துக்ளக்கைத் துளைக்கும் கேள்விகள்????

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிரயாகை- காசியிலிருந்து கங்கை ராமேச்வரத்திற்கு எடுத்துச் சென்று அபிஷேகம் செய்தால்தான், யாத்திரை பூரணமாகும் என்பது தங்களுடைய நம்பிக்கை என்று அவர்கள் கூறினார்கள். ஆச்சரியமாக இல்லை? இங்கிருப் பவர்கள் அங்கு செல்ல வேண்டும். அங்கிருப்பவர்கள் இங்கு வர வேண்டும் என்று நம் முன்னோர் அமைத்த யாத்திரைகளின் முக்கிய நோக்கமே, தேசிய ஒருமைப்பாடு என்பது வெளிப்படையல்லவா?

(துக்ளக் - 8.8.2018- பக்கம்-6)

நடந்து செல்லும் காலத்தை விட நவீன வசதிகள் பெருகிய இந்தக் காலக்கட்டத்தில் அதிக பிரயாணம் நடைபெற்று வருகிறதே- இப்போது. தேசிய ஒருமைப்பாடு வளர்ந்திருக்கிறதா? தேய்ந்திருக்கிறதா?

இவர்கள் சொல்லும் புண்ணிய சேத்திராடனங்கள் புண்ணிய நதிகளின் யோக்கியதை என்ன தெரியுமா? கங்கையை எடுத்துக் கொண்டால் காசியில் மட்டும் 20 மில்லியன் காலன் சாக்கடை கலக்கிறது. நாளொன்றுக்கு 400 பிணங்கள் கங்கைக் கரையில் எரிக்கப்பட்டு கங்கையில் கரைக்கப்படுகின்றன. கங்கை நீரில் புற்று நோய்க்கான புகலிடம் என்றெல்லாம் உறுதி செய்யப் பட்டுள்ளது என்பதையும் கணக்கில் கொண்டு திருவாளர் குருமூர்த்தி அய்யர் துக்ளக்கில் எழுதும் க்ஷேத்திரங்களின் ஆபாசத்தை உணரலாம்.

நாம் அனைவரும் ஒன்றுதானா?

நாம் ஒரு நாடாக இருந்ததால், நமக்குள் வித்தி யாசங்கள் இல்லை என்று நான் கூறவில்லை. ஆனால், நம் முன்னோர் நடந்தோ, மாட்டுவண்டியிலோ நாடு முழுவதும் வலம் வந்தார்கள். ஒருவர் மொழியை மற்றவர்கள் கற்றுப் பேசி வந்தார்கள். அவர்கள் தனித் திருக்கவில்லை. தெற்கில் ராமசேதுவையும், கிழக்கில் பூரி- ஜெகந்நாத்தையும், வடக்கில் ஹரித்துவாரையும் புண்ணிய சேத்திரங்களாக அமைத்த தீர்க்கதரிசியான நம் முன்னோரின் குறிக்கோள் என்னவாக இருந்திருக் கும்? அவர்கள் முட்டாள்களல்ல என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?

அவர்களுக்கு, கடவுளை நாம் நம் வீடுகளிலிருந்து வழிபடலாம் என்பது தெரியும். யாருடைய இதயத்தில் அறம் இருக்கிறதோ, அவர்கள் வீடுகளில் கங்கை இருக்கிறாள் என்று அவர்கள் நமக்குக் கூறியிருக் கிறார்கள். நம் நாட்டைப் பிரிக்க முடியாத ஒரு நாடாக இயற்கை படைத்திருப்பதை அவர்கள் கண்டார்கள். அதனால் அவர்கள் நம் நாட்டை, ஒரே நாடு என்று அடித்துக் கூறி வந்தார்கள். அப்படிக் கூறிய அவர்கள், நாடு முழுவதும் பல இடங்களில் புண்ணிய ஸ்தலங்களை அமைத்து, உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாதவாறு நாம் ஒரு நாடு என்கிற சிந்தனையை நம் மக்களின் மனதில் ஆழமாக வளர்த்தார்கள். ஆகவே, இந்தியர் களாகிய நாம் அனைவரும் ஒன்றே. இரண்டு வெள்ளைக் காரர்கள் கூட நம்மைப் போல் ஒன்றல்ல'' என்று கூறியுள்ளார் மகாத்மா காந்தி.

(துக்ளக் - 8.8.2018 -பக்கம் 7)

புண்ணியஸ்தலங்களை இணைத்து - இந்தியர்கள் நாம் அனைவரும் ஒன்றே என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று துக்ளக்கில் திருவாளர் குருமூர்த்தி அய்யர் சும்மா வரைந்து தள்ளியுள்ளார்.

குருமூர்த்தியாரே, குருமூர்த்தியாரே - முதலில் உமது தோளில் தொங்கும் பூணூலை அறுத்து எரியுங்கள். நாங்கள் துவி ஜாதியினர் - இரு பிறப்பாளர் என்ற ஜாதி இறுமாப்பிலிருந்து வெளியேறிவிட்டு அதற்குப் பிறகு நாம் அனைவரும் ஒன்றே என்று பேச முயலுங்கள்.

கேள்வி: பல்வேறு மதங்கள், நம்பிக்கைகள் உள்ள வர்கள் எனது கட்சியில் உள்ளனர். நான் அரசியலுக்கு வந்திருப்பது பகுத்தறிவு கொள்கையை பரப்பி மூடநம்பிக்கையை ஒழிக்க அல்ல. ஏழ்மை ஊழலை ஒழிக்கவே என்ற கமலின் விளக்கம் பற்றி?

பதில்: பகுத்தறிவு ஜாம்பவானான தி.மு.க. விற்கே பகுத்தறிவு கை கொடுக்க வில்லை. எனவே நமக்குப் பகுத்தறிவு போனியாகாது. அதை நம்பி பிரயோஜன மில்லை என்பதால்தான் ஏழ்மையையும் ஊழலையும் பிடித்துக் கொள்ள முயலு கிறார் கமல்.

(துக்ளக் 8.8.2018, பக்கம் 10)

அப்படியா சேதி? 1971ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சேலத்தில் திராவிடர் கழகம் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில், இராமன் செருப்பால் அடிக்கப்பட்டதாகக் கூறி பிரச்சாரம் செய்யப்பட்டதே - துக்ளக் சிறப்பிதழையே வெளியிட்டதே.

இராமனை செருப்பாலடித்த தி.மு.க வுக்கா உங்கள் ஓட்டு என்று பெரிய பெரிய சுவரொட்டிகளை அடித்து ஓகோ என்று பிரச்சாரம் செய்யப்பட்டதே. தேர்தல் முடிவு என்ன?

இராமனை செருப்பால் அடிக்காத போது 1967ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுக்குக் கிடைத்த இடங்கள் 138, இராமனை செருப்பால் அடித்தபிறகு தி.மு.க.வுக்குக் கிடைத்த இடங்கள் 184.

இந்தநாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்து விட்டது என்று கனம் ராஜாஜியே அறிக்கை வெளியிட்டாரே! (கல்கி, 4.4.1971), உண்மை இவ்வாறெல்லாம் இருக்க பகுத்தறிவு தி.மு.க.வுக்கே கை கொடுக்க வில்லை என்று திருவாளர் குருமூர்த்தி அய்யர் எழுதியுள்ளது அப்பட்டமான அண்டப்புளுகு.

இங்கு ஆஸ்திகம் என்பது சிறுபான்மை மக்களின் நலம்; இங்கு நாஸ்திகம் என்பது பெரும்பான்மை மக்களின் நலம் -தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

கேள்வி: கொள்கைகளை முன்னி லைப்படுத்தாமல் பிழைப்பு சார்ந்த கட்சிகளாக மாறிய திராவிடக் கட்சிகளைப் பற்றி தங்கள் கருத்து?

பதில்: அடைந்தால் திராவிடநாடு, இல்லையேல் சுடுகாடு என்று கூறி கட்சி துவங்கிய தி.மு.க. முடிவில் திராவிட நாட்டையே சுடுகாட்டுக்கு அனுப்பிய பிறகு கொள்கை ஏது. எல்லாம் பிழைப்பு தான் - அதுவும் சில குடும்பங்களின் பிழைப்புதான். (துக்ளக் - 8.8.2018, பக்கம் 10)

திமுக திராவிட நாடு பிரிவினையைக் கை விட்ட நிலையில் வரவேற்காமல் ஏன் குறைகூறுகிறார். கேட்டாலும் தப்பு, கேட்கா விட்டாலும் தப்பா? கடலைத் தாண்டி போகக்கூடாது, அது இந்துமதத்தின் படி தோஷமானது என்று கூறும் இந்தக் கூட்டம் தங்கள் பார்ப்பனத் தலைவரை ஜெகத்குரு என்று சொல்லு கிறார்களே - இவர்கள்தான் மற்றவர்களை விமர்சனம் செய்கிறார்கள். திராவிடநாடு பிரிவினையைக் கைவிட் டாலும் அதற்கான காரணம் இருக்கவே செய்கிறது என்றார்  அண்ணா. அந்தக் காரணங்களின் அடிப்படையில், எதிர்ப்பு நடவடிக்கைகளில் திமுக ஈடுபட்டுதானே வருகிறது.

கேள்வி: நம்பிக்கைக்கும் மூட நம்பிக் கைக்கும் என்ன வித்தியாசம்?

பதில்: அரசியல் தலைவர்களை போற்றுவது, புகழ்வது, சிலை வைப்பது, வணங்குவது - நம்பிக்கை; கடவுளைப் போற்றுவது, புகழ்வது, சிலை வைப்பது, வணங்குவது - மூடநம்பிக்கை (துக்ளக், 8.8.2018 - பக்கம் 13)

நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களை நினைவுகூர்ந்து சிலை வைப்பது, அவர்கள் கூறிய கருத்துகளை பீடத்தில் பொறிப்பது எப்படி  குற்றச்செயலாகும்? அந்த சிலை களிடம் யாரும் வரம் கேட்பதில்லையே. கடவுள் பொம்மை சிலை விவகாரம் அப்படியா? பொம்மைக்கு பொருளை வைத்து (கொடுக்கல் -வாங்கல்) தேவையானவற்றை கொடுக்குமாறு தோப்புக்கரணம் போடுவது பைத்தியக்காரத்தனமல்லவா! கேட்பதை கொடுக்குமா  இந்தச் சாமிசிலைகள்? அதுவும் கடவுளுக்கு உருவமில்லை. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்  என்று கூறிவிட்டு, கடவுள்களுக்கு உருவச்சிலைகள் வைப்பது, பொண்டாட்டி, வைப்பாட்டிகளை உருவாக்குவது கடைந் தெடுத்த மூடத்தனமும் பித்தலாட்ட மும்தானே.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner