எழுத்துரு அளவு Larger Font Smaller Font


2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் இறகுப் பந்து போட்டியில் அய்ரோப்பிய நாடான சுவீடன் நாட்டுக்காக விளையாடுவதற்கு தயாராகி வருகிறார் கன்னியாகுமரியைச் சேர்ந்த அஸ்வதி பிள்ளை (17).

விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்திருந்த தகவல் கிடைத்ததையடுத்து, தனது தந்தை வினோத் பிள்ளையுடன் அங்குள்ள ஓர் இறகுப் பந்து கிளப்பில் பயிற்சியில் ஈடு பட்டுக் கொண்டிருந்த அஸ்வதி பிள்ளையை, பயிற்சியின் இடைவெளியில் சந்தித்தபோது. சுவீடன் நாட்டுக்காக ஒலிம்பிக்கில் விளை யாடும் வாய்ப்பைப் பெற்றது எப்படி? என்ற கேள்வியோடு பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் வருமாறு:
உங்கள் குடும்பம் குறித்து?

எங்களது சொந்த ஊர் குமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள இரணியல் கோணம். எனது தந்தை வினோத் பிள்ளை. தாய் காயத்ரி. சகோதரர் தீபக் (13).

இறகுப் பந்தில் ஆர்வம் எப்படி வந்தது?

எனது தந்தை எலக்ட்ரிக்கல் என்ஜினியர் மட்டுமல்ல, இறகுப் பந்து விளையாட்டில் ஆர்வமும் கொண்டவர். எனது தந்தைக்கு பெங்களூருவில் அய்டி துறையில் வேலை கிடைத்த நிலையில் அங்கு வசித்து வந்தோம். அங்குள்ள இறகுப் பந்து கிளப்பிற்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எனது தந்தை விளையாடச் செல்லும் போது என்னையும் அழைத்துச் செல்வார். என்னையும் விளை யாடுமாறு உற்சாகமூட்டுவார் இதையடுத்து எனக்கும் இறகுப் பந்து விளையாட்டில் ஆர்வம் தொற்றிக் கொண்டது.

சுவீடன் நாட்டுக்கு செல்லும் வாய்ப்பு எப்படி கிடைத்தது ?

பெங்களூரில் வசித்து வந்தபோது எனது தந்தைக்கு அய்ரோப்பிய நாடான சுவீடன் நாட்டில் அய்டி துறையில் வேலை கிடைத்து. 2009ஆம் ஆண்டு சுவீடன் நாட்டுக்குச் சென்றோம். சுவீடன் தலைநகர் ஸ்டாக் கோல்ம் நகரில் வசித்து வருகிறோம். அங் குள்ள டேபி இறகுப் பந்து கிளப்பிற்கு விளையாடச் செல்வோம். அங்கு எனது தந்தையுடன் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அந்நாட்டு இறகுப் பந்து தலைமை பயிற்சியாளர்களில் ஒருவர் என்னைப் பார்த்து விட்டு எனது தந்தையிடம் சுவீடன் நாட்டுக்காக விளை யாட, என்னை தயார்படுத்த சம்மதமா எனக் கேட்டார்.

அந்நாட்டுக்காக விளையாட வேண்டு மென்றால் சுவீடன் நாட்டின் குடியுரிமை பெற வேண்டியது அவசியம். இதற்கு எனது தந்தை இணங்கியதையடுத்து அந்நாட்டில் வெளி நாட்டினர் குடியுரிமைக் கான நிபந்தனைகளை தளர்த்தி, 4 ஆண்டு களில் அதாவது 2013 ஆம் ஆண்டு எங்கள் குடும்பத்திற்கு அந் நாட்டிற்கான குடியுரிமை வழங்கப்பட்டது.

இதற்கிடையே தொடர் பயிற்சியில் ஈடுபட்டு முன்னணி வீராங்கனையாக மாறி னேன். தற்போது எனக்கு இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த வில்லியாண்டோ என்பவர் பயிற்சியாளராக உள்ளார். சுவீடனில் நேசனல் வாகையர் பட்டம் 13, 15 வயதுக்குட்பட்ட மற்றும் 17 வயது ஆகிய விளையாட்டு பிரிவு களில் மகளிர் ஒற்றையர் ஆட்டங்களில் விளையாடி தங்கப் பதக்கங்கள் பெற்றுள்ளேன்.

சுவீடனுக்கு வெளியே டென்மார்க், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, சுவிட்சர்லாந்து, பல்கேரியா, போலந்து, பெல்ஜியம், செக் கோஸ்லோவேகியா, ஜெர்மனி, இத்தாலி, இந்தோனேசியா, நார்வே, பின்லாந்து உள் ளிட்ட நாடுகளில் விளையாடியுள்ளேன்.

இதில் பல ஆட்டங்களில் வெற்றியும் பெற்றுள்ளேன். ஒற்றையர் ஆட்டங்களிலேயே அதிகமாக விளையாடி வருகிறேன்.

தற்போது சுவீடனிலிருந்து எத்தனை பேர் 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தயார் செய்யப்படுகிறார்கள்?

சுவீடனிலிருந்து தற்போது 3 பெண் வீராங்கனைகள் உள்பட 6 பேர் தயார் செய்யப்படுகிறார்கள். அதில் ஒற்றையர் ஆட்ட வீராங்கனையாக நான் முன்னணியில் உள்ளேன். இதனால் 2020 ஒலிம்பிக்கில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன். தற்போது ரேங்கிங்கில் எந்த இடத்தில் உள்ளீர்கள்?

தற்போது உலக அளவில் சீனியர் பிரிவில் 236ஆவது இடத்தில் உள்ளேன். ஒன்றரை ஆண்டுகளுக்குள்ளாக

100ஆவது இடத்தில் வந்து விடுவேன்.

இலவச தொழிற்பயிற்சி அளிக்கும் அரசு ஆசிரியை

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவிகளின் படிப்புக்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது. நவீன வாய்ப்புகளைப் பயன்படுத்தி மாணவிகள் கைசெலவுக்கு தாங்களே பணம் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மொபைல் செய லிகள் குறித்து இலவசப் பயிற்சி அளித்து வருகிறார் மதுரை மாவட்டம் கருங்காலக்குடி அரசுப்பள்ளி ஆசிரியர் ஆர்.ரேணுகா.

தன் பள்ளி மட்டுமல்லாது, பல்வேறு அரசுப் பள்ளிகளுக்குச் சென்று இந்த இலவசப் பயிற்சி அளித்து வருகிறார். வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி அளித்துக் கொண் டிருந்த ரேணுகாவைச் சந்தித்தோம்: “பெண்களின் கல்வித்தரம் உயர்ந்து கொண்ட வருகிறது. ஆனால் தர உயர்வுக்கு பின்னால் உள்ள வலிகளையும் தடைகளையும் நாம் பார்க்கத் தவறிவிடுகிறோம். கிராமப்புற மாணவிகள் வாழ்க்கை இன்னும் வலி மிகுந்ததாகவே இருக்கிறது.

எழுதுபொருள்கள், நோட்டு, புத்தகங்கள் என வாங்குவதற்கு என கூடுதல் செலவுக்கு அவர்களுக்கு பணம் தேவைப்படுகிறது. வறுமை, தந்தையின் குடிப்பழக்கம் போன்ற காரணங்களினால் பல மாணவிகள் பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ வகுப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள். அவர்களுக்குத் தேவையான பொருளாதார தேவைகளை அவர்களே தீர்த்துக் கொள்வதன் மூலம் அவர்களின் படிப்பைத் தொடர வைக்கலாம் என்ற யோசனையில் தோன்றியது தான் இந்த மொபைல் செயலி பயிற்சி. மாணவிகளுக்கு மூன்று விதமான பயிற்சிகளை அளிக்கிறேன். மொபைல் செயலிகள் மூலம் செல்லிடப்பேசிகளுக்கு ரீசார்ஜ் செய்வது, வீடு களுக்கு மின்சாரக் கட்டணம் செலுத்தும் பயிற்சி, ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கான பயிற்சி ஆகியவற்றை அளிக்கிறேன். மாணவிகள் எதிர் கொள்ளும் தடைகளைத் தாண்டி லட்சியத்தை அடைய வைக்கவே இந்த முயற்சியும் பயிற்சியும். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவி களுக்கு பயிற்சி அளித்துள்ளேன். ஒரு லட்சம் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்பதே இலக்கு’’ என்கிறார் ஆசிரியர் ஆர்.ரேணுகா.

அனைத்திலும் சிறந்து விளங்கும் நைனா ஜெயஸ்வால்

எட்டு வயதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, பத்தாம் வயதில் பிளஸ் டூவில் வெற்றி பெற்று, பதிமூன்றாம் வயதில் இதழியல் படிப்பில் பட்டம் பெற்று, பதினைந்தாம் வயதில் மக்கள் தொடர்பில் முதுநிலைப் பட்டத்தைத் தனதாக்கி, பதினேழாம் வயதில் “விளை யாட்டு துறையில் மேலாண்மை” என்ற தலைப்பில்  ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதுடன், விளையாட்டிலும் தேசிய அளவில் வாகையர் பட்டமும், பியானோ வாசித்துப் பாடவும், இரண்டு கைகளால் ஒரே சமயத்தில் எழுதவும், இருபத்தைந்து நிமிடங்களில் அய்தராபாத் பிரியாணி சமைக்கும் திறமையும், இரண்டு நொடிகளுக்குள் ‘அ’ முதல் ‘ழ’ வரை டைப் செய்யும் வேகமும், தன்னம்பிக்கை ஊட்டும் சொற் பொழிவுகள் நிகழ்த்தவும், கவிதை, பழமொழிகளைச் சரளமாக சொல்லி மூன்று மொழி களில் சொற்பொழிவுகளில் அசத்துவதுமான திற மைகள் பதினேழு வயதில் ஒருவரிடம் இருப்பது சாத்தியமா? இத்தனை திறமை களுடன் இருக்கிறார் அய்தராபாத்தைச் சேர்ந்த நைனா ஜெயஸ்வால். “நான் பத்தாம் வகுப்பு வரை பள்ளிக்குப் போக வில்லை. வீட்டில் பெற்றோர்தான் சொல்லிக் கொடுத்தனர். ஆந்திர கல்வி வாரியம் என் வயதைக் காரணம் காட்டி பத்தாம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. பிறகு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் இந்தியாவில் நடத்தும் பள்ளித் தேர்வில் பங்கேற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். பிறகு கல்லூரியில் சேர்ந்து முதுநிலை வரை படித்தேன். வீட்டில் இருக்கும்போது இரண்டு கைகளாலும் எழுத ஆரம்பித்தேன். விரை வாக டைப் செய்யவும் பழகினேன். அப்பா, தாத்தா இருவரும் டேபிள் டென்னிஸ் விளையாடுவார்கள். தலைமுறை தலை முறையாக விளையாடி வருகிறோம். என் அடுத்த இலக்கு ஒலிம்பிக் என்றார்.