எழுத்துரு அளவு Larger Font Smaller Font

1980இல் சோவியத் யூனியன் (ரஷ்யா) தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு 76 இந்தியர்கள் சென்றனர். அவர்களில் 16 வயதுப் பெண் ஒருவருக்கும் இடம் கிடைத்தது. தடகளத் தில் மலைகள் மோதிய அந்த ஓட்டப் போட்டியில், இறுதிச் சுற்றுவரை முன்னேறி னார். பதக்கம் எதுவும் அவருக்குக் கிடைக்கவில்லை. ஆனால், ஒலிம்பிக்கில் இறுதிச் சுற்றுவரை முன்னேறிய முதல் இந்தியப் பெண், முதல் இளம் பெண் என இரண்டு சாதனைகளுக்குச் அந்தப் பெண் சொந்தக்காரரானார்.

நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் தடம் பதிக்கும் நோக்கத்தோடு அந்தப் பெண் பங்கேற்றார். 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தின் அரையிறுதிச் சுற்றில் முதலிடம் பிடித்தார். இறுதிச் சுற்றில் எப்படியும் அவர் பதக்கம் வெல்வார் என நாடே காத்திருந்தது. ஆனால், 0.01 விநாடி வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். நூலிழையில் பதக்க வாய்ப்பை அவர் தவறவிட்டிருந்தாலும், அந்தத் தோல்வி அவரை சர்வதேச அளவில் உயரத்துக்குக் கொண்டுசென்றது. அவர், இந்தியாவின் தங்க மங்கை, ஆசிய தடகள ராணி, பையொலி எக்ஸ்பிரஸ் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் பி.டி. உஷா. 1980-1990-களில் தடகள விளையாட்டில் ஆதிக்கம் செலுத்திய ஒரே இந்திய வீராங்கனை.

நம்பிக்கை நட்சத்திரம்

1991ஆம் ஆண்டு அவரது வாழ்க்கையில் முக்கியமானது. அந்த ஆண்டுதான் அவர் திருமணம் செய்துகொண்டார். மத்திய தொழில் படை இன்ஸ்பெக்டராக இருந்த சீனிவாசன் அவரது வாழ்க்கைத் துணையானார். திருமணத்துக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் தடகள பக்கமே அவர் எட்டிப் பார்க்கவில்லை. பி.டி. உஷா இனி, மைதானத்துக்கு வரப்போவதில்லை என்று நினைத்த வேளையில், நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என்பதுபோல் களத்தில் வந்து நின்றார். சர்வதேச அளவில் தடகளத்தில் சாதனை படைக்க வேண்டும் என்று தன் கணவருடைய ஆசையை நிறைவேற்றுவதற்காகக் களத்துக்குத் திரும்பினார். மீண்டும் பல்வேறு தடகளப் போட்டிகளில் பங்கேற்றார்.

குறிப்பிடும்படியான பல வெற்றிகளை 1998இல் குவித்தார். ஆசிய வாகையர் பட்டப் போட்டியின் நான்கு பிரிவுகளில் பங்கேற்று ஒரு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றார். ஒட்டுமொத்தமாக தடகளத்தில் மட்டும் 101 சர்வதேசப் பதக்கங்கள் பெற்று சாதனையிலும் சதமடித்திருக்கிறார். தடகளத்தில் இந்த அளவுக்குச் சாதனை படைத்த வீராங்கனைகள் இந்தியாவில் வேறு எவரும் இல்லை. 23 ஆண்டுகள் ஓயாமல் ஓடிய அவரது கால்கள் 2000ஆம் ஆண்டோடு ஓய்வுபெற்றன.  அவரைப் பின்பற்றி இளம் பெண்கள் ஆர்வத்துடன் தடகளத்தில் காலடி எடுத்துவைத்தனர். இன்றும் பி.டி. உஷாவை மனதில்கொண்டு தடகளத்துக்கு வரும் பெண்கள் ஏராளம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner