிலான நீச்சல் போட்டியின் அறிவிப்பு ஒட்டப்பட்டு இருந்தது. என்னால் மற்ற போட்டியாளர்களைப் போல் நீந்த முடியுமா என்பதையெல்லாம் யோசிக்காமல் தைரியமாக அந்தப் போட்டியில் கலந்துகொள்ள முடிவுசெய்தேன் என்று சொல்லும் மாதவி, அந்தப் போட்டியில் வெற்றிபெற்றார். அப்போது அவருக்கு நாற்பது வயது! போட்டிக்கான நேரம் முடிந்தும் நீச்சல் குளத்திலேயே வெகுநேரம் அவர் நீந்திக்கொண்டிருந்தாராம். அதன் பிறகு, தேசிய அளவில் நடைபெற்ற பல போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் உட்படப் பல பரிசுகளை மாதவி பெற்றுள்ளார்.

தன்னைப் போலவே மற்ற மாற்றுத் திறனாளிகளும் தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதற்காக     ‘ஆம் நாமும் வெல்வோம்’ என்ற அமைப்பை நடத்திவருகிறார் அவர். விளையாட்டில் ஆர்வமாக உள்ள மாற்றுத் திறனாளிகளுக்குத் தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக நீச்சல் குளம் போன்றவற்றை ஏற்படுத்தித் தருவதில் முனைப்புடன் இருக்கிறார்.

சிலர் எனக்கு நல்ல வேலை கிடைத்திருப்பதால்தான் என்னால் விளையாட்டுத் துறையில் சாதிக்க முடிந்துள்ளது என நினைக்கிறார்கள். தங்கள் மாற்றுத் திறனாளி பிள்ளைகளை விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்தத் தயங்குகின்றனர்.

ஆனால், அவர்களுக்கு நான் கடந்துவந்த பாதை தெரியாது. அதற்காகதான் இந்த அமைப்பைத் தொடங்கினேன். என்னைப் போல் பாதிக்கப்பட்ட பல மாற்றுத்திறனாளிகளைச் சந்தித்து அவர்களது திறமையை வெளிக்கொண்டுவர என்னால் ஆன முயற்சிகளைச் செய்துவருகிறேன் எனத் தன்னம்பிக்கை மிளிரச் சொல்கிறார் மாதவி லதா.

கிருஷ்ணகிரியில் ஆட்டோ ஓட்டும் பவானி

அடுத்த வேளை உணவுக்கு உத் தரவாதம் இல்லாத கூலி வேலைக்குச் சென்றுவந்த பவானி, தன்னம்பிக் கையாலும் துணிச்சலாலும் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநராகத் திகழ்கிறார். எந்தவிதப் பொருளா தாரப் பின்புலமும் கல்வியறிவும் இல்லாத நிலையில் கணவனை இழந்தவர் இவர். அப்படியொரு சூழலில் மூன்று குழந்தைகளைக் கரையேற்றித் தன் வாழ்க்கையையும் நகர்த்த வேண்டிய கட்டாயம் பவானிக்கு. தன்னைப் பதம்பார்த்த சோதனைகள் அனைத்தையும் அயராத உறுதியோடு எதிர் கொண்டு இவர் வென்றிருக்கிறார்.

பவானி, கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லுகுறிக்கி கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள். கூலி வேலைக்குச் சென்றுவந்த இவருடைய கணவர், குடிக்கு அடிமையாகித் திடீரென உயிரி ழந்தார். மூணு குழந்தைகளோடு அடுத்த வேலை சாப்பாட்டுக்கே என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தேன். பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டிலுமே சொத்து எதுவும் இல்லை. கவர்மென்ட் கட்டிக் கொடுத்த தொகுப்பு வீடு மட்டும்தான் இருந்தது. குழந் தைகள் பசியைப் போக்கவும்  அவர்களின் படிப்புக் காகவும் உழைக்க வேண்டிய கட்டாயம். தினமும் 35 ரூபாய் கூலிக்காக 5 கி.மீ. தொலை வில் உள்ள கிருஷ்ணகிரிக்கு வேலைக்குப் போனேன். ஆட் டோவுக்குத் தினமும் 8 ரூபாய் செலவாகும் என்று அதை மிச்சப்படுத்த சைக்கிளில் கிருஷ்ணகிரிக்குப் போவேன்.  ஆனால், கிடைச்ச வரு மானம் போதுமானதா இல்லை. வேற என்ன செய்யறதுன்னு தெரி யாம ஆட்டோ ஓட்டலாம்னு முடிவு செய்தேன் என்கிறார் பவானி.

பவானி வசிக்கும் பகுதியின் ஆட்டோ ஓட்டுநர் சங்கத் தலைவர் மைக்கேல் உதவியுடன் ஏழு ஆண்டுகளுக்கு முன் ஆட்டோ ஓட்டக் கற்றுக் கொண்டார். பிறகு, வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டினார். பெண் என்பதால் நல்லவிதமாக ஆட்டோ ஓட்டுவாரா என்ற அச்சத்தில் இவரது ஆட்டோவில் ஏற சில பயணிகள் தயக்கம் காட்டினர். ஆனால், அந்த அச்சமும் காலப்போக்கில் மறைந்துவிட்டது. இப்போ பாதுகாப்பான பயணத் துக்கு என் ஆட்டோவைத் தேடி பயணிகள் வரு கிறார்கள் என்று பவானி பெருமையுடன் சொல்கிறார்.

சில மாதங்களில் சொந்தமாகப் புதிய ஆட்டோ வாங்க வேண்டும் என தாட்கோ மூலம் மானியக் கடன் கேட்டு விண்ணப்பித்தார். பேட்ஜ் (பொது உபயோகத்துக்கான வாகனங்கள் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமத்துடன் பேட்ஜ் பெற வேண்டும் என்பது விதி) இல்லாமல் மானியக்கடன் தர முடியாது என அதிகாரிகள் கைவிரித்து விட்டனர்.
பவானி தற்போது ஆதரவற்ற விதவைச் சான் றிதழ் பெற்று அரசு வேலைக்காகப் பதிவு செய் துள்ளார். அரசு வாய்ப்பளித்தால் அரசுப் பேருந்து ஓட்டுநர் அல்லது அரசு வாகன ஓட்டுநராகப் பணி புரியும் ஆவலுடன் காத்திருக்கிறார்.

சர்வதேச குத்துச்சண்டை போட்டிக்கு காத்திருக்கும் அரசுப் பள்ளி மாணவி

தாய்லாந்தில் நடைபெற உள்ள சர்வதேச குத்துச்சண்டைப் போட்டிக்கு தமிழகத்தில் இருந்து தேர்வாகியுள்ள ஒரே மாணவி யோகேஸ்வரிக்கு,  சென் னை, பெரம்பூர் மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவி யோ கேஸ்வரி. 2015இல் இந்திய குத்துச் சண்டைக் கூட் டமைப்பு அப் பள்ளிக்கு இலவசமாகப் பயிற்சி அளித்தது. அதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார் யோகேஸ்வரி. திறமையும், ஆர்வமும் அவரைத் தொடர் வெற்றிகளை நோக்கித் தள்ளின.

வறுமையான சூழலில் வாடினாலும் மாநில அளவில் கீழ்ப்பாக்கத்தில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் தங்கம், தேசிய அளவில் மகாராஷ் டிராவில் நடந்த போட்டியில் வெண்கலம், பெங்களூ ருவில் நடந்த போட்டியில் வெள்ளி, கேரளாவில் இரண்டு தங்கங்கள், ஒரு டைட்டில் பெல்ட், டில்லியில் ஒரு தங்கம் என ஏராளமான பதக்கங்களைக் குவித் திருக்கிறார் யோகேஸ்வரி. முத் தாய்ப்பாக 2017இல் நேபாளத்தில் நடை பெற்ற சர்வதேசப் போட்டியில் தங்கம் வென்றார் யோகேஸ்வரி.

நேபாளத்தில் ஆசிய நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற சர்வதேசப் போட்டியில் அவர் சூடிய தங்கம், தற்போது உலகம் முழுவதிலும் இருந்து 108 நாடுகள் கலந்துகொள்ளும் சர்வதேச குத்துச் சண்டைப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை அளித்திருக்கிறது. இதற்காக தமிழகத்தில் இருந்து தேர்வான ஒரே பெண் யோகேஸ்வரி மட்டுமே.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner