அட குமுதமே! பெரியாரை சிலாகித்து எழுதக்கூடாதா?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மின்சாரம்

சினிமாக்காரர்களின்  அட்டைப்படத்தை போட்டே காசு பறிக்கும் ‘குமுதத்துக்கு’ ஒரு எரிச்சல்.

பெண்கள் பேசும் அரசியலும் ‘பெண்ணி யமும் halfboilism, ஆக இருந்தாலும்  பெண் என்கிற காரணத்தினால் வரவேற்கக் கூடியது?!!! (ISupport Feminists) நான் இன்றைக்குக் கல்லூரியில் படிக்கிறேன் என்றால் பெரியார்தான் காரணம் என்று ஒரு இருபது வரிகளுக்கு மிகாமல் பெரியாரை சிலாகித்து எழுதுவது  current trending (இது அவங்க அப்பாக்கு தெரிஞ்சு கோச்சுக்கிட்டு அடுத்த semக்கு   Fees  கட்டாமப் போய்டு வாரோ?!!!) பொதுவாகக் கல்வியை அனைவருக்கும் கிடைக்கச்  செய்தது என்கிற விஷயம் வேறு; நான் படிக்கக் காரணம் என்பது வேறு; இந்த வித்தியாசம் நம் பெண்களுக்குத் தெரியாது. நம் வீட்டில் கறாரான அப்பா கல்யாணத்திற்காகவே நம்மை வளர்த்திருந்தால் இந்தக்கல்வி தனிப்பட்ட முறையில் நமக்குக் கிடைக்குமா என்பதை யோசிக்கத் தெரியாது. அந்த பெரியாரிய புத்தகங்களும் அப்பா காசாகவோ அவர் வாங்கித் தந்ததாகவோ இருக்கும்.

ஆண்கள் தாங்கள் படித்த கொள்கை களைத் தாண்டி எதையும் விவாதிக்க வரமாட்டார்கள் பகுத்தறிவுவாதிகள் முற்போக்குவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் இளைஞர் கூட்டம் முழுவதும் எப்போதோ எழுதப்பட்ட கொள்கைகளை வைத்தே களமாடிக்கொண்டிருக்கின்றது. இக்காலத்திற்கேற்ப அவற்றைப் புதுப்பிப் பதற்கு கூட அவர்கள் கற்ற பகுத்தறிவு உதவுவதில்லை
(குமுதம் 1.11.2017 - பக்கம் 112-113)

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று சொல்லப்பட்ட சமுதாயம் இது.

ஒரு வீட்டில் உள்ள பிள்ளைகளில் முதலில் பெண்ணைப் படிக்க வையுங்கள் என்று பிரச்சாரம் செய்தவர் பெரியார். அதற் காக 1929ஆம் ஆண்டிலேயே மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றச் செய்தவர் பெரியார்.

பெண்கள் பருவமடைந்த பின் வாசல் நிலைப்படியை தாண்டி வெளியே வர முடியாது என்றிருந்த முடக்குவாத வரலாற்றை முறியடித்தவர் பெரியார்.

ஆசிரியர் பணியை முழுமையாக பெண் களுக்கே அளிக்க வேண்டும் என்று கூறியவர்.

பெண்கள் படித்து முடிக்கும் வரை திருமணத்தை ஒத்தி போட வேண்டும் என்று வலியுறுத்தியவரும் அவரே!

பெண்களுக்குச் சொத்துரிமை, திருமண விடுதலை உரிமை, விதவைப் பெண்களுக்கு மறுமணம் என்று பெண்களுக்கான சகல உரிமைகளும் அவர் வாயிலிருந்தும், பேனா விலிருந்தும்தான் வெடித்துக் கிளம்பின.

பெண்கள் மாநாடு கூட்டித்தான் பெரியார் என்ற பட்டமே வழங்கினார்கள். தன் மறை விற்குப் பிறகு ஒரு சமூகப் புரட்சி இயக்கத் திற்கு பெண் ஒருவர் தலைமை தாங்கும் ஏற்பாட்டை செய்தவர் அவரே!

பெரியார் எழுதிய ‘பெண் ஏன் அடிமை யானாள்?’ என்ற நூல் பெண்ணுரிமை திசையில் பெரும் பேரிகை!

இன்றைக்குக் கூட சட்டப்பேரவைகளி லும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு (உள் ஒதுக்கீட்டுடன்) அளிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுப்பது - போராடுவது பெரியார் வழி வந்த திராவிடர் கழகமே!

பெண்ணுரிமைக்காக இவ்வளவுப் பேசிய, போராடிய ஒருவரை காட்டட்டும் குமுதம்! பெரியார் உருவாக்கிய கல்வி நிறுவனங்கள் எல்லாம் பெண்களுக்காகவே இருந்தது.

இந்த உண்மைகளையெல்லாம் தெரிந்து கொள்ளாத ‘குமுதம்’  தத்துப்பித்து என்று பேனாவை உருட்டுவது, அதன் அறியா மைக்கான அல்லது பெரியார் என்றாலே ஒரு கசப்பை வைத்து காழ்ப்புக் கொண்டிருக்கும் கபோதித் தனம்தான், பார்ப்பனத் தனம் தான் காரணமாக இருக்க முடியும்.

பெரியாரை பெண்கள் சிலாகித்து எழுதுகிறார்கள் என்றால் அவர்கள் சரியாகவே செயல்படுகிறார்கள் என்று பொருள்.

பகுத்தறிவுவாதிகள் எப்பொழுதோ எழுதப்பட்டதை ஏற்கக் கூடியவர்கள் அல்லர். பகுத்தறிவு என்றாலே ஒவ்வாமைக்கு ஆளாகும் மூடப்பக்தவாதிகள் தான் எந்தக்காலத்திலோ,  எந்தக் காட்டு மிராண்டியோ எழுதி வைத்த புராணங்களையும், இதிகாசங்களையும், சாஸ்திரங்களையும்  நம்பி, அவற்றைக் கட்டிக் கொண்டு அழுது அறிவையும், பொழுதையும், பொருளையும் தொலைத்துக் கொண்டு கிடக்கிறார்கள்.

பூமியைப் பாயாக சுருட்டிக் கொண்டு கடலில் விழுந்தான் என்றும், பூமிக்கும், பன்றிக்கும் ஒரு பிள்ளை பிறந்தது, அவன்தான் நரகாசூரன் என்றும், அந்த நரகாசூரன் கொல்லப்பட்ட நாள்தான் தீபாவளி என்றும் கொண்டாடுவோர் களிடத்தில் மருந்துக்கும் பகுத்தறிவு உண்டா?  அந்த மூடத்தனத் தீபாவளிக்கு மலர் வெளியிட்டு மக்களின் மடத்தனத்தை காசாக்கும் குமுதம், பகுத்தறிவைப் பற்றி பேசுவதற்கு தகுதியுடையதுதானா?

எப்பொழுதோ எழுதப்பட்ட கொள்கைகளை வைத்து பகுத்தறிவாளர்கள் களமாடு கிறார்கள் என்று எழுதுவது கடைந்தெடுத்த நகைச்சுவையே!

விஞ்ஞானக் கருவிகளைப் பயன்படுத்தி (High Tech) அஞ்ஞான மூடநம்பிக்கைகளை குப்பை குப்பையாக அச்சிட்டு வெளியிடுவதில் கிஞ்சிற்றும் அறிவு நாணயம் உண்டா?

பெரியார் பெரியார் என்று எங்குப் பார்த்தாலும் பேசப்படுகிறது. அவர் கொள்கைகள் சிலாகிக்கப்படுகின்றன.
மதவாதம் தலைக் கொழுத்து தலை தூக்கும் காலக்கட்டத்தில் பெரியார் கருத்துக் களின் அருமை உணரப்படக் கூடிய - தேவைப்படக்கூடிய காலக்கட்டம் இது.

காலத்தின் இந்தப் பாடத்தைக் கற்க குமுதம் தவறுமேயானால், அது காலாவதியாவதைத் தவிர வேறு வழியில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner