கவிப்பேரரசுக்குள்ளிருந்த மொழி - இனமானப் பிளிறல்!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் ஆவார்கள். பார்ப்பனர் தமிழரல்லர் என்பதற்குப் பகுத்தறிந்த கருத்துருக்களைத் தந்த பெம்மான்.

மறைமலை அடிகளும், கா.சு.பிள்ளை யும் எனது வலது கரம் - இடது கரம் போன்றவர்கள் என்று தந்தை பெரியார் மதிப்பிடும் அளவுக்குப் பீடுமிக்கவர்கள் இவர்கள்.

மறைமலை அடிகள் என்றால் பார்ப்பனர்களின் அடிவயிற்றைக் கலக்கும். ஆரிய வடமொழியான சமஸ்கிருதத்தின் ஆணி வேர் நுனி வேர் அத்தனையையும் அலசியெடுத்துத் தோரணமாய்த் தொங்க விட்ட சூறாவளியல்லவா!

1968ஆம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. பாடத்தில் மறைமலை அடிகளின் “தமிழ்த் தாய்” என்ற பாடம் இடம் பெற்றமைக்காக அடேயப்பா அக்கிரகாரக் கூட்டம் நெருப்பு மழையைப் பொழிந்து தள்ளியது.

அவர் ஒன்றும் கற்பனையாக எதை யும் எழுதிடவில்லை. தமிழ்க்கடலில் மூழ்கி முத்தெடுத்த முதிர்ந்த பெரும் புலவர் பெருமான் ஆயிற்றே! அத் தகைய தமிழ்ப் பேரறிஞரின் கட்டுரை பள்ளிப் பாடத் திட்டத்தில் இடம் பெறக் கூடாதாம்.

உண்மையைச் சொன்னால் உட லெரிச்சல் என்ற உண்மைப் பொன் மொழிதான் நினைவிற்கு வருகிறது.

அடிகளார் அக்கட்டுரையில் எழுது கிறார்.

“இத்தென்னாட்டின் கண் நமது தமிழ் மொழியானது இருநூற்று மூன்று நூறாயிரத்து தொண்ணூற்றாயிரம் பெயர்களாற் பேசப்பட்டு வருகின்றது. இது தென்னாட்டில் மட்டுமேயன்றி இலங்கையிலும், பர்மாவிலும், சிங்கப் பூர், பினாங்கு முதலான மலாய் நாடு களிலும், மோரீசு, தென்னாப்பிரிக்கா முதலான இடங்களிலும் நமது தமிழ் மொழியைப் பேசுவோர் பெருந்தொகை யாய் இருக்கின்றார்கள் என்றெல்லாம் தமிழின் சிறப்பை விளக்கி மறைமலை அடிகள் அவர்கள் முத்தாய்ப்பாக இன் னொரு கருத்தையும் முன் வைக்கிறார்.

“பழமையில் தமிழோடு ஒத்த ஆரியம் முதலான மொழிகளெல்லாம் இறந்தொழியவும், தமிழ் மட்டும் இன்னும் இளமையோடு விளங்குகிறது; எதனால் என்றால் தமிழ் அல்லாத மற்ற மொழிகளில் எல்லாம் மக்கள் இயற் கைக்கு மாறான உரத்த ஓசைகளும், பொருந்தா இலக்கண முடிபுகளும் காணப்படுதலால் அவை வழங்குவதற்கு எளியனவாய் இல்லாமல் நாளடைவில் மாய்ந்ததுபோக, இயல்பாற் பிறக்கும், அமைந்த இனிய ஒலிகளும், மிகவும் பொருத்தமான இலக்கண முடிவுகளும் இயைந்து, இஃது ஓதுவதற்கு எளிதாய் இருந்த லினாற்றான் அங்ஙனம் இஃ தின்னும் இளமைக்குன்றாமல் நடைபெறு கின்றதென்று உணர்ந்து கொள்க. க்ருதம், த்ருஷ்டி, ஹிருதயா முதலிய ஆரிய சொற்களைச் சொல்லிப் பாருங்கள். அவை பேசுவதற்கு எவ்வளவு வருத்த மாய் இயற்கைக்கு மாறுப்பட்டனவாய் இருக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார் அடிகளார்; அதுதான் ஆரியப் பார்ப் பனர்களின் அடிவயிற்றை எரித்தது.

பார்ப்பன ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும், பார்ப்பன ஏடுகளும் ஓலமிட்டன.

வழக்கம்போல தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் “விடுதலை”யும் தான் மறைமலை அடிகளார்க்கு அரண் அமைத்து நின்றன.

அதுபோலவே மறைமலை அடி களாரின் “அறிவுரைக் கொத்து” என்னும் நூல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் “இண்டர்மீடியட்’’ வகுப்பு மாணவர்க ளுக்கு பாடப் புத்தகமாக வைக்கப்பட் டது. அதனையும் எதிர்த்து ஆரியப் பார்ப்பனர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்ட தும் உண்டு.

மேல்நாட்டவரின் வளர்ச்சி, முன் னேற்றம் குறித்து விரிவாக எழுதிய அடிகளார், நம் மக்களின் இழிப்போக் கையும் எடுத்துக் காட்டியுள்ளார் அந் நூலில்...

“நம் நாட்டவர்களுக்கோ அறி வாராய்ச்சியில்லாமையோடு, ஒற்றுமைக் குணமும் இல்லை; பிறர்பால் அருள் இரக்கமும் இல்லை. தமக்குத் தம் மனைவி மக்களும், நெருங்கிய உறவி னருமே உரியனரெனவும், மற்றையோ ரெல்லாந் தமக்கு வேறானவரெனவும், தாமும் தம்மினத்தவரும் நன்றாயி ருத்தலே தமக்கு வேண்டும், தம்மவ ரல்லாத பிறர் எக்கேடு, கெட்டாலென்ன, எத்தெருவே போனாலென்ன எனவும் நினைந்து, பிறர்நலத்தைச் சிறிதும் கருதாதவர்களாய் இருக்கின்றனர்.

தன்னலங் கருதும் இப்பொல்லாத எண்ணத்தால் இத்தமிழ் நாட்டவர்க்குட் பிரிந்திருக்கும் அளவிறந்த சாதிகளும், அவற்றால் விளைந்திருக்கும் அளவிறந்த வேற்றுமைகளும் கணக்கிட்டுச் சொல்லல் இயலாது. நாலு பேர் ஒன்று சேர்வார்களானாற் சாதிப் பேச்சும்; பெண் கொடுக்கல், வாங்கலைப் பற்றிய பேச்சும்; அவன் சாதிகெட்டவன், அவனுக்கும் நமக்கும் உறவு கிடையாது, எங்கள் சாதி உயர்ந்தது, எங்கள் சாதியில் ஒடித்தாற்பால் வடியும், எங்களிற் பத்து வீட்டுக்கார ரொடுதான் நாங்கள் கலப்பது வழக்கம், மற்றவர்கள் கையில்  தண்ணீர் கூட வாங்க மாட்டோம் என்னும் பேச்சும்; அதை விட்டாற் பொருள் தேடும் வகை களைப் பற்றிய பேச்சும்; அதுவும் விட்டால் தமக்குப் பொருள் சேருங்காலத்தைப் பற்றியும், நோய்தீரும் நேரத்தைப் பற்றியும், மணம் ஆகும் நாளைப் பற்றியும், எந்த இடத்திற் போனால் குறி கேட்கலாம், எந்த தெய்வத்துக்கு ஆடு கோழி அறுத்தால் இவை கைகூடும்? மாரியைக் கும்பிட லாமா? மதுரை வீரனைக் கும்பிடலாமா? காளியைக் கும்பிடலாமா? கருப்பண்ண னைக் கும்பிடலாமா? எசக்கியைக் கும் பிடலாமா? சுடலைமாடனைக் கும்பிட லாமா? என்னுஞ்சிறு தெய்வச்சிற்றுயிர்க் கொலைக் கொடும் பேச்சும்; தனக்குப் பகையானவனைப் பல வகையால் இழித் துத் தன்னைப் பல வகையால் உயர்த்திச் செருக்கிப் பேசும் பேச்சுமே எங்கும் எல்லாரும் பேசக் காண்கின்றோம்.”

என்றெல்லாம் காய்தல் உவத்தலின்றி உள்ளது உள்ளபடியே உரைத்துள்ளார். இதுதான் உஞ்சி விருத்திகளின் குமட்ட லுக்கும், எரிச்சலுக்கும் விழுமிய காரணங் களாகும்.

பார்ப்பனர் அழைப்பும்

மறைமலை அடிகளாரின் மறுப்பும்

சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் 1933 திசம்பர் 23, 24 ஆகிய நாள்களில் தமிழ் அன்பர் மகாநாடு நடைபெற்றது. சென்னைப் புத்தகால யப் பிரச்சார சங்கத்தார் இந்த மகா நாட்டை ஏற்பாடு செய்திருந்தனர். அதன் தலைவர் கே.வி.கிருஷ்ண ஸ்வாமி அய்யர், பொக்கிஷதார் எஸ்.ராமஸ்வாமி அய்யர், வரவேற்புச் சபைத் தலைவர் உ.வே. சாமிநாதய்யர் மற்றும் பொறுப்பாளர்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்களே. அம்மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மறைமலை அடிகளார்க்கு கே.வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர் 22.12.1933-இல் தந்தி ஒன்றை அனுப்பினார்.

தந்தி வாசகம் வருமாறு:-

“PLEASE ATTEND TAMILANBAR MAHANADU - EARNEST REQUEST TO YOU”

“தமிழ் அன்பர் மகாநாட்டுக்கு வருகை தரும்படி உங்களை அன்போடு அழைக் கிறோம்”

- கே. வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர்

மறைமலை அடிகளார் அனுப்பிய பதில் தந்தி இதோ:-

Reply
Dt. 22-12-1933
“While thanking you and Dr.V.Saminatha Iyer  for all the letters, invitations and Telegram, I very much regret to say that I am not inclined to attend any Tamil meeting which is not willing to maintain and advance pure Tamil. Of all the cultivated ancient languages, Tamil is the only one which is still living in all its pristine glory, I am strongly convinced that any mixture of foreign words in it, will tend to vitiate its healthy life and hamper its vigorous growth. Please, therefore, excuse me for not attending your conference which does not seem to meet my ideal.”
- Maraimalaiyadigal

அடிகளார் மறுமொழி

“கடிதங்கள், அழைப்புகள், தந்தி ஆகியவற்றிற்கெல்லாம் உங்களுக்கும், டாக்டர் உ.வே.சாமி நாதய்யரவர்கட்கும் நன்றி தெரிவிப்பதோடு, தூய தமிழை வளர்க்க விரும்பாத எந்தத் தமிழ்க் கூட்டத்திலும் கலந்துகொள் வதற்கு எமது மனம் இடந்தரவில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். பண்பட்ட பழைய மொழிகளெல்லா வற்றிலும் தமிழ்மொழி ஒன்றுதான் இன்றும் தன் பண்டை நலஞ் சார்ந்த புகழோடு வாழ்கின்றது. பிற மொழிக் கலப்பு அதன் தூய தன்மை யினைக் கெடுக்குமென்றும், அதன் வளர்ச்சி யினைக் குன்றச்செய்யும் என்றும் யாம் உறுதியாக நம்புகின்றோம். ஆதலால் எமது தனித்தமிழ்க் கொள் கையினைக் கடைப்பிடிக்காத உங்க ளுடைய மகாநாட்டிலே கலந்து கொள்ள முடியாமையினைப் பொறுத்துக் கொள் வீர்களாக”

- மறைமலையடிகள்

பார்ப்பனர்களின் போக்கு - மறை மலை அடிகளாரின் தமிழ் - தமிழின உணர்வு எத்தகையது என்பதற்கு இது தலைசிறந்த ஒரு எடுத்துக்காட்டாகும்.

(ஆதாரம்: “செந்தமிழ்ச் செல்வி’’)

இத்தகு மொழிமான - இனமானப் பெரும்புலவரை - தமிழ்க் கடலை கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் “தமிழாற்றுப்படை கட்டுரையாற்றும் தொடர் வரிசையில்” எடுத்துக் கொண்டதானது எல்லா வகையிலும் முத்திரை பொறித்த முடிவுதானே.

“தமிழை ஆண்டாள்” எனும் தலைப் பில் கவிப்பேரரசு ஆற்றிய கட்டுரை உரை பெரும்புயலை உருவாக்கியது. ஆண்டாள் ஒரு தேவதாசி என்று ஒருவர் எழுதியிருந்ததை எடுத்துக் காட்டாக கவிப்பேரரசு அக்கட்டுரையில் குறிப்பிட்டு விட்டாராம். அவ்வளவுதான் ஆகாய வெளிக்கும் அக்கிரகாரத் திண்ணைக்குமாகக் குதித்துத் தள்ளி விட்டனர்.

அந்தச் சர்ச்சைத் தீ ஆரியர் - திராவிடர் என்ற சமூகப் போராக தமிழ் மண்ணில் மூண்டு விட்டது.

நீறு பூத்த நெருப்பாக இருந்த, தந்தை பெரியாரால் உண்டாக்கப்பட்டு ஊக்கம் பெறப்பட்ட தமிழ்மண் தன் கையிருப் பைக் காட்டு முகத்தான் காட்டுத் தீயாக ஓங்கி எரிய ஆரம்பித்தது.

இத்தகு கட்டுரையாற்றும் கவிப் பேரரசுக்குத் துணையாக இருந்து வந் தவர் “தினமணி” ஆசிரியர் திருவாளர் வைத்தியநாதன். இவரை முழுமையாக கவிப்பேரரசு நம்பவும் செய்தார். ஆனால் அதற்குத் தகுதியாக வைத்தியநாதய்யர் இல்லை என்பதை நம்மால் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது!

ஆர்.எஸ்.எஸ். கும்பலும், அக்ரகார மும், ஜீயர்களும் வைரமுத்து அவர்க ளுக்கு எதிராக வரிசை கட்டி நின்ற நிலையில் “தினமணி” ஆசிரியர் வைத் தியநாதய்யராகத் தன்னைக் காட்டிக் கொண்டார். நேராக ஆண்டாளின் சிறீவில்லிபுத்தூர் சென்று ஜீயரிடமும், ஆண்டாளிடமும் மண்டியிட்டு மன்னிப் புக் கேட்டுக் கொண்டு விட்டார். அதே நிலைமை கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர். புரட்சிக் கவிஞர் வழி வந்த அந்தப் புலியா பொந்தில் பதுங்கும்?

திராவிட உணர்வாளர்கள் திரண் டனர். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர் கள் ‘கவிப்பேரரசே - கலங்காதே - கருஞ்சட்டைப் பட்டாளம் உமக்குத் துணையிருக்கும்!’ என்று முழங்கினார் ‘விடுதலை’ வீறு கொண்டு எழுந்தது.

இயக்குநர் பாரதிராஜா போன்றவர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட பல துறைத் தமிழ் மான உணர்வாளர்களும் ஆரியத்துக்கு எதிராக ஆர்ப்பரித்து எழுந்தனர்.

ஆத்திரத்தின் சிகரத்திற்கு ஏறிய சிறீவில்லிபுத்தூர் ஜீயர் சோடா பாட்டில் களையும், கல்லையும் எறிவோம் என்கிற அளவுக்கு ஆரியம் பஞ்சக்கச்சத்தை இறுக்கிக் கட்டியது.

ஆரியராவது - திராவிடராவது என்று பேசியவர்கள் கூட, அது குறித்து அறிவு புகா தலைமுறையினரும், சாம்பலால் மறைக்கப்பட்டிருந்த அந்த பார்ப்பன - பார்ப்பனரல்லாதார் என்ற உணர்வின் எரிமலைக் குழம்பின் வீச்சைக் காணக் கூடிய அரிய வாய்ப்பு அரும்பியது.

இந்தத் “தீயதிலும்” பெரு நன்மை என்னும் மகசூலாக விளைந்தது - வரலாறு பெற்ற பெரும் பேறாகும்.

சென்னை காமராசர் நினைவரங் கத்திலே தமிழாற்றுப் படை கட்டுரை யாற்றும் தொடர் வரிசையில் தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரைத் தேர்ந்தெடுத்து, அந்தக் கட்டுரைப் பொழிவை ஆற்றினார் கவிப்பேரரசு  (13.2.2018, செவ்வாய் மாலை).

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நாகமுத்து (ஓய்வு) தலைமை வகிக்க, சென்னைப் பல் கலைக்கழக மேனாள் துணைவேந்தர் திருவாசகம் முன்னிலை வகித்து உரை யாற்றினார்.

சென்னையில் உள்ள பெரிய மண்ட பம் அது. இருக்கைகளும் வழிந்தன. மண்டபத்தின் வெளிப்புறத்திலும் மக்கள் முற்றுகை!

மேனாள் துணைவேந்தர் திரு வாசகம் அவர்கள் மிகச் சரியாகவே சொன்னார். இந்த மக்கள் வெள்ளம் கவிப்பேரரசு வைரமுத்து அவர் களுக்காக மட்டும் வந்த கூட்டமல்ல. தமிழையும், தமிழர்களையும் சீண்டினால் தமிழினம் பொங்கி எழும் என்பதற்கான சாட்சியம் என்று மிகச் சரியாகப் படம் பிடித்துச் சொன் னார்.

ஆண்டாளை முன்னிறுத்தி எந்த உணர்வோடு ஆரியம் விளையாடிப் பார்த்ததோ, அதற்குப் பதிலடி கொடுக்க இயல்பாக, பொருத்தமாகக் கிடைத்த, அமைந்த வாய்ப்புதான் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் பற்றிய கட்டுரை வாசிப்பாகும்.

கவிப்பேரரசு வெளிப்படையாகப் பேசவில்லைதான். ஆனாலும் அவர் உரையின் உள்ளடக்கத்தின் ஊற்றுக் கண் மொழிமானமும், இனமானமும் கைகோர்த்துக் கனன்று கனத்த குரலா கவே அமைந்திருந்தது.

சிவன்மீது நம்பிக்கையுடையோ ரைப் பார்த்து ஒரு கேள்வியை முன் வைத்தார் வைரமுத்து.

சிவபெருமான் தன் உடுக்கையை எடுத்தான். ஒரு பக்கம் அடித்தான் தமிழ் பிறந்தது, மறுபக்கம் அடித்தான் சமஸ் கிருதம் பிறந்தது என்று நம்புபவர்கள் சமஸ்கிருதத்தை உயர்த்திப் பிடித்துத் தமிழைத் தாழ்த்த ஆசைப்படுவானேன் என்று கேள்வி மூலம் எதிரிகளின் மென்னியை இறுக்கினார். (மொழி வரலாறு அறிந்தவர்கள் ஒரு மொழி உடுக்கில் பிறந்தது என்பதை ஏற்கார் என்பது வேறு விடயம்!).

கவிப்பேரரசின் தமிழாற்றுப்படைக் கட்டுரையில் இதோ சில இனமான நெருப்புத் துண்டுகள்!

“வேதாரண்யம் என்று சுட்டும்போது அந்த ஊரின் வயது, வரலாறு, பண்பாடு என்ற மூன்றும் நமக்கு முற்றும் விளங்க வில்லை. திருமறைக்காடு என்று சுட்டப் படுமிடத்து அதன் நூற்றாண்டுகளை நம்மால் நுகர முடிகிறது. கபிஸ்தலம், என்ற பெயரை அகழ்ந்து பார்த்தால் உள்ளே “குரங்காடு துறை’ தோன்றுகிறது. அருணாசலம் என்ற சொல்லின் நதி மூலம் தேடி நகர்ந்தால் அது ‘திருவண் ணாமலையில்’ முடிகிறது. ஜம்புகேஸ்வ ரம் என்ற ஊர்ப் பெயரை ஊடுருவிப் பார்த்தால் உள்ளே ‘திருவானைக்கா’ தென்படுகிறது. இப்படித்தான் தமிழ் மொழியின் மீது வந்து படிந்த பிற மொழிகள் தமிழன் வரலாற்றைத் துடைத்துவிட்டு தம்மிலிருந்தே வரலாறு தொடங்கப் பெறவேண்டும் என்று சூழ் வினையாற்றின” என்று தம் ஆய்வு முத்திரையைப் பொறித்துள்ளார் கவிப் பேரரசு.

தமிழ்மீது தொடுக்கப்பட்ட ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பைத்தான் தனக்கே உரித்தான நேர்த்தியுடன் கோடிட்டுக் காட்டியுள்ளார் கவிப் பேரரசு.

மற்றொரு முக்கிய கூறு கவிப்பேரரசின் கட்டுரையில் கூர்மை பெற்றிருந்தது.

திராவிட இயக்கம் என்ன செய்தது என்று கேட்கும் ஆரிய வர்த்தமான வர்களுக்கும், ஆரிய நச்சுக்காற்றை உள் வாங்கிப் பேசும் தமிழ்த் தேசியவாதி களுக்கும் சூடு வைத்தது போல திரா விட இயக்கத்தின் ஈடில்லா சாதனையை எடுத்துக்காட்டத் தவறவில்லை கவிஞர்; “அக்ராசனர்” தலைவரானதும், “மகா ஜனங்கள்” பொது மக்கள் ஆனதும், “பிரேரணை” தீர்மானம் ஆனதும், “நமஸ் காரம்” வணக்கம் ஆனதும் யாரால்?” என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு, அறிஞர் அண்ணா இந்த மண்ணுக்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியதையும், கலைஞர் தமிழ்நாட்டுத் தலைநகருக்கு ‘சென்னை’ என்று பெயர் சூட்டியதையும் பதிவு செய்தார்.

காமராசர் நினைவரங்கத்தில் பார் வையாளர்களாக வந்திருந்த தமிழ்த் தேசியவாதிகள் கொஞ்சம் நெளிந்தாலும் அவர்களையும் சிந்திக்கச் செய்தது கவிப்பேரரசின் இந்தப் பகுதி.

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத் தனர் பார்ப்பனர்கள்; ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிக் கட்டிக் கொண்டனர்.

இது பெரியார் மண் என்று சொல் லுவது தற்பெருமைக்கல்ல - தன்னிலை விளக்கம்தான் என்பதை நிரூபித்துக் காட்ட ஆண்டாள் ஏதோ ஒரு வகையில் கைகொடுத்து விட்டாள் என்று எடுத்துக் கொள்ளலாமா?
இராமாயணம் பற்றி மறைமலை அடிகள்

ஒரு குரங்கு கடலைத் தாண்டிற்றென்றாலும் அஃது ஒரு மலையைப் பெயர்த்துக் கொணர்ந்ததென்றாலும், ஒருவன் பத்துத் தலைகளும், இருபது கைகளும் உடையவனாயிருந்தானென்றாலும், மற்றொருவன் இரண்டாயிரம் கைகள் உடையவனாயிருந்தா னென்றாலும், ஒருத்தியை வேறொருவன் சிறையாக எடுத்துச் சென்றதால் அவன் இருந்த நிலத்தைப் பெயர்த்தெடுத்துச் சென்றான் என்றாலும், ஒருவன் தன் கையிலிருந்த வட்டத்தைச் சுற்றி எறிந்து பகலவனை மறைத்தான் என்றாலும் இன்னும் இவை போல்வன... பிறவும் எல்லாம் உலக இயற்கையில் எவரும் எங்கும் காணாதவையாகும். ஆகையால் இன்னோரன்ன பொருந்தாப் புனைவுரைகளை ஒரு கதையிலாதல் ஒரு நாடகத்திலாதல் இயைந்துரைத்தல் நல்லிசைப் புலமைக்கு ஒரு சிறிதும் ஒவ்வாது. ஏனென்றால் இயற்கைக்கு மாறுபட்ட கட்டுக் கதைகளைக் கூறும் நூல்களைப் பகுத்தறிவுடையவர் கற்பாராயின் அவர்க்கு அவை இன்பம் பயவாவாய் வெறுப்பினையே விளைவிக்கும்.

- மறைமலையடிகளின், “கோகிலாம்பாள்... கடிதங்கள்”, ஆக. 1931

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner