தமிழ்நாட்டின் அடையாளம் தந்தை பெரியாரே!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘‘அய்யா’’பற்றி ‘‘அய்யாக்கண்ணு!’’

 

சென்னை எழும்பூர் உடுப்பி விடுதி அருகில் ஒரு சிறப்புக் கூட்டம் (25.4.2017). தமிழ்நாட்டின் விவசாயம், விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்து, மத்தியில் ஆட்சியில் இருக்கும் நரேந்திர தாமோதரதாஸ் மோடி தலைமையிலான மத்திய அரசு இவற்றின்மீது சிறிதளவும் அக்கறை காட்டாத நிலையினைக் கண் டித்து நாடு தழுவிய அளவில் முழு அடைப்புப் போராட்டத்திற்கான விளக்கக் கூட்டம் அது.

 

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் எஸ்.திரு நாவுக்கரசர், இடதுசாரிகள், இ.யூ. முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த முன்னணியினர் பங்கேற்றுக் கருத்துகளை வெளியிட்டனர்.

 

டில்லியில் 41 நாள்கள் இப்பிரச்சினைக்காக நிர்வாணப் போராட்டம்வரை நடத்திய விவசாயிகள் குழுத் தலைவர் வழக்குரைஞர் அய்யாக்கண்ணு அவர்களும், அவரது உடன் போராளிகளும் கோவணத்தோடு அதில் கலந்துகொண்டனர்.

 

அந்தச் சிறப்புக் கூட்டத்தில் அய்யாக்கண்ணு அவர்கள் அய்யாபற்றி (பெரியார்பற்றி) தெரிவித்த கருத்து, அங்குக் கூடியிருந்த மக்கள் வெள்ளத்தில் பெரும் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியது.

 

‘‘டில்லியில் நாங்கள் போராட்டம் நடத்தியபோது உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர்கள், பல்துறை அறிஞர் பெருமக்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், மாணவர்கள், இளைஞர்கள்  எல்லாம் சந்தித்து  எங்களுக்குப் பேராதரவினைத் தந்தனர்.

 

வந்தவர்கள் குறிப்பாக உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர்கள் தந்தை பெரியார் அவர்களைப் பற்றியே பெரிதும் பேசினார்கள். 1950 இல் இட ஒதுக்கீட்டுக்காக தந்தை பெரியார் டில்லியை எதிர்த்துப் போராடி வெற்றியை ஈட்டித் தந்தார்.

 

அந்தப் பெரியார் வழியில் நீங்களும் இப்பொழுது டில்லியை எதிர்த்துப் போராடி வருகிறீர்கள். பெரியார் வெற்றி பெற்றதுபோல, நீங்களும் வெற்றி பெறுவீர்கள் என்று எங்களை வாழ்த்தினார்கள்.

 

தமிழ்நாட்டிலிருந்து இந்தியாவின் தலைநகரமான டில்லியில் போராட வந்த எங்களுக்குத் தந்தை பெரியார்பற்றி சொன்னபொழுது நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை’’ என்று அய்யாக்கண்ணு அவர்கள் சொன்னபொழுது பெருத்த கரவொலியும், ஆரவாரமும் கைகோத்தன!

 

உண்மைதான், அய்யாதான் தமிழ்நாட்டின் அடையாளம்! (புரிந்துகொள்ளவேண்டியவர்கள் புரிந்து கொள்ளட்டும்) தந்தை பெரியார் தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்த உழைப்பு உன்னதமானது, ஈடு இணையற்றது. அறிஞர் அண்ணா ஒருமுறை சொன் னதுபோல, பொதுத் தொண்டை ஒரு கலையம்சமாக மாற்றிக் கொடுத்தவர் தந்தை பெரியார் அவர்களே!

 

அவர் தொடாத துறையில்லை; சிந்திக்காத எல்லை யில்லை. அவை எல்லாமே சுய சிந்தனையின் சொக்கத் தங்கங்கள்!

 

ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வாழும் மக்களுக்கு அவரின் கொள்கைகளும், பிரச்சாரமும், செயல்பாடு களும் நேரடியாகப் பயன்பட்டிருக்கின்றன.

 

அதன் விரிவாக்கம் விரிந்த மானுட உலகை தன் சிந்தனை இறக்கைக்குள் வைத்து அடைகாக்கக் கூடியது.

 

புரட்சிக்கவிஞன் பாரதிதாசன் தன் பொன் தூரிகையால் ‘‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்!’’ என்று தந்தை பெரியார்பற்றி தொலைநோக்கோடு கவிதை ஓவிய வரிகளை வழங்கினார்.

 

மூடநம்பிக்கைகள் ஒழிப்பு என்றால், அந்த இடத்திலே முதல் மாந்தராக அவர்தான் இருப்பார். பெண்ணடிமைத் தகர்ப்பு என்று சொன்னால், அந்தப் பெருந்தகைதான் ஒளியாய் மின்னுவார்.

 

சமூகநீதி என்று எடுத்துக்கொண்டால் அவருக்கு இணையாக இன்னொருவரை எடுத்துக்கூற இயலாத அளவுக்கு அதன் எல்லையில் நிற்கக் கூடியவரும் அவரே!

 

ஜாதி ஒழிப்பு என்று சொன்னால், அதன் ஜாம்ப வானே அந்தச் சரித்திர நாயகர்தானே!


சமதர்மம், சமத்துவம் என்று சொன்னால், அதற்குத் தடையாக நிற்கும் தடுப்புச் சுவர்களையெல்லாம் தரைமட்டமாக்கும் தளகர்த்தர் தந்தை பெரியாரைத் தவிர வேறு யாராகத்தான் இருக்க முடியும்?

 

தடையாக இருப்பது கடவுளா - தாட்சண்யமின்றித் தகர்க்கும் தத்துவ மொழிகளைத் தருவார்; கடவுளோடு சேர்ந்து மதமும், வேதமும், சாஸ்திரங்களும் கூட்டணி வைத்துக்கொண்டு வந்தாலும் அவற்றைக் கூண்டோடு குப்புறத் தள்ளித் துவைக்கும் அந்தப் பேரறிவுப் பேராண்மையை அந்தப் பிடரி சிலிர்க்கும் சிங்கத்திடம் தான் காண முடியும்!

 

ஏன்? ஜாதியைப் பாதுகாப்பது அரசியல் சாசனமே என்றாலும், அதற்குத் தீ வைத்து கொளுத்திக் காட்டிய அந்தக் கொள்கை உரமும், துணிவும் அந்தப் பகுத் தறிவுப் பகலவனிடம் மட்டுமே காணக்கூடியது.

 

பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் போடப் படுவதை வெட்கப்படும்படிச் செய்த விவேக சிந்தா மணியும் அவர்தானே - வெண்தாடி வேந்தர்தானே!

 

இனிவரும் உலகத்தில் குழந்தைப் பேற்றுக்கும், ஆண் - பெண் புணர்ச்சிக்கும் வேலை இல்லை என்ற சோதனைக் குழாய்க் குழந்தைத் தத்துவத்தை 79 ஆண்டுகளுக்குமுன்பே (1938) தொலைநோக்கோடு கணித்த கணினியும் அவர்தானே!

 

எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். ஒவ்வொரு தளத்திலும் தந்தை பெரியார் பேசப்படத் தான் செய்வார் - பெருமைப்படுத்தப்படத்தான் செய்வார்!

 

அவருக்கென்று குருவோ, ஞானத்தந்தைகளோ கிடையாது. நான் சொன்னதை திருவள்ளுவனும் சொல்லியிருக்கிறார் என்று சொல்லுவாரே தவிர, திருவள்ளுவர் சொல்லியுள்ளார் -அதையும் நானே சொல்லுகிறேன் என்று சொல்லிப் பழக்கப்பட்டவரல்ல - அந்தச் சுயசிந்தனைச் சூரியன்!

 

அதனால், அய்.நா.வின் யுனெஸ்கோ அவரை தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ் என்று பாராட்டி விருது வழங்கியது (1970). உண்மையைச் சொன்னால், சாக்ரட்டீசுக்குக்கூட கடவுள் நம்பிக்கை இருந்தது. ஆனால், அறிவாசான் அய்யாவோ, அந்தக் கசடுகள் மீதெல்லாம் கருத்துச் சம்மட்டி அடி கொடுத்துக் கருக்கலைப்பு செய்தார்.

 

இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தோழரும், சுயமரியாதைச் சுடரொளியுமான கே.டி.கே. தங்கமணி பாரட்லா அவர்கள் - சிறந்த நாடாளு மன்றவாதி என்று போற்றப்படும் ஹிரேன் முகர்ஜி அவர்களைச் சந்தித்தபோது ஓர் உரையாடல்:

 


500 ஆண்டுகளுக்குப் பிறகும் பேசப்படும் புரட்சி யாளர்கள் யாராக இருப்பார்கள் என்ற வினாவைத் தொடுத்தபோது, தோழர் கே.டி.கே. தெரிவித்த பதில், அவரைத் திருப்திபடுத்தவில்லை. கடைசியில், ஹிரேன் முகர்ஜி அவர்கள், தான் எழுப்பிய வினாவுக்கு, அவரே பதிலும் கூறிவிட்டார்.

 

ஒருவர் பெரியார் ஈ.வெ.ராமசாமி; மற்றொருவர் ம.சிங்காரவேலர் என்று பதில் சொன்னாரே!
(‘தினமணி’, 2.7.1995).ஒரு 50 ஆண்டுகளுக்குமுன் கிழக்கு ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் உலகத் தத்துவ அறிஞர்கள் மாநாடு, அம்மாநாட்டைப் பொறுப்பேற்று நடத்தியவர் உலகப் பேரறிஞர் என்று போற்றப்படும் வால்டர் ரூபன். மாநாட்டின் ஓய்வு நேர இடைவெளியில் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா உள்ளிட்ட சில இந்திய அறிஞர் களுடன் உரையாடினார்.

 


‘‘இன்றைய இந்தியாவின் முன் உதாரணமே இல்லாத மகத்தான மானுட ஆளுமை உடையவர் யார்?’’ (Who is the Unpreceded Human Personality of the Present India?) என்ற கேள்விதான் அவருடையது. காந்தி என் றனர்; நேரு என்றனர்; எவரையும் ஏற்றுக்கொள்ள வில்லை அந்த அறிஞர் வால்டர் ரூபன்.

 


கடைசியில் நீங்களே சொல்லுங்கள் என்று கேட்ட போது, அந்த அறிஞன் சொன்ன பதில் என்ன தெரியுமா?

 

 


‘‘இந்திய சமூகத்தில் மேலிருந்து கீழே வரை பரவி சமூக வளர்ச்சியை முடக்கிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய நோய் வருணாசிரமம் அல்லது மனுதர்மம் அல்லது வைதீகம். இந்த நோய்க்கு எதிராகத் தெளிவாக மூர்க்கமாகப் பேராடுகிறவர் பெரியார் ஈ.வெ.ராமசாமிதான்.

 

முன்னுதாரணமற்ற பேராளுமைக்காரர்’’ என்றாரே பார்க்கலாம்.

 

பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தில் பேசிய சாகித்ய அகாடமியின் முக்கியப் பொறுப்பாளர்களுள் ஒரு வரும், பிரபல எழுத்தாளருமான தோழர் பொன்னீலன் அவர்கள் வெளியிட்ட தகவல் இது, 25.12.2011).

 


(குறிப்பு: அந்த ஜெர்மனியில்தான் இவ்வாண்டு ஜூலையில் ‘‘தந்தை பெரியாரும், அவர்தம் சுயமரியா தைக் கோட்பாடுகளும்’’ எனும் தலைப்பில் உலகளவு மாநாடு நடைபெற உள்ளது. திராவிடர் கழகத் தலைவர் தலைமையில் குழு ஒன்று செல்லுகிறது).

 


காஞ்சீபுரத்தைச் சேர்ந்த அறவாழி கிருபானந்தன் - இவர் நார்வே நாட்டில் பொறியியல் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறவர். மூன்று நாள் பயிற்சிக் கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்கச் செல்லுகின்றார்.

 


பயிற்சியாளர் அர்லிட் நொர்டே பயிற்சி தொடங் கப்படும்முன் - ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

 

தோழர் அறவாழி, தமிழ்நாட்டின் காஞ்சீபுரத்திலிருந்து வந்திருப்பதாகக் குறிப்பிட்டார். அப்படி சொன்னதுதான் தாமதம் - பயிற்சியாளர் வாயிலிருந்து வெளிவந்த வார்த்தைகள், ‘‘தந்தை பெரியார் பிறந்த மண்ணிலிருந்து வந்துள் ளீர்களா?’’ என்று கேட்டாரே பார்க்கலாம். அறவாழி உச்சிக்குளிர்ந்து போய்விட்டார்.

 


நான் தந்தை பெரியார் கருத்துகளைப் பின்பற்றி வருபவன் என்று அறவாழி சொன்ன நிலையில், இருவரும் தந்தை பெரியார்பற்றி பல கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாகவும், தன்னைவிடப் பெரியாரை பயிற்சியாளர் அர்லிட் நொர்டே அதிகம் தெரிந்து வைத்திருப்பதாகவும் கடிதம் ஒன்றைத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு எழுதினார் (‘விடுதலை’, 6.11.2013).

 


இராமச்சந்திர குகா உலகம் அறிந்த எழுத்தாளர் - ஆய்வாளர். Makers of Modern India (இந்தியாவை வடி வமைத்தவர்கள்) என்ற நூலை வெளியிட்டார். அந்த நூல் வெளியீட்டு விழா சென்னை தாஜ் கன்னிமாரா ஓட்டலில் நடைபெற்றது (6.10.2010). நூலை வெளியிட் டவர் காந்தியார் - ராஜாஜி ஆகியோரின் பேரன் கோபாலகிருஷ்ணன் காந்தி - அப்பொழுது மேற்கு வங்க ஆளுநர்!

 


அந்த நூலில், 19 இந்திய  மாமனிதர்களின் எழுத்து களும், பேச்சுகளும் அடக்கம். அந்த 19 பேர் அடங்கிய பட்டியலில் தென்னாட்டில் சமூகப் புரட்சியாளர் என்ற முறையில் தந்தை பெரியாரே இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


19 பேர்களை எந்த அளவுகோலில் இராமச்சந்திர குகா தேர்வு செய்தார்?

 


அதனை அவர் வாயிலேயே கேட்போமே!

 


‘‘சுய சிந்தனையாளர்களாக இருக்கவேண்டும். அவர்களின் படைப்புகள் இலக்கிய நுண்ணறிவுத்தரம் வாய்ந்தவைகளாக இருக்கவேண்டும்;

 

முக்கியமாக அவர்களின் கட்டுரைகளும், கொள்கைகளும் பல தலைமுறையினருக்கும் பொருந்துபவைகளாக இருக்க வேண்டும்’’ என்பதுதான் பேராசிரியர் இராமச்சந்திர குகா மேற்கொண்ட அளவுகோலாகும்.

 


கலெக்டர் மலையப்பன் வழக்கில் நீதிமன்ற நீதிக்கே நீதி சொன்னவர் ஆயிற்றே எம் பெரியார்!

 


போராளி அய்யாக்கண்ணு அவர்கள் சொன்னார் களே, டில்லியில் தம்மைச் சந்தித்த வழக்குரைஞர்கள், அறிஞர்கள் பெரும்பாலும் தந்தை பெரியாரைப்பற்றியே பேசினார்கள் என்றார்களே - டில்லி என்ன இந்தப் பேரண்டமே பெரியார் என்னும் பேராளுமைப் பெருங்கதிரவனைப் பேசுகிறது - பேசிக்கொண்டே இருக்கவும் போகிறது.

 


இங்குள்ள சில்லுண்டிகள் - பதர்கள் - அனுமான் - விபீடணக் கூட்டங்கள் அந்தச் சூரியன்மீது கல்லெறிந்து தங்கள் முதுகுகளைத் தாங்களே தட்டிக் கொள்கின்றன! நன்றாகத் தட்டிக் கொள்ளட்டும்.

 

அப்பொழுதாவது தடித்துக் கிடக்கும் அந்த முதுகுக்குள் இருக்கும் தண்டுவடம் வழி மூளையைக் கொஞ்சம் தொட்டுப் பார்க்கட்டும் - தொண்டு செய்து பழுத்த அந்தப் பழத்தின் அருமையை உணரட்டும்!

 


ஆம்! தந்தை பெரியாரே தமிழ்நாட்டின் ஒரே அடையாளம்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner