குழப்பங்களின் ஒட்டுமொத்த உருவமாக நீட் தேர்வு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நீட் தேர்வு மே மாதம் 7ஆம் நாள் அன்று 1,900க்கும் மேற்பட்ட மய்யங்களில் நடைபெற்றது. நீட் தேர்வின் முடிவு ஜூன் 23 அன்று வெளியானது. நாடுமுழுவதும் 11 இலட்சத்து 38 ஆயிரத்து 890 மாணவர்கள் இத்தேர்வை எழு தினார்கள். ஆங்கில மொழியில் அதிக அளவில் இத்தேர்வை மாணவர்கள் எழுதினார்கள்.

குஜராத் மொழியில் 47,853, வங்க மொழியில் 34,417, தமிழ் மொழியில் 15,206, அசாம் மொழியில் 3,810, தெலுங்கு மொழியில் 1,766, மராத்தி மொழியில் 978, கன்னட மொழியில் 712, ஒடியா மொழியில் 452 போன்ற பல  எண்ணிக்கைகளில் மாணவர்கள் நீட் தேர்வை அந்தந்த மொழிகளில் எழுதினார்கள்.

தேர்வு முடிவு வெளியாகி ஒரு மாதம் ஆகின்ற நிலையில் இன்னமும் மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் அனைவருக்கும் போதிய தகவல்கள் இல்லாமல் இருட்டில் உள்ள நிலையில் உள்ளனர்.  தேர்ச்சி பெற்றவர்களில் முக்கியமாக இடஒதுக்கீட்டுக் குரியவர்களாக, வகுப்புவாரியாக முடிவு வெளியிடப்படவில்லை. மொழிவாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அதன்படி தகுதிப்பட்டியல், மாநில வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள், அவர்களின் தகுதிநிலைகள்குறித்தும் வெளியாகவில்லை.
இதுபோன்ற தகவல்கள் அல்லது மாணவர் சேர்க்கைக்குரிய நடைமுறைகள்குறித்து நீட் தேர்வு நடத்தியவர்கள் இதுவரை பெற்றோர்கள் மட்டுமல்லாமல், மாநில அரசுகளிடமே அளிக்கவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85 விழுக்காடு, மற்ற பாடத்திட்டங்களின் மாணவர்களுக்கு 15 விழுக்காடு என்கிற விகிதத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தமிழ்நாடு அறிவித்தது.

தமிழ்நாடு அரசிடம் மாநிலத்துக்குரிய மாணவர்களின் தகுதிப்பட்டியல், மாணவர்களின் சேர்க்கைப்பட்டியல் மற்றும் பொதுப்போட்டிக்குரிய பட்டியல் என ஏதும் இல்லாமல் உள்ளது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர் களுக்கு இடஒதுக்கீட்டின்படி அளிக்கப்படுகின்ற இடங்கள்குறித்து தகவல்கள் என எதுவும் மாநில அரசிடம் தற்போது இருப்பதாகத் தெரியவில்லை.
அதுபோன்ற பட்டியலை மாநில அரசு விண்ணப்பித்துள்ள 50ஆயிரம் விண்ணப்பங்களை ஒவ்வொன்றாக ஆய்வு செய்தபின்னரே வெளியிட முடியும்.

தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த பின்னரும், இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய அரசும் இணைந்து நீட் தேர்வை நடத்த தீவிரம் காட்டியதால் உச்சநீதிமன்றம் நடத்த உத்தரவிட்டது. நீட் தேர்வின் முடிவை சிபிஎஸ்இ வெளியிட்டது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 12.5.2017 அன்று பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. தேர்வெழுதிய 8 லட்சத்து 93ஆயிரத்து 262 மாணவர்களில் 8 லட்சத்து 22ஆயிரத்து 838 பேர் தேர்ச்சி பெற்றனர். சிபிஎஸ்இ தேர்வு முடிவினை அதன் இணையப்பக்கத்தில் தகுதிநிலைகளுடன் பட்டியலை வெளியிட்டது.

நீட் தேர்வு முடிவில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் உள்ளது. வகுப்புவாரியான பட்டியலை சிபிஎஸ்இ வெளியிடவில்லை. நீட் தேர்வில் மொழிவாரியாக நடைபெற்ற தேர்வின் தகுதிநிலைப்பட்டியல் வெளியிடப்படவில்லை.
ஆளுக்கேற்ற ஆடை வடிவமைப்பைவிட, வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிய வலியுறுத்துவதுபோன்று நீட் தேர்வு நடைமுறைகள் உள்ளன. சில மொழிகளுக்கான கேள்வித்தாள்கள் மிகவும் கடினமானவையாக இருந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், முறையான தகுதிப்பட்டியல்களை வெளியிட முடியாத நிலை நீடித்துவருகிறது. நீட் தேர்வு நடைமுறையில் உள்ள பல்வேறு குறைபாடு களுக்கும், நீட் தேர்வைக் கட்டாயமாக்குகின்ற மத்திய அரசின் சுகாதாரத்துறை இதுபோன்ற குற்றச்சாற்றுகளுக்கு உரிய பொறுப்பை ஏற்காமல் இருந்து வருகிறது.

ஒற்றைச்சாளரமுறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுமா? என்கிற அய்யத்தையும் தெளிவுபடுத்தவில்லை. தென்னிந்தியா முழுமைக்கும், மகாராட்டிரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் சிபிஎஸ்இ மய்யமாக டில்லி மட்டுமே உள்ளது. வெறும் நான்கு பேரைக்கொண்ட சிபிஎஸ்இ மய்யத்தில் அனைத்தும் முடிவு செய்யப்படுவது வேதனை அளிப்பதாக பெற்றோர்களும், மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் கவலையுடன் குறிப்பிடுகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner