முடிந்துபோன பிராமணாளுக்கு மீண்டும் முடிசூட்டு விழாவா?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

60 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து போன ஒரு காரியத்தை முடிச்சவிழ்த்து திறப்பு விழா செய்யும் ஒரு வேலையை ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி செய்கிறார் என்றால் - இந்தக் கொடுமையை என்னவென்று சொல்லுவது!

பிராமணாள் என்ற பெயரில் உணவு விடுதி நடத்தினால் என்ன தவறு என்ற வக்காலத்தை வாங்கித் தீர்ப்புக் கூறுகிறார் என்றால், இந்த நாட்டில் பார்ப்பனீயம் எப்படியெல்லாம் தலைக்கு மேல் கொம்பு முளைத்துப் புரையோடிக் கிடக்கிறது என்று எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

திருச்சி சீரங்கத்தில் கிருஷ்ண அய்யர் பாரம்பரிய பிராமணாள் கபே என்ற பெயரில் ஓட்டல் ஒன்று முளைத்தது. இதனை எதிர்த்துத் திராவிடர் கழகம் போராட்டம் - பொதுக் கூட்டங்களை நடத்தியது.

அதன் விளைவாக அந்த ஓட்டல் பார்ப்பனர் கடையை இழுத்து மூடி இரவோடு இரவாக ஓடிவிட்டார் (4.11.2012).

ஆனால் அது தொடர்பான வழக்கு ஒன்றில் மதுரைக் கிளை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பு வருமாறு:

கடைகளுக்கு தாங்கள் விரும்பும் பெயர்களை சூட்டுவதற்கு உரிமையாளர்க ளுக்கு அரசியலமைப்புச் சட்டம் 19(1)(ஏ) மற்றும் 19(1)(ஜி) பிரிவு உரிமை வழங்கியுள் ளது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள இந்த உரிமையில் தலையிட முடியாது.

இந்த உரிமையின் அடிப்படையில் கடையின் உரிமையாளர் தனது ஓட்டலுக்கு ஸ்ரீகிருஷ்ண அய்யர் பாரம்பரிய பிராமணாள் கபே என பெயர் சூட்டியுள்ளார். சம்பந்தப்பட்ட கடைகளில் தீண்டாமை பின்பற்றப்பட்டால், குறிப்பிட்ட ஜாதியினர் மட்டும் அனுமதிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடலாம். ஆனால் இந்த ஓட்டலில் அவ்வாறு இல்லை.

மதுரையில் கோனார் மெஸ், முதலியார் இட்லி கடை என குறிப்பிட்ட சமூகங்கள், ஜாதிகளை குறிப்பிடும் வகையில் பல ஓட்டல்கள் உள்ளன. சாலையோரங்களில் பல்வேறு இடங்களில் அய்யங்கார் பேக்கரி என்ற பெயரில் பேக்கரி, காபி கடைகள் இருக்கின்றன. புதுச்சேரியில் ரெட்டியார் மெஸ் உள்ளது. இந்த மெஸ்சில் கல்லூரியில் பயிலும் காலங்களில் சாப்பிட்டுள்ளேன். இதனால் ஜாதி பெயர்களில் ஓட்டல்கள் இருப்பது தவறில்லை.

மனுதாரர்கள் பெரியாரின் கொள்கை மீதான பற்றுதலால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் நடைபெற்று அய்ந்தரை ஆண்டுகளுக்கு மேலாகிறது. மனுதாரர்கள் வன்முறையில் இறங்கவில்லை. இதனால் இந்த வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டியதில்லை. வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

இந்தத் தீர்ப்புக் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சட்டரீதியாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். (விடுதலை, 15.6.2018)

சட்டரீதியாக தவறான தீர்ப்பு என்றும், வர்ணம் வேறு, ஜாதி வேறு என்றும், இரண்டுக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் தந்தை பெரியார் சொன்ன எடுத்துக்காட்டைத்தான் எடுத்துக் காட்ட வேண்டும்.

நான் 20 வருஷமாகச் சொல்கிறேன். பார்ப்பானை பிராமணாள் என்று சொல்லாதே! அவனைப் பிராமணன் என்று கூறினால், நீ யார்? ஒருத்தி உன் தெருவில், தன் வீட்டில் இது பதிவிரதை வீடு என்று போர்டு மாட்டிக் கொண்டால், மற்றவர் வீடு என்ன என்று அர்த்தம்? என்று கத்திக் கத்தி என் தொண்டையில் இரத்தம் வரச் சொல்கிறேன். உன் கடையில் பிராமணாள் என்று போர்டு போட்டுக் கொண்டால், சூத்திரப் பயலே வாடா! என்றுதானே கூப்பிடுகிறாய் என்று விழுப்புரம் பொதுக் கூட்டத்தில் 27.8.1958இல் பேசினார் (விடுதலை, 30.8.1958).

இதற்குப் பதில் என்ன சொல்லப் போகிறது உயர்நீதிமன்றம்?

சூத்திரன் என்றால் ராவ் பகதூர் பட்டமா? பத்மபூஷன் பட்டமா? அல்லது பாரத ரத்தினா பட்டமா?

மனுதர்மம் என்ன சொல்லுகிறது? யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன், பக்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், குல வழியாக தொன்றுதொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன் என்று சூத்திரர்கள் ஏழு வகைப்படுவர் (மனுதர்மம் அத்தியாயம் 8, சுலோகம் 415) என்கிறதே மனுதர்மம் - மறுக்க முடியுமா? மாண்பமை நீதிபதி அவர்கள் இதனை ஏற்கிறாரா?

பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர் களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் (Born out of Womb of Sin) என்று கீதை கூறுகிறதே, (அத்தியாயம் 9, சுலோகம் 32) இதனையும் ஏற்கிறதா நீதிமன்றம்.

இந்த இழிவைத் தாங்கிக்கொண்டு எத்தனையோ நூற்றாண்டுகளாக இருந் தோம். ஈரோட்டில் தோன்றிய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்தான் எரிதழலாய் எழுந்தார் - எரிமலையாய் வெடித்தார். இந்த இழிவை தாங்கியபடி இன்னும் எத்தனைத் தலைமுறைக்குப் பொதி சுமக்கும் கழுதையாக இருக்க வேண்டும் என்று ஆவேசக் குரல் கொடுத்தார்.

திருச்சியில் திராவிடர் கழக மத்திய குழுக் கூட்டத்தைக் கூட்டி (18.4.1957) தீர்மானம் செய்தார். ஆளுநருக்கும், ஆட்சியாளருக்கும் கடிதம் ஒன்றையும் எழுதினார்.

எதையும் எடுத்தேன் - கவிழ்த்தேன் என்ற போக்கில் செய்யக்கூடிய, செல்லக் கூடிய தலைவர் அல்லவே அவர்.

விடுதலை  கேட்ட கேள்விகள்!

விடுதலை (21.12.1957) சில அறிவார்ந்த வினாக்களை எழுப்பியிருந்தது.

தேசியம் பேசும் தமிழா! இந்த நாட்டில் நீ இவற்றை எங்கேயாவது காண முடியுமா? பிராமணாள் முடிதிருத்தகம், பிராமணாள் லாண்டரி, கொத்து வேலை கோதாத்ரி அய்யங்கார், மரமேறி மகாதேவ சர்மா, மாடு மேய்க்கும் மாதவராவ், பிணம் சுடும் பிச்சுமணி தீட்சதர், ஏர் உழும் ஏகாம்பர அய்யர், நடவு நடும் நாகலட்சுமி, சுப்புணி அய்யர், சாணம் எடுக்கும் விசாலாட்சி, சீனு சாஸ்திரி - இவர்களை எங்கேயாவது கண்டதுண்டா? என்று 58 ஆண்டுகளுக்கு முன் எழுப்பிய வினாக்களுக்கு இன்றுவரை கூடப் பதில் இல்லையே, ஏன்?

ஜாதிப் பிரிவு என்பது நம் நாட்டில் அனுபவப்பூர்வமாக பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்ற இரண்டு பிரிவுகளுக்குள் அடங்கி விடுவதாக உதாரணத்துடன் குறிப்பிடப்பட்டிருந்தது. சிலர் தங்களை க்ஷத்திரியர் என்றும், சிலர் வைசியர் என்றும் அழைத்துக் கொண்டாலும், பிராமணாள் இவர்களையும் சூத்திரன் என்றுதான் கருதுகிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ பிராமணாள் என்ற உணவுக் கடைகளை நடத்திட அரசு அனுமதி தந்து விடுகிறது.

பார்ப்பனர் வீடு என்று அவர்கள் சொந்த வீட்டில் போட்டுக் கொள்ளட்டும். அரசு அனுமதியோடு மற்றவர்களை இழிவுபடுத்தும் அடையாளமாகவும், பணம் சம்பாதிக்கவும் ஏன் பிராமணாள் என்ற வார்த்தை பயன்பட வேண்டும்? 25 ஆண்டுகளுக்குக் முன்பே நான் சில நகர சபைத் தலைவர்களையும் சேர்த்துக் கொண்டு நகர சபை லைசென்ஸ் தர மறுத்தேன் (1917இல் நகர மன்றத் தலைவராக தந்தை பெரியார் இருந்தபோது ஈரோட்டில் கொங்கப் பறத் தெரு என்று இருந்ததை வள்ளுவர் தெரு என்று மாற்றினார் என்பது வரலாறு).

தண்டனை

முரளி பிராமணாள் கபே ஓட்டல் முன் மறியல் நடைபெற்றபோது (ஒவ்வொரு நாளும் மாலையில் தான்) தொடக்கத்தில் சிட்டி போலீஸ் ஆக்ட் 41ஆவது பிரிவின்படி ரூ.50 அபராதம் என்றும், கட்டத் தவறினால் இரண்டு வாரம் சிறை தண்டனையும் விதிக்கப் பட்டது. சில நாள்கள் கழித்து 71(11) என்ற இன்னொரு விதியைச் சுட்டிக் காட்டி, மூன்று வாரம் சிறைத் தண் டனை விதிக்கப்பட்டது அபராதம் கட்டுவார்களா அய்யா பெரியாரின் தொண்டர்கள்? சிரித்த முகத்துடன் சிறை நோக்கிச் சென்றனர் (1010 பேர்கள்).

அரசு நகர சபை இதில் தலையிடக் கூடாது என்றது. பிறகு இரயில்வேயுடன் போராடி, அங்கேயிருந்த பிராமணாள் ஓட்டல், பிராமணாள் சாப்பிடும் இடம் ஆகியவற்றை எடுக்கச் செய்தேன். எனவே அருள்கூர்ந்து 5.5.1957க்குள் அமலுக்கு வருமாறு ஓர் அவசர உத்தரவு பிறப்பித்துப் பிராமணாளை அகற்றி விட்டால், நேரடி நடவடிக்கையாக ஒரு கிளர்ச்சி செய்ய வேண்டிய அவசியமிருக்காது என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஆளுநருக்கும், அரசுக்கும் முறைப்படி கடிதம் எழுதினார் தந்தை பெரியார். (விடுதலை, 27.4.1957).

முறையான பதில் அரசிடமிருந்தோ, ஆளுநரிடமிருந்தோ வராத காரணத்தால் நாடெங்கும் பிராமணாள் கிளப் என்பதில் உள்ள பிராமணாள் அழிப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இரயில்வேயில் பேத ஒழிப்பு!

1924 இல் கோவை சி.எஸ்.ரத்தினசபாபதி முதலியார் அவர்கள் இரயில்வே உணவு விடுதிகளில் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் பேதம்  இருக்கக்கூடாது என்று இரயில்வே ஆலோசனைக் கமிட்டியிலே தீர்மானம் கொண்டு வந்தபோது காளிதாச அய்யர் என்ற ஓர் பார்ப்பனர் பிடிவாதம் செய்து கெடுத்தார். ஆனால், 16 ஆண்டுகளுக்குப் பிறகு பெரியார் அவர்கள் அந்த முயற்சியிலேயே ஈடுபட்டு வெற்றியும் கண்டார். 27.1.1941 தேதியிட்ட விடுதலை'யில் இந்திய கவர்மெண்ட் கவனிப்பார்களா...? என்ற தலையங்கத்திலே பிராமணாள் - சூத்திரர் பேத நிலையை கடுமையாக விமர்சித்து எழுதியிருந்தார். தந்தை பெரியாரின் தலையங்கத்திலே உள்ள நியாய உணர்வைக் கண்ட அரசினர் 8.2.1941 அன்று முதல் இரயில்வே உணவு விடுதியில் உள்ள பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் பேத நிலையை ஒழிக்க உத்தரவிட்டிருந்தனர். ஆனால், இது இரயில்வேயில் உள்ள எல்லா உணவு விடுதிகளுக்கும் அல்லாமல் எம்.எஸ்.எம். உணவு விடுதி என்றளவிலே இருந்தது. ஆனால், பெரியாரின் தொடர்ந்த போராட்டத்தினால் 20.3.1941 முதல் எல்லா இரயில்வே நிலையங்களிலும் உள்ள உணவு விடுதிகளுக்கும் இது அமல்படுத்தப்பட்டது. 30.3.1941 ஆம் நாளை இரயில்வே உணவு விடுதிகளில் பேதம் ஒழிந்த நாளாகக் கொண்டாடுமாறு விடுதலை' பத்திரிகையின் வாயிலாக வேண்டுகோள் விடுத்தார் தந்தை பெரியார்.

தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் சேலத்தில் கலந்துகொண்டனர்.

பெரும்பாலும் பிராமணாள் அழிக்கப்பட்ட நிலையில் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் முரளி பிராமணாள் கபே என்ற உணவு விடுதிக்காரர்கள் மட்டும் அழிக்க மறுத்த நிலையில் 5.5.1957 முதல் நாள்தோறும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. 2.12.1957 அன்று போராட்டம் நிறைவுற்றது.

முரளி பிராமணாள் கபே உரிமையாளர் முதல் நாள் இரவு ஒரு கூடை மாம்பழத்துடன் சென்னை மீரான் சாகிபு தெருவில் இருந்த தந்தை பெரியார் அவர்களிடம் சரணடைந்தார். தன் தவறுக்கு மன்னிப்புக் கோரினார். தந்தை பெரியார் பெருந்தன்மையுடன் அந்த செய்தியை விடுதலையில் வெளியிட வேண்டாம் என்று கூறிவிட்டார்.

ஒருவர் தன்னந்தனியாக வந்து சந்தித்து, மன்னிப்புக் கோரிய நிலையில், அதனை வெளியில் பரப்புவது சம்பந்தப்பட்டவரை அவமதிப்பதாகும் என்பது தந்தை  பெரியாருக்கே உரிய பெருந்தன்மையான கருத்தாகும்.

முரளி பிராமணாள் கபே என்பது முரளி அய்டியல் ஓட்டல் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

முரளி பிராமணாள் கபே ஓட்டலின் மாடியிலிருந்து போராட்டம் நடத்திய திராவிடர் கழகத் தோழர்கள் மீது வெந்நீரை ஊற்றியபோதுகூட தந்தை பெரியார் அவர்கள் கட்டளைப்படி அமைதி காத்த அந்தப் பெருந்தன்மை எல்லாம் பார்ப்பனர்களுக்கு எங்கே புரியப்போகிறது?

1978ஆம் ஆண்டு வாக்கில் மீண்டும் பிராமணாள் ஓட்டல் தலைதூக்கியபோது திராவிடர் கழகப் பொதுச் செயலாளராக இருந்த ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் போராட்ட அறிவிப்பினை வெளியிட்டார். அந்தக் காலகட்டத்தில் ஓட்டல் சங்கத் தலைவராக இருந்த திரு.எம்.பி.புருசோத்தமன் அவர்கள் கழகப் பொதுச் செயலாளருக்குக் கடிதம் எழுதினார். பிராமணாள் பெயரை நீக்கப்பட வேண்டும் என்று எல்லா உணவு விடுதி களுக்கும் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது என்று எழுதினார். அதன்படி நீக்கவும் பட்டது.

பிராமணாள் ஓட்டல் எதிர்ப்புக்கு இவ்வளவுப் பெரிய நீண்ட வரலாறு உண்டு என்பதை நீதிபதி அறிந்திருப்பாரா என்று தெரியவில்லை.

ஜாதிப் பெயர் நீக்கம்

திருச்சி கல்குழியைச் சேர்ந்த தம்பபாலா என்பவர் தமிழகத்தில் சாலைகளுக்கு சூட்டப்பட்ட ஜாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் ஜாதியைச் சுட்டிக்காட்டும் தெருப் பெயர்கள் நீக்கப்படும் என்று 1979 பெரியார் நூற்றாண்டு விழாவின்போது அப்போது இருந்த எம்.ஜி.ஆர். அரசு அறிவித்தது, இருப்பினும் இன்றளவும் ஜாதிப் பெயர்களுடனேயே சாலைகள் உள்ளன. அதை நீக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.

சென்னை நகர ஓட்டல்களில் பஞ்சமர் களும், நாய்களும், பெருநோய்க்காரர்களும் நுழையக் கூடாது (குடிஅரசு, 3.5.1936) என்று கூடத்தான் இருந்தது. இவை யெல்லாம் திராவிட இயக்கத்தால் ஒழிக்கப் பட்டது.

முடிந்துபோன ஒன்றின் முடிச்சினை அவிழ்த்து முலாம் பூசி திறப்பு விழா நடத்திட உயர்நீதிமன்ற நீதிபதியே காரணமாக இருக்க வேண்டாம் என்பது தான் வெகு மக்களின் எதிர்ப்பார்ப்பு!

உயர்நீதிமன்றமே உத்தரவிட்டு விட்டது; எனவே பிராமணாள் என்ற பெயரை மீண்டும் புதுப்பிப்போம் என்றால், அதன் எதிர்வினையை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner