‘அவாளின்’ பதிலும், ‘இவாளின்’ சவுக்கடியும்!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

(1) கேள்வி: ஊழலில் ஈடுபடாத அரசியல்வாதிகள் குறைந்து போனதற்கு யார் காரணம்?

பதில்: ஊழலில் ஈடுபடுகிறவர்கள் எல்லோரும் ஏதாவது ஒரு கேடயம் வைத்துக் கொண்டிருப்பார்கள். தமிழ், தமிழினம், திராவிடம், ஹிந்தி எதிர்ப்பு, ஏழைகள் சிரிப்பில் இறைவன், அம்மா உணவகம், இத்யாதிகள் போன்ற கேடயங்கள் இல்லாமல் தமிழகத்தில் அரசியல் செய்வது கடினம். இந்தக் கேடயங்கள் எல்லாமே ஊழலை மறைப்பதற்கு உதவுகின்றன. இந்தக் கேட யங்கள் இல்லாத அரசியல்வாதிகள் மிகவும் குறைவு. அதனால் ஊழலில் ஈடுபடாத அரசியல்வாதிகளும் குறைவு.

(‘துக்ளக்’, 29.3.2017, பக்கம் 20)

இதன்மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்?

தமிழ், தமிழினம், திராவிடம், ஹிந்தி எதிர்ப்பு... இவையெல்லாம் இந்நாட்டு மக்களின் அடிப்படை இனவுணர்வு - தன்மான உணர்வு - ஆதிக்க எதிர்ப்பு என்னும் கோட்பாட்டைச் சேர்ந்தவையாம்.

இந்த அடிப்படைக் கோட்பாடு என்பதெல்லாம் ‘துக்ளக்’, பார்ப்பனக் கூட்டத்தின் கண்களுக்கு ஊழலை மறைக்கும் கேடயங்களாம்!

இதிலிருந்து ஒன்று தெளிவாகிவிட்டது. பார்ப்பனர் களுக்குத் தமிழ் உணர்வு, தமிழ்நாட்டுணர்வு என்பதெல் லாம் கிடையவே கிடையாது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள் என்பது புரியவில்லையா?

அப்படியென்றால், இவர்கள் சொல்லும் தேசியம், சமஸ்கிருதம், இந்தி, இந்துத்துவா என்பதெல்லாம் எதனை மறைக்கக் கையில் எடுத்திருக்கும் கேடயங் கள்?

இவர்கள் எல்லாம் ஊழல் என்றால் என்னவென்றே தெரியாத உத்தமப்புத்திரர்களா? கருநாடக மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த எடியூரப்பா எதற்காக கம்பி எண்ணினார்? கருநாடக அமைச்சர்களான ரெட்டி சகோதரர்கள் எந்தத் தியாகத்தைச் செய்துவிட்டு சிறைக்குச் சென்றார்களாம்?

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற ‘வியாபம்’ ஊழ லுக்கு நிகரானது இன்னொன்றுண்டா? மருத்துவக் கல் லூரி சேர்க்கை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டவர் கள் தற்கொலை செய்துகொண்டது ஏன்? ஆளுநர் மகன் கூட தற்கொலைப் பட்டியலிலிருந்து தப்பவில்லையே!

பிளஸ் டூ படிக்காத பேர்வழிகள் எல்லாம் டாக்டர்கள் ஆனது எப்படி? அதானி என்னும் கார்ப்பரேட் முதலாளியின் விமானத்தில் நரேந்திர மோடி பயணம் செய்தாரே - அதற்கான சன்மானம் என்ன?

கார்ப்பரேட்டு முதலாளியை - தான் பயணம் செய்த விமானத்திலேயே அழைத்துச் சென்று வெளிநாட்டிலே தொழில் தொடங்க அந்நாட்டு முதலாளிகளிடம் தரகு வேலை பார்த்தவர்தானே பிரதமர் நரேந்திர மோடி? அதுமட்டுமா, வங்கி அதிகாரிகளையும் தன்னோடு அழைத்துச் சென்று கடன் வழங்க ஏற்பாடு செய்ததெல்லாம் அதிகார துஷ்பிரயோகம் இல்லையா? கையால் பணம் வாங்குவது மட்டும்தான் ஊழலா? இந்தக் காரியத்தைச் செய்து கொடுத்தன்மூலம் பிரதமர் பெற்ற ‘லாபம்’ என்ன? என்ற கேள்வி எல்லாம் எழாதா?

கிரிக்கெட் மோசடிப் புகழ் லலித் மோடி வெளிநாடு தப்பிச் செல்ல உதவியது யார்? இலண்டனிலிருந்து வேறு நாட்டுக்குச் செல்ல தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அவருக்கு விசா கிடைக்க ஏற்பாடு செய்தாரே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் - அதற்கு என்ன பெயராம்? ராஜஸ் தான் பிஜேபி முதலமைச்சரின் குடும்பத்துக்கும், அந்த லலித் மோடிக்கும் என்ன உறவு - தொடர்பு? நாடாளுமன்றத்தில் சந்தி சிரிக்கவில்லையா?

அரசுக்குச் சொந்தமான அருங்காட்சியகத்தை ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே குடும்பமும், லலித் மோடியும் பங்கு போட்டு 5 நட்சத்திர ஓட்டல் கட்டியது ஊழல் இல்லையா?

இந்த ஊழல்களையெல்லாம் மறைக்கத்தான் இந்துத் தேசியம், தேசியக் கல்வி எனும் முகமூடிகளா? குருமூர்த்திகள் சோ.ராமசாமியின் கார்பன் காப்பியா?

தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டைக் கொச்சைப்படுத்த இந்தக் குருமூர்த்திகள் மதுரையில் போட்ட நாடகத்தின் கெதி என்னாயிற்று? உள்ளி மூக்கு உடைந்ததுதானே மிச்சம்!

ரொம்பத்தான் துள்ளவேண்டாம்!

(2) கேள்வி: திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் இல்லாத தமிழ்நாட்டைக் காண முடியுமா?

பதில்: நிச்சயமாக. திராவிட அரசியலுக்கு எதிராக, வெளியிலிருந்து நம்பத்தகுந்த ஒரு நல்ல தலைவர் உருவானால், திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் முடிந்து  விடும். திராவிடக் கட்சிகளிடம் மக்கள் அலுத்துப் போய், கழக பாணி அரசியல் ரொம்ப நாளாகப் போர் அடிக்க ஆரம்பித்து, மாறுவதற்கு மக்கள் ரெடி. நம்பத்தகுந்த நல்ல தலைவரைத் தேடி அலைகிறது தமிழகம். ரஜினிகாந்தை மனதில் வைத்து இப்படிக் கூறுகிறேன் என்று நீங்கள் நினைத்தால், அதற்கு நான் பொறுப்பல்ல.

(‘துக்ளக்’, 29.3.2017, பக்கம் 22-23)

ஒன்றை திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் ஒப்புக்கொண்டுள்ளார். பி.ஜே.பி.க்குள், திராவிட இயக்கக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரே ஒரு ஆள்கூட இல்லை - அந்த யோக்கியதை உள்ள ஆசாமி பி.ஜே.பி.யிடம் கிடையவே கிடையாது என்று சாஷ்டாங்கமாக விழுந்து ஒப்புக்கொண்டதைப் பாராட்டத்தான் வேண்டும்.

ரஜினிகாந்தை மனதில் வைத்து இதை அவர் சொல்லவில்லையாம். இதுதான் எங்களப்பன் குதிருக்குள் இல்லை என்பது.

ஒரு சினிமாக்காரர் வந்துதான் இவர்கள் கட்சியைக் கரையேற்றவேண்டும் என்று நினைப்பது அவர்களின் பலமா? பலகீனமா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆரம்பத்தில், ‘தீபா’வைத் தூக்கி நிறுத்திப் பார்த்தார் திருவாளர் குருமூர்த்தி. விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிர, பிள்ளை பிழைத்தபாடில்லை.

இப்பொழுது ரஜினிகாந்துக்காகக் காத்துக் கிடக் கிறார்கள் போலும். ஏனென்றால், இந்த நாட்டுக்காக அரும்பாடுபட்டவர் - மொழிப் போர் தியாகி, காவிரி நீர்ப் பிரச்சினைக்காக மறியல் செய்தவர், சமூகநீதிக்காக வெஞ்சிறை ஏகியவர், தமிழக மீனவர்களுக்காக வீதிக்கு வந்து போராடியவர், ‘நீட்’ ஒழிப்புக்காக நெடுங் குரல் கொடுத்தவர். குருமூர்த்தி சொன்னால் நம்பித் தொலைத்துத்தானே தீரவேண்டும்.

அப்படியே பார்த்தாலும், ரஜினிகாந்த் விவரம் தெரியாத ஆசாமியல்ல; இந்த மண் குதிரைகளை நம்பினால் ஆற்றோடு போகவேண்டியதுதான் என்பது கூடத் தெரியாத அறியாப் பிள்ளையா அவர்?

அவரை ஏன் வீண் வம்புக்கு இழுக்கிறது இந்தக் கூட்டம் என்று தெரியவில்லை. ரஜினிகாந்த் எச்சரிக்கை யாக இருப்பது நல்லது.

(3) கேள்வி: அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பதன் பொருள் என்ன?

பதில்: இந்த நான்கும் பெண்களுக்குத் தேவையான குணம் என்பர்.

அச்சம் - அஞ்சுதல்.

மடம் - அறிந்தும் அறியாததுபோல் இருத்தல்.

நாணம் - வெட்கம்.

பயிர்ப்பு - வேற்றோரின் கைமேற்பட்டால் அரு வருத்தல்.

(ஆர்.எஸ்.எஸ். ஏடான ‘விஜயபாரதம்’,

24.3.2017, பக்கம் 35)

பயிர்ப்பு என்பதற்கு உண்மையான பொருள் என்ன?

மதுரைத் தமிழ்ப் பேரகராதியில், டாக்டர் உ.வே. சாமிநாதய்யரின் முகவுரையுடன் கூடிய அகராதியில் பயிர்ப்பு என்பதற்கு என்ன பொருள்?

பெண் குணங்களில் ஒன்று அருவருப்பு. அசுத்தம் என்று பொருள் தரப்பட்டுள்ளது.

உண்மை இவ்வாறு இருக்க, இந்துத்துவாவின் கேடு கெட்ட குணத்தோடு ‘விஜயபாரதம்’ தன் பூணூல் புத்தி யோடு திரித்து வெளியிடுவதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

அதே ‘விஜயபாரதத்தில்’ இன்னொரு கேள்வி - பதில்:

(4) கேள்வி: எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. கீதை படிக்க விரும்புகிறேன், என்ன செய்வது?

பதில்: பரவாயில்லை. சுவாமி சித்பவானந்தர் எழுதிய ‘பகவத் கீதை’ புத்தகம் தமிழிலேயே உள்ளது. ஒவ்வொரு சுலோகமும் தமிழ் எழுத்திலும் உள்ளது. அதற்குப் பொருள் விளக்கமும் எளிமையாக உள்ளது. இதுவரை வந்த தமிழ் விளக்கங்களிலேயே மிகச் சிறந்தது என்று கூட சொல்லலாம்.

(ஆர்.எஸ்.எஸ். ஏடான ‘விஜயபாரதம்’,

24.3.2017, பக்கம் 35)

சரி, அதையும்தான் பார்த்து விடுவோம் - ‘விஜய பாரதம்’ கூறும் சுவாமி சித்பவானந்தர் தீட்டிய அந்தப் பகவத் கீதையிலிருந்து இதோ -

‘‘பார்த்தா, கீழான பிறவியர்களாகிய பெண் பாலர், வைசியர், சூத்திரர் ஆகியவரும் என்னைச் சார்ந்திரந்து நிச்சயமாகப் பரகதியடைகின்றனர்.

மன பரிபாகத்துக்கு ஏற்றாற்போல பிறவி மேலானது அல்லது கீழானது ஆகிறது. ஈண்டு இயம்பப்பட்ட மூவரும் கீழான பிறவியரே. எக்குலத்தில் பிறந்தவராயினும், இயல்பாக மாதர் உறுதியான உள்ளம் உடையவர் அல்லர். பேதைமையே பெண்டிரது இயல்பு. திண்மை வாய்ந்திருக்கும் தையலர் மிகக் குறைவு. அத்தகைய சிறுபான்மையர் விதிக்கு விலக்கானவர் என்றே சொல்லலாம். ஆக, பொதுவாகப் பெண் மக்களைக் கீழான பிறவியர் என்பது இயற்கைக்கு ஒத்ததொரு சொல்லாகும்.

இவ்வுலக வாழ்க்கைக்குப் பயன்படுகிற பொருளைச் சேகரிப்பதிலேயே மனதை வைப்பவர்கள் வைசி யர்கள். அருளை நாடாது, பொருளை நாடுதலே அவர் களது போக்கு. ஜடப் பொருளை எண்ணுகின்றவளவு ஜடபுத்தியே அவர்களிடத்து வலுக்கிறது. அத்தகைய பிரவிருத்தியையுடையவர்களெல்லாம் கீழான பிறவியை யுடையவர்களாகக் கருதப்படுகின்றனர்.

அதிலும் கீழப்பட்டவர் சூத்திரர். ஏனென்றால், பிறரிடத்து அடிமைத் தொழில் செய்தல் ஒன்றுதான் அவர்களுக்கு இயலும். ஜீவனோபாயத்தின் பொருட் டுத் தம் வாழ்க்கையை யார் பிறரிடத்து ஒப்படைக் கின்றனரோ அவரே சூத்திரர். இவ்வுலகம் ஒன்றை மட்டும் அறிந்து, அதைச் சார்ந்திருக்கும் அன்னவர் இறைவனைச் சார்கிறதில்லை.

அழுக்குப் படிந்த உடல் நீராடுவதால் சுத்தியடை கிறது. பரமனைப் பக்தியுடன் போற்றுவதால் சித்தமலம் அகலுகிறது; மனம் குவிகிறது; பரபோதம் ஓங்குகிறது; பரகதியும் கைகூடுகிறது.

பிறவி ஒரு நாளும் பக்திக்கு இடைஞ்சல் அல்ல. கடலை அடையும் நதிகளெல்லாம் கடல் மயம் ஆகின் றன. புண்ணிய நதி, சாக்கடை ஆகிய அனைத்தும் கடலில் ஒரே பதவியைப் பெறுகின்றன. அங்ஙனம் கடவுளைக் கருதும் மனிதர்களெல்லாம் கடவுள் மயம் ஆகின்றனர். செயலில் அல்லது பிறவியில் கீழோரும் பக்தியால் மேலோர் ஆகின்றனர். கடவுளின் அருள் அவர்களை மேலோர் ஆக்குகிறது. கடவுளை அடையத் தகாதார் என்பார் எவருமில்லை.

புயற்காற்று அடிக்கும்போது அரசமரம் இன்னது, ஆலமரம் இன்னது என்று வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. அதுபோல, பக்தி என்னும் புயற்காற்று ஒருவனுக்குள் அடிக்கும்போது அவனிடம் ஜாதி பேதம் இருக்க முடியாது.’’

- சிறீ ராமகிருஷ்ணர் உபதேசம்

சித்பவானந்தர் ஒரு வார்த்தையின் பொருளை மிகவும் விழிப்பாக மறைத்திருப்பதை இங்கு சுட்டிக் காட்டியாக வேண்டும்.

‘‘பாப யோனய’’ என்ற சொல்லுக்கான பொருளைத் தான் பூணூல் மூடு திரைபோட்டு முழுக்க மறைத் துள்ளார்.

பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியில்  பிறந்தவர்கள் என்பதைத்தான் மறைத் துள்ளார்.

இதை ஒரு பக்கம் தள்ளி வைத்திருந்தாலும் சித் பவானந்தர் கூறும் விளக்கத்தில்கூட கீழான பிற வியர்களாகிய பெண் பாலர், வைசியர், சூத்திரர் என்று கீதையில் இருப்பதை மறைக்க முடியவில் லையே.

அது என்ன கீழான பிறவியாளர்கள்?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார் கள். சித்பவானந்தரின் ‘‘ஸ்ரீமத் பகவத் கீதையிலிருந்து’’ ஒரு பருக்கைதான் இது.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஆய்ந்து எழுதியுள்ள ‘‘கீதையின் மறுபக்கம்’’ (திராவிடர் கழக வெளியீடு) வாங்கிப் படி யுங்கள். கீதையின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிடும்.

- மின்சாரம்

Comments  

 
#1 Ajathasathru 2017-04-01 21:55
சுதந்திர இந்தியாவில் 'சுதந்திரமாக' ஊழல் அத்தியாயத்திற்க ு பிள்ளையார் சுழி போட்டவர் டி டி கே என்ற பார்ப்பன நிதியமைச்சர் ! இந்திரா காங்கிரசின் முதல் கொடியேற்று விழா நடத்தியவரும் இவர்தான் ! பின்னர் இந்திரா தொடங்கி, ராஜிவ், நரசிம்ம ராவ் , ஜெயா என ஊழல் பெருச்சாளிகள் அனைவரும் பார்ப்பனர்! உஷாலும், பார்பனீயமும் பிரிக்க முடியாதவை!
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner