அவர்தான் தளபதி ஸ்டாலின்!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- கலி.பூங்குன்றன் -

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் களுள் ஒருவராக இருந்த மானமிகு கலைஞர் அவர்கள் மறைந்தார் (7.8.2018).

அண்ணா அவர்கள் மறைவிற்குப் பிறகு திமுக தலைவர் - ஆட்சித் தலைவர் என்ற தளத்தில் தகத்தகாய சூரியனாகப் பிரகாசித்தார் அவர்! தேர்தலில் தோல்வி கண்டறியாத 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், 5 முறை தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகவும் ஒளிவிட்டார் என்பது இவருக்கே உரித்தான வைர மகுடம்.

திமுக அரசியல் கட்சி என்றாலும் சமுதாயக் கொள்கை உடையது. இதில் திராவிடர் கழகத்திற்கு அடுத்ததாக திமுக தான் என்று எப்பொழுதுமே மார்தட்டி சொல்லி வந்திருக்கிறார்.

மானமிகு சுயமரியாதைக்காரன் என்று மார்தட்டி சொல்லி வந்தவர் - மானமிகு இல்லையேல், மாண்புமிகு கிடையாது என்பதையும் பதிவு செய்தவர்.

அவருடைய எண்ணமெல்லாம் திமுகவினரும் பகுத்தறிவுவாதியாக இருக்க வேண்டும் என்பதே! டில்லியில் பெரியார் மய்யம் திறப்பு விழாவில் பங்கேற்று, திறந்து வைத்து உரையாற்றிய கலைஞர் அவர்கள் திமுகவினருக்குக் கட்டளையிடுகிறேன் என்று கூறினார்  கோயிலுக்குப் போகாதீர், வாஸ்து பார்க்காதீர் என்று. இடைஇடையே தான் யார் என்பது அடையாளப் படுத்திக் கொண்டே இருப்பார்.

இராமன் எந்த என்ஜினியரிங் கல்லூரியில் படித்தவன் என்று கேட்பார்.

இந்து என்றால் திருடன் என்று கமலபதி திரிபாதி நூலில் குறிப்பிட்டுள்ளார் என்பார்.

திமுக தோழர்களே ஞானசூரியன்  படியுங்கள் என்பார்.

அவர்கள் பார்வையில் சுயமரியாதையும் - சமத்துவமும்

சில அடிகள் பின்னுக்கு வைத்தாலும், அது முன்னேற்றத்தின் அடையாளம் என்ற ஸ்டாலின் தலைமைப் பேச்சு மாற்றங்கள் நம்மிடமிருந்து தொடங்க வேண்டும் என்று, அவர் கூறினாலும் சுயமரியாதை, சமத்துவக் கொள்கைகளை பின்பற்றுவோம் என்கிறார். இது, மதங்களைத் தாண்டி, மாநிலங்களைத் தாண்டி வாழும் தமிழ் இளைஞர்களை எந்தளவு கவரும் என்பதை வரும்காலம்தான் முடிவு செய்யும்.

- தினமலர் ஏட்டின் தலையங்கம் (31.8.2018) இவ்வாறு கூறுகிறது.

சுயமரியாதை என்பதும் சமத்துவம் என்பதும் ஓர் இனத்தைச் சார்ந்தது மட்டுமல்ல. ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் பூத்துக் கமழ வேண்டியவை.

தினமலர்களுக்கு இவை ஒவ்வாமை என்றால் இதன் பொருள் என்ன!

பிறப்பிலேயே வருணத்தைக் கற்பிக்கும் பார்ப்பனர்களுக்கு இவை இரண்டும் எதிர் நிலையாகத்தான் தோன்றும்.

இந்த 2018லும்கூட சுயமரியாதை, சமத்துவம் என்பது விரோதமானதாகப் படுகிறது என்று யார் சொன்னாலும் அவர்களை அடையாளம் காண்பதும் எளிதாகி விட்டது.

பெரியாரிஸ்டுகள் பிரச்சாரம் செய்து தெரிவிக்க வேண்டிய ஒன்றினை, அதற்கு வேலை வைக்காமல், தனக்குத்தானே முகமூடியைக் கிழித்துக் கொண்டு உண்மை உருவத்தை வெளிப்படத்தியதற்கு கொஞ்சம் நன்றி கூடக் சொல்லலாம்.

தி.மு.க.வில் கலைஞரோடு இந்த சுயமரியாதையும், சமத்துவமும் விடை பெற்றுவிட வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு அக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள தளபதி மு.க. ஸ்டாலின் அந்த சுயமரியாதையையும் சமத்துவத்தையும் அழுத்தமாகப் பிரகடனப்படுத்தியிருப்பது அவர்களின் அஸ்திவாரத்தில் அணுகுண்டு போட்டது போல் ஆகிவிட்டது. அதன் வெளிப்பாடே தினமலரின் தலையங்கம்.

தங்களுக்கு இலக்கியவாதி என்பதில் பெருமையா? அரசியல்வாதி என்பதில் பெருமையா? என்று கேட்டால் தந்தை பெரியாரின் தொண்டன், அண்ணாவின் தம்பி என்பதில் பெருமை என்பார்.

இவையெல்லாம் தனக்காக மட்டும் அவர் சொல்வதில்லை. இந்தச் சேதி திமுக தோழர்களை போய்ச் சேர வேண்டும் என்பது அவர்தம் எதிர்பார்ப்பு.

கலைஞர் மறைந்த நிலையில் அவர் இருந்த கட்சித்தலைவர் இடத்திற்கு ஒரு மனதாக தளபதி மு.க.ஸ்டாலின் திமுக பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

அண்ணா மறைவின் போது கூட கலைஞர், நாவலர் என்ற ஒரு போட்டியிருந்தது. கலைஞர் மறைந்த நிலையிலோ அந்தப் பிரச்சினைக்கே இடமில்லை - இது ஒரு படி மேலான போற்றத்தக்க மேட்டிமையாகும்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அழகாகவே சொன்னார். நான்காம் அத்தியாயம் உங்கள் தலைமையில் தொடங்குகிறது - தாய்க்  கழகத்தின் துணையோடு தங்கள் பயணம் வெற்றிப் பயணமாக ஆகட்டும் என்று உச்சி மோந்து தன் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களைப் பொறுத்தவரை திடீரென்று ஒரு நாள் காலையில் இந்தப் பொறுப்பிற்கு வந்து விடவில்லை.

நேர்மையான பரிணாம வளர்ச்சி  இதில் ஆழமாக பதிந்துள்ளதை மறுக்க முடியாது.

சென்னை கோபாலபுரம் கிளைக்கழக இளைஞரணியில் கால் பதித்து,  ஆர்வமிக்க அயராப் பணியால் இளைஞரணி மாநில செயலாளராக, திமுக பொருளாளராக, செயல் தலைவராக, இப்பொழுது அதன் தலைவராக தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார். சலுகை யால் பெறவில்லை - சாதனையால் உயர்ந்து ஒளி வீசுகிறார்.

நிர்வாகப் பொறுப்பு என்று எடுத்துக் கொண்டாலும் சென்னை மாநகர மேயராக, சட்டப்பேரவை உறுப்பினராக, அமைச்சராக, துணை முதல் அமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக- என்று இயற்கையின் பரிணாம போக்கு இவரிடம் காணமுடிகிறது.

திராவிட இயக்க சித்தாந்தம் இவரிடம் உண்டா? சுயமரியாதை இயக்கத்தின் பாரம்பரியத் தொடர்ச்சி என்று இவரை எடைபோட முடியுமா? சமூகநீதியில் இவரின் சார்பு எத்தகையது என்பது போன்ற கேள்வி களுக்கு எள் மூக்கு முனையளவுக்கும் சந்தேகத்துக்கு இடமின்றி, சாறு பிழிந்து கொடுத்தாற்போல சந்தேகப் பேர்வழிகளுக்கு சவுக்கடி கொடுப்பதுபோல பளார்! பளார்! என்று அறைந்தார் போல் தன் மீதான தலைமைப் பொறுப்பின்  பயணம் எந்த பாட்டையில் அமையும் என்று பிரகடனப் படுத்தி விட்டாரே!

பெரியார், அண்ணா, கலைஞர் வழி தொடர்வோம்! சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதி, சமத்துவம் - திராவிட இயக்கச் சித்தாந்தம் இவைதான் நான் வரித்துக் கொண்ட கொள்கையும், கோட்பாடும்  என்ற வரிப்புலிப் பாட்டையில் வீரமாக வெற்றி முரசு கொட்டி விட்டாரே!

இதைத்தான்...ஆம் இதைத்தான்,  நாடும் - இனமும் எதிர்பார்த்து கொண்டிருந்தது. (வாழ்க திமுக தலைவர் தளபதி மானமிகு மு.க.ஸ்டாலின்!)

இப்பொழுது இனஎதிரி ஏடுகள் என்ன சொல்ல ஆரம்பித்துள்ளன தெரியுமா? துக்ளக்கில் குருமூர்த்தி அய்யர்களின் பூணூல் எப்படி எழுதுகிறது தெரியுமா?

பெரியார், திராவிடம், பகுத்தறிவு, நாத்திகம் என்பதையெல்லாம் கடந்து ஆன்மிகத்தை நோக்கி வர வேண்டும் என்று எழுதிப் பார்த்தனர்.

பழைய பாணியிலிருந்து விடுபட வேண்டுமாம். அதெல்லாம் இனி எடுபடாதாம். புதிய பாதையில் திமுக பயணிக்க வேண்டு மாம். இதோபதேசம் செய்கிறார்.

சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி, சமத்துவம் பாதையில் திமுக பயணிக்கும் என்று திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் சொன்னால்- அது பழைய பாணியாம். இப்படிச் சொல்கிறவர்கள் யார் என்றால் இராமாயணம், மகாபாரதம்,கீதை, மனுதர்மம், இந்து ராஜ்ஜியம், இராம இராஜ்ஜியம் என்று இன்றளவும் எழுதித் தள்ளிக் கொண்டு இருப்பவர்கள், கீதையை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று சொல்பவர்கள், மனுதர்மத்தை இந்திய அரசமைப்புச் சட்டமாக்க வேண்டும் என்று அரட்டை அடிப்பவர்கள்தான் இப்படி எழுதுகிறார்கள்.

அவாளின் கண்ணோட்டத்தில் இவை யெல்லாம் புரட்சியின் பூபாளங்கள், பகுத் தறிவும், சுயமரியாதையும், சமூகநீதியும், சமத்துவமும் பழைய வாதங்கள்.

இப்படி எல்லாம் எழுதவும், சொல்லவும் பார்ப்பனர்களால் தான் முடியும் - ஆசை வெட்கமறியாதல்லவா!

திமுக தலைவரின் தலைமைப் பிரகடனம் இன எதிரிகளின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது. இனி அதிகம் இவரைப் பற்றி எழுதுவார்கள், கிண்டல் செய்வார்கள். கெக்கலி கொட்டுவார்கள்!

கறுப்புச்சட்டையும், கறுப்புத் துண்டும் மு.க.ஸ்டாலின் பக்கம் இருக்கும் வரை ஸ்டாலின் ஆட்சிக்கு வரமுடியாது என்று அங்கலாயிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அவர்களுக்குத் தெரியுமா? திமுக கொடியிலும், கறுப்பு உண்டு என்பதை. திராவிட.... என்று பெயர் வைத்துள்ள கட்சிகள் எல்லாமே கறுப்பையும், சிகப்பையும் அடையாளமாகக் கொண்ட கொடியைத்தான் கொண் டுள்ளன.

கட்சிக் கொடியிலிருக்கும் கறுப்பை நீக்குங்கள் என்று சொன்னாலும் சொல்லு வார்கள். சேலத்தில் சாத்துப்படி நடந்ததற்குப் பிறகும்கூட இன்னும் புத்தி கொள் முதல் பெறவில்லையே இதுகள்!

எதற்கெடுத்தாலும் அய்யோ வீரமணி வீரமணி என்று ஜன்னி கொண்டவர்கள் போல பிலாக்கணம் பாடுகிறார்கள். சொப்பனத்திலும் கூட அவர்தான் வருகிறார் போலும்!

இந்த வார துக்ளக் கில் கூட (5.9.2018 - பக்கம் 10) ஒரு கேள்வி - பதில்:

கேள்வி: இனி திமுக ஹிந்து மத எதிர்ப்பையும், ஹிந்துக் கடவுள்களைத் திட்டுவதையும் தவிர்த்து விட்டு, எம்மதமும் சம்மதம் என்று இருந்தால் திமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

பதில்: திமுக அப்படி செய்தால் தி.க.வுக்கு எதிர்காலம் இருக்காது - அதனால் தான் வீரமணி பதறுகிறார் - என்கிறார் திருவாளர் குருமூர்த்தி அய்யர்.

தி.க.வும் - தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்றார் அறிஞர் அண்ணா. ஒரு கட்டத்தில் தி.க.வுக்கு நான் மீண்டும் போக வேண்டுமா என்று கூடக் கேட்டவர் மானமிகு கலைஞர்.

கத்தரிக்கோலின் இரண்டு கத்திகளுக்குக் கிடையில் திருவாளர் குருமூர்த்தி, மூக்கை நுழைத்துப் பார்க்க ஆசைப்படுகிறார் - பலனை அனுபவிக்கத் தயாராக இருக்கட்டும்.

திராவிடர் இயக்கம், ஹிந்து மதத்தை ஏன் எதிர்க்கிறது?

அண்ணாவின் ஆரிய மாயை நூலை ஒரு முறை குருமூர்த்திக் கம்பெனி படித்து பார்க்கட்டும்.

ஹிந்து மதத்தை ஏன் எதிர்க்கிறோம் - என்பதற்கான ஆதாரங்கள் அடுக்கடுக்காய்க் கிடைக்கும்.

ஹிந்து என்று சொன்னால் பார்ப்பான் பிராமணாள் ஆகலாம். பிர்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவன் என்று சொல்லிக் கொள்ளலாம். பார்ப்பனரல்லாதவரின் கதி என்ன? சூத்திரன் என்ற முத்திரை தானே - சூத்திரன் என்றால் வேசி மகன் தானே - மறுக்க முடியுமா குரு மூர்த்திக் கும்பலால்? மனு தர்மத்தைத் இந்த 2018லும் தூக்கிப் பிடிக்கும் இந்த கும்பல் மனுதர்மத்தின் முதல் அத்தியாயம் 31ஆம் சுலோகத்தையும், எட்டாவது அத்தியாயம் 415ஆம் சுலோகத்தைப் படித்து விட்டு, அறிவு நாணயம் என்ற ஒன்று இருந்தால் நேரடியாகப் பதில் சொல்லட்டும்.

ஹிந்து மதத்தை திராவிட இயக்கம் ஏன் எதிர்க்கிறது என்ற காரணம் அப்பொழுது விளங்கும்.

பார்ப்பனரல்லாதாரின் அளவுக்கு விஞ்சிய பொறுமையும், சகிப்புத்தன்மையும் தான் ஹிந்து மதத்தை இன்னும் விட்டு வைத்திருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம்.

ஆரியத்தின் வீம்பும், விதண்டாவாதமும் தலை கால் புரியாமல் அதிகம் துள்ளுமானால் அது அவர்கள் தூக்கிப் பிடிக்க நினைக்கும் ஹிந்துமதத்துக்குதான் தூக்கு.

அவர் தளபதி ஸ்டாலின் - அவரிடம் செல்லாது உங்கள் ஆட்டம் பாட்டம் - எச்சரிக்கை!

மித்திர பேதம் செய்து ஆரியம் வெற்றி பெற்ற காலம் மலையேறி விட்டது.

இது பெரியார் சகாப்தம், கலைஞர் தம் காலக் கணக்கு நினைவிருக்கட்டும்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner