எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வலிகளும், இழப்புகளும் வீழ்ந்து துவண்டுவிடுவதற்கல்ல எழுந்து ஓடுவதற்கு என்பதை நிரூபித்திருக்கிறார், பிளேடு ரன்னராக உரு வெடுத்துள்ள நாகர்கோவில் இளைஞர்  விக்னேஷ்வர சுப்பையா.

நாகர்கோவில் அருகே தேரூர் தண்டநாயகன்கோணம் புதுக் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஸ்வர சுப்பையாவின் கதை வித்தி யாசமானது.  29 வயதே ஆகியிருந்த விக்னேஸ்வர சுப்பையாவுக்கு 2012-ஆம் ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி இரவில் ஏற்பட்ட ஒரு  விபத்து, அவரது வலது காலை உடைத்துப் போட்டுவிட்டது. இந்த விபத்து அவரை நிலைகுலையச் செய்தாலும், அதிலிருந்து மீண்டு ஒரு தன்னம்பிக்கை மிக்க சாதனையாளராக மாறிய அவர், அவர் போன்ற பலருக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார்.

விக்னேஸ்வர சுப்பையாவிடம் பேசியபோது...

“நான்,  பிளஸ் 2 படித்து விட்டு  எலக்ட்ரிக்கல் வேலை செய்து கொண்டிருந்தேன். என்னிடம்  பத்துக்கும் மேற்பட்டோர்  வேலை செய்து கொண்டிருந்தனர்.

மது, புகைபிடித்தல் என எந்தக் கெட்டப்பழக்கங்களும் எனக்குக் கிடையாது. உடற்பயிற்சிக் கூடத்திற்கு  தினம்தோறும் சென்று உடலைப் பேணி வந்தேன்.   திருமணத்திற்காக பெண் பார்த்து நிச்சயம் செய்து பத்திரிகையும் அடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்தான் கருங்கல் என்ற இடத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்று விட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த  என் மீது மீன்பாரம் ஏற்றிக் கொண்டு வந்த மினிலாரி மோதிவிட்டு  நிற்காமல் சென்றது.  இந்தச் சம்பவத்தில் எனது வலது கால் மூட்டிற்குக் கீழே முழுவதும் உடைந்து விட்டது. வாழ்வில் முக்கியமான கட்டத்தில் நடந்த இந்த விபத்து,  என் மனதையும் உடைத்துப் போட்டுவிட்டது.

அதே வேளையில்   உடைந்த காலை அறுவை சிகிச்சை செய்து பொருத்திக் கொள்ள நான் தயாராக இல்லை.   ஏனெனில் அப்படிப் பொருத்திக் கொண்டு வலியால் துடித்தும், ஆறாத புண்களுடனும் நடமாடுபவர்களை  நான் பார்த்திருக்கிறேன்.   எனவே எனது வலது கால் மூட்டிற்கு கீழே அகற்றப்பட்டது.

அதன் பிறகு கார்பன் ஃபைபர்   பாதம் கொண்ட செயற்கைக் காலை பொருத்திக் கொண்டு நடக்கத் தொடங்கினேன்.   நிச்சயிக்கப் பட்டிருந்த திருமணமும் இதனால்   நின்று போனது.

மீண்டும் உடற்பயிற்சிக்கூடத்திற்கு செல்ல ஆரம்பித்தேன். கடுமையாகப் பயிற்சி செய்தேன். விபத்து நடந்த எட்டே மாதத்தில்,  ஹைதராபாத்தில் ஏர்டெல்  நிறுவனம் சார்பில், நடைபெற்ற ஒரு மாரத்தான் போட்டியில் பங்கேற்கச் சென்றேன். செயற்கைக்காலுடன்  ஓடினேன். அந்த ஓட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்களுடன் மாற்றுத் திறனாளிகள் 15 பேர் பங்கேற்றனர்.

இதில் நான் உள்பட மாற்றுத் திறனாளிகள்  4 பேர் தாம் மொத்தம்  தூரமான 5 கி.மீ தூரத்தை ஓடி நிறைவு செய்தோம். இதில் என்னைப் பாராட்டிய “தக்சின் ரிகாபிலிடேசன்’ எனும்   நிறுவனம் ஓட்டத்திற் கென்றே வடிவமைக்கப்பட்ட  ரூ. 5 லட்சம் மதிப்பிலான   “ரன்னிங் பிளேடை’ எனக்குப் பரிசளித்தது. பிளேடைக் காலில் பொருத்திக் கொண்டு ஓடுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. நிறையத் தடவை இடறி விழுந்தேன். வலியாலும், ரத்தக்கசிவாலும் துடித்தேன். இருந்தாலும் நம்பிக்கை இழக்கவில்லை.   மாரத்தான், தடகளம் என ஓடிக்கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் இயல்பான கால்களைக் கொண்டவர்களுக்கு இணையாக  ஓட ஆரம்பித்தேன்.

அதன் பின்னர் மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகளில் ஓடி பரிசுகளை வெல்வதில்  தயக்கம் ஏற்பட்டதால்,  இயல்பான கால்களையுடைவர்கள் பங்கேற்கும் போட்டிகளில் மட்டும் ஓட ஆரம்பித்தேன். அதனை இப்போதும் தொடர்கிறேன்.

என்னால் இப்போது 100 மீட்டர் தூரத்தை 13.5 விநாடியில் ஓடிக் கடக்க முடியும்.  தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பிரபல பிளேடு ரன்னர்  ஆஸ்கர் பிஸ்டோரியஸ் தான் எனது ரோல் மாடல்.

எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக கொல்கத்தா முதல் டாக்கா வரை 360 கி.மீ. தொலைவு சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றி ருக்கிறேன். டிரக்கிங் எனப்படும் மலையேற்றப் பயிற்சிக்கும் செல்கிறேன்.

இதற்கிடையே நான்செய்துவந்த  எலக்ரிக்கல் பணியை தொடர முடியாது என்பதால் செல்லிடப் பேசி பழுது பார்க்கும் பயிற்சியை முடித்து நாகர்கோவிலில் செல்லிடப் பேசி பழுது பார்க்கும் கடையும் வைத்துக் கொண்டேன்.

கடந்த 2014 ஆம் ஆண்டு  எனக்குத்  திருமணம் ஆனது.  இப்போது எங்களுக்கு மீரா (3), அஸ்வின் ராம் (1) என இரு குழந்தைச் செல்வங்கள். வாழ்க்கை அழகாய்ப் போய்க் கொண்டிருக்கிறது.

ஒரு பிளேடு ரன்னராக வலம் வந்தாலும், காலை இழந்த பின்னரும் இயல்பாய் இயங்குவதன் மூலம் பிறருக்கு நம்பிக்கை அளிக்கும் மனிதராகவே என்னை அடையாளப்படுத்த விரும்புகிறேன். கால்களை இழந்து வீடுகளில் முடங்கிக் கிடக்கும் ஒரு நபராவது எனது   செயல்பாட்டைப் பார்த்து வெளியே வந்து வெற்றி பெற்றாலும் எனக்கு மகிழ்ச்சி தான்’’ என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner