எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மாநிலச் செயலாளர்,

திராவிட மாணவர் கழகம்

 

அழுத்தம் இருக்கும் இடத்தில் வெடிப்பு ஏற்படும் - அது அறிவியல் விளைவு. ஆதிக்கம் இருக்குமிடத்தில் தான் புரட்சி ஏற்படும் - இது வரலாற்று விளைவு - விழைவு!

அந்த வரலாற்று விழைவின் விளைச்சல்தான் திராவிட மாணவர் கழகம்.

திராவிட இயக்கம் தோன்றியது... சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளுக்கு என்ன காரணம் என கற்பித்தது... சுயமரியாதைச் சூடு பரப்பியது... ஆதிக்கத்தின் அடித் தளம் எதுவென அடை யாளம் காட்டியது... அதன் வேர்கள் விரிந்து பரவியிருந்த வழித்தடங்களில் வெளிச்சம் பாய்ச்சியது! பண்பாட்டுப் புரட்சியாய் எழுந்தது முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம்! திராவிடப் பேரினத்து மாணவர்கள் தங்களுக்குள்ளிருந்த வீரத்தை நூற்றாண்டுகள் கடந்து அடையாளம் கண்டுகொண்டனர். சுயமரியாதை எமது பிறப் புரிமை என முழங்கி, சமூக விடுதலைக்குச் சமராடியது மாணவர் சேனை - குடந் தையில் உடைந்தது பானை! ஒன்றாய், பத்தாய், நூறாய், பன்னூறாய் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து எழுந்த பேரலையாக முதல் தலைமுறை மாணவர்கள் கல்விக் கூடங்களை நிறைத்தனர். எத்தனை எத்தனை எதிர்ப் புகள்! எவ்வளவு நுணுக்கமான சதி வலைகள்! அத் தனையையும் கடந்து ஓர் இனம் மீட்சியுற்ற வரலாற்றை நிகழ்த்திக் காட்டியவர்கள் அன்று கல்விக் கூட மாணவர்களாக மட்டுமல்ல... பெரியார் என்னும் பகுத் தறிவுக் கூடத்தின் மாணவர்களாகவும் திகழ்ந்ததனால், ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக் காட்டினர். அப்படி ஒன்று சேர்ந்து உருவானதுதான் திராவிட மாணவர் கழகம்!

ஆட்சி, அதிகாரம், அரசியல், கலை, பண்பாடு, கல்வி என்று அத்தனையையும் மீட் டெடுத்தனர்; பாகுபாடிலாச் சமூகநீதிக் கோட்டை கட்டினர். மீண்டும் எதிரிகள் இட்ட முற்றுகை களையெல்லாம் மோதி முறியடித்தனர். கொத் தளத்தில் உயர்ந்த திராவிடக் கொடி தாழாது காத்தனர். எப்போது இவர்கள் கண் துஞ்சுவர் என்று கொடும் ஆயுதங்களோடும், கொள்ளைக் கூட்டத்தின் படைகளோடும் காத்திருக்கும் எதிரிகளின் கண்கள் வலிக்க, அடுத்தடுத்த படையணியைப் பயிற்றுவிக்கும் பாசறையாக, அறிவாயுதங்களை உருவாக்கும் உலைக் களமாக திராவிட மாணவர் கழகம் செயலாற்றிக் கொண்டிருக்கிறது.

ஆரிய வியூகங்களைத் தெளிவாய்க் காட்டும் பெரியார் தந்த ஈரோட்டுக் கண்ணாடி - நுண்ணாடியாகவும், தொலைநோக்கியாகவும் செயல்படும் விந்தையும், அதைப் பயன்படுத்தும் வித்தையும் அறிந்தவர்; நம் இனத்துக்கான ஆபத்து தொலைவிலிருந்து வரும் படையாயி னும், கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமியாயி னும் கண்டுணர்ந்து சொல்லும் காலம் தந்த தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் வழி நடத்த, இனத்தைக் காக்கும் பேரரணாய்த் தமிழகத்தில் தோன்றி 75 ஆண்டு காலம் தொடர்ந்து களத்தில் நிற்கும் முதல் மாணவர் அமைப்பு என்ற பெருமையோடு, நம் போர்ப் பாட்டை உரத்து ஒலிக்கச் சந்திக்கிறோம் குடந்தையில்!

அடுத்தடுத்த களங்களென்ன? தொடுக்க வேண்டிய கணைகள் எவை? நடக்க வேண்டிய பாதை எது? -  ஆசிரியர் பாடம் நடத்துவார்! மாணவர்கள் நாம் வழிநடப்போம்!

நம் களங்கள் சமூகநீதிக் களங்கள்... நம் ஆயுதங்கள் அறிவாயுதங்கள்... நம் போர்கள் பண்பாட்டுப் போர்கள்! பிரச்சாரக் களங்களும், போர்ப்பாட்டுப் பரணிகளும்தான் நம்மை உற்சாகம் கொள்ளச் செய்யும் என்பதை அறிந்த  தமிழர் தலைவர், அறிவிப்புகளோடு மட்டுமல்ல... வழக்கம்போல் முன்னின்று நம்மை வழிநடத்த வருகிறார்! திராவிட மாணவர் கழகத்தின் முன் னாள் தளகர்த்தர் - எந்நாளும் பெரியாரின் மாணவர் என்ற சிறப்புக்குரியவர்  அல்லவா? அவரே முன்னோடி - இன்றும் களத்தில் முன்னிற்பதிலும்!

காவித் தூசுகள் கண் மறைக்க முயல்கின்றன; அதில் ஆரியக் கூர்வாள்கள் கழுத்தறுக்கப் பாய்கின்றன. அதனை முறியடித்து இறுதிப் போரில் வெல்வதற்கான வாய்ப்பை காலம் நம் கைகளில் தந்திருக்கிறது. தோளுயர்த்தும் நாள்களே நம் திருநாள்கள்! நம் வாழ்விலொரு திருநாள் நாள் இது! வரலாற்றுப் பெருநாள் இது!

மகாமகக் குட்டையல்ல குடந்தை! திராவிட மாணவர்களின் கோட்டை என்பதைக் காட்டு வோம்!

போலிச் சங்கர மடத்தின் பூர்வாசிரமம் அல்ல... திராவிட மாணவர் கழகம் தோன்றிய ஊற்றுக் கண் எனச் சாற்றுவோம்!

வாரீர்! வாரீர்!!

நாளை காண்போம்!

திருநாளைக் காண்போம்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner