வீர வணக்கம் அம்மா!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

எங்கள் அன்னையே - மணி
யம்மையே!
பெரு வெளிச்சம்
பெரியாரைச் சுற்றி!
மெழுகு வர்த்தியான - நீ
எப்படி
பெரியாரின் நம்பிக்கை
வளையத்தில்?

தன்னை யழித்து
ஒளியூட்டும்
தியாகம் தங்களிடம்
ஒளிந்திருந்ததை - ஓ
அந்த ஈரோட்டுக்
கண்ணாடிதான்
கண்டு கொண்டதோ!

எல்லாமே விந்தைதான் - அந்த
ஈரோட்டுக்காரரிடம்
புரியாத புதிர்தான் - அந்தப்
பூகம்பப் பூச்செண்டு!

அவர் ஒரு
சாந்த நிகேதம்!
ஆனாலும் அழிவு சக்தி
ஆனது எப்படி?
அதுவா?
அவர்தம் எதிரிகளின்
முகவரி
மானமற்ற வீதி - அறிவு
நாணயமற்ற பேரூர்!

அதனாலே அவர்
ஓர் அழிவு சக்தி!
ஓ, அப்படியா சேதி?
அந்த அழிவு சக்தியின்
அக்னி சுனாமியருகே
எப்படியம்மா இருந்தாய்?

அந்த அழிவாயுதத்தில் -
ஆக்கப் பூக்கள் சிரித்ததாலா?
அதுவே உங்களுக்குச்
சுகவாசம் ஆனதாலா?

பெரியாரெனும்
அந்த மின்னணு உலையில்
மனிதநேய கம்பிகள்
சூட்டின் தகனத்தைக்
குறைத்தனவோ!

தொன்னூற்றைந்து வரை
அவரை வாழ வைத்து
அறுபதுக்கு முன்னாலே
நடை கட்டியது ஏனம்மா?

பெருங்கிழவர்
இல்லாத உலகில்
வேலை என்ன
என்ற
விரக்தியா?

அல்லது
அந்த மராத்தானை
வெற்றி முகட்டில்
நகர்த்திட
‘‘வீரன்’’ உண்டு என்ற
நம்பிக்கையாலா?

உங்கள் பெயரிலும் மணி
உங்கள் மகன்
எங்கள் தலைவன்
பெயரிலும் மணி!

மணிநேரம் பாராமல்
மணி மணியாக
பணிகள் எல்லாம்
கணீர் கணீரென்று
ஒலிக்குதம்மா!

கோவில் மணி ஒன்று
நிலுவையில்!
எங்கள் அமாவாசையும்
அய்யாக் கண்ணும்
அதோ அந்தக் கோவில்
கருவறை அக்ரகாரத்துக்குள்
அதிகார நடைபோட்டுச்
சென்று
அந்தச் சின்னமணியைக்
கையில் எடுக்கும்வரை
எங்கள் பணி ஓயாதம்மா!

சின்னமணி
பெரிய மணி
பிரச்சினையல்ல;
பல்லாயிரம் ஆண்டின்
பழங்கணக்கை
முடித்து வைக்கும்
கால வோசை!
இன இழிவுக் கிடங்கின்
இடுப்பை முறிக்கும்
இடி யோசை!

ராம ராஜ்ஜிய
சத்தமும் கேட்குது
ஒருபுறத்தில்!
இருக்கட்டும், இருக்கட்டும்!
அந்த உச்சக்கட்ட
புரையும்
ஏறட்டும், ஏறட்டும்!

அப்பொழுதுதான்
இருக்கவே இருக்கிறது
தாங்கள் தந்து சென்ற
‘‘இராவண லீலா’’ எனும்
செயல்முறை
வெடிமருந்துக் கிடங்கு!
வேளை வரும் - அப்பொழுது
அதற்கும்
வேலை வரும்.

வீர வணக்கம் அம்மா!

- கவிஞர் கலி.பூங்குன்றன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner