பண மதிப்பிழப்பு - பிணத்தில் முடிந்தது!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பண மதிப்பிழப்பு -
பிணத்தில் முடிந்தது!

தெற்கு டில்லியில் நேப் சராய் பகுதியைச் சேர்ந்தவர் வீரேந்திர குமார் பொசாயா (வயது 26). எலெக்ட்ரானிக்ஸ் கடை வைத்து நடத்தி வருபவர்; பகுதி நேரப் பணியாக வட்டிக்குப் பணம் கொடுத்து வந்துள்ளார்.

அவர் மனைவி ரோனக் பசோயா கர்ப்பிணியாக உள்ளார். கர்ப்பிணி மனைவிக்கு வேண்டிய மருந்துகளை வாங்குவதற்கு தன்னிடம் உள்ள ரூ. 500, ரூ. 1000 பணத்தை மாற்ற முடியாமல் தவித்துள்ளார். ரூ. 12 லட்சம் அவரிடம் இருந்தபோதிலும், அதை மாற்ற முடியாமல் திண்டாடியுள்ளார். பலரிடமும் உதவியும் கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மனைவி கூறும்போது, “ரூ.12 லட்சத்தை மாற்றித் தர ரூ. 4 லட்சத்தைக் கமிஷனாக ஒருவர் கேட்டார். அதுவும் 15 முதல் 20 நாள்களாகும் என்று கூறியதால், என் கணவர் மிகவும் கவலைக்குள்ளானார். திடீரென ஏற்பட்ட பணப்பிரச்சினையால் குடியிருக்கும் வாடகை வீட்டைக் காலி செய்யும் முடிவுக்கு வந்தார்.

வீட்டின் உரிமையாளரிடம் முன்தொகையைக் கேட்டபோது, அதிலும் பிரச்சினை ஏற்பட்டது. முழுவதுமாகக் கொடுக்க முடியாது என்றும், சிறிதளவு மட்டுமே தருவதாகவும் வீட்டின் உரிமையாளர் கூறினார். ஆகவே, வீட்டை மாற்றுவதும் ஒரு மாதத்துக்குத் தள்ளிப்போனது.

பணத்தை மாற்றுவதற்காக நாள்தோறும் பல்வேறு வங்கிகளுக்குச் சென்றார். ஆனால், அவரால் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியவில்லை.

பணப்பிரச்சினையால் மருந்து வாங்குவதில்கூட எனக்கும், என் கணவருக்கும் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது. நானே பக்கத்து வீட்டாரிடம் இருந்து ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டை வாங்கிச் சென்று பணத்தை மாற்றிக் கொண்டு திரும்பி வந்தபோது, அவர் உயிருடன் இல்லை’’ என்று கதறியபடி கூறினார்.

ரோனக் மேலும் கூறும்போது, கடந்த 11.11.2016 அன்று முதலாமாண்டு திருமண நாளை திடீர் பணப்பிரச்சினை ஏற்பட்டதால் உறவினர் நண்பர்கள் இல்லாமல் வீட்டிலேயே கொண்டாடினோம். எங்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாகவே இருந்து வந்தது. ஆனால், திடீரென்று நோட்டுகள் செல்லாது என்று வந்த திடீர் பணப்பிரச்சினை எங்கள் வாழ்க்கையில் புயலாக வந்து பல பிரச்சினைகள் ஏற்பட்டுவிட்டன என்றார்.

டில்லி - கான்பூர் அடுத்த ராஜூபார்க் பகுதியில் வீரேந்திர குமார் பொசாயா, தான் வாடகைக்கு வசித்துவரும் வீட்டில் மின்விசிறியில் தூக்கிலிட்டு உயிரிழந்தது குறித்து காவல்துறை துணைஆணையர் நூபுர் பிரசாத் கூறும்போது, “வீரேந்திரா தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து குறிப்பு எதுவும் எழுதிவைக்கவில்லை” என்றார்.

வீரேந்திர குமார் தற்கொலை குறித்து மேலும் விசாரணை செய்து வருவதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner