இனச் சுனாமி நீ!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மயிலம் சுப்பிரமணியதுதி

பாடிய

சுப்பு ரத்தினமே

மயிலாடுதுறையில் கொட்டிய - கன

மழையில் நனைந்து புரட்சிக் கவிஞனாய்

பூமிப் பிளந்தெ ழுந்தாய்!

அந்தச் சிந்தனை மழை

ஈரோட்டு மேகத்தின்

எழிலான நன்கொடை!

 

அந்தக் கிழவர்

பொல்லாதவர்!

பொக்கை வாய்த்திறந்து

பிடித்திடுவார்

பிள்ளைகளை!

மூளையைத் தாக்கி

விதைத்திடுவார்

விவேக வி(த்)தைகளை!

 

அண்ணாவும்

தப்பவில்லை

அஞ்சா நெஞ்சன்

அழகிரியும் தப்பவில்லை

விதையாயிருந்த போதே

வீரமணியும் சிக்கினார்

சுருக்கமாகச் சொன்னால் - அந்தச்

சூரிய வெப்பத்தின்

அடைகாப்பால்

பொரிக்கப்பட்டதுதான்

புரட்சித் தமிழகம்!

 

திராவிட இயக்கம்

தமிழுக்காகக்

கிழித்ததென்ன?

திரிநூலோடு - புது

தேசியங்களும்

பிலாக்கணம் பாடுகின்றன

 

புரட்சிக்கவிஞன்!

நீ ஒருவன் போதாதா? - உன்

படைப்புகள்

புயலைத்தின்று

பொங்குமாங்

கடலைக் குடித்து

புத்துலகைப் பிரசவிக்கும்

புலி நகத்தால் எழுதப்பட்ட

புறப்பாட்டன்றோ!

 

பாண்டியன் பரிசென்ன

பகுத்தறிவுத் தேனடை

பன் மணித் திரளென்ன?

தமிழியக்கம் என்ன

தன்மான முரசொலிக்கும்

திராவிடர் திருப்பாடலென்ன!

திகட்டாத் தேன் தோட்டந்தான்

எத்தனை! எத்தனை!

 

உன் எழுதுகோல்

உழுத விளைச்சலோ

என்றென்றும்

உலகப்பனுக்கு

உன்னத சொத்தன்றோ!

 

புராணக் குப்பைகளைப்

புரட்டி எடுத்து

இதிகாசங்களை

எரித்து முடித்து

பெண்ணடிமைப்

பீடத்தின் பிடரியைப்

பெயர்த்தெறிந்து

இனமானக் கொடியைச்

சிகரத்தில் ஏற்றி

ஈரோட்டுக் கடலில்

கரைகடந்த

இனச் சுனாமிநீ!

 

இலக்கணத்தில்

புலி நீ!

எட்டயபுரங்கள்

எம்மாத்திரம் உன் முன்?

எளியோர் பசி தீர

இலை போட்ட ழைக்கும்

இன்பக்கேணி நீ!

சுரண்டல் எலிகளை

வளைக்கே சென்று

பொறி வைத்துப்

பிடித்த

புலவன் நீ!

 

கவிஞர்கள் வருவார்கள்

போவார்கள்

புரட்சிக்கவிஞன்

நீ ஒருவன் மட்டுமே!

 

வாழ்வாய் நீ

வையத்து நாட்களெல்லாம்!

- கவிஞர் கலி.பூங்குன்றன்

 

குறிப்பு: காரைக்கால் - நிரவியில் ஆசிரியராகப் பணியாற்றிய சுப்புரத்தினம் - மயிலாடுதுறையில் தந்தை பெரியார் உரையை முதன் முதலாகக் கேட்டு புரட்சிக் கவிஞராக உருவெடுத்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner