திருப்பூர், செப். 12 திருப்பூர் மாநகராட்சி காங்கேயம்பாளையம் புதூர் முதல் வீதியில் புதிதாக விநாயகர் சிலை வைத்து விழா நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேயம்பாளையம் புதூர் முதல் வீதியைச் சேர்ந்த வி.ரத்தினசாமி என்பவர் இது தொடர்பாக புதன்கிழமை திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் அரசுப் பள்ளிக்கூடமும், நியாயவிலைக் கடையும் அமைந்துள்ளன. அத்துடன் பொது மக்கள் அதிகம் கூடும் இடமாக இருக்கிறது. இங்கு இந்த வருடம் புதிதாக விநாயகர் சிலை வைக்க சிலர் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதனால் பள்ளி மாணவர்களுக்கும், இப்பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கும் இடையூறு ஏற்படும். எனவே இந்த இடத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி அளிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்வ தாக வி.ரத்தினசாமி கூறியுள்ளார்.
இம்மனுவை திருப்பூர் சார் ஆட்சியரிடம் வழங்குமாறு ஆட்சியரக அதிகாரிகள் ரத்தினசாமியிடம் கூறினர். இதையடுத்து சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து சார் ஆட்சியரிடம் மனு அளித்தார். இதன் மீது மேல் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு பரிந்துரைப்பதாக பதில் அளித்துள்ளனர்.