எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரும்பாலான விளையாட்டுகளில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும்போதும் துப்பாக்கி சுடுதல் விளையாட்டைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். 2000-க்கு முன்புவரை ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த விளையாட்டாக அது இருந்தது. இந்த நிலையை மாற்றியவர் அஞ்சலி பாகவத். சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற முதல் இந்தியப் பெண்; உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் கோப்பை வென்ற முதல் இந்தியப் பெண்; உலகத் துப்பாக்கி சுடும் வீராங்கனைகளில் இந்தியாவின் முகமாக நீண்ட காலம் கோலோச்சியவர் எனப் பல சிறப்புகளுக்குச் சொந்தக்காரர் அவர்.

பள்ளிப் பருவத்தில் மும்பையில் வசித்த அஞ்சலி பாகவத்துக்குத் துப்பாக்கி சுடும் விளையாட்டு, தேசிய மாணவர் படை (என்.சி.சி.) மூலமே அறிமுகமானது. என்.சி.சி. பயிற்சியின்போது துப்பாக்கி பிடிக்கக் கற்றுக்கொண்டதுமே இந்த விளையாட்டின் மீது அவருக்குக் காதல் மலர்ந்தது. பள்ளிப் பருவத்தில் மட்டுமல்ல; கல்லூரியில் காலடி எடுத்த வைத்தபோதும் என்.சி.சி. அமைப்பு இருக்கும் கல்லூரியாகத் தேடிச் சேர்ந்தார்.

முறைப்படி துப்பாக்கி சுடக் கற்றுக்கொள்ள விரும்பிய போது அவர் கல்லூரிப் படிப்பையே முடித்திருந்தார். 21 வயதில்தான் மகாராஷ்டிர ரைபிள் சங்கத்தில் சேர்ந்து துப்பாக்கி சுடும் பயிற்சியை எடுக்கத் தொடங்கினார். ஒரே வாரத்துக்குள் துப்பாக்கியைப் பிடிக்க மட்டுமல்ல; குறி பார்த்துச் சுடவும் கற்றுக்கொண்டார்.

1990-களின் தொடக்கத்தில் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று, துப்பாக்கி சுடுதலில் அஞ்சலி தன் திறமையை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். 1995இல் சென்னையில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று, சர்வதேச அளவிலான பதக்க வேட்டைக்குப் அடித்தளமிட்டார்.  1999இல் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியும் அஞ்சலிக்கு மறக்க முடியாத தொடர்தான். இந்தத் தொடரில் மட்டும் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று முத்திரை பதித்தார்.

விளையாட்டைப் பொறுத்தவரை வீரர், வீராங்கனைகள் எல்லாருக்குமே 30 வயது என்பது வேகத் தடையைப் போன்றது. குறிப்பாக, இளம் போட்டியாளர்களுடன் போட்டி போட்டு விளையாடும் திறன் குறையத் தொடங்கிவிடும். ஆனால், அஞ்சலி பாகவத் தலைகீழாக இருந்தார். இரண்டாயிரமாவது ஆண்டுக்கு பிறகு அஞ்சலி பாகவத் மீண் டெழுந்தார். அப்போது 31 வயதை எட்டியிருந்த அஞ்சலி, அதன் பிறகு சர்வதேச அளவில் பதக்கங்களைக் குவித்தார்.

முதன்முறையாக 2000இல் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பங்கேற்கஅஞ்சலி பாகவத்துக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒலிம்பிக்கில் பதக்கம் எதுவும் கிடைக்கவில்லை யென்றாலும், குறிப்பிடத்தக்க சாதனையைப் படைக்க அவர் தவறவில்லை. துப்பாக்கி சுடும் போட்டியின் இறுதிச் சுற்றுவரை முன்னேறினார். இந்தியப் பெண் ஒருவர் துப்பாக்கி சுடுதலில் இறுதிச் சுற்றுவரை முன்னேறியது அதுதான் முதல்முறை.

2002இல் அஞ்சலியின் விளையாட்டு வாழ்க்கையின் வசந்த காலம். அந்த ஆண்டு மான்செஸ்டரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றன. இந்தத் தொடரில் மட்டும் 10 மீட்டர் ஏர் ரைபிள், 3 விதமான 50 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவுகளில் பங்கேற்ற அஞ்சலி பாகவத், நான்கு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கத்தைத் தனதாக்கி, உலக சாதனை படைத்தார். இதேபோல 2003இல் இந்தோ - ஆப்ரிக்கத் துப்பாக்கி சுடுதல்  வாகையர் பட்டப் போட்டியிலும் இரு பிரிவுகளில் பங்கேற்றுத் தங்கம், வெள்ளி என இரு பதக்கங்களை வென்றார். இந்தத் தொடரிலும் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனைக்கு அஞ்சலி சொந்தக்காரர் ஆனார். இந்தக் காலகட்டத்தில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவுத் தரவரிசைப் பட்டியலில் அஞ்சலி பாகவத் முதலிடத்துக்கு முன்னேறி புதிய உச்சத்தைத் தொட்டார்.

பதக்க வேட்டை

2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக, 8ஆவது இடத்தைப் பிடித்தார். ஆனால், இரண்டாவது முறையாக ஒலிம்பிக்கில் இறுதிச் சுற்றுவரை முன்னேறியவர் என்ற பெருமையோடு அவர் நாடு திரும்ப வேண்டியிருந்தது. மூன்றாவது முறையாக 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தபோது அவர் அதை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். அப்போது அவர் 39 வயதை எட்டியிருந்தாலும், ஆட்டத் திறனில் கொஞ்சமும் தடுமாற்றம் இல்லாமல் தோட்டாவைப் போல் சீறினார்.

சுமார் 20 ஆண்டுகள் நீடித்த அஞ்சலியின் விளையாட்டுப் பயணத்தில், அவர் குவித்த பதக்கங்கள் ஏராளம். சர்வதேச அளவிலான போட்டிகளில் மட்டும் 28 தங்கம், 22 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கிறார். இதில் காமன்வெல்த் போட்டிகளில் மட்டும் 13 தங்கப் பதக்கங்களைப் பெற்றிருக்கிறார். தேசிய அளவில் 54 தங்கப் பதக்கங்களை வென்ற ஒரே வீராங்கனை அஞ்சலி மட்டுமே.

குறி பார்த்து பதக்கத்தைச் சுடுவதில் தேர்ந்தவராக இருந்ததால்தான் அவரை இந்தியாவின் அர்ஜூனா, இந்தியாவின் ஷூட்டிங் ராணி எனப் பெருமையோடு அழைக்கிறார்கள். அர்ஜூனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது உள்பட 14 விருதுகளை அவர் வாங்கிக் குவித்திருக்கிறார்.

2010க்குப் பிறகு விளையாட்டுப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற அஞ்சலி, தொடர்ந்து விளையாட்டுத் துறை சார்ந்த பணிகளிலும் சமூக சேவையிலும் ஈடுபட்டுவருகிறார். இந்தியப் துப்பாக்கி சுடும் போட்டியில் பெண்களின் எண்ணிக்கை இன்று கணிசமாகக் கூடியிருப்பதில் அஞ்சலி பாகவத்துக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. ஆண்கள் மட்டுமே கோலோச்சிக்கொண்டிருந்த ஒரு விளையாட்டில், தனி ஒருவராக ராஜ்ஜியத்தை நிறுவியவர் அஞ்சலி. துப்பாக்கி சுடுதல் போட்டியில் அவர் போட்ட விதை இன்று ஆல மரமாகக் கிளை பரப்பி நிற்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner