எங்கள் தந்தைதான்!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பேசுகிறது சமுதாயம்

‘கும்பிடுகிறேன் சாமி!’

என்ற

குரலில்

புதைந்திருந்த

கிருமிகளை அழித்து

கும்பிடப் படுவோனின்

குதிகால் எலும்பை

நொறுக்கி

முதுகெலும்பை

முறித்த

யுகத் தலைவர்

ஆதலால்

அவர் எங்கள் தந்தை!

 

பேசுகிறது பெண்ணினம்

பேசா மடந்தை

என்றும்

பேயென்றும்

பெயர் சூட்டப்பட்ட

எங்களின் குருதியை

வெளியேற்றி

புது ரத்தம் பாய்ச்சிய

பூகம்ப மருத்துவர்

என்பதால்

அவர் எங்கள் தந்தை!

 

பேசுகிறார் தொழிலாளி

சூத்திரன் என்றால்

தொழிலாளியாம்

பிறவியிலேயே அவன்

இழிமகனாம்...

‘ஆத்திரம் கொண்டடி!’

என்ற

ஆவேசக்

குதிரையை

எங்கள் அணுக்கில்

எல்லாம்

பூட்டியதால்

அவர் எங்கள் தந்தை!

பேசுகிறது பகுத்தறிவு

படித்தவன் மூளையிலும்

மூடக் குப்பைகளை

ஒட்டடைகளாய்

தொங்கவிட்ட

கடவுளைக்

காயடித்தும்

மதத்தின் மூச்சை

மரித்தும்

சிந்தனைப் புலத்தையும்

தூர்வாரியதால்

அவர் எங்களின் தந்தை!

 

பேசுகிறது சமூகநீதி

‘பரதேசிகளே -

உங்களுக்குப்

படிப்பு ஒரு கேடா?’

என்று

பாதத்தினால்

சிதம்பரம்

நடராஜனாய்

எங்களை நசுக்கிய

நரியார்களின்

நடுமார்பைப்

பிளந்து

‘கல்வி சரசுவதியை’

சந்து பொந்துகளில்

எல்லாம்

சிண்டைப் பிடித்து

இழுத்து வந்து

நடனமாடச் செய்ததால்

அவர் எங்களின் தந்தை!

 

பேசுகிறது மானுடம்

சிக்கல் பிக்கல்

சேட்டைகள்

சூழ்ச்சிகள்

ஒடுக்கல்

சுரண்டல்

எனும்

மானிட  உயிரின்

வேரை

அரித்துத் தின்னும்

புழுக்கள்

அத்தனைக்கும்

ஒரு பெயர்

ஆரியம் என்றால்

அவற்றை

ஆணிவேரோடு கெல்லி

அஸ்தமனம் செய்யும்

அரிமா என்பதால்

அய்யா பெரியாரே

எங்களின் தந்தை!

 

பேசுகிறது ஜாதி

சுதந்திர நாடென்றால்

ஜாதி ஒழிப்பு என்ற

மாராப்பு இருக்க

வேண்டாமா?

ஜாதி நோய்த் தொற்றினால்

சுதந்திரம் என்ற

குழந்தைக்கு

சுகாதாரம் ஏது?

ஜாதி இருக்கும் நாட்டில்

சுதந்திரம் இருக்குமா?

சுதந்திரம் இருக்கும்

நாட்டில்

ஜாதி இருக்கலாமா?

சட்டத்திலே ஜாதி -

சுதந்திரத்தின் வியாதி!

கொளுத்தினர்

சட்டத்தை

அனுப்பினர் சாம்பலை

மூட்டை மூட்டையாய்

கருஞ்சட்டை மாவீரர்கள்

பத்தாயிரம் பேர்!

மூன்றாண்டு வரை

முத்தமிட்டனர் சிறையை!

இன்னும் அத்தீ நம் கையில்!

உலகப் பந்தை

அதிர வைத்த

இந்தப் புரட்சியை

உசுப்பிய தலைவர்

என்பதால்

அவரே எங்கள் தந்தை!

 

இதில்

குற்றமென்ன

சொல்வீர்

‘மேதைகளே?’

பிழை என்ன

காண்டீர்

‘பெருமான்களே?’

 

கூட்டிக் கழித்தால் -

தந்தை பெரியார்

தரணிக்கோர்

புதுவிளக்கு!

மானுடத்துக்கோர்

சூரியக் கிழக்கு!

மாற்றத்திற்கெல்லாம்

புதுக் கணக்கு!

மாற்றுத் திறனாளியான

ஒட்டுமொத்த

மனித குலத்துக்கே

மானமும் அறிவுமான

மன்பதையின்

வெள்ளப் பெருக்கு!

வாழ்க எங்கள் தந்தை!

 

- கவிஞர் கலி.பூங்குன்றன்

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner