தலைவர் கலைஞரின் சிறுகதை குப்பைத்தொட்டி கதையல்ல - கருத்துப்பெட்டகம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்ற வாரத் தொடர்ச்சி....

அப்படித்தவத்தில் ஈடுபட்டவர்களே கூட ஒரே நிலையில் நினைவைச் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். யார் எங்கே எப்போது தவம் செய்கிறார்கள் என்று அலைந்து திரிந்து கண்டுபிடித்து அவர்களது தவத்தைக் கெடுப்பதற்காகவே தேவலோகத்தில் ஒரு பெண்கள் படை தயாராக இருக்கிறது. அதில் குறிப்பிடத்தக்க நட்சத்திரங்கள் மேனகை, ரம்பை, ஊர்வசி, திலோத்தமை ஆகியோர். அவர்கள் தான் போய்க்கெடுப்பார்களோ அல்லது அவர்கள் தங்களைக் கெடுக்க வரட்டும் என்று எதிர்பார்த்து இவர்கள்தான் தவம் செய் வார்களே - இரண்டும் ஆராய்வதற்குரிய விஷயங்கள்தான்.

ஆரம்பமே சுவையாய் இருக்கிற தென்றால் குப்பைத் தொட்டியில் விழுந்த பாதிக்கு மேல் செல்லரித்த ஏட்டைப் படித்துக் குப்பைத்தொட்டி கிளுகிளுத்தது மட்டுமல்ல, படிப்பவர்களும் கிளுகிளுப்பு அடைகிறோம்.

விசுவாமித்திரர் தவத்தைக் கெடுக்க வந்த மேனகையின் சாகசங்களையும், கானகத்து அருவியோரங்களில் அவர்கள் நடத்திய காதல் கேளிக்கைகளையும், கடவுளை நினைக்கும் தவக்கூடம் காமவேள் நடன சாலையாகக் காட்சியளித்த தையும், மகேஸ்வரன் வருவதற்கு முன்பு மலர் மாறன் வருகை தந்து மாமுனிவரை மங் கையின் மடியிலும் காலடியிலும் உருட்டி உருட்டி மகிழ்ந்ததையும், ஜெபமாலை இருந்த கையில் மேனகையின் துடியிடை சிக்கித்தவித்ததையும், மறைத்துள்ள முனி வரின் தடித்த உதடுகள் மேனகையின் மெல்லிதழ்த்தேன் பருகிடத்துடித்த விந்தையையும் வெகு சுவையுடன் நான் படித்துக் கொண்டிருக்கும்போது தானா அந்தக் குப்பை வண்டிக்காரன் வந்து தொலைக்க வேண்டும் என்கிறது குப்பைத் தொட்டி.

இனிமேல்தான் குப்பைத் தொட்டி கதையின் சுவாரசியப் பகுதிக்கு வருகிறோம். முனிவர்களின் காமரசக் கதைகளைக் குப்பைத் தொட்டி ரசித்து அனுபவித்துப் படித்துக் கொண்டிருக்கையில் குப்பை அள்ளுபவன்  தொட்டியைக் காலி செய்து விடக் குப்பைத் தொட்டி ஏங்குற வேளை யில் பக்கத்து பஜனை மடத்தில் பிரசாதம் சாப்பிட்ட ஒருவர் இலைக்குப் பதில் கசக்கிச் சுருட்டிப் போட்ட தாள் ஒன்று விழுகிறது. அந்தத்தாளைப் புரட்டிய குப்பைத் தொட்டிக்கு மறுபடியும் ஒரு கிளுகிளுப்புப் பாட்டு கிடைக்கிறது. அதுதான் ஆண் டாளின் திருப்பாவையே.

பக்தியோடு ஆண்டாளின் பாடலைப் படிப்போருக்கு ஆண்டாளின் பாடலில் உள்ள காமச்சுவை தெரியவில்லை. குப்பைத்தொட்டியின் விளக்கத்தின் பின்தான் நமக்கு, அப்பாடலைப் படிக் கையில் இப்படியா சமாச்சாரம் என்று வியக்கிறோம்.

ஆண்டாளின் திருப்பாவையில் வரும்

குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்

என்று தொடங்கும் பாடல் குப்பைத் தொட்டி கூறுவதை அப்படியே வரி பிசகாமல் தந்து விடுகிறேன்.

விளக்குச் சுடர் எரிந்து கொண்டி ருக்கிறது. அதிலிருந்து நேரம் இரவாகத் தானிருக்கும் என்று முடிவு கட்டிவிடலாம். இரவு நேரத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை வருணித்து அந்த நிகழ்ச்சித் தலைவனைப் பிராத்தனை செய்கிறாள் ஓர்அம்மை. பெண்ணின் பிராத்தனையில் இரவு நேரத்து விரசங்கள் எதுவும் இருக்காது என்றுதான் நினைப்போம். ஆனால் நாம் ஏமாந்து விடுகிற அளவுக்கும் பிரார்த்தனையில் ரசம் மேலோங்கி நிற்கிறது. மறுபடியும் வர்ண னையைக் கவனிப்போம். குத்துவிளக்கின் ஒளியில் கட்டில் ஒன்று தெரிகிறது. கடவுள் என்றால் சும்மாவா? அதன்மீது மெத்தென்ற மஞ்சம் மல்லிகை, முல்லை ரோஜா மலர்கள் தூவப்பட்ட மஞ்சம். விளக்கு - கட்டில், மலர் மஞ்சம் மட்டும் இருந்தால் காட்சி ரசிக்குமா? பல்லாயிரம் நட்சத் திரங்கள் இருந்தாலும் பால்நிலவாக ஒரு மங்கை அந்தப்படுக்கையில் இருக்கிறாள். அவள் கொத்தலர் பூங்குழல் கொண்ட நங்கை. பெயரோ நப்பின்னை. கட்டிலும் மெத்தையும் கவினுறு மங்கையும் இருந்து விட்டால் பூரணத்துவம் பெற்றதாக முடியாதே. அந்த மங்கையின் மாங்க னியன்ன மார்பகத்தின் மீது தனது மார் பகத்தை வைத்தவாறு பிரார்த்தனைக்குரிய ஆடவன் படுத்திருக்கிறான். யார் அந்த ஆடவன்? ஆடவனா? அல்ல; அல்ல - ஆண்டவன்! அந்த ஆண்டவனைப் பிரார்த்திருப்பதோ ஆண்டாள் அம்மை!

மலர் மார்பா! வாய்திறந்து எனக் கருள்வாய்! என்று ஆண்டவனை அழைத்திட விரும்புகிற ஆண்டாள் அம் மையார். அவனைத் தன் இருப்பிடத்திற்கு அழைக்காமல் அவனது பள்ளியறைக் குள்ளேயே போய் விடுகிறாள்! போனதும் கண்ட காட்சிதான்! குத்து விளக்கு எரிகின்ற அறையின் கோலாகலங்கள்.

குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்

மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்

வைத்துக்கிடந்த மலர் மார்பா வாய்திறவாய்

இந்தப் பாடலைத்தான் அந்தக் கசங்கிய தாளில் நான் படித்துப்பார்தேன் என்று குப்பைத்தொட்டி தான் படித்துச்சுவைத்த பாடலைக் கூறுகிறது.

இந்தப்பாடலைக் கூறிவிட்டுக் குப்பைத் தொட்டி கூறும் இதனை ஆண்டாள் அடிய வர்கள், ஜீயர் சுவாமிகள், நித்யானந்தா காமச்சீடர்கள் படிக்க வேண்டும். படிக்கத்தான் வேண்டும். குப்பைத் தொட்டி யின் மீது கோபம் வரும். ஆனால் என்ன செய்ய முடியும். முடியாதே அதை எழுதிய தலைவர் கலைஞர் மீது மோதிப் பார்க்கட்டுமே. அதுவும் தான் முடியாதே! ஏனென்றால் மலை, மலை அண்ணாமலை கூட அல்ல - திருவண்ணாமலை கூட அல்ல - இமயமலை - மன்னும் இமயமலை எங்கள் மாமலை.

காதல் நினைவுகளை ஆண்டாள் கவிதை என் நெஞ்சில் உருவாக்கியது. பாவம்! ஆண்டாள் யார் பெற்ற பெண் ணோ? பெற்றவர்கள் தூக்கியெறிந்து விட்டுப் போய்விட்டார்கள். யாரோ ஓர் ஆழ்வார் எடுத்து வளர்த்தாராம். அந்த அம்மையார் கடவுளைத் தொழுவதில் காமரசத்தை  ஏன் தான் கலந்தாரோ தெரியவில்லை. ஒரு பாட்டுப்படித்து விட்டே இந்தப் பாடுபடுகிறேன். எல்லாப் பாட்டும் கிடைத்தால் என்னைப் பைத்தியக் கார விடுதியின் ஓரத்தில் கொண்டு போய் வைக்க வேண்டியதுதான்.

இத்தோடு குப்பைத் தொட்டி கதை முடிந்துவிடவில்லை. இன்னொரு பாட்டில் ஒரு பெண்ணின் பெண் உறுப்பை புற்றர வல்குல் புனமயிலே அதாவது பாம்பி னுடைய படத்தைப் போன்ற பெண் உறுப்பு உடையவளே என்று வருணிப்பதையும், ஆண்டாளின் நாச்சியார் திருமொழியில் பலப்பலக் காமரசப் பாடல் இருப்பதையும் குப்பைத் தொட்டி படித்தால் என்னாகும்!

இதை வருணித்த பிறகு குப்பைத் தொட்டி கதையை மேலும் இரண்டு பக்கங் களுக்கு வளர்த்து பெற்றெடுத்த தாய், அந்தப் பிஞ்சைக் கழுத்தை முறித்துக் கள்ளக்காதலில் பிறந்த பிள்ளை என்பதால் போடுகிறாள் என்பதைச் சொல்லாமல் சொல்லி அவள் கழுத்தில் தாலியைக் காணோம் என்று முடிகிறது!

இப்போது சொல்லுங்கள். இந்த மலை மீது மோதுங்கள். சாகும்வரை இதைக் கண்டித்து உண்ணாநோன்பு இருந்து உயிர்விட்டுத் தொலையுங்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner