எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சில விளையாட்டுகளில் இந்திய வீராங்கனைகள் இருப்பதோ சாதிப்பதோ யாருக்குமே தெரியாது. அப்படிப்பட்ட ஒரு விளையாட்டுதான் வட்டெறிதல். தடகளப் பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த விளை யாட்டில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்து தேசத்தைத் திரும்பிப் பார்க்கவைத்தவர் கிருஷ்ண பூனியா.  இவரது சொந்த ஊர், அரியானாவில் உள்ள அக்ரோஹா. ஒன்பது வயது ஆவதற்குள்ளாகவே தந்தை, பாட்டி, தாய் என உறவுகளை அடுத்தடுத்துப் பறிகொடுத்தவர். மிகப் பெரிய இழப்பிலிருந்து மீண்டுவந்த பூனியா, சிறுவயதிலிருந்து வேலையைச் செய்தபடி படித்தார்.

கல்லூரியில் படிக்கும்போதே பூனியாவுக்குத் திருமணம் நடந்தது. பூனியாவைக் கரம் பிடித்தவர், ஒரு விளையாட்டு வீரர்.

பூனியாவின் கணவர்  வீரேந்தர் சிங், சம்மட்டி எறிதல் என்றழைக்கப்படும் ஹாமர் த்ரோ வீரர். காயம் காரணமாக  விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றுத் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்திருந்தார். தன்னால் பெரிய அளவில் சாதிக்க முடியாமல் போய்விட்ட வருத்தம் அவருக்கு அதிகம் இருந்தது. அந்த வருத்தத்தைப் போக்கிக்கொள்ளத் தன் மனைவி கிருஷ்ண பூனியாவை வீராங்கனையாக்க முடிவுசெய்தார். சற்றும் யோசிக்காமல் பூனியாவின் பயிற்சியாளராக மாறினார் கணவர்.

கிருஷ்ண பூனியாவின் உயரம், எடைக்கு ஏற்ப வட்டெறிதல் எனப்படும் டிஸ்கஸ் த்ரோ விளை யாட்டை முறைப்படி கற்றுக்கொடுத்தார். தன் கணவர் மூலம் அந்த விளையாட்டின் நுணுக் கங்களை விரைவாகவே கற்றுக் கொண்டார் பூனியா.

முதல் வாய்ப்பு

பின்னர் மாநில, தேசிய அளவிலான  போட்டி களில் பங்கேற்றுவந்தபோதே சர்வதேசப் போட்டி களிலும் களம்கண்டார் பூனியா. 2006இல் தோகாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க பூனியாவுக்கு முதன் முறையாக வாய்ப்புக் கிடைத்தது. பூனியா இந்தப் போட்டியில் பெரிதாகச் சாதிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பெயரளவுக்குத்தான் இந்த விளையாட்டில் ஒரு போட்டியாளராக பூனியா சேர்க்கப்பட்டிருந்தார்.

சீன வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்திய இந்தப் போட்டியில், 61.53 மீட்டர் தூரம் வட்டெறிந்து கிருஷ்ண பூனியா வெண்கலப் பதக்கத்தை வென் றார். இந்த வெற்றி தடகள விளையாட்டில் அவரது பெயரை அழுத்தமாகப் பதிவுசெய்தது. அதே ஆண்டில் தேசிய தடகள விளையாட்டுப் போட்டி யிலும் பூனியா தங்கப் பதக்கம் வென்றபோது புகழ்பெற்றார். 2010இல் சீனாவின் குவாங்ஷு நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி, வெண் கலப் பதக்கத்தை கிருஷ்ண பூனியா வென்றார்.

அடுத்தடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றதால், ஒலிம்பிக் கனவுடன் பயிற்சி யைத் தொடர்ந்தார். இடையே 2010ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் அவருடைய திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பாக வந்தது. டில்லியில் நடை பெற்ற இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடி 61.5 மீட்டர் தொலைவுக்கு வட்டெறிந்து,  தங்கப் பதக்கத்தை வென்றார்.

காமன்வெல்த் போட்டியில் வட்டெறிதல் விளையாட்டில் இந்திய வீராங்கனை ஒருவர் பெற்ற முதல் தங்கப் பதக்கம் இதுதான். இந்திய தடகள டிராக் அண்ட் ஃபீல்ட் வரலாற்றில் 1958 காமன்வெல்த் போட்டியில் மில்கா சிங் செய்த சாதனைக்குப் பிறகு கிருஷ்ண பூனியா அந்தச் சாதனையைச் சமன் செய்து அசத்தினார். இந்த வெற்றி பூனியாவைச் சிகரத்துக்குக் கொண்டு சென்றது.

அரசியல் நுழைவு

தடகள விளையாட்டுப் பிரிவுகளில் ஒன்றான வட்டெறிதலில் தொடர்ந்து சாதித்துவந்த கிருஷ்ண பூனியாவின் சாதனையைப் பாராட்டி 2010இல் அர்ஜுனா விருதையும் 2011இல் பத்மசிறீ விருதையும் மத்திய அரசு வழங்கிக் கவுரவித்தது. தொடர்ந்து விளையாட்டுக் களத்தில் விளையாடியபோதும், அரசியல் களத்திலும் அவர் காலடி எடுத்துவைத்தார். தற்போது 36 வயதாகும் கிருஷ்ண பூனியா, காங்கிரசு கட்சியின் பிரச்சாரகராக இருக்கிறார்.  பெண் கல்வி, வரதட்சணை ஒழிப்பு போன்ற சமூகப் பிரச்சினை களுக்காகவும் குரல் கொடுத்துவருகிறார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner