எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறையாகவும், 10இல் ஒரு வேலைவாய்ப்பை உருவாக்கும் பிரிவாகவும் திகழ்கிறது சுற்றுலாத் துறை. இந்தத்துறைத் தொடர்பான சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை பட்டப் படிப்புக்கு நாளுக்கு நாள் முக்கியத்துவம் அதிகமாகிவருகிறது. மேலாண்மை சார்ந்த கல்வி, உலகச் சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கிய பாடத்திட்டம், படிக்கும் போதே சுற்றுலா சார்ந்த நிறுவனங்களில் பயிற்சி, படித்து முடித்த உடன் வேலை, எனப் பல சிறப்புகளைக் கொண்டு இருக்கும் சுற்றுலா படிப்புகள் உலக அளவில் அநேக மாணவர்களால் விரும்பி தேர்ந்தெடுக்கப்படும் படிப்பாக உள்ளது.

சுற்றுலா சார்ந்த பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளை நிறுவிச் சிறப்பாகச் செயல்பட்டு, வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துவருகின்றன. ஆனாலும், தமிழகத்தில் சுற்றுலா படிப்பைப் பற்றிய விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் அவ்வளவாக இல்லை என்பதே நிதர்சனம்.

கற்றுக்கொள்ள ஏராளம்

பிளஸ் டூ முடித்த மாணவர்கள், இளநிலை சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். பி.ஏ. டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ்மென்ட், பி.பி.ஏ. டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ்மென்ட், பி.காம். டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ்மென்ட் எனப் பல பெயர்களில் இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் கோவை அரசு கலைக் கல்லூரி உட்படப் பல அரசு, தனியார் கல்லூரிகளில் பி.ஏ. டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ்மென்ட் என்ற மூன்று ஆண்டு பட்டப் படிப்பு வழங்கப்படுகிறது. பிளஸ் டூ வகுப்பில் எந்தப் பிரிவில் படித்த மாணவர்களும் இந்தத் துறையைத் தேர்தெடுத்துப் படிக்கலாம். தகவல் தொடர்புத் திறன், ஆளுமை மேம்பாடு, பயண நிறுவனம் மேலாண்மை, உலகச் சுற்றுலாத் தலங்களைப் பற்றிய அறிவு , சுற்றுலா தொகுப்பு வடிவமைப்பு, சந்தைப் படுத்தல் மேலாண்மை, சுற்றுலா பொருளாதாரம், விருந்தோம்பல் மேலாண்மை, நிகழ்வு மேலாண்மை, விமான மற்றும் விமான நிலைய மேலாண்மை ஆகியவை சுற்றுலா பாடத்திட்டத்தில் உள்ள மிக முக்கியமான பாடங்கள். இந்தப் பாடப் பிரிவில் கற்றுத்தேர்ந்து சிறந்த அறிவும் ஆங்கில மொழிப் புலமையும் பேச்சுத் திறனும் வளர்த்துக் கொண்டால் சுற்றுலாத் துறையில் பிரகாசமான எதிர்காலம் நிச்சயம்.

அதுக்கும் மேலே

ஏதாவது ஓர் இளநிலை பட்டம் பெற்ற பிறகும்கூட, முதுநிலை பட்டமாக சுற்றுலா படிப்புகளைப் படிக்கலாம்.  மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தியச் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை கல்வி நிறுவனம் குவாலியர், நொய்டா, புவனேஸ்வர், கோவா, நெல்லூர் ஆகிய இடங்களில் சுற்றுலா சார்ந்த உயர் கல்வியை வழங்குகிறது.

புதுச்சேரி பல்கலைக்கழகம், புதுடில்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்,  கர்வால் பல்கலைக்கழகம், ஜம்மு மத்தியப் பல்கலைக்கழகம், ஹிமாச்சல் மத்தியப் பல்கலைக்கழகம் ஆகிய மத்தியப் பல்கலைக்கழகங்களில் சுற்றுலா சார்ந்த முதுநிலை பாடப் பிரிவுகள் வழங்கப்படுகின்றன

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கோவை அரசு கலைக் கல்லூரியிலும் சுற்றுலா சார்ந்த முதுநிலை பாடப் பிரிவுகள் வழங்கப்படுகின்றன.

தனித்துவம் வாய்ந்த பொறியியல் படிப்புகள்

பொறியியல் உயர்கல்வி என்பது ஒருவரின் பொருளாதார எதிர்காலத்தை அமைத்துத் தருவது மட்டுமல்ல. அவரது கனவு, லட்சியம் ஆகியவற்றை ஈடேற்றுவதும்கூட. அப்படிச் சுவாரசியமும் சவாலும் நிரம்பிய தனித்துவமானவர்களுக்கான சில பொறியியல் படிப்புகள் உள்ளன.

வான், விண் ஊர்திகளுக்கு

வானூர்திகள் முதல் விண்கலங்கள்வரையிலான படிப்புகள் தற்போதைய தலைமுறையினர் மத்தியில் சிறுவயதுக் கனவாக உள்ளன. இவை குறித்தான படிப்புகள் ஏரோஸ்பேஸ், ஏரோநாட்டிகல் என இரண்டு துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மேலோட்டமாகப் பார்த்தால் இவை ஒன்றுபோலவே தோன்றலாம். ஆனால், ஏரோநாட்டிகல் என்பது விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பல்வகை வானூர்திகளைப் பற்றிய படிப்பு. ஏரோஸ்பேஸ் என்பதில் ஏரோநாட்டிகல் பாடங்களுடன், ஏவுகணை, ராக்கெட், விண்வெளி மய்யம், விண்வெளி ஓடம் உள் ளிட்டவற்றையப் பற்றியும் படிக்கலாம். இவற்றில் விண் வெளியை மட்டுமே மய்யமாகக் கொண்ட அஸ்ட்ரோ நாட்டிகல் பொறியியல் துறையும் தனியாக உள்ளது.

விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு இந்தியா முக்கியத் துவம் அளித்துவருவதால் அடுத்த பத்தாண்டுகளில் பெரும் பாய்ச்சலை இந்தத் துறைகள் ஏற்படுத்துமெனக் கணிக்கப்படுகிறது. இஸ்ரோ, டி.ஆர்.டி.ஓ., ஏர் இந்தியா என விண்வெளி ஆராய்ச்சி, பாதுகாப்பு, பயணிகள் விமான சேவை உள்ளிட்ட அரசுத் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் தனியாக உள்ளன. தற்போதைக்கு இங்கு ஏரோஸ்பேஸ் அரசு வசமே இருந்தாலும், 49 சதவீதம் அன்னிய நேரடி முதலீடு வரவிருப்பதால் இத்துறையில் பணிவாய்ப்புகள் அதிகரிக்கும். பன்னாட்டு விமான நிறுவனங்களுக்கான மென்பொருள் சேவை வழங்கும் இந்திய மென்பொருள் சந்தையிலும் உயர்பதவிகள் காத்திருக்கின்றன.

இளநிலைப் பொறியியல் பட்டத்துடன், முதுநிலையில் எம்.டெக்., அல்லது எம்.எஸ்., அதைத் தொடர்ந்து ஆராய்ச்சி நிலையில் பி.ஹெச்டி. வரை படிப்பவர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. சிறு வானூர்தி ரகங்களான ட்ரோன், வேவுப் பணிக்கான ஆளில்லா விமானங்கள் தயாரிப்பது, வான்/விண் வாகனங்களுக்கான மின்னணுக் கட்டுப் பாட்டுச் சாதனங்களைத் தயாரிக்கும் ஏவியானிக்ஸ் துறை என வேலைவாய்ப்புகள் ஏறுமுகத்தில் உள்ளன.

கப்பல் கட்டலாம்

வானில் உயரப் பறப்பதுபோலவே கப்பலில் பணிபுரிவதும் சுவாரசியமானதே! கடந்த சில ஆண்டுகளில் கப்பல் கட்டுமானத்தில் இந்தியா முன்னேறி இருப்பதும் இந்தியத் துறைமுகங்களுக்கு இடையே சரக்குப் போக்கு வரத்து அதிகரித்து இருப்பதும் கப்பல் சார் பொறியியல் துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டுள்ளன. பயணிகள் கப்பல், சரக்குக் கப்பல், அதிவேகப் படகு, உல்லாசப் படகு, நவீன மீன்பிடி கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் எனக் கப்பல் கட்டுமானத் துறை பரந்துவிரிந்தது. போக்குவரத்து மட்டுமன்றிப் பாதுகாப்பு சார்ந்தும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் கப்பல்களும் படகுகளும் தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.

கடலில் மிதக்கும் இந்தக் கலன்களுக்காக நீரிலும், நிலத்திலும் அதிக எண்ணிக்கையில் பணிபுரிய பொறி யாளர்கள் தேவைப்படுகின்றனர். மெக்கானிக்கல், எலெக்ட் ரிக்கல் மட்டுமன்றி மரைன் இன்ஜினீயரிங் துறை மூலம் திறன் வாய்ந்த பொறியாளர்கள் பணி அமர்த்தப் படுகின்றனர். கப்பல் கட்டுமானத் துறை அய்ரோப்பா விலிருந்து ஆசியாவின் துறைமுக நகரங்களுக்கு நகர்ந்திருக்கிறது. வடிவமைத்தல், கட்டுமானம் மட்டுமன்றி, பழுது நீக்கல், பராமரிப்பு, ஆராய்ச்சி மேம்பாடு போன்றவற்றிலும் மரைன் பொறியாளர்களுக்கு நிறைவான ஊதியம் கிடைக்கிறது.

சுற்றுச்சூழல் காக்கும் பொறியியல்

சூழலியல் பொறியியல் என்பது ஒரு தனித்துவமானத் துறை. சிவில் பொறியியலில் ஒரு பகுதியாக மட்டுமே முன்பு அது இருந்தது, தற்போது காலத்தின் கட்டாயத்தால் தனித் துறையாக வளர்ந்திருக்கிறது. உயிரியல், இயற்பியல், வேதியியல் எனப் அறிவியலில் இருந்தும், சிவில், எலெக்ட்ரிகல், மெக்கானிக்கல், கெமிக்கல் இன்ஜினீயரிங் எனப் பொறியியல் துறைகளில் இருந்தும் கலவையான பாடத்திட்டத்தில் இந்தச் சுற்றுச்சூழல் பொறியியல் துறை உருவாகி உள்ளது.

மேற்கண்ட அறிவியல்,பொறியியல் படிப்புகளை இளநிலையாகப் பயின்றவர்கள், முதுநிலையாகச் சுற்றுச்சூழல் சார்ந்த படிப்புகளில் சேர்ந்து வந்தனர். தற்போது சுற்றுச்சூழல் சார்ந்த கொள்கைகள், திட்டங்கள், புதிய சட்டங்கள், விழிப்புணர்வு காரணமாகவும் அத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஊதியத்துக்கு அப்பால் மனத் திருப்தியையும் தரும் இந்தப் படிப்புக்கான பணியில் பெறலாம்.

கட்டுமானம், மருந்து ஆராய்ச்சி, வேதிப்பொருள் தயாரிப்பு எனத் தொழிற்துறைகள் எதுவானாலும் சுற்றுச்சூழல் சீர்கேடு இன்றித் தங்கள் பணிகளை அவர்கள் மேற்கொண்டாக வேண்டும். இவற்றுக்கு ஆலோசகர்கள், அரசு, அரசுசாரா நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள், தொழிற்துறை, கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

சுரங்கம், மாசுக் கட்டுப்பாடு, நீர் மற்றும் கனிம வளம் போன்றவை சார்ந்த துறைகளிலும் தனியார், அரசுப் பணியிடங்களில் சேரலாம். சுற்றுச்சூழல் பாதுகாப்பை மய்யமாகக்கொண்டு செயல்படும் அரசு சாரா தொண்டு, ஆராய்ச்சி நிறுவனங்களிலும் பணிவாய்ப்புகள் உண்டு.

இந்தியப் பாதுகாப்புப் படையில் பணியிடங்கள்

இந்திய ராணுவத்திலும் கடற் படையிலும் விமானப் படையிலும் 383 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிக்கையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

கல்வி: பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 02.01.2000 முதல் 01.01.2003 வரையான காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப் பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி. பிரிவின ருக்குக் கட்டணமில்லை. பிறருக்குக் கட்டணம் ரூ.100. கட்டணத்தை ஆன்லைனிலோ வங்கி சலான் மூலமோ கட்டலாம்.

உரிய உடல், கல்வி, வயதுத் தகுதி கொண்டோர் 06.06.2018 முதல் 02.07.2018 மாலை 6:00 மணிவரை https://upsconline.nic.in/ என்னும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

கடைசி நாள்: 02.07.2018 | தேர்வு நாள்: 09.09.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner