Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தோற்றத்திற்கு உயர்ந்த பெண்ணாக தெரியாவிட்டாலும் `ஹை ஜம்ப்' என்கிற உயரம் தாண்டுதலில் நூற்றுக்கும் மேற்பட்ட தங்கங்களை குவித்திருக்கிறார் சொர்ண மாலதி. சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி பி.காம்., முதலாமாண்டு மாணவி. சமீபத்தில், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்த தேசிய அளவிலான உயரம் தாண்டுதல் போட்டியில் ஜூனியர் பிரிவில் தங்கம் வென்று திரும்பியிருக்கிறார்  சொர்ண மாலதி. அவர் கூறியதாவது:-

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே தூத்துக்குடி. அப்பா அன்பழகன், அம்மா ரத்தினம். என்னுடைய லட்சியம் நிறைவேறுவதற்காக சென்னைக்கு வந்து ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறேன். சென்னைக்கு வந்த பிறகு நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளேன். குறிப்பாக, நிறைய தைரியமுள்ள பெண்ணாக மாறியிருக்கிறேன். நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் விரும்பி விளையாட ஆரம்பித்துவிட்டேன். உயரம் தாண்டுதல் தவிர்த்து நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகளிலும் பதக்கம் வாங்கி இருக்கிறேன். ஆனால், எனக்கு என்னவோ உயரம் தாண்டுவது தான் பிடித்திருந்தது. அந்த விளையாட்டின் ஸ்டைல் என்னை கவர்ந்தது. அதனால், அதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறேன்.

உயரம் தாண்டுதலில் வெற்றிபெற வேண்டும் என்றால் நம் உடல் எளிதில் வளைந்து கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும். வேகமாக ஓடவேண்டும். கவனம் சிதறக்கூடாது. முக்கியமாக, நன்கு உயரமாக இருக்க வேண்டும். ஆனால், என்னைப் பொருத்தவரை நான் கொஞ்சம் உயரம் குறைவான பெண்தான். அதேநேரம், வேகமாக ஓடி வந்து, அதே வேகத்தில் திரும்பி `ஜம்ப்' செய்து உயரம் தாண்டக்கூடிய திறன் என்னிடம் அதிகம் இருப்பதாக கருதுகிறேன். அதனால், உயரம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் என்னால் இப்போட்டியில் வெற்றிபெற முடிகிறது.

நான் இருநூறுக்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டு இருக்கிறேன். இவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட தங்கம் வென்றிருக்கிறேன். நான் பங்கேற்ற தேசியப் போட்டிகள் மொத்தம் 8. ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது விஜயவாடாவில் நடந்த தேசியப் போட்டியில் முதன் முதலாக கலந்து கொண்டேன். அதில் நான் வென்றது வெண்கலப் பதக்கம்.

கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் அய்தராபாத்தில் நடந்த தேசியப் போட்டிதான் மறக்க முடியாத போட்டி. ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு இந்த போட்டியில் கலந்து கொண்டேன். இருந்தாலும், பழைய உற்சாகத்துடன் பங்கேற்றேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை. நான் எதிர்பார்த்தது போலவே தங்கம் வென்றேன். எனது பயிற்சியாளர் தந்த ஊக்கம்தான் அதற்குக் காரணம்.

மேலும், கடந்த டிசம்பர் மாதம் மங்களூரில் நடந்த அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான போட்டியில் பங்கேற்றேன். கல்லூரியில் இளங்கலை, முதுகலை மட்டுமல்லாமல், ஆராய்ச்சி படிப்பு படிக்கும் எவரும் இதில் பங்கேற்கலாம். மொத்தம் 68 பேர் அதில் கலந்துகொண்டோம். சென்னைப் பல்கலைக்கழக அளவில் தேர்வான மாணவிகளில் நான் மட்டும்தான் இளங்கலை முதலாம் ஆண்டு படிப்பவள். மற்ற எல்லோருமே என்னை விட சீனியர்கள். அதனால் போட்டி கடுமையாக இருந்தது. என்னால் ஏழாவது இடம்தான் வர முடிந்தது. கேரள மற்றும் கருநாடகத்தைச் சேர்ந்த மாணவிகள் சிறப்பாக `ஜம்ப்' செய்தார்கள். அந்த `டெக்னிக்'கை அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன்.

விளையாட்டுத் துறையில் உள்ள எங்களை மற்றப் பெண்களுடன் ஒப்பிடும்போது, எங்களுக்கு தைரியம் கூடுதலாக இருக்கும். மற்றப் பெண்கள் ஒரு கருத்தை வெளிப்படுத்த தயங்கும் அதேநேரத்தில் நாங்கள் தைரியமாக சொல்வோம். பேருந்தில் பயணிக்கும் போது யாரேனும் எங்களை உரசி சீண்டினால் உடனே அடித்து விடுவோம். மற்ற பெண்களைப் போன்று ஒதுங்கிப் போக மாட்டோம். மேலும், எங்களுக்கான பொழுதுபோக்கு நேரங்கள் மிகவும் குறைவு. தினமும் அதிகாலை 5 மணிக்கே எழுந்து பயிற்சிக்கு சென்று விடுவோம். காலை 6 மணி முதல் 8.30 மணி வரை பயிற்சி செய்வோம். மாலையில் 4.30 மணி முதல் 7 மணி வரை தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுவோம். அதனால், எங்களுக்கான விஷயங்கள் கிடைக்காமல் போகும் போது கொஞ்சம் கூடுதலாக கோபப்படுவோம். அவ்வளவுதான்.

உயரம் தாண்டுவது ஒருவரது உடலுக்கு நன்றாக வளைந்து கொடுக்கக்கூடிய திறனைத் தரும். உடல் உயர வளர்ச்சி மற்றவர்களைவிட அதிகமாக காணப்படும். உயரம் தாண்டுதலில் `டெக்னிக்' ஆக செயல்பட்டால் தான் வெற்றிபெற முடியும் என்பதால், அந்த யுக்தி உயரம் தாண்டும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதனால் எங்களது கவனம் எந்தவொரு விஷயத்திலும் எளிதில் சிதறி விடாது. மற்றபடி, எந்த விளையாட்டு விளையாடினாலும் கிடைக்கக்கூடிய நன்மைகளை இதன் மூலமும் பெற முடியும். முக்கியமாக, எந்தவொரு நோயும் சட்டென்று வந்துவிடாது.

நான் பள்ளிக்கூடத்தில் படித்தபோது பயிற்சி யாளராக இருந்த சாஜூ, இப்போதைய பயிற்சியாளர் ராஜசேகர் மற்றும் பெற்றோர்தான் என் வெற்றியின் பின்னணியில் இருப்பவர்கள்.

ஆரம்பத்தில் அப்பா, அம்மாவை பிரிந்து சென்னை வந்தபோது கஷ்டமாகத்தான் இருந்தது. இதுவரையில் நான் எனது பெற்றோரை பிரிந்து இருந்ததில்லை. இதுதான் முதன்முறை. என்றாலும், போகப்போக சென்னை பிடித்துவிட்டது. மேலும், என் உடன்பிறந்த அக்காவும் இங்கேதான் வசித்து வருகிறார் என்பதால், வாரம்தோறும் அங்கே சென்று விடுவேன். அதனால், சென்னை எனக்கு சவாலாக தோன்றவில்லை.

நான் பள்ளி நாட்களில் அடிக்கடி `கேம்ப்'க்காக சென்னை வந்திருக்கிறேன். அந்த அனுபவம் இருந் தாலும், இப்போது சென்னையிலேயே இருப்பதால் என்னுடைய தன்னம்பிக்கை இன்னமும் அதிகரித்து இருக்கிறது. உயரம் தாண்டுதலில் நிறைய பதக்கங் களை வென்று வருகிறேன். ஒன்றை இழந்தால்தானே மற்றொன்றை பெற முடியும்?'' என்று கூறினார் சொர்ண மாலதி.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்