எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் இன்றைய தேதியில் 20 ஆயிரம் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. இவற்றில் 40 லட்சம் பொறியாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்த நிறுவனங்கள் ஏற்றுமதி மூலம் நமது நாட்டுக்கு ஈட்டித்தரும் வருமானம் சுமார் ரூபாய் 6 லட்சம் கோடி. 2025இல் இந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 60 ஆயிரமாகவும் பொறியாளர்களின் எண்ணிக்கை 70 லட்சம் ஆகவும், ஏற்றுமதி வருமானம் ரூபாய் 24 லட்சம் கோடி ஆகவும் உயரும் எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 21ஆம் நூற்றாண்டில் மிக வேகமாக வளரும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பது மட்டுமல்லாமல்; தொழில்நுட்ப அறிவிலும் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக உள்ளது.

வளர்ச்சியின் பாதையில் தேசம் இடம்பிடித்தாலும் மறுபுறம் புதுத் தொழில்நுட்பங்களால் படித்தவை வேகமாகக் காலாவதி ஆகின்றன. நாம் படித்து முடித்து வெளிவருவதற்குள் படித்தவை தேவையற்றுப் போய்விடுகின்றன. தகுதியான தொழில்நுட்ப அறிவு கொண்ட மனிதவளம் இல்லாமல் நிறுவனங்கள் தடுமாறுகின்றன.

பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தவையின் தேவை குறுகிய காலத்திலேயே நீர்த்துப் போய்விடுமென்றால், 16 வருடப் படிப்பின் அவசியம் கேள்விக்கு உள்ளாகிறது.

தேவைகளுக்கு ஏற்பக் கல்வி நிறுவனங்களும் அதன் பாடத் திட்டங்களும் தம்மைத் தகவமைத்துக் கொள்ளாததால், கல்வியின் போதாமை பெரும் நிறுவனங்களையும் நாட்டையும் ஒருங்கே பின்னுக்கு இழுக்கிறது.

நாஸ்காம்மின் முயற்சி

கற்றலின் போதாமையை ஈடுகட்ட, பெரு நிறுவனங்கள் பயிற்சி வளாகத்தைத் தம்முள் நிறுவி, ஊழியர்களுக்கு வேண்டிய பயிற்சிகளை அளித்துத் தமது தேவையைப் பூர்த்தி செய்துகொள்கின்றன. பெரு நிறுவனங்களில் சேர முடியாத பட்டதாரிகள், தம் பங்குக்குத் தனியார் பயிற்சி நிறுவனங்களில் பெரும் பணம் கட்டி (கல்லூரிப் படிப்புக்குச் செலவழித்த தொகையைவிட அதிகமாக) பயின்று தமது திறமையை வளர்த்துக்கொள்ளும் நிலையே உள்ளது.

இந்தக் திறன்குறையை இட்டு நிரப்பும் நோக்கில், நாஸ்காம் மத்திய அரசுடன் இணைந்து ஃபியூச்சர் ஸ்கில்ஸ் நாஸ்காம்‘  எனும் இணையத்தளத்தை தொடங்கி உள்ளது.

ஃபியூச்சர் ஸ்கில்ஸ் நாஸ்காம்

இதை ஓர் இணைய கல்விச் சந்தை எனவும் சொல்லலாம். தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பாக நாஸ்காம் இருப்பதால், அதன் முக்கிய நோக்கம் அதன் உறுப்பினர்களான மென்பொருள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உதவுவதே. அதன் இணையதளமும் அவ்வாறுதான் வடி வமைக்கப்பட்டுள்ளது. உலகின் முக்கியக் கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் இந்த இணையத் தளத்தில் தம்மை இணைத்துள்ளன.

தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது இன்றைய தொழில் அறிவு தேவைகளையும் நாளைய தேவைகளையும் அதில் தெரிவிக்கின்றன. அந்தத் தேவைகளுக்கு ஏற்ற கல்வியை அதில் இருக்கும் கல்வி நிறுவனங்கள் வடிவமைத்து வழங்குகின்றன. அந்தக் கல்வியை மாணவர்களுக்கும் பொறியாளர்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்காக, நாஸ்காம்  எனும் இணையக் கல்வி வகுப்பைப் பயன்படுத்துகிறது.

வருங்காலத்தை

ஆளப்போகும் துறைகள்

செயற்கை நுண்ணறிவு, 3டி பிரிண்டிங், ரோபோடிக்ஸ், இணையப் பாதுகாப்பு, டேட்டா அனாலிடிக்ஸ், சமூகத் தொடர்பு, கிளவுட் கம்ப்யுட்டிங், உற்பத்திச் சங்கிலி போன்ற துறை களுக்கு வருங்காலத்தில் மிகுந்த மனிதவளம் தேவைப்படும்.

இந்தத் துறைகளுக்குத் தேவையான கல்வியறிவுக்கு ஏற்ற பாடத்திட்டங்கள் இதன் இணையதளத்தில் உள்ளன. தற்போது இந்த இணைய வகுப்புகள் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி யாற்றும் பொறியாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. விரைவில் இவை மாணவர்களுக்கும் வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது.

இந்தியாவின் மக்கள்தொகையில் 65 சதவீதத்தினரின் வயது 35க்கும் கீழாக உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில்தான் தொழில் அறிவில் தேர்ந்த மனிதவளம் மிகுதியாக உள்ளது. நம் நாட்டின் மனித வளத்தின் உதவியின்றி உலகில் எந்த நாடும் இயங்க முடியாது என்பதே இன்றைய நிலை.

உலகின் அச்சாணியாகத் திகழும் நமது மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த பல முயற்சிகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.  ஃபியூச்சர் ஸ்கில்ஸ் நாஸ்காம்  அவற்றில் முக்கியமானது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner