செருப்பை வைத்து கடவுள் விளையாட்டா?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மின்சாரம்

சாய் பாபாவின் பாதுகைகள் (செருப்புகள்) முதன்முறை சென்னை வருகை  

சென்னை, நவ.9  ஷீரடி சாய் பாபா பாதுகைகள், சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. இதை, ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர்.

ஷீரடி சாய்பாபாவின் மகா சமாதி நூற்றாண்டு, நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, பாபாவின் பாதுகைகள், முதன் முறையாக சென்னைக்குக் கொண்டு வரப்பட்டன. அவை, மயிலாப்பூர், பாபா கோவில் எதிரில் உள்ள, அகில இந்திய சாயி சமாஜத்தில், தரிசனத்திற்காக (நவம்பர் 8) மாலை வைக்கப்பட்டது. மாலை முதல் நள்ளிரவு வரை, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அதை தரிசித்தனர்.

பாபாவின் பாதுகைகள், காலை, 6:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை, பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட உள்ளது. பின், பாதுகைகள், மாடவீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்படுகின்றன.
(தினமலர், 9.11.2017)

வெட்கம், மானம், சூடு சொரணையற்ற தன்மைக்குப் பெயர்தான் பக்தி! பக்தி வந்தால் புத்தி போகும் என்பதற்கு இதை விட எடுத்துக் காட்டும் தேவையோ?

 

செருப்புக்கு வந்த வாழ்வைப் பார்த்தீர்களா? ஒரு செருப்பு ஊரைச் சுற்றி வந்து சுரண்டிக் கொண்டிருக்கின்றது


புட்டபர்த்தி சத்திய சாயிபாபாவின்  மரணத்திற்குப் பின் மீண்டும் ‘ஷீரடி சாயிபாபா’ முன்னெடுக்கப்பட்டு வருகிறார்.

சாயிபாபா பெயரால் ஏராளமான அறக்கட்டளைகள் தொடங்கப்பட்டு வசூல் கொள்ளைகள் ஓகோவென்று எடுக்கப்படு கிறது? எங்கள் அறக்கட்டளையிலிருந்து முறைகேடு செய்து வெளியேற்றப் பட்ட சில நபர்கள் நாடு முழுவதுமுள்ள சாயிபாபாவின் பக்தர்களை நன்கு அறிந்து வைத்துக்கொண்டு அவர்களுடன் நட்புறவு கொண்டு சில சாயி பக்தர்களை ஏமாற்றும் வேலையில் இறங்கியுள்ளனர். அவர்கள் சாயிபாபாவின் ஆடைகள், செருப்புகள் (பாதுகை) தலைப்பாகைத் துணி போன்ற வைகளை இந்தியா முழுவதும் உள்ள சாயிபாபா பக்தர்களிடம் கொண்டு சென்று அவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதாக எங்களுக்கு புகார்கள் வருகின்றன என்று அதிகாரப்பூர்வ ஷீரடி சாயிபாபா அறக் கட்டளை என்று சொல்லும் ஓர்  அமைப்பு எச்சரித்துள்ளது.

ஷீரடி சாயிபாபா உடைமைகள் அனைத்தும் பக்தர்களின் பார்வைக்காக ஷீரடியில் மட்டுமே பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளன. இதை ஊர் ஊராக எடுத்துக் கொண்டு சென்று பக்தர்களை ஏமாற்றும் வேலையை எந்த ஒரு சாயிபக்தர்களும் செய்யமாட்டார்கள்.

சாயி பக்தர்களை இது போன்றவர்களின் செய்கையை நம்பவும் மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

2011ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி சாயிபாபா பெயரில் ஒரு போலி அறக் கட்டளை மத்தியப் பிரதேசமாநிலம் பிலாஸ்பூரில் செயல்பட்டது, இதை நடத்தி யவர் ஷீரடி சாயிபாபா அறக்கட்டளையின் முன்னாள் உறுப்பினர். இவர் மும்பை மற்றும் இதர பெரு நகரங்களில் இருந்து ஷீரடிக்கு வரும் பெரும் பணக்காரர்களின் முகவரியை வாங்கிக்கொண்டு அவர் களிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு சாயிபாபா பெயரில் நன்கொடை வசூலித்தார். மேலும் இந்த நன்கொடை களுக்கு ஷீரடி சாயிபாபா சேவா டிரஸ்ட் என்ற பெயரில் ஒரு போலி டிரஸ்ட் ஒன்றை உருவாக்கி அந்த டிரஸ்ட் பெயரில் ரசீதுகள் அச்சிடப்பட்டுள்ளன. கோடிக் கணக்கில் வசூலான பணத்தில் வட்டிக்கு கடன் கொடுத்து வந்துள்ளார்.

இவர் சாயிபாபா பாதுகை (செருப்பு) தரிசனம் என்ற பெயரில் போலியான ஒரு செருப்பை உருவாக்கி டில்லி, போபால், சண்டிகர் போன்ற நகரங்களுக்குச்சென்று பாதுகை தரிசனம் என்ற பெயரில் பக்தர்களிடம் பெரும் தொகை வசூலித்து வந்தார்.

இது குறித்து ஷீரடி சாயிபாபா அறக்கட்டளை காவல்துறைக்குப் புகார் அளித்ததன் பெயரில் இவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.  அப்போது அவர் ஆஜ்தக் என்ற இந்தி செய்தி தொலைக் காட்சியினரிடம் கூறியதாவது:

“நான் மிகச்சிறந்த சாயிபக்தன், என்னை எந்த ஒரு தனிநபரோ அல்லது  நிறுவனமோ மிரட்ட முடியாது, என்னிடம் தான் உண்மையான சாயிபாபாவின் செருப்பு உள்ளது. எனது பரம்பரையைச் சேர்ந்தவர் தான் சாயிபாபாவின் செருப்பை பாது காப்பாக வைத்திருந்தார். ஷீரடியில் இருப்பதாக கூறப்படும் சாயிபாபாவின் செருப்பு போலியானதாகும். அறக்கட்டளை மக்களை ஏமாற்ற அவர்களாகவே ஒரு பழைய செருப்பை சாயிபாபாவின் செருப்பு என்று கூறி ஏமாற்றி வருகின்றனர்.

தற்போது சாயிபாபாவின் சொந்த ஊரில் உள்ளவர்கள் பணத்திற்காக மக்களை எந்த அளவிற்கும் சென்று ஏமாற்றுவார்கள். வரும் காலங்களில் எலும்புக்கூடுகளைக் கூட ஊர் ஊராக எடுத்துச்சென்று சாயி பாபாவின் எலும்புக்கூடு என்று கூறி ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பார்கள்.

‘என் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, நான் என்ன மோசடி செய்தேன்?’ என்று அவர்கள் தான் கூறவேண்டும். ஊரெங்கும் பல சாயிபாபா கோவில்கள் உள்ளன.

அது போல் தான் நானும் ஒரு கோவிலைக் கட்டியுள்ளேன் அந்த கோவிலை நிர்வாகிக்க ஒரு அறக் கட்டளை ஒன்றை உருவாக்கியுள்ளேன்.

நான் வாங்கும் நன்கொடைகள் அனைத் திற்கும் ரசீது உண்டு,  அதே போல் அனைத்தும் வங்கியில் முறையாக கணக்கு காட்டப்பட்டு நற்காரியங்களுக்குச் செலவு செய்துள்ளேன். நான் யாரையும் வலியச்சென்று ஏமாற்றவில்லை” என்று கூறினார்.

இவர் ராய்ப்பூர், மற்றும் ஜெயந்தபூர், அனந்தநகர் போன்ற ஊர்களில் சாயிபாபா கோவிலைக் கட்டியும் உள்ளார்.

ஷீரடி சாயிபாபா கோவிலுக்கு அருகில் உள்ள திக்ஷித்வாடா மியூசியத்தில் சாயி பாபா பயன்படுத்திய செருப்புகள் (பாதுகை) உள்ளன.

தினசரி 500-க்கும் மேற்பட்டவர்கள் வந்துசெல்லும் இந்த இடத்தில் கண்ணாடிப் பெட்டிக்குள் சாயிபாபா உயிரோடு இருந்தபோது பயன்படுத்திய செருப்பு என்று எழுதி பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

நாசிக் நகரில் பெரிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள சாயி சான்ஸ்தான் மந்திர் என்ற இடத்திலும் சாயிபாபா பயன்படுத்திய செருப்பு என்ற பெயரில் ஒரு ஜோடி செருப்பு கோவிலில் உள்பகுதியில் உள்ளது,  இதே போல் மும்பை தாதரில் உள்ள சாயிபாபா பளிங்கு கோவிலில் ஒரு செருப்பு உள்ளது.

(‘சாயிபாபாவின் வாழ்க்கை குறிப்பு’ என்ற நூலில் அவர் வெறும் காலுடன் நாடு முழுவதும் சுற்றித்திருந்தார் என்று தான் குறிப்பிட்டப்பட்டுள்ளது)

பக்தியின் பெயரால் மறைந்த ஒரு நபரின் செருப்பை மய்யப்படுத்தி பக்தி வியாபாரத்தை ‘ஓகோ’ என்று நடத்தி வருவதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

மனநோயாளி போல வாழ்ந்து கெட்ட ஒரு பேர்வழிதான் ஷீரடி சாயிபாபா. அப்படிப்பட்டவரை பக்தர்களாகிய மனநோயாளிகள் கட்டி அழுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

செருப்பைக் கட்டி மாரடிக்கும் அளவுக்கு பக்தியால் புத்தி கெட்டு நாசமாக போய் விட்டதே. என்னே வெட்கக்கேடு!

 


சீரடி சாயி கோயில் அறக்கட்டளை என்ற போலியான பெயரில் நாடு முழுவதும் சாயி பாபா செருப்பு, அவரது உடமைகளை கண்காட்சிக்காக கொண்டு போகிறது என்று 2011ஆம் ஆண்டே எச்சரித்திருந்தது சீரடி கோயில் நிர்வாகம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner