புரட்சிப் பொங்கல்!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பொங்கல்

நினைக்கும் போதே

தித்திக்கிறது!

 

ஒரு கலாச்சார

யுத்தத்தில்

மகுடம் பூண்ட

மகத்தான

பாத்திரம் அது!

 

தீபாவளிக்குத்

திராவிடம்

தீண்டத் தகாதது!

 

நரகாசுரனைக்

கொன்ற அம்பின்

நகத்திலோ

ஆரிய

ஆலகாலம்!

 

செத்துப் போனவன்

வீட்டில்

சீட்டாடலாம் ஆரியம்

பறி கொடுத்தவன்

பதறாதது ஏன்?

 

திராவிடத்தின்

மூளையில்

ஆரிய

இரசவாதமன்றோ

நடந்திருக்கிறது.

 

மூன்றுபேர்

நோகாமல்

‘யுத்தம் செய்து’

தொன்னூற்றேழு

பேரை

சாகடித்தது எப்படி?

ஈரோட்டு அமில

சோதனைச் சாலையில்

மட்டுமே

தென்படும்

அந்த ஆரியக்கிருமி.

 

பொங்கலாம்

திராவிடக்

கலாச்சார நெருப்பில்

பொசுங்கட்டும்

பொல்லா ஆரியம்!

 

சர்க்கரைப்

பொங்கலை

சங்கராந்தியாக்கி

கதை முடிக்கப்

பார்த்தது

சங்கர மடம்!

 

போக்கியைப்

போகியாக்கி

இந்திரனை

இறக்குமதி செய்தது

செந்நாய்க் கூட்டம்!

 

திராவிட

எரிமலை

தீக் குழம்பைக்

கக்கி

திண்டோள்

தூக்கியன்றோ

துரத்தித் துரத்தி

அடித்தது!

 

அந்தத்

திராவிடப்

பொங்கலை

தேன் சொட்டும் வாயால்

அசுரக்

குரல் கொடுத்து

முழங்குவோம்!

 

பொங்கலோ

பொங்கல்!

புரட்டுகளை

சுட்டழிக்கும்

புரட்சிப் பொங்கல்!

ஆரியத்தை

வேரறுக்கும்

வீரியப் பொங்கல்!

 

ஆம்!

பொங்கல் - ஒரு

குறியீடு! -ஆரியப்

பண்பாட்டுப்

படையெடுப்பின்

கருவறுக்கும்

வரலாற்றின்

பொன்னேடு -அதன்

பூர்விகமோ ஈரோடு!

 

ஆரியப்புரத்து

அணுகுண்டு

பெரியா ரென்ற

பெருங்குன்று - அந்த

வீரிய சத்து

நமக்குண்டு.

காரியமாற்ற

கருஞ்சட்டைப்

படையுண்டு.

வீர நடைபோட

வேண்டிய காலம்

வேகப் புயலாய்

வீறு கொள்கவே!

 

-கவிஞர் கலி.பூங்குன்றன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner