எழுத்துரு அளவு Larger Font Smaller Font


தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த பல நீர்நிலைகள் நோய் வாய்ப்பட்டுவிட்டன. எஞ்சிய நீர்நிலைகளும் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. சாய ஆலைகளின் கழிவால் கடைசி நாடித்துடிப்புடன், சாவின் விளிம்பில் இருக்கும் திருப்பூர் நொய்யல் ஆற்றை மீட்டெடுக்கும் வகையில், களம் இறங்கி யுள்ளனர் திருப்பூர் பெம் பள்ளி மாணவர்கள். குஜராத்தில் டிசம்பர் 27 அன்று தொடங்கிய தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்காக, நொய்யல் ஆற்றின் தற்போதைய நிலையை கள ஆய்வு செய்து கட்டுரை சமர்ப்பித்து இருக்கிறார்கள் தியா சபீர், பிரகல்யா, சிறீ கோவிந்த் ஆகிய ஏழாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் மகாதிரிபுரசுந்தரி, சம்வேத்யா ஆகிய எட்டாம் வகுப்பு மாணவிகள். மூன்று மாதங்களாக நொய்யல் வழித்தடத்தில் கிட்டத்தட்ட 100 கி.மீ. பயணித்து இந்த ஆய்வை சமர்பித்துள்ளதாகக் கூறுகிறார் இவர்களது பள்ளியின் பயிற்சி ஆசிரியை சமீமா பேகம்.

ஆற்றோரம் ஆய்வுப் பயணம்

சாமளாபுரம் குளம், நொய்யலாறு திருப்பூரில் நுழையும் பகுதியான அக்ராஹப்புத்தூர், மங்கலம், ஆண்டிப்பாளையம் குளம், கருவம்பாளையம் தடுப்பணை, மாமரத்துப்பள்ளம், ஒரத்துப்பாளையம் அணை, சின்னமுத்தூர் தடுப்பணை, ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கம் முதற்கொண்டு, நொய்யல் ஆறு காவிரியுடன் கலக்கும் நொய்யல் கிராமம்வரை மூன்று முறை ஆற்றின் வழித்தடத்தில் பயணித்து, இந்த ஆய்வுக் கட்டுரைக்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

நொய்யல் ஆற்றில் 10 இடங்களில் நீரின் கடினத்தன்மை (டி.டி.எஸ்), கார - அமிலத்தன்மை (பி.ஹச்.) முதலியவற்றை ஆய்வின் மூலம் கண்டறிந்தோம். மழைக் காலத்தில் நொய்யல் ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ள நீர் பாசனத்துக்குப் பயன்படுகிறதா; ஒரத்துப்பாளையம் அணை, சின்னமுத்தூர் தடுப்பணை, ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கம் ஆகிய மூன்று அணைகள் எதற்காகக் கட்டப்பட்டன என்பதை எல்லாம் ஆய்வின்போது தெரிந்துகொண்டோம்.

கடந்த 2005ஆம் ஆண்டு முதல், நொய்யல் ஆற்றுநீர் எந்த அணையிலும் தேக்கப்படாமல் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரியில் கலந்துவருகிறது. கடந்த 12 ஆண்டுகளில் விநாடிக்கு 1,000 கன அடிக்கும் மேல் 20 முறை நொய்யலில் மழைநீர் பெருக்கெடுத்துள்ளது. இதை ஒரு நாள் என்ற கணக்கில் எடுத்தாலே கிட்டத்தட்ட 29,640 லட்சம் கன அடி நீர் சென்றுள்ளதை அறியலாம். அதேபோல 2011 நவம்பர் 7 அன்று நொய்யலில் உருவான வெள்ளத்தில், அன்று மட்டும் விநாடிக்கு 5,774 கன அடி நீர் சென்றுள்ளது. இதில், ஒரு சில மணித் துளிகளுக்குள் நொய்யல் ஆற்றில் உள்ள கழிவு நீர், சாய நீர் போன்றவை அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அதன் பின் வெள்ள நீர்தான் ஓடியது. அதை சின்னமுத்தூர் தடுப்பணையில் தடுத்து, அங்குள்ள ஊட்டுக்கால்வாய் மூலம் 10 கி.மீ. தூரத்தில் உள்ள ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்துக்குக் கொண்டு சென்றிருந்தால் கிட்டத்தட்ட 20,000 ஏக்கர் நிலத்துக்குப் பாசன வசதி கிடைத்திருக்கும். ஒரத்துப்பாளையம் அணை கட்டப்பட்டதன் நோக்கமும் நிறைவேறி இருக்கும். ஆனால், இவை எதுவும் நடைபெறவில்லை என்று இம்மாணவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

செழிக்கட்டும் வேளாண்மை

மேலும், நொய்யல் ஆற்றில் மழைக் காலத்தில் செல்லும் மழை நீரின் கடினத் தன்மை 179 ஆகவும், கார - அமிலத் தன்மை 7 ஆகவும் இருப்பதை ஆய்வில் கண்டுபிடித்தி ருக்கிறார்கள். நொய்யல் ஆற்றில் பல்வேறு பகுதிகளில் ஓடிய வெள்ள நீரை எடுத்துவந்து அதில் வெந்தயத்தைப் போட்டு முளைக்கச் செய்தனர்.

மழை நீரில் வெந்தயத்தின் விளையும் தன்மையும் வளர்ச்சி விகிதமும் மிகவும் நன்றாக இருந்தன. ஆகையால், நொய்யலில் வரும் வெள்ள நீரை அணைகளில் தேக்கி விவசாயத்துக்குப் பயன்படுத்தலாம். ஆனால், அதை யாரும் செய்யாததால், பாசனத்துக்குப் பயன்படாமல் மழை நீர் வீணாகிவருகிறது. நதிக்கரை ஓரங்களில் நாகரிகம் தோன்றியது. அதை ஒட்டி வேளாண்மையும் செழித்தது. இன்றைக்கு நொய்யல் நதியை நம்பி வாழும் வேளாண் குடும்பங்களில் மீண்டும் மகிழ்ச்சி மலர எங்கள் ஆய்வு பயன்பட வேண்டும் என்கின்றனர் நதியை மீட்கப் புறப்பட்டிருக்கும் இந்த மாணவர்கள்.

சிண்டிகேட் வங்கி அதிகாரி ஆகலாம்  

வங்கிப் பணியில் சேர விரும்பும் திறமையான பட்டதாரிகளைத் தேர்வுசெய்து அவர்களை வங்கி, நிதி தொடர்பான முதுகலை டிப்ளமா படிப்பை  படிக்க வைக்கிறது சிண்டிகேட் வங்கி. மேலும், அவர்களைத் தங்களது வங்கியில் அதிகாரியாகப் பணியமர்த்தவும் செய்கிறது. அந்த வகையில், தற்போது 500 பட்டதாரிகளைத் தேர்வுசெய்ய இருக்கிறது. இதில், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின் படி, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. வகுப்பினருக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்கப்படும். முதலில் தேசிய அளவில் போட்டித் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்வுசெய்யப் படுபவர்கள் பெங்களூரு மணிபால் குளோபல் எஜுகேசன் சர்வீஸ் கல்லூரி, நொய்டாவில் உள்ள நிட்டில் எஜுகேசன் இண்டர்நேசனல் கல்லூரியில் வங்கியியல் நிதி முதுகலை டிப்ளமா படிப்பில் சேர்க்கப்படுவார்கள். இங்கு 9 மாதங்கள் படிக்க வேண்டும். மாதம் ரூ.3,000 உதவித்தொகையாக வழங்கப்படும். படிப்புக் கட்டணம் ரூ. 3.5 லட்சத்துக்கு சிண்டிகேட் வங்கியே கல்விக் கடன் அளிக்கும்.  இப்பயிற்சியை முடித்ததும் சிண்டிகேட் வங்கியில் அதிகாரியாகப் பணியில் சேர்ந்துவிடலாம்.

பார்வை தரும் மருத்துவப் படிப்பு!

மருத்துவராக விரும்பும் அனைவருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. மருத்துவராக முடியாதவர்களும் மருத்துவத் துறையில் பணியாற்றுவதற்கான வாய்ப்பைப் பல்வேறு துணை மருத்துவப் படிப்புகள் வழங்குகின்றன. அவற்றுள் கண் மருத்துவத் துறையில் அங்கம் வகிக்கிறது ஆப்டோமெட்ரி. அதிக வேலைவாய்ப்புடன், முதன்மை யான வருமானம் ஈட்டும் பணிகளில் ஒன்றாக வளர்ந்து வருகிறது இத்துறை.

கண், பார்வைத் திறன் தொடர்பான மருத்துவப் பரிசோதனைகள், அளவீடுகள், மருத்துவ உதவி சாதனங்கள் தொடர்பான படிப்புகளை ஆப்டோமெட்ரி துறை வழங்குகிறது. இத்துறையில் படித்துத் தேறும் மருத் துவப் பணியாளர் ஆப்டோமெட்ரிஸ்ட் எனப்படுகிறார்.

அதிகரிக்கும் சேவைத் தேவை

கண் தொடர்பான மருத்துவப் பிரச்சினைகள் என்பவை பலவகைப்பட்ட பார்வைக் குறைபாடுகளுடன் நின்றுவிடுவ தில்லை. மரபுரீதியிலான கோளாறுகள், நீரிழிவு, ரத்த அழுத்தம், நரம்பு மண்டலம் உள்ளிட்ட இதர உடல் நலக் கோளாறுகளாலும் பார்வைக் கோளாறுகள் விளையக்கூடும். ஆகையால், கண்கள், பார்வை சார்ந்த மருத்துவத் துறை விசாலமானது.

அதிலும் அதிகரிக்கும் திறன்பேசி, கணினி பயன்பாடுகளால் கண் சார்ந்த கோளாறுகள் நாளுக்குநாள் பெருகுகின்றன. இதனால், உலக அளவில் ஆப்டோமெட் ரிஸ்ட்களின் தேவை அதிகமுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 3 வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஆப்டோமெட்ரி பணியாளர்கள் நாட்டுக்குத் தேவை என்றும் அதில் 10 சதவீதம் மட்டுமே அப்போது பூர்த்திசெய்யப் பட்டிருப்பதாகவும் தெரியவந்தது.

பரந்து விரிந்த துறை

கண் மருத்துவமனைக்கு வரும் நோயாளியைப் பரிசோதிப்பவராக, அவருக்கும் கண் மருத்துவருக்கும் இடையில் மருத்துவப் பணியாளராக ஆப்டோமெட்ரிஸ்ட் செயல்படுகிறார். விழி ஒளி பரிசோதகரான ஆப்டோ மெட்ரிஸ்ட் அளிக்கும் தரவுகளின் அடிப்படையில்தான் கண் மருத்துவர் நோயாளிக்கு சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். கண் அறுவைசிகிச்சைக்கு முன்னும் பின்னும் நோயாளிக்குத் தேவையான கண்காணிப்பு, பார்வைத் திறன் மேம்பாடு போன்றவற்றை ஆப்டோமெட்ரிஸ்ட் தொடர்ந்து கண்காணிப்பார்.

இவர்களுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலுமாகப் பணி வாய்ப்புகள் நிறைந்துள்ளன. கண் மருத்துவமனை அல்லது கண் மருத்துவரிடம் பணி புரியாமல் சுயமாகக் கண் பரிசோதனை வழங்குவது, பார்வைத் திறனுக்கான கண்ணாடி கடை நடத்துவது, கண்ணாடி, சட்டகத் தயாரிப்பு நிறுவனங்களின் கிளையுரிமை பெற்று கடை நடத்துவது போன்றவை இதர பணி வாய்ப்புகளாகும். இவற்றுடன் அதிகரித்துவரும் குளிர் கண்ணாடி தேவைகள், பார்வைத் திறனுக்கும் அழகுக்கு மான காண்டாக்ட் லென்ஸ் பரிந்துரை, விற்பனை என ஆப்மெட்ரிக் படித்தவர்களுக்கான பணி வாய்ப்புகள் விரிவடைந்துள்ளன.

எங்கே, என்ன படிக்கலாம்?

12ஆம் வகுப்பில் அறிவியல் பாடப் பிரிவில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேறிய மாணவர்கள் ஆப்டோமெட்ரி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், முன்னணிக் கல்வி நிறுவனங்கள் சேர்க்கைக்கு என நுழைவுத் தேர்வுகள் நடத்துகின்றன.

ஆப்டோமெட்ரிஸ்ட் ஆக நீங்கள் படிக்க வேண்டியது,  நான்காண்டு இளம் அறிவியல் பட்டப்படிப்பு. முதல் மூன்றாண்டுகள் கல்லூரிக் கல்வியாகவும் நான்காமாண்டு மருத்துவ வளாக இண்டெர்ன்ஷிப் பயிற்சியாகவும் இது அளிக்கப்படுகிறது. இதற்கு பொதுநுழைவுத் தேர்வாக  நடத்தப்படுகிறது. டில்லி எய்ம்ஸ் நிறுவனம் வழங்கும் பி.எஸ்சி. ஆப்தல்மிக் டெக்னாலஜியில் சேரப் பிரத்யேக நுழைவுத் தேர்வு உண்டு. சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் 2015 முதல் பி.எஸ்சி. ஆப்டோமெட்ரி நான்காண்டு பட்டப் படிப்பு வழங்கப்படுகிறது. சென்னை சங்கர நேத்ராலயா  - பிட்ஸ் பிலானியுடன் இணைந்து முனைவர் பட்டம்வரையிலான ஆப்டோமெட்ரி படிப்பு களை வழங்குகிறது.

ஆப்தல்மிக் அசிஸ்டண்ட், ஆப்டோமெட்ரி ஆகிய இரண்டாண்டு பட்டயப் படிப்புகள் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படுகின்றன. கண் மருத்துவ சேவையிலிருக்கும் மருத்துவமனைக் குழுமங்கள் மற்றும் கண் கண்ணாடிகள், லென்சுகள் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள் சார்பிலும் பிரத்யேகக் கல்வி நிலையங்கள் வாயிலாகப் பட்டம், பட்டயங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் பலவும் தேர்ச்சிக்குப் பின்னரான வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கின்றன. கல்வித் தகுதியுடன் அனுபவ முன்னுரிமையும் கொண்டவர்களுக்கு உள்நாட்டு பல்நோக்கு மருத்துவமனைகளிலும் வெளிநாட்டிலும் மருத்துவருக்கு இணையான ஊதியம் வழங்கப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner