எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து “ஒரு பெண்மணி’ பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் கூட பெண்கள் மட்டும்தான்... அதுவும் தேர்தல் ஏதும் நடத்தாமல் பஞ்சாயத்தை ஆள 33.33 சதவீதம் அல்ல ... நூறு சதவீதம் பெண்கள் மட்டும் நியமிக்கப்படுகிறார்கள் என்ற செய்தியையும் நம்பித்தான் ஆக வேண்டும்.

எங்கு பார்த்தாலும் மரங்கள்.. ஊரே பச்சை போர்த்தியிருப்பதால் அப்படி ஒரு குளுமை. ஒவ்வொரு தெருவும் தினமும் கூட்டப்பட்டு படு சுத்தமாக இருக்கிறது. கிராமம் முழுக்க “வை-ஃபை’ வசதி... எங்கு பார்த்தாலும் “சிசிடிவி’ காமிராக்கள்.. பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை... தெருவில் குப்பை கொட்டினால் அய்நூறு ரூபாய் அபராதம்...

ஒரு நகரத்தில் கூட இந்த ஏற்பாடுகள், வசதிகள், கட்டுப்பாடுகள் இருக்குமா என்று சொல்ல முடியாது. இப்படிக் கூட கிராமத்தை, அனைத்து கிராமங் களுக்கும் “ஒரு முன் மாதிரி கிராமமாக’ நிர்வகிக்க முடியுமா என்று அதிசயிக்க வைக்கும் கிராமம்தான் குஜராத் கிர் சோம்நாத் மாவட்டத்தைச் சேர்ந்த “பாதல்பரா’ கிராமம்.

“எப்படி ... இது சாத்தியமானது..’’ என்று ஆண்களைக் கேட்டால், “இந்தக் கிராமத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடப்பதில்லை. போட்டியின்றி பெண்கள் குழுவும் அதன் தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தப் பெண்கள் குழுதான் கிராமத்தை நிர்வகிக்கிறது.

குழுவில் ஆண் உறுப்பினர் ஒருவர் கூட இல்லை. ஊழல் இல்லாத நிர்வாகம்... என்பதுதான் பாதல்பரா கிராமத்தின் சிறப்பு என்கிறார்கள். இந்த வார்த்தைகளில் பொறாமையோ, கிராமத்தை நிர்வகிக்கும் வாய்ப்பு ஆண்களுக்கு கிடைக்க வில்லையே என்ற தொனியோ இல்லவே இல்லை.

பஞ்சாயத்து தலைவியாக 2003 - லிருந்து செயல்படுபவர், ரமா பெஹன். இது குறித்து அவர் கூறுகையில்:

“எங்கள் கிராமத்தின் மக்கள் தொகை 1472. பெண்கள் அய்ம்பது சதவீதத்தினர். பள்ளியில் படிக்கும் மொத்த மாணவர்களில், மாணவியர் அய்ம்பது சதவீதம். இங்கு அனைத்து இன மக்களும் ஒன்று போலவே நடத்தப் படுகிறார்கள்.

எல்லா மக்களுக்கும் வசதிகள் செய்து தரப்படுகின்றன. கிராமத்தில் எந்த வசதியையும் புதிதாகச் செய்து தரும் போது முதலில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு செய்து விட்டுத்தான் பிறருக்கு இரண்டாவதாகச் செய்து கொடுக்கிறோம். அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் அனைவரும் சரி நிகர் சமம் என்றே நடத்துகிறோம். அதனால் மக்களிடையே ஒற்றுமை நிலவுகிறது.

இந்தக் கிராமத்தில் தண்ணீர், துப்புரவு, சாக்கடை, மின்சாரம் என்று எதிலுமே பிரச்சினைகள் எழுவ தில்லை.

தேவைகள், புகார்கள் அனைத்தையும் பெண்கள் மட்டும் அடங்கிய பஞ்சாயத்து நிர்வாகம், ஊர் மக்கள் அனைவரும் திருப்தி அடையும்படி நிறைவேற்றி வைக்கிறது.

எந்தப் பிரச்சினையையும் உயர்மட்ட அதிகாரிகள் வரை கொண்டு செல்ல மாட்டோம். ஆரம்ப நிலையிலேயே நாங்களாகவே பேசி, ஆலோசித்து தீர்வுகளை உருவாக்கிக் கொள்கிறோம். எங்களைக் குறித்தும், எங்களது கிராம நிர்வாகம் குறித்தும் எந்தவிதப் புகாரும் இதுவரை எழுப்பப் படவில்லை.

தெருக்களை சுத்தமாக வைத்திருக்க குப்பை கூளங்களை உரிய இடத்தில் போடாமல் தெருவில் கொட்டினால், அய்நூறு ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்.

இந்தக் கட்டுப்பாட்டால் எல்லா தெருக்களும் “பளிச்‘சென்று சுத்தமாக இருக்கிறது. வெற்றிலை சுவைத்து கண்ட கண்ட இடத்தில் துப்பக் கூடாது என்ற கட்டுப்பாடும் உண்டு.

கிராமத்தைப் பெண்களால் திறமையுடன் நிர்வகிக்க முடியும் என்பதை கடந்த பதினைந்து ஆண்டுகளாக நிரூபித்து வருகிறோம்‘’ என்கிறார் ரமா பெகன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner