இன்னொரு சொல்லைத் தேடுகின்றோம்!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


- கவிஞர் கலி.பூங்குன்றன்

மறந்தால்தானே
அய்யா
தங்களை
நினைக்க முடியும்?

மறக்க வேண்டுமென்று
மல்லுகட்டி
நினைத்தாலும்
மறுக்க முடியாத
ஆளுமை வெளிச்சமாய்
அடித்து எழுப்பும்
ஆதவனாக அல்லவா
அல்லும் பகலும்
ஆட்டிப் படைக்கின்றாய்!

பாடம் படிக்க
பள்ளி சென்றாலும்
கேள்வித் தோழனையும்
எங்களோடு
துணைக்கு
அனுப்புகின்றாய்

நீ என்ன
‘சூனா’ ‘மானாவா’
என்று
ஆசிரியரையும்
கேட்க வைக்கின்றாய்

ஏடெடுத்துக்
கொஞ்சம்
புரட்டினாலோ
‘எது ராசி
ஏது பலன்?‘
உன் காசுக்கு
வந்த கேடென்று
செக்குலக்கையால்
மொத்துகின்றாய்
பகுத்தறிவுத்
‘தார்க்குச்சி’யும்
போடுகின்றாய்

காலண்டரைக்
கிழித்து
நல்லநேரம்
பார்த்தாலோ
உழைப்பவனுக்கு
எல்லாம் நல்ல
நேரமென்று
காதைத் திருகிப்
பாடம்
கற்பிக்கின்றாய்

அடுத்த பக்கத்தைக்
கொஞ்சம் புரட்டி
அரசியல்
செய்திகளில்
கண்களைக்
கொஞ்சம்
மேய விட்டாலோ
ஆயிரம் ஆயிரம்
வினாக்களோடு
ஆசானுபாகுவாய்
எங்களை
மிரட்டுகின்றாய்

எதிலும்
அய்யப்படு யென்ற
ஆயுத எழுத்தை
கூர்தீட்டிக்
கொடுக்கின்றாய்
வேண்டாம் அந்த அரசியல்
பிழைப்பென்று
சமுதாய வெளியில்
புண்களுக்கு
மருந்திடும்
மார்க்கத்தைக்
காட்டுகின்றாய்

விட்டுத் தொலைத்து
தொலைக்காட்சிப் பக்கம்
கண்களைத்
திருப்பினாலோ
குறுக்கே வந்து
நிற்கின்றாய்
காலத்தைக்
கண்ணாய்க் கருது
கரியாக்காதே யென்று
கன்னத்தில்
அறைகின்றாய்

சட்டைப் பையிலிருந்து
பணத்தை எடுத்து - ஒரு
பொருளை
வாங்க முனைந்தாலோ
கையைப்பிடித்து
சரியாகக் கவனி
சரக்கு சரியில்லை
போலி யென்று
தலையில்
குட்டுகின்றாய்

சிக்கன
சுருக்கெழுத்தையும்
சொல்லிக்
கொடுக்கின்றாய்

“ஏண்டி யென்று
இல்லாளை அழைத்தாலோ
ஏண்டா என்று
கேளடிப் பெண்ணே”
யென்று
குடும்பத்தில் கைகாட்டி
மரமாய் நிற்கின்றாய்

நாங்கள் எங்கு
சென்றாலும்
முன்னாலே விழும்
அதிசய நிழலாக
அவதானிக்கின்றாய்
முக்கால் நூற்றாண்டு
பொது வாழ்வில்
முக்காலும்
கற்றவன்நீ!
பள்ளிப் படிப்பிலிருந்து
தப்பிநீ பிழைத்ததாலே
பகுத்தறிவுப்
பகலவன் ஆனாய்!
நாங்களும்
மனிதரானோம்!

உம்மை மறந்திட
எங்கே இடம்
கொடுத்தாய்?
மறந்தால்தானே
உங்களை
நினைக்கவும் முடியும்?

நினைவுநாள்
என்பதற்கு
இன்னொரு
சொல்லைத்
தேடுகின்றோம் அய்யா!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner