எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கணிப்பொறி நிறுவனமான இன்டெல் 2004-இல் அமெரிக்காவின் போர்ட்லேண்டில் நடத்திய சர்வதேச அளவிலான அறிவியல் மற்றும் பொறி யியல் கண்காட்சி அது. அதில் இடம்பெற்ற விண் வெளி அறிவியல், உயிரி வேதியியல் படைப்பு களில் பரிசுக்குரியவர்களைத் தேர்வு செய்யச் சென்ற நடுவர் குழுவில் இடம் பெற்றிருந்த அந்தச் சிறுவனைப் பார்த்து கண்காட்சிக்கு வந்திருந்த எல்லாரும் திகைத்தனர். ஏனெனில், அப்போது அவனுக்கு வயது 15 மட்டுமே. அந்த நடுவர் குழுவில் நாசா விஞ்ஞானிகளுடன் அவன் இடம் பெற்றிருந்தான்.

பள்ளிப் படிப்பு கூட முடிக்காத அந்தச் சிறுவன் வேறு யாரு மில்லை, இந்தியாவைச் சேர்ந்த பிரவீன்குமார் கோரகாவி தான். அவனை நடுவர் குழுவில் சேர்ப்பதற்கு வித்திட் டவை, இளம் வயதில் அவன் உருவாக்கிய புதிய கண்டுபிடிப்புகளே. அவன் உருவாக்கிய 40,000 ஆண்டு நாள்காட்டியும், குடிநீர் சுத்திகரிப்புத் தொழில்நுட்பமும், உணவுப் பொருள்களைக் கெடாமல் பாதுகாக்கும் புதிய தொழில்நுட்பமும் அவனது கண்டுபிடிப்புகளில் சில. ஒருங் கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தலைநகராக இருந்த அய்தராபாத்தில், 1989 மே 24-இல், கோரகாவி- ராமலட்சுமி தம்பதியரின் இரண்டாவது மகனாக பிரவீன்குமார் பிறந்தார். பிரவீணின் அண்ணன் பவன்குமார் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்.

பிரவீண்குமார் தனக்கு 13 வயதாக இருந்த போது 3,000 ஆண்டுகளைக் கணக்கிடும் நாள் காட்டி ஒன்றை உருவாக்கினார். பொது யுகத்துக்கு முந்தைய 1,500 ஆண்டுகளில் தொடங்கி பொது யுகத்துக்குப் பிந்தைய 1,500 ஆண்டுகள் வரையிலான காலகட்டத்துக்கான நாள்காட்டி அது. அதன்மூலம், ஒரு குறிப்பிட்ட தேதியில் என்ன கிழமை இருந்தது என்பதை அறிய முடிந்தது. அதனை வடிவமைக்க 27 கணித சூத்திரங்களை பிரவீண் பயன்படுத்தினார்.

மிக விரைவில் அதனை மேலும் மேம்படுத்தி, சுமார் 40,000 ஆண்டுகளுக்கான நாள்காட்டியாக வடிவமைத்தார் பிரவீன். இதற்காக “லிட்டில் மாஸ்டர்’ என்ற பட்டமும் “பாலரத்னா’ என்ற விருதும் அவருக்கு வழங்கப்பட்டன. அடுத்த ஆண்டே, 31,000 ஆண்டுகளுக்கான நாள் காட்டியை பார்வையற்றோரும் பயன்படுத்தும் வகையில் பிரெய்லி முறையில் அவர் வடி வமைத்தார். அதனை ஆந்திர அரசு வெளியிட்டது. இந்த நாள்காட்டிகள் சிங்கப்பூரில் உள்ள அறிவியல் மய்யத்திலும், அய்தராபாத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்திலும் காட்சிக்கு வைக் கப்பட்டுள்ளன.

அடுத்து, ஏவுகணையில் உந்துவிசை எரிபொருளாக சாதாரண மெழுகைப் பயன் படுத்த முடியும் என்று கண்டறிந்தார் பிரவீண். அதனை, 2004-இல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் (டிஆர்டிஓ) அய்தராபாத்- இம்ராத் மய்யத்தில் செயல் விளக்கமும் செய்து காட்டினார். அப்போது நேரில் அதைப் பார்வையிட்ட அந்நிறுவனத்தின் தலைவரும் விஞ்ஞானியுமான வி.கே.சாரஸ்வத் பாராட்டினார். அதையடுத்து அவருக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் “பாலசிறீ’ விருதை வழங்கினார்.

இந்நிலையில், ஊனமுற்றோருக்கான செயற் கைக்காலை குறைந்த செலவிலும், தொடைக்கு மேல் பொருத்தி மடக்கக் கூடிய விதமாகவும் தயாரித்தார் பிரவீன். அதன் எடை 1.5 கி.கி. மட்டுமே. அதனைப் பொருத்திக்கொண்டால் 20 கி.மீ. வேகத்தில் ஓட முடியும். இந்தத் தொழில் நுட்பத்தை அவர் ஆந்திர அரசின் கூட்டுறவுத் துறையிடம் ஒப்படைத்தார். அம்மாநில அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதற் காக ஆந்திர மாநில அரசு “யுகாதி கௌரவ் புரஸ்கார்’ விருதையும், இந்திய அரசு தேசிய அறிவியல் பதக்கத்தையும் (2004) பிரவீனுக்கு வழங்கின. பிறகு உணவு கெடாமல் பாதுகாக்கும் கருவியையும், குறைந்த செலவில் உப்புநீரை நன்னீராக மாற்றும் தொழில்நுட்பத்தையும் அவர் உருவாக்கினார்.

நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டறியும் செயற்கைக்கோளை வடிவமைத்து அதனை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவிடம் வழங்கினார் பிரவீன். மேற்படி கண்டுபிடிப்புகளால் நாசா விஞ்ஞானிகளின் பாராட்டையும் பெற்றார். இந்தக் கண்டுபிடிப்பு களால் அடைந்த புகழே அவர் இளம் வயதில் சர்வதேச அறிவியல் கண்காட்சியில் நடுவராகச் செயல்படும் தகுதியை அவருக்கு வழங்கின. அவர், இளம் விஞ்ஞானி, வேதிப் பொறியியலாளர், கண்டுபிடிப்பாளர், பலதுறை வல்லு நர், பிறவி மேதை, தொழில்நுட்ப ஆலோசகர் எனப் பல பரிமாணங்களை உடையவராகப் போற்றப்படுகிறார்.

தொடர்ந்து, 2011-இல் இன்ஃபோசிஸ் நிறுவனம், ஆப்பிரிக்க கிளிமஞ்சாரோ பார்வை யற்றோர் அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து, பார்வையற்றோருக்கான மிக குறைந்த விலையிலான பிரெய்லி டைப்ரைட் டரை வடிவமைத்தார். பல வண்ண நகப்பூச்சுக் கருவி, சூரிய ஒளி நிறப்பிரிகையை இருகூறாக்கும் கருவி (2012), உணவு பாதுகாக்கும் பொருள், திரவப் பொருள் பேக்கிங் தொழில்நுட்பம், மின் பல்துலக்கியில் பயன்படும் திரவப் பீய்ச்சு தொழில்நுட்பம், கசங்காத ஆடைக்கான துணி வடிவமைப்பு, 256 நிறங்களில் எழுதும் பேனா உள்பட பல புதிய கண்டுபிடிப்புகளை பிரவீன் உருவாக்கினார். விண்வெளியின் சிறுகோள் மண்டலத்தில் இரு புதிய கோள்களை தொலை நோக்கியால் கண்டறிந்து அது குறித்த அறிக் கையை மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்துக்கு பிரவீன் அனுப்பியுள்ளார். அதனை விண்வெளி விஞ்ஞானிகள் ஆராய்கிறார்கள்.

2017 அக்டோபர் நிலவரப்படி, அவரது 27 கண்டுபிடிப்புகள் பல்வேறு அரசு சார்பு நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்களில் பயன்பட்டு வருகின்றன. இவரது 38 ஆராய்ச்சி அறிக்கைகள் சர்வதேச விஞ்ஞான சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. 30-க்கும் மேற் பட்ட சர்வதேச மாநாடுகளில் அவர் பங்கேற் றுள்ளார். 7 சர்வதேச அங்கீகாரங்கள், 13 தேசிய விருதுகள், பல்வேறு மாநில விருதுகள், அரசு உதவித் தொகைகளை இந்தச் சிறுவயதில் பெற்றவராக பிரவீன் திகழ்கிறார்.

இதுவரை 45 கண்டுபிடிப்புகளை அவர் நிகழ்த்தியுள்ளார். பிரவீன்குமார் கோரகாவிக்கு இப்போது வயது 28. நோபல் பரிசு பெறுவதும் அவரது மற்றோர் இலக்கு.

தலைக்கவசம் அணியாவிட்டால் பைக் இயங்காது!

இளைஞர்கள் பலர் படு வேகமாக பைக்கு களை ஓட்டுகின்றனர். இதனால் பல சமயங் களில் விபத்துக்களில் சிக்கி உயிரை இழந்து வருகின்றனர்.

தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாக னத்தை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என தெரிந்தும் கூட பலர் தலைக்கவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டுகின்றனர்.

இவற்றுக்குத் தீர்வு காணும் நோக்கில் திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள குக்கிராமமான ஆய்க்குடி-அகரக்கட்டு ஜெ.பீ. பொறியியல் கல்லூரி மாண வர்கள் அசத்தலான கண்டுபிடிப்பினை கண்டு பிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, மாநில போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு தொடர்பாக இதை உருவாக்கிய ஜெ.பீ. பொறியியல் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையின் நான்காமாண்டு மாணவர்கள் எம்.மணி கண் டன், எஸ்.மணிகண்டன, ரமேஷ்பாபு ஆகி யோர்  கூறியதாவது: “பெரும்பாலான சாலை விபத்துக்களில் ஹெல்மெட் அணியாமல் செல்வதால்தான் உயிரி ழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதை தடுக்கும் வகையில் புதிய கருவியை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டோம்.

இது தொடர்பாக துறைத் தலைவர் மனோஜ்குமார் ஆலோசனை வழங்கினார்.

கல்லூரி நிர்வாகம் கொடுத்த ஒத்துழைப்பின் மூலம், புதிய வகை தலைக்கவசத்தை உருவாக் கினோம். இந்த தலைக்கவசத்தில் 3 சென்சார்கள் இருக்கும். பைக்கில் பொருத்தப்பட்டுள்ள சென் சார்கள் சிக்னலை ரிசீவ் செய்யும் வகையிலும், தலைக்கவசத்தில் பொருத்தப்பட்டுள்ள சென் சார்கள் சிக்னலை அனுப்பும் விதமாகவும் செயல்படும் வகையில் வடிவமைத்துள்ளோம்.

இந்த சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ள தால், தலைக்கவசம் அணியாமல் பைக்கை இயக்கவே முடியாது. மேலும் சீரான இதய துடிப்பு இல்லை என்றாலும், மது அருந்தி யிருந்தாலும் கூட தலைக்கவசத்தில் பொருத்தப் பட்டுள்ள சென்சார் பைக் இயங்குவதற்குரிய சிக்னலை பைக்கின் இன்ஜினில் பொருத்தப் பட்டுள்ள சென்சாருக்கு அனுப்பாது. இதனால் வாகனம் இயங்காது.

எங்களுடைய புதிய கண்டுபிடிப்பை திரு நெல்வேலி மண்டல அண்ணா பல்கலைக் கழகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரகம், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை ஆகியவை 2017 இல் காட்சிப் படுத்தினோம். இதில் 100-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் நாங்கள் உருவாக்கிய சென்சாருடன் கூடிய தலைக்கவசம் மற்றும் சென்சாருடன் கூடிய பைக் முதல் பரிசைப் பெற்றதுடன், மாநில அளவிலான போட்டிக்கும் தகுதி பெற்றது.

எங்களின் கண்டுபிடிப்பைப் பாராட்டி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விருது வழங்கி கவுரவித்தார்’’ என்று மகிழ்ச்சியுடன் கூறினர் மாணவர்கள்.

வனத்துறையில் வேலை

பதவி: இந்திய வனச் சேவை

காலியிடங்கள்: 110

கல்வித் தகுதி: Animal Husbandry &
Veterinary Science, Botany, Chemistry,
Geology, Mathematics, Physics, Statistics and Zoology,  Agriculture  இவற்றில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 வயதிலிருந்து 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி:

06-03-2018