எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அண்மையில் ஜகர்தாவில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளி பதக்கங்களை பெற்ற ஓட்டப் பந்தய வீராங்கனை டூட்டி சந்த், நான்காண்டுகளுக்கு முன் பந்தயங்களில் கலந்து கொள்ளக்கூடாது என்று இன்டர்நேஷனல் அத்லடிக் பெட ரேஷன் தடைவிதித்ததும், அதை எதிர்த்து அவர் போராடி வெற்றிப் பெற்றதும் பலருக்கு தெரியாது. இது குறித்து டூட்டி சந்த் சொல்வதை கேட்கலாம்:

“உலக மேடையில் தங்கப்பதக்கம் பெறுவதற்காக நான் ஓட்ட பந்தயங்களில் கலந்து கொள்வேன் என்று சிறுவயதில் நினைத்து பார்த்ததே இல்லை. ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டம் கோபால்புரி கிராமத்தில் நெசவுத் தொழில் செய்து வரும் என் பெற்றோர் சக்ரதார் சந்த் மற்றும் அக்குஜிக்கு பிறந்த ஆறு குழந்தைகளில் ஒருவரான எனக்கு, சிறு வயதில் பள்ளியில் படிக்கும் போதே ஓட்ட பந்தயத்தில் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் அதற்கான அடிப்படை வசதிகளோ, விளையாட்டு மைதானமோ எங்கள் கிரா மத்தில் இல்லை. ஆற்றங்கரை ஓரமாகவே ஓடிப் பழகுவேன். எடை பயிற்சிக்காக பெரிய பாறைகளை தூக்குவேன். நிலத்தடி தண்ணீர் குழாய் அடிப்பதை உடற்பயிற்சியாக செய்து வந்தேன்.

ஓட்ட பந்தயங்களில் ஆர்வம் ஏற்பட்டது ஒரு புறமிருக்க, எனக்கு உடுத்துவதற்கு சரியான உடைகள் கூட கிடையாது. வீட்டில் அத்தனை வறுமை. நெசவு தொழிலில் கிடைக்கும் வருவாயில் எங்களால் முன்று வேளை சாப்பிடுவதே சிரமமாக இருந்தது. பகலில் ஒருவேளை சாப்பாடுதான். பிற் காலத்தில் சர்வதேச விளையாட்டுப் போட்டி களுக்காக ஆடம்பரமான ஓட்டல்களில் தங்கியபோது, அங்கு மேஜை முழுக்க வைத்திருந்த “பப்பே லஞ்ச்‘ மற்றும் சுத்தமான டாய்லெட்களை பார்த்தபோது இளமை காலத்தில் நான் மண் குடிசையில் வளர்ந்தது தான் நினைவுக்கு வந்தது.

2012- ஆம் ஆண்டு பாட்டியாலாவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ சேர்ந்த நாக்புரி ரமேஷ், என் பயிற்சிகளுக்கான செலவை ஏற்றுக் கொள்ள, தேசிய அளவிலான ஓட்ட பந்தயங்களில் கலந்து கொண்டு விருதுகளை வாங்கி குவித் தேன். இதன்காரணமாக, 2014- ஆம் ஆண்டு ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இந்திய குழுவில் தேர்வு செய்யப்பட்டேன். ஆனால் திடீரென இன்டர்நேஷனல் அத்லடிக் பெடரேஷன் எனக்கு தடை விதித்ததோடு, ஒரு பழியையும் சுமத்தியது.

என்னுடைய உடலில் ஹைப்பரான்ட்ரோ ஜெனிசம் எனப்படும் ஆண்களுக்கு சுரக்கும் ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதால், பெண் விளையாட்டு வீராங்கனை பிரிவில் நான் பந்தயங்களில் பங்கேற்க அருகதை இல்லை என அறிவித்தது. இதை எதிர்த்து மத்திய அரசு வழங்கிய நிதியுதவியுடன், சமூக ஆர்வலர் பயோஷினி மித்ரா ஆதரவுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். நீண்ட கால சட்டப் போராட்டத்திற்கு பின், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இதே போன்ற ஒரு வழக்கில் சுவிட்சர்லாந்து விளையாட்டுத் துறை நடுவர் மன்றம், அதிகப்படியாக ஹார்மோன் சுரப்பது பெண்களுக்கு சகஜமானது தான் என்று கூறி, போட்டிகளில் பெண்கள் பங்கேற்பதை தடை செய்யக் கூடாது என்று வழக்கை தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து இன்டர்நேஷனல் அத்லடிக் பெடரேஷனும் 400 மற்றும் 1000 மீட்டர் தொலைவு ஓடும் பெண் வீராங் கனைகளுக்கான டெஸ்டோட்ரோன் அளவு விகிதத்தை அறிமுகப்படுத்தியதால் 100 மற்றும் 200 மீட்டர் தொலைவு ஓட்ட பந்தயங்களில் நான் பங்கேற்க தடையில்லை என அறிவித்தது மகிழ்ச்சியை அளித்தது.

“எதற்காக பெண்ணான நீ மெனக்கெட்டு ஓடி என்ன சாதிக்கப் போகிறாய்?’’ என்று சிலர் கேட்க, ஒரு சிலரோ என்னை பையன் என்று சொல்லி கிண்டல் செய்தனர். ஆனால் அய்தராபாத்தில் எனக்கு முழு நேர பயிற்சியளித்த ரமேஷ், “ தேசிய அளவில் நீ ஒரு வீராங்கனையாக தேர்ச்சிப் பெற்றால், ஏதாவது ஓர் அரசு துறையில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் வேலை கிடைக்கும். உனக்கும் உன் குடும்பத்திற்கும் விடிவு காலம் பிறக்கும்‘’ என்று கூறுவார்.

அவரது கனவை நனவாக்க வேண்டுமென்று ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றபோது தங்க பதக்கத்தை எதிர் பார்த்தே 100 மற்றும் 200 மீட்டர் தொலைவு ஓட்ட பந்தயங்களில் முழு வேகத்துடன் ஓடினேன். ஆனால் இரண்டு போட்டிகளிலுமே இரண்டாவதாக வந்து வெள்ளி பதக்கங்களையே பெற முடிந்தது. அடுத்து ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தங்கப்பதக்கம் பெறுவேன் என்று நம்பிக்கையுடன் கூறி முடித்தார் டூட்டி சந்த்.

இவரது சாதனையை பாராட்டி ஒடிசா அரசு இவருக்கு 3 கோடி பரிசுத் தொகை வழங்கியுள்ளது. இந்த பணத்தை வைத்து குடும்பத்திற்காக வசதியான வீடு ஒன்றை கட்டி, என் சகோதரர்களுக்கு திருமணம் நடத்தி, பெற்றோர் நிம்மதியாக வாழ வேண்டு மென்பதுதான் என் விருப்பம்‘’ என்று கூறும் டூட்டி சந்த்தின், பெற்றோரோ தொடர்ந்து தங்கள் குடும்ப தொழிலான நெசவு தொழிலை செய்வதென தீர்மானித்துள்ளனர். இன்று வசதியான வாழ்க்கை கிடைக்கிறது என்ப தற்காக எங்கள் பரம்பரை நெசவு தொழிலை விட்டுவிட முடியாது என்கிறார்கள்.

டூட்டி சந்தின் சாதனை இத்துடன் முடிந்து விடவில்லை. ஏற்கெனவே ஆக்கி விளை யாட்டு வீரர் தன்ராஜ் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதிய பத்திரி கையாளர், எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளருமான சந்தீப் மிஸ்ரா, இப்போது டூட்டி சந்த்தின் வாழ்க்கை வரலாற்றை “ஸ்டோரி சோ பார்’ என்ற தலைப்பில் எழுதி வருகிறார். இந்தப் புத்தகம் அடுத்த ஆண்டு அமேசான் நிர்வாகத்தின் கீழ் உள்ள வெஸ்ட்லாண்ட் பதிப்பகம் மூலம் வெளியாக உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner